பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

புத்தனின் இறுதிப்பாடல்

புத்தனின் இறுதிப்பாடல்
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தனின் இறுதிப்பாடல்

சிற்பம்: ராஜ்குமார் ஸ்தபதி

புத்தனின் இறுதிப்பாடல்

ரோஹிணி ஆற்றில் ரத்தம் சுழித்தோடுகிறது
யசோதரையின் கச்சை சூறையில் அலைகிறது
ராகுலனின் சுக்கிலம் திருவோட்டில் பெருகுகிறது
பிட்சுவின் சவரக்கத்தி புத்தனின் இதயத்தில் ஊர்கிறது
ததாகதப் பற்கள் நாற்பதும்கொண்டு
குட்டிப்பன்றி விளையாடுகிறது
கனவடுக்குகளிலிருந்து விழிக்கிறார் முனி.

நோய்மையும் பசியும் களைப்புமாய்
எழுந்து நடக்கிறார்
வேள்வித்தூண்களிலிருந்து விடுவிக்கப்பட்ட செம்மறிகள்
புல்வெளியை மேய்கின்றன அமைதியாய்.

“கழுதைத்தோலைப் போர்த்தியபடி
மான்கொம்பால் முதுகைச் சொறிந்துகொண்டே வரும்
வேள்வியனிடமிருந்து பிடுங்கி
தானியங்களை உழவனிடம் கொடுங்கள்...
வாளும் கலப்பையும்
தியானத்தில் ஓயாது புரள்கின்றன
பூமியின் கொதிப்போ ஆறவேயில்லை ஆனந்தா...”
அவர்களிடம் சொல்லுங்கள் பிட்சு...
உணவு வேண்டி எரியும் தீ உள்ளே வளர்கிறது
பிட்சையில் புனிதமோ தீட்டோ இல.
கொல்லரின் மாந்தோப்பில் பன்றிக்குழம்பு கொதிக்கிறது
சுந்தனின் மகள் அடுப்புத்தீயைப் பேணுகிறாள்.

“ஒட்டிய வயிற்றைத் தடவினால், விரலில் முதுகெலும்பு நெருடும்
கொடும் உபவாசங்களால் ஆவதொன்றுமில்லை உபாலி...
ஏழு நாள்களுக்கு மேல் சித்தார்த்தனுக்கு
தாய்ப்பாலை அனுமதிக்கவில்லை சாக்காடு,
துக்கங்களின் மூலவூற்று பசி.”

“மாயாவின் கருப்பையைப் போன்ற மேகங்களே...
குட்டிப்பன்றி இதோ இரைப்பையில் புத்தமாகிறது.”

பரிநிர்வாணம்!

நாற்சந்தியில் ஊன் விற்கும் வணிகன்
மீந்த பசுத்தோல் சுமையோடு
பாடிப்போகிறான் இறுதிப் பாடலை.

- வெய்யில்;