
என்னிடமிருக்கும் பழைய சட்டைக்குள்
நான் இளமையுடன் இருக்கின்றேன்.
இந்த முதுமையை அணிய முடியாமல்
என்னிடம்
இன்னும் இருக்கின்றன சட்டைகள்.
மரங்களை
குரங்குகள் எழுதிக்கொண்டிருக்கும்போது
தண்ணீரை
அணியத் தொடங்கின மான்கள்.
பூமியை
விரித்துக்கொண்டிருந்தான் இடையன்.
யாருடைய உள்ளங்கையில் இருந்தோ
தப்பித்துச் செல்கின்றது ஒரு சிட்டுக்குருவி.
ஒருபோதும் வானம் மேலே இருப்பதில்லை.
மேலே மேலே இருக்கின்றது.
அவள்
ஜன்னலில் தங்கியிருக்கும் பல்லியிடம் வாடகை வசூலிப்பவள்.
வாசலில் கிடந்துறங்கும்
இலைகளை வயிற்றில் குத்திக்
கொலை செய்பவள்.
மழை நாளைப் பார்த்திருந்து
வீட்டிலிருக்கும் குடைகளை
குறைந்த விலைக்கு விற்பவள்.
என்று மட்டும்தான் தெரியும்
வேறு அடையாளம் இல்லை.
பிணவறைக்கு வெளியே வந்து
அழத் தொடங்கினான்.