
சொல்வனம்

மாய உரு
அவசர அவசரமாய் வீழ்ந்து
வீழ்ந்த வேகத்திலேயே
சில்லுச் சில்லாய்த் தரையைப் பெயர்க்கிறது
திடீர் மழை.
அப்பா அம்மாவின் அதட்டலுக்கு
உடல் கட்டுப்பட்டு வீட்டிற்குள் நின்றாலும்
கட்டுக்குள் அடங்கிடாத மனசோ
மாய உருக்கொண்டு கண்மூடி
மழையில் நனைந்து குதூகலிக்கிறது.
துளிகளின் ஊடாக
காற்று கடத்தி வரும் ஈரச் சாரலுக்கு
தேகம் சிலிர்க்க
நனைந்த பறவையின் சிலுப்பலோடு
ஆடிக்களித்தபின்னும்
தீரா தாகத்தோடு தொடர்கிறது.
மழைநின்ற பிறகு
விழிதிறக்கையில் காணக் கிடைக்கிறது
அடங்கா ஆசையோடு ஆடித்தீர்த்து
ஈரம் சொட்டச் சொட்ட
அருகில் நிற்கும் அப்பா அம்மாவின்
மாய உருக்கள்.
- தி.சிவசங்கரி
நட்சத்திர ரசனை
ஒளிரும் விளக்குகள் வீடுகளுக்குச் சொந்தமென்ற
உங்கள் அறிவை மட்டும் தொலைத்து விடுங்கள்
இந்த இரவுப் பயணத்தில்
என்னோடு சேர்ந்து நீங்களும் ரசிக்கலாம்
பூமியில் சிதறிக் கிடக்கும்
நட்சத்திரங்களை.
- மகேஷ் சிபி
காக்கையைப் போல் பறக்கும் கனவு
வீடற்றவனின் இரவொன்றில்
நடைபாதை உறக்கத்தின்
கனவுக்குள்ளிருக்கும் கூட்டில்
காக்கைகள் உறங்குகின்றன.
தீவிரமாய் யோசித்து
மெல்ல அசைந்து வந்து
படையல் சோறெடுக்கும்
பருத்த காகத்திற்கு
அப்படியே
அப்பாவின் உடல்மொழி.
மதில் சுவரின் மீதமர்ந்து
மதுச்சாலையினின்றும்
வெளிவருகிறவனை
உற்றுப் பார்க்கிற காக்கைக்கு
அப்பாவின் கண்கள்.
மதுச்சாலை எதிர்த் திண்ணையில்
சாக்னா கறியுடன்
மட்டையாகிக் கிடக்கிற மனிதனின்
பெருவிரலைக் கொத்தியெழுப்புகிறது காகம்
எழுந்திரு நண்பா.
நேற்றிரவென்
கனவுக்குள் இறங்கிய
குட்டி இருளொன்று
விடிகிற வரையிலும்
கரைந்து கொண்டிருந்துவிட்டு
அதிகாலையில் வெளியேறிவிட்டது.
மனிதனின் கனவுக்குள்
ஒருமுறை
இறங்கிவிட்ட காக்கைகள்
பின்னெப்போதும்
தூங்குவதேயில்லை.
- ஜெயாபுதீன்
ஓவியம்: செந்தில்