Published:Updated:

முன்னோர் மொழி - 2 - கண்ணைக் கொடுத்த நூல்!

முன்னோர் மொழி - 2 - கண்ணைக் கொடுத்த நூல்!
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர் மொழி - 2 - கண்ணைக் கொடுத்த நூல்!

முன்னோர் மொழி - 2 - கண்ணைக் கொடுத்த நூல்!

முன்னோர் மொழி - 2 - கண்ணைக் கொடுத்த நூல்!

முன்னோர் மொழி - 2 - கண்ணைக் கொடுத்த நூல்!

Published:Updated:
முன்னோர் மொழி - 2 - கண்ணைக் கொடுத்த நூல்!
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர் மொழி - 2 - கண்ணைக் கொடுத்த நூல்!
முன்னோர் மொழி - 2 - கண்ணைக் கொடுத்த நூல்!

ழந்தமிழ் இலக்கியத்தைப் பயிலத் தொடங்கிய என் பதின் பருவத்தில், அதற்கெனக் குறிப்பேடு ஒன்றை வைத்துக்கொண்டேன். மூல நூல்களை நேரடியாகப் படிப்பதைவிட ரசனைபூர்வமாக அணுகி இலக்கியச் சுவையை எடுத்துக்காட்டும் விமர்சன நூல்களை வாசிப்பது  வசதியாகவும் எளிதாகவும் இருந்தது. கம்பராமாயணத்தின் சுவையை அறிய வேண்டுமானால் நேரடியாக அந்நூலை வாசிப்பது கூடாது. அது விரைவில் சோர்வைக் கொடுத்துவிடும். செய்யுள்கள் சீர், அடி, தளை என விதிகளின் அடிப்படையில் கட்டப்பட்டவை. அவற்றை அறிந்து பயில ஆசிரியர் அல்லது ஆசிரியர் போன்ற ஒருவரின் துணை தேவை. ஆனால் ஒரு செய்யுளில் பொதிந்திருக்கும் கவிச்சுவையை அறிந்துவிட்டால் அதன் கட்டமைப்பு பெரிய பிரச்னை இல்லை. ஆகவே கவிச்சுவையை எடுத்துக்காட்டும் நூல்களை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். 

முன்னோர் மொழி - 2 - கண்ணைக் கொடுத்த நூல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்பராமாயணத்தை நேரடியாக வாசிக்கும் திறன் எனக்கு அப்போதில்லை. ‘கம்பர்’ (வ.சுப.மாணிக்கம்), ‘தம்பியர் இருவர்’ (அ.ச.ஞான சம்பந்தன்), ‘கம்பன் கண்ட பெண்கள்’ (சாண்டில்யன்),  ‘கம்பரும் வால்மீகியும்’ (நாமக்கல் கவிஞர்), ‘செவிநுகர் கனிகள்’ (மு.மு.இஸ்மாயில்) முதலிய கம்பராமாயணத்தை ரசனைப்பூர்வமாக அணுகும் நூல்களை எல்லாம் வாசித்தேன். தேர்ந்தெடுத்துச் சிறந்த கவிதைகளை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட இத்தகைய நூல்களை வாசிப்பது அருமையான அனுபவமாக இருந்தது. அவற்றில் எடுத்துக்காட்டப்படும் செய்யுள்களில் என் மனம் கவர்ந்தவற்றைக் குறிப்பேட்டில் எழுதிவைத்துக்கொள்வேன். இப்படி ‘திருக்குறள்’, ‘சிலப்பதிகாரம்’, ‘குறுந்தொகை’ என ஒவ்வோர் இலக்கியம் பற்றியும் எழுதப்பட்ட நூல்கள் பலவற்றை வாசித்து எடுத்தெழுதிய செய்யுள்கள் குறிப்பேட்டின் பக்கங்களை நிறைத்துக்கொண்டே வந்தன.

குறிப்பேட்டை அவ்வப்போது புரட்டிப் பார்த்து, செய்யுள்களை வாய்விட்டு வாசிப்பேன். ஒவ்வொரு செய்யுளையும் ஒவ்வொரு சந்தத்தில் வாசிக்கச் சுயமாகவே முறை ஒன்று எனக்குப் பிடிபட்டது. சொற் களைப் பிரிப்பது, சீர்களை அறிவது, நிறுத்தம் கொடுப்பது, திருத்தமாக உச்சரிப்பது, சொற் சேர்க்கைகளின் சுவையை உணர்வது என எல்லாவற்றுக்கும் குறிப்பேட்டை ஆதாரமாகக் கொண்டேன். நயமுள்ள செய்யுள் களை மீண்டும் மீண்டும் வாசிப்பது பேரின்பம். அதனால் திட்டமிட்டு மனனம் செய்யாமலே சுவை யுடைய பல செய்யுள்கள் மனதில் பதிந்தன. இளவயதில் விளையாட்டு போலத் தொடங்கிய இந்தக் குறிப்பேட்டுப் பதிவு, என் வாழ் நாளுக்கும் உதவுவதாக அமைந்ததை அவ்வப்போது நான் வியந்து கொள்வதுண்டு. ஆம், அக்குறிப் பேட்டை நான் உருவாக்கிய பொக்கிஷமாகவே கருதுகிறேன். மேலும் மேலும் செல்வம் சேர்ந்து வளருமே தவிர ஒருபோதும் தீராத பொக்கிஷம்.

என் பதினேழாம் வயதில் தொடங்கிய குறிப்பேடு. அக்குறிப் பேட்டின் வயது முப்பத்தைந்து. இப்போதும் எனக்கு அது பயன்படுகிறது. ஒரு செய்யுளின் ஓரடி  மட்டும் நினைவில் தோன்றி, மற்றவை மறைந்துகொள்ளும் நேரத்தில் சட்டென எடுத்து அக்குறிப்பிட்ட செய்யுளை முழுதுமாக நினைவுபடுத்திக் கொள்ளக் குறிப்பேடு உதவுகிறது. மாணவர்களுக்குக் கற்பிக்கும் போதும் இலக்கிய நிகழ்வில் பேசுவதற்கும் மேற்கோளாக எடுத்தாளப் பொருத்தமான செய்யுள்களை விரைந்து தேட அக்குறிப்பேடு பயன்படுகிறது. பாட வேறுபாடுகளை ஆய்வதற்கும் சில சமயம் அது துணைபுரிந்ததுண்டு. மனம் நிலைகொள்ளாத அநேக சந்தர்ப்பங்களில், அக்குறிப்பேட்டைக் கையிலெடுத்தால் வேறோர் உலகம் என்னை வரவேற்று ஆவலோடு உள்ளே அழைத்துச் சென்றுவிடும்.

முன்னோர் மொழி - 2 - கண்ணைக் கொடுத்த நூல்!

நான் மட்டுமல்ல, இவ்வாறு தம் சொந்த விருப்பக் கவிதைகளைப் பதிவுசெய்து வைத்துக்கொள்ளக் குறிப்பேட்டைப் பயன்படுத்துவோர் பலர் இருக்கக்கூடும். இத்தகைய குறிப்பேட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. ஓலைச்சுவடிக் காலத்திலும் தமக்குப் பிடித்தமானவற்றை ஏட்டில் எழுதிவைத்துக் கொண்டோர் இருந்துள்ளனர். அவ்வாறு ஒருவர் எழுதிவைத்திருந்த பாடல்களின் தொகுப்பு பெருநூலாக நிலைத்து நின்று வரலாற்றுக்குப் பங்களித்திருக்கிறது. அந்நூலின் பெயர் ‘புறத்திரட்டு.’

தமிழில் தொகை நூல்களுக்கு நெடிய வரலாறு உண்டு. சங்க இலக்கியமான  ‘எட்டுத்தொகை’, ‘பத்துப்பாட்டு’ ஆகியவை தொகை நூல்கள். ‘பன்னிரு திருமுறை’,  ‘நாலாயிர திவ்விய பிரபந்தம்’ ஆகியவையும் தொகை. தனிப்பாடல் திரட்டுகள் பல இருக்கின்றன. தொகை நூல்களின் வரலாற்றை விவரித்து ‘தமிழ் நூல் தொகுப்புக் கலை’ எனச் சுந்தர சண்முகனார் ஒரு நூலே எழுதியுள்ளார். இன்னும் பல நூல்கள் எழுதக்கூடிய அளவுக்கு இதில் விஷயம் இருக்கிறது. பொருள் அடிப்படையிலோ புலவர் வரிசையிலோ பாடல்களைத் தொகுத்து அவற்றை நூலாக்கிப் பெயர் கொடுத்து நிலைநிறுத்தும் தன்மையில் செய்யப்பட்டவை இத் தொகை நூல்கள். இவ்வாறு தொகுத்து நூல் உருவாக்க அரசர்கள், வள்ளல்கள் ஆகியோர் பொருளுதவி செய்திருக்கிறார்கள்.

இத்தகைய தொகை நூல்களைப் போன்றதல்ல ‘புறத்திரட்டு’. சொல்லப் போனால் இது ஒரு நூலே அல்ல. ஏற்கெனவே வழக்கில் உள்ள இலக்கியங் களை எல்லாம் ஆழ்ந்து பயின்ற ஒருவர், அவற்றில் தமக்குப் பிடித்தவற்றை எழுதிவைத்துக் கொண்ட ஒரு குறிப்பேடு என்று சொல்லலாம். அவ்வாறு எழுதிவைத்தவர் யார்? தீவிர இலக்கிய வாசகரான அவர் பெயரைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் அவர் எழுதி வைத்திருக்கும் பாடல்களை வாசிக்கும் போது அவர் ஓர் அற்புத ரசிகர் என்பது மட்டும் தெரிகிறது. உதாரணமாக ஒன்று.

கம்பராமாயணத்தில் அவையடக்கப் பாடல்கள் ஆறு உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் கொண்டது. அவற்றுள் மிகவும் பிரபலமானது முதல் பாடல். பாற்கடலுக்கு முன் நின்றுகொண்டு கடல் முழுவதையும் பருகப் பேராசைகொள்ளும் பூனை யைக் காட்சிப்படுத்தும் பாடல் அது. இது ஒரு கற்பனை உவமை. பாற் கடல்; அதன்முன் பூனை; அதன் பேராசை ஆகியவை கம்பர் உருவாக்கிய கற்பனைக் காட்சி. தனக்குப் பிடித்த உணவைப் பிறர் யாருக்கும் கொடுக்க மனமில்லாமல் முழுவதையும் தானே உண்டுவிட ஆசைகொள்ளும் குழந்தை, தன் வயிறு நிறைந்ததும் உணவை அப்படியே வைத்துவிட்டு விளையாட ஓடிப்போகும். ஆனால் பார்த்தவுடன் வரும் ஆசை இயல்பானது. அத்தகைய ஆசை பூனைக்கும் தோன்றும் என்பது கம்பர் கற்பனை.  ராமாயணமாகிய பாற்கடலுக்கு முன்னால் நிற்கும் பூனையாகக் கம்பர் தம்மையே கண்டு எழுதிய பாடல். பேசிப் பேசித் தேய்வழக்காகிவிட்ட பாடல் இது. நன்கு பழகிய பாடலாகிய இதை ‘புறத்திரட்டு’ ஆசிரியர் தம் குறிப்பேட்டில் எழுதி வைக்கவில்லை. அவர் ரசனைக்கு உகந்த பாடல் வேறு. ஆறு பாடல்களில் அவ்வளவாகக் கவனம்பெறாத கடைசிப் பாடலே அவர் விருப்பம். அதையே தம் குறிப்பேட்டில் எழுதிவைத்துள்ளார். அப்பாடல் இது:

அறையும் ஆடரங் கும்படப் பிள்ளைகள்
தறையிற் கீறிடில் தச்சரும் காய்வரோ
இறையும் ஞானம் இலாதஎன் புன்கவி
முறையின் நூலுணர்ந் தாரும் முனிவரோ.

உலக வழக்கிலுள்ள ஒன்றை உவமையாக இப்பாடல் சொல்கிறது. குழந்தைகளின் கலையார்வ வெளிப்பாடு முதலில் கிறுக்கலில்தான் தொடங்கும். தரையிலும் சுவரிலும் கிறுக்காத குழந்தைகள் உண்டா? ஒருகாலத்தில் கரித்துண்டுக் கிறுக்கல். இன்றைக்குப் பென்சில் கிறுக்கல். சுவருக்குச் சுண்ணாம்பு பூசிக் காத்த காலத்தில் குழந்தைகளைச் சுவரில் கிறுக்கக் கூடாது என்று யாரும் விரட்டியதில்லை. இன்றைக்கு நிலை வேறு. பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் விலையுயர்ந்த வண்ணம் தீட்டிய சுவர்களில், கிறுக்கக் கூடாது என்றும் சுவர் பாழ்பட்டுப் போகும் என்றும் குழந்தைகளை அடக்கியாளும் பெற்றோரும் இருக்கின்றனர். குழந்தைகளுக்குச் சுவர்களைத் திறந்துவிட்டு ‘என்ன வேண்டு மானாலும் செய்துகொள்’ என்று ரசிப்பவர்களும் உள்ளனர்.

தரையிலோ சுவரிலோ கரும்பலகையிலோ குறிப் பேட்டிலோ குழந்தைகள் எதையாவது கிறுக்கிக் கொண்டு வந்து ‘இது வீடு, இது மரம், இது வானம்’ என்றெல்லாம் நமக்குக் காட்டி விளக்கினால் அவற்றை மறுத்து ‘இது எப்படி வீடாகும்?’ என்று கோபித்து விரட்டு வோமா? அட, பெற்றோர் பெரும் ஓவியராகவே இருக் கட்டும்; சிற்ப வல்லுநராகவே இருக்கட்டும். தன் கிறுக்கலுக்கு ஓர் அர்த்தம் சொல்லும் குழந்தையை எள்ளி நகையாடு வோரும் உண்டா? குழந்தை எதைக் கிறுக்கிக்கொண்டு வந்தாலும் கண்டு ரசிப்போம்; மகிழ்ச்சியோடு பாராட்டு வோம். குழந்தையின் விளக்கத்தைக் கேட்டுப் பேரின்பம் பெறுவோம். இந்த அம்சத்தைத்தான் கம்பர் உவமையாக்குகிறார்.  

முன்னோர் மொழி - 2 - கண்ணைக் கொடுத்த நூல்!

‘ஒரு குழந்தை தரையில் எதையோ கிறுக்கிவிட்டு ‘இது அறை, இது அரங்கம்’ என்று சொன்னால் எப்பேர்ப்பட்ட சிற்பியாக இருப்பினும் ‘இது அப்படியில்லை’ என்று திட்டி விரட்டுவதில்லை. அக்குழந்தையைப்போலத்தான்  நானும். இலக்கியம் படைப்பதில் எந்த அறிவும் இல்லாமல் ராமாயணம் என்னும் பெயரில் எதையோ கிறுக்கிக்கொண்டு வந்துள்ளேன். முறையாகப் பல நல்ல நூல்களை எல்லாம் வாசித்த பழக்கம் உடையவர்களாகிய நீங்கள் கோபித்துக்கொள்ளாமல் என்னுடைய தையும் ஒரு பிள்ளைக் கிறுக்கலாகக் கருதி ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று இந்தப் பாடலில் சொல்கிறார். இலக்கிய நூலொன்றின் அவையடக்கத் திற்குக் கலை சார்ந்த விஷயம் ஒன்றையே உவமையாக்கி இருக்கிறார். கவிச்சக்கரவர்த்தி யாகிய கம்பர் தம்முடைய படைப்பைப் ‘பிள்ளைக் கிறுக்கல்’ என்று அடக்கத்தோடு குறிப்பிடுகிறார்.

பாற்கடல் பூனை என்பதோர் கற்பனைச் சித்திரம்; பிள்ளைக் கிறுக்கல் என்பது நடைமுறைச் சித்திரம். இரண்டையும் வெவ்வேறு பாடலில் அவையடக் கத்திற்காக அமைத்து மறக்க முடியாமல் செய்திருக்கிறார் கம்பர். புறத்திரட்டைத் தொகுத்தவர் தம் சேகரிப்பில் ‘பிள்ளைக் கிறுக்கலைச்’ சேர்த்திருப்பதால், மெச்சத்தக்க ரசனைத் திறன் உள்ளவர் என்பதை அறிகிறோம். இத்திரட் டைக் குறித்து ‘இத்தொகை நூல் கவிதைச் சுவையைத் தலைமையாகக் கொண்டு தொகுக்கப் பெற்றதன்று; நல்லறிவு ஊட்டுதலையே தனது பெரு நோக்கமாகக் கொண்டுள்ளது’ என ச.வையாபுரிப் பிள்ளை கூறுகிறார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. கவிதைச் சுவையை முதன்மையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது என்பதை நிறுவ இத்திரட்டின் பெரும்பாலான பாடல்கள் பயன்படும்.

வேறு நோக்கத்திற்கு ஏற்ற பாடல்களும் இதில் தொகுக்கப்பட்டிருக்கலாம். அல்லது பின்னாளில் இதை வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தியோர் தம் தேவைக்கேற்பப் பாடல் களைச் சேர்த்திருக்கலாம். ஆனால் இத்திரட்டின் அடிப்படை, கவிதைச் சுவைஞர் ஒருவரின் பதிவுதான். இதன் காலம் 16-ம் நூற்றாண்டு எனக் கணிக்கப்படுகிறது. 500 ஆண்டுகளைக் கடந்துவரும் தனிப்பட்ட திரட்டு ஒன்று, நூலாக உருவாக்கம் பெறுவதற்குள் பல கட்டங்களைத் தாண்ட வேண்டி யிருந்திருக்கும். ஆனால் இந்த நூல்மூலம், ‘கவிதைச் சுவைஞர் ஒருவரின் தனிப்பட்ட குறிப்பேட்டுப் பதிவு’ என்பதே சரி.

1570 பாடல்களைக்கொண்டது இத்தொகுப்பு. அவற்றில் 13 பாடல்களுக்கு மூலநூல் எதுவெனத் தெரியவில்லை. மீதமுள்ள 1557 பாடல்கள் 31 நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன. இந்த 31 நூல்களில் பல நூல்கள் இன்று கிடைக்கப்பெறாதவை.  ‘புறத்திரட்டு’ தொகுப்பாசிரியர் சிறந்த இலக்கிய வாசகர். அவர் தம் ரசனைக்கு உகந்தவற்றைச் சேகரித்து எழுதிவைத்த காரணத்தால் சில நூல்களுக்கு உயிர் கிடைத்திருக்கிறது. ‘வளையாபதி’,  ‘குண்டலகேசி’, ‘முத்தொள்ளாயிரம்’, ‘தகடூர் யாத்திரை’, ‘ஆசிரிய மாலை’ முதலிய நூல்களின் அழகான சில பாடல்கள் மட்டும் இன்று நமக்குக் கிடைத்துள்ளன. அதற்குக் காரணம் ‘புறத்திரட்டு’தான்.

பெயர் தெரியாத வாசகர் ஒருவர், தம் சொந்த ரசனையினால் சுண்டிப் பார்த்துத் தொகுத்து எழுதிவைத்த இந்தத் திரட்டை, பின்னர் தொடர்ந்து பலர் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதன் காரணமாக இதற்கு ஒருவகை நூலுருவம் கிடைத்திருக்கிறது. திருக்குறளில் இருப்பதுபோல அறம், பொருள், இன்பம் எனப் பாகுபடுத்தி அவற்றுக்குள் அதிகாரம் வகுத்துப் பாடல்களை எல்லாம் வரிசைப்படுத்தி நூலாக்கம் செய்திருக் கிறார்கள். சரி, இப்படிச் செய்தமையால் என்ன பயன்? ஆயிரக்கணக்கில் பெருகிக் கிடக்கும் இலக்கிய நூல்கள் எல்லாவற்றையும் ஒருவர் தம் வாழ்நாளில் வாசித்துவிட முடியாது. நல்ல நூல்களில் உள்ள சிறந்த கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அனுபவிக்க இத்திரட்டு பயன்படுகிறது. அழகான பாடல்களை மனனம் செய்துகொள்ள இத்திரட்டு வழிகாட்டுகிறது.

பல நூல்களைக் கைவசம் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை; இத்திரட்டு ஒன்றை மட்டும் கைவசம் வைத்திருந்தால் போதும். இந்தத் திரட்டுகூடப் பெரிதாக இருக்கிறது எனக் கருதி இதையும் சுருக்கிப் ‘புறத்திரட்டுச் சுருக்கம்’ என்னும் நூலை உருவாக்கியுள்ளார்கள். அச்சுருக்கத்தின் தலைப்பில்  ‘பிரசங்காபரணம்’ என்று எழுதி வைத்துள்ளனர். அதாவது பிரசங்கத்திற்கு ஆபரணமாக விளங்கத் தக்கது இந்நூல் என்பது பொருள். ஒரு பொருள் குறித்துச் சொற்பொழிவு செய்வோர், உரையாற்றுவோர், கதா காலட்சேபம் புரிவோர் ஆகியோர் இந்நூலிலுள்ள பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் எனத் தெரிகிறது. உரையில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒரு பாடலைச் சொல்ல வேண்டு மானால் பெருநூல்களைப் புரட்டித் தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை. இத்திரட்டின் உள்ளிருந்து பொருத்தமான பாடல்களை எடுத்துக்கொள்வது சுலபம்.

பல நூல்களைப் பதிப்பித்தவராகிய உ.வே.சாமிநாதையருக்கு இத்திரட்டு பெரிதும் பயன்பட்டிருக்கிறது. ஆகவே அவர் ‘எனக்கு இது கண்ணைக் கொடுத்த நூல்’ என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.

இதை 1938-ம் ஆண்டு முதன்முதலாக ஓலைச்சுவடியிலிருந்து அச்சிற்குக் கொண்டுவந்து பதிப்பித்தவர் ச.வையாபுரிப் பிள்ளை அவர்கள். அவர் இந்நூலைக் குறித்து, ‘இத்தொகை நூலிலே தமிழ் மொழிக்கு இயல்பாக உரிய சுவை யாண்டும் புலனாகின்றது. நல்ல தமிழ் அருகி வருகின்ற இக்காலத்தே இந்நூற் பயிற்சி மிகுதியும் வேண்டற்பாலதாகும். இந்நூற் பயிற்சியினால் சொல்லுவன வற்றிலும் எழுதுவனவற்றிலும் சுவை மிகுவதாகும்’ என்று கூறியுள்ளார். 1939-ம் ஆண்டு மறுபதிப்பான இந்நூல், மீண்டும் 2001-ல் வெளியிடப்பட்டு (சென்னைப் பல்கலைக்கழகம்) இப்போதும் விற்பனையில் இருக்கிறது. இத்திரட்டில் உள்ள பல பாடல்கள் வேறெங்கும் காண இயலாதவை. ஆகவே இத்திரட்டுக்கு உரை அவசியம். கைதேர்ந்த வல்லுநர் எவரேனும் உரையெழுதி இத்திரட்டைப் பதிப்பித்தால், அது தமிழுக்குச் செய்த உண்மையான தொண்டாக அமையும். மேலும் ஒரு சுவைஞர் தொகுத்தளித்த பாடல்களை இக்காலத்துச் சுவைஞர் பலரும் அனுபவிக்கவும் அது உதவும்.

(தொடரும்)

பெருமாள்முருகன் - ஓவியம்  : கோ.ராமமூர்த்தி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism