Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியம்: செந்தில்

சொல்வனம்

ஓவியம்: செந்தில்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

தொடர்தல்!
ஒவ்வொரு படிக்கட்டாக
இறங்கி வந்த குழந்தை,
கடைசிப் படிக்கட்டுக்கு
முந்தைய படிக்கட்டிலிருந்து
சட்டெனக் குதித்துவிட,
திடுக்கிட்டு பின், தொடர்கிறது
பின்தொடர்ந்து வந்த காலம்.

- கி.ரவிக்குமார்

யானையின் ஆழ் மனம்
துறவுக்கு உட்படுத்தப்பட்ட
கோயில் யானையின்
கண்களில்
அவ்வப்போது கசிகிறது
வனப்பிரிவின் வேதனை
காமத்தின் ஏக்கம்
உறவுகளின் நினைவு
கூடவே
காலில் கனக்கும் சங்கிலி
தரும் வலி.
தலை மீது
துதிக்கை வைக்கப்
பயிற்சியளிக்கப்பட்ட
அதன் முன் நிற்க 
முண்டியடிக்கிறவர்களின்
கவனத்திற்கு
நீங்கள் பெறுவது
ஆசி என்பது உங்கள்
நம்பிக்கையாக இருக்கலாம்.
ஆனால் அது மனிதர்கள்மீதான
வெறுப்பில் அந்த யானை
தரும் சாபமாகவும் இருக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- வீ. விஷ்ணு குமார்

எல்லோருக்கும்...
வண்ணம் தீட்டி
கல்லை ஆப்பிளாக்குகிறேன்
பிறரை ஏமாற்றுவதற்கா,
என்னை ஏமாற்றுவதற்கா?
தெரியவில்லை.
பிறர்முன் எடுத்து கையில் வைத்துக்கொள்கிறேன்
இப்போதுதான் கவனிக்கிறேன்
ஒவ்வொருவரும்
தங்கள் கையில் ஒவ்வொரு
பழம் வைத்திருக்கிறார்கள்
என்னைப்போல் அதை உண்ணாமல். 

- ஹரிகரன்

சொல்வனம்

பூனைகளின் சூரியன்கள்
அது பூனைகள் நிறைந்த வீடு
ஆளுக்கொரு பூனையென வளர்க்கிறார்கள்
எல்லாப் பூனைகளும் அடர் கறுப்பில்
அடையாளம் காண்பதில் குழப்பமில்லை
அவரவர் பூனை அவரவர்களை
அடையாளம் கண்டுகொள்கிறது

வீடு முழுக்க இறைந்துகிடக்கும்
மியாவ்களைப் பொறுக்க இந்த யுகம் போதாது
வெளியில் சென்று வீடு திரும்புபவர்களுக்கு
சில மியாவ்களைப் பூனைகள் மிச்சம்வைத்திருக்கின்றன.

பூனைகள் மனிதர்கள்போல எல்லாவற்றையும் தின்பதில்லை
ஒரு பூனைக்கு மீனைப் பிடித்திருக்கிறது
ஒரு பூனை பால் மட்டுமே குடிக்கிறது
இரண்டு பூனைகள் பிஸ்கட் சாப்பிடுகின்றன
மற்றொரு பூனையும் மூன்று குட்டிப்பூனைகளும்
குழந்தை உணவான செரலாக் மட்டுமே விரும்புகின்றன

கறுப்பாய் இருப்பதில் அவற்றுக்குக் கவலையில்லை
இந்தப் பூனைகள் பகல் நேரத்திலும்
இரவைப் போலவே கும்மிருட்டாய் இருக்கின்றன
ராத்திரி விளக்கணைத்து எஜமானர்கள் உறங்கியதும்
ஒளிரும் பூனைகளின் மஞ்சள் கண்கள்
இரவின் சூரியன்களாய் வீடு முழுக்க மேய்கின்றன

கறுத்த பூனை ஒவ்வொன்றும்
பூனைகளின் கண்களுக்கு
மஞ்சள் வெயிலாய் பிரகாசிக்கிறது.
அவற்றின் இருள் நிறமெல்லாம் இப்போது
உறங்குபவர்களின் கண்களுக்குள் அடர் கறுப்பாய்.

- வலங்கைமான் நூர்தீன்