Published:Updated:

மிஷிமா: தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்?

மிஷிமா: தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்?
பிரீமியம் ஸ்டோரி
மிஷிமா: தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்?

Yukio Mishima

மிஷிமா: தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்?

Yukio Mishima

Published:Updated:
மிஷிமா: தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்?
பிரீமியம் ஸ்டோரி
மிஷிமா: தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்?

னக்கு வாழ்க்கைக் கதைகளைப் படிக்க எப்போதுமே விருப்பம் இருந்ததுண்டு. அதன் நேர்மை, சுதந்திரம், தீவிரத்தன்மையைச் சிலநேரம் புனைவினால்கூட அடைய முடியாது. இங்கு நான், இரண்டாயிரத்தின் பிற்பகுதிவரை ‘கிழக்கு’ பதிப்பகம் அதிகமாக வெளியிட்ட டெம்ப்ளேட் வாழ்க்கைக் கதைகளையும் குறிப்பிட வேண்டும். நீங்கள் 2-3 மணி நேரத்தில் வேகமாய் சரளமாய் ஒருவரது வாழ்க்கையை அறிய விரும்பினால், இத்தகைய நூல்களை அலமாரியிலிருந்து உருவி 2-மினிட்ஸ் நூடுல்ஸ் போல உட்கொள்ளலாம். ஒருநாள் மாலை  ‘குரு’ படம் பார்க்கச் செல்லும் முன், மதியம் அவசரமாய் கிழக்கு பதிப்பகம் போய் அம்பானியின் வாழ்க்கைக் கதையை வாங்கி, வருகிற வழியிலேயே படித்து படம் தொடங்கும்போது சரியாகக் கடைசிப் பக்கம் எட்டி, பிறகு அதன் ஒளியில் படத்தைப் பார்த்தது நினைவுள்ளது. சொக்கன் எழுதிய இத்தகைய நூல்கள் அப்போது என் விருப்பப் பட்டியலில் இருந்தன. 

மிஷிமா: தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்?

உதாரணமாக, ‘சார்லி சாப்ளின்’,  ‘சச்சின்: ஒரு புயலின் பூர்வகதை’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். சந்திரபாபு பற்றி முகில் எழுதிய ‘கண்ணீரும் புன்னகையும்’, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் செல்லமுத்து குப்புசாமியின் ‘பிரபாகரன்: ஒரு வாழ்க்கை’ ஆகிய நூல்களும் இந்த வகையான எளிய உணர்ச்சிகரமான வாழ்க்கைக் கதைகளில் உடனடியாக நினைவுக்கு வருபவை. ஆனால் ஜனரஞ்சக வாசிப்புக்கான இப்படியான நூல்கள், ஆங்கிலத்தில் இன்னும் சிறப்பாகத் தகவல் செறிவுடன் அதிகாரபூர்வ ஆவணங்களின் பின்னணியில் எழுதப்படுகின்றன. தமிழில் அப்படியான புத்தகம் எனக் குறிப்பிடுவதானால் சுதாங்கனின் ‘எம்.ஜி.ஆர் கொலைமுயற்சி வழக்கு’ நூலைச் சொல்லலாம். சுவாரஸ்யமும் வியப்பும் இன்றி இதைப் படிக்க முடியாது. பாரதியார் கவிதைகளின் பதிப்புரிமை மீதான வழக்குகள், அதைச் சுற்றிய போராட்டங்களின் வரலாற்றை ஆர்வமூட்டும் வகையில் பேசும் நூலான ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ நூலை இவ்வகையில் முன்னதைவிட நல்ல புத்தகம் எனச் சொல்லலாம்.

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘எனதருமை டால்ஸ்டாய்’, ‘செகாவ் வாழ்கிறார்’ போன்ற புத்தகங்கள் புனைவுமொழியில் உணர்வு பூர்வமாக, விமர்சனப் பார்வையுடன் எழுதப்பட்ட வேறுவகை வாழ்க்கைக் கதைகள். தொ.மு.சி.ரகுநாதனின்  ‘புதுமைப்பித்தன் வரலாறு’ இந்த வகைமைகளில் சுலபத்தில் மாட்டாத நினைவுக்குறிப்பும் தரவுகளும் கலந்து உருவான மிக நல்ல புத்தகம். மற்றொருவர் குறித்த நினைவுக்குறிப்பு வகைமையில் கமலா புதுமைப்பித்தன் எழுதிய  ‘புதுமைப்பித்தனின் சம்சார பந்தம்’ முக்கியமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஷிமா: தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்?

வாழ்க்கைக் கதையை எழுது வது, சில நேரம் பார்வையற்ற ஒருவர் வாகன நெருக் கடி நடுவே சாலையைக் கடப்பது போன்றது, கொஞ்சம் பிசகினாலும் ஆபத்து. அதுவும், விமர்சன பூர்வமான வாழ்க்கைக் கதைகளில் இன்னும் கூடுதல் ஆபத்து. அவை புறவயமான வரலாற்றுப் பிரதிகள் அல்ல. எழுத்தாளனின் கற்பனை, அவதானிப்பு, அலசல், விவாதங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆய்வுக்குட்பட்ட ஆளுமையின் தரவுகளுடன் இணைந்து உருவாவதே விமர்சனபூர்வ வாழ்க்கைக் கதை. இதில் 25 சதவீதம் புனைவும் விமர்சனமும் இழையோடும். சில அம்சங்கள் சொல்லப் படாமல் அல்லது அதிக கவனம் பெறாமல் போகும். உதாரணம், தமிழில் ஜெயமோகன் கவிஞர் ராஜமார்த்தாண்டனுக்கு எழுதிய அஞ்சலிக் கட்டுரை.

ஜெயமோகன், சுந்தர ராமசாமியின் வாழ்க்கையை (தன் பார்வையில் துண்டுத் துண்டாய்ச் சித்திரித்து) விரிவான இலக்கிய விமர்சனம் மற்றும் தனது பிடிவாதமான நிலைப்பாடுகள் சிலவற்றை முன்னிறுத்தி எழுதிய ‘சு.ரா: நினைவின் நதியில்’ நூல் முக்கியமானது. ஜி.நாகராஜன் பற்றிய சுந்தர ராமசாமி, சி.மோகனின் நினைவுக்குறிப்புகள் மற்றும் சுருக்கமான வாழ்க்கைக் கதைகள், கிருஷ்ணன் நம்பி பற்றிய சுந்தர ராமசாமியின் குறுநூல் ஆகியவற்றில் விமர்சனம் மிக மெல்லியதாக, கண்ணுக்குப் படாதபடி இழையோடும். நான் புரூஸ் குறித்து எழுதிய நூல் ‘சண்டையிடாத சண்டை வீரன்’ நிச்சயம் விமர்சனபூர்வ வாழ்க்கைக் கதையே.

இந்த விமர்சனபூர்வ வாழ்க்கைக் கதைப் பின்புலத்தில், நான் இங்கு அறிமுகப்படுத்த விரும்பும் ஓர் ஆங்கில நூல், டேமியன் பிளானகன் எழுதிய ‘Yukio Mishima’.

‘Reaction Books’ பதிப்பகத்தின் Critical Series எனும் வரிசையில் இந்நூல் வருகிறது. இதே வரிசையில் சார்த்தர், தஸ்தாயெவ்ஸ்கி, பூஃக்கோ, ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோர் குறித்த சில நூல்கள் வந்துள்ளன. நான் இவ்வருடம் படித்த மிகச்சிறந்த நூல் ‘Yukio Mishima’. வரலாற்றுபூர்வ பிசிரற்ற ஆய்வுப் பின்புலம், மிஷிமாவின் இலக்கியப் பங்களிப்பு குறித்த சரியான புரிதல், ஆழமான உளவியல் பார்வை, லேசான தத்துவத் தொனி ஆகியவை இந்நூலின் சிறப்பம்சங்கள். இவற்றைவிட முக்கியமானது, பரபரவென போகும் எழுத்துநடை. வாழ்க்கைக் கதையைப் பலவீனப்படுத்தும் தகவல்பூர்வத் தொகுப்புகளைச் சரளமாகக் கோவையாய் தொகுத்துள்ள விதம், விடாமல் பற்றி நெளிந்துபோகும் காட்டுத்தீ போன்ற ஒரு மொழி, இந்நூலை ஒரு நல்ல நாவலுக்கு இணையாகக் கருதவைக்கின்றன. உளவியல் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இந்நூல் இன்னும் சுவாரஸ்யம் தரும்.

மிஷிமாவின் எழுத்துகள் தமிழில் பரவலாக மொழியாக்கம் வழி அறிமுகமாக வில்லை. எஸ்.ரா சில கட்டுரைகளில் மிஷிமாவின் வாழ்க்கையைச் சுருக்கமாகச் சித்திரித்திருக்கிறார். குறிப்பாக மிஷிமா, ராணுவமுகாம் ஒன்றைக் கைப்பற்றி, ஜப்பானிய சாமுராய் முறையில் தன் வயிற்றை வாளால் கிழித்து உயிரைவிட்ட சம்பவம். நினைக்க நினைக்க ஏற்க முடியாத, தர்க்க ரீதியில் புரிந்துகொள்ள சிரமமான முடிவு மிஷிமாவுடையது. டேமியன் பிளானகனின் சிறப்பு, அவர் மிஷிமாவை ஓர் உளவியல் நோயாளி ஆக்காமல், அவரது அகச்சிக்கலை இலக்கிய மற்றும் உளவியல் கோணத்தில் வெற்றிகரமாக விளக்குகிறார் என்பது. இது மிக மிகச் சிரமமான காரியம். அகத்தூண்டுதலினால் நடத்தப்படும் எழுத்தே இதைச் சாதிக்கும். 

மிஷிமா: தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்?

பிளானகன் மேலும் ஜப்பானின் சமூக வரலாற்றுப் பின்னணியை யும் அலசுகிறார். இரண்டாம் உலகப்போரிலும் அதன் பின்னரும் ஜப்பானியச் சமூகத்தில், அரசியலில் நிகழ்ந்த பெரிய மாற்றங்களை விவரிக்கிறார். இவற்றை ஜப்பானிய சமூகமனம் எதிர்கொண்ட விதத்தின் இலக்கிய தூல வடிவமே மிஷிமாவின் வாழ்க்கை என்கிறார். விக்டர் பிராங்கிள் ஹிட்லரின் யூதமுகாமில் மனிதர்களின் உளவியல் வெளிப்பட்ட விதம் பற்றி எழுதியவை, எரிக் பிரேமின் ‘Fear of Freedom’ மற்றும் மரணம் குறித்து ஹைடெக்கர் கூறியவை என் நினைவுக்கு வந்தன. பிளானகன் இந்தக் கோட்பாடு களை மனதில் வைத்தபடி, ஆனால் வெளிப்படையாகக் குறிப்பிட்டு எழுத்தின் பாய்ச்சலைத் தடைப்படுத்தாமல், நடையை எளிமையாக அமைத்திருக்கிறார்.

நூலின் முதல் அத்தியாயமே நம்மைப் பதற வைக்கக்கூடியது. 1970-ம் ஆண்டில், நவம்பர் 25 அன்று, மிஷிமா தான் உருவாக்கிய தனியார் ராணுவப் படையினர் சிலருடன் சாமுராய் வாள் களை ஏந்தி, டோக்யோ ராணுவத்தளத்துக்குச் செல்கிறார். அங்கு அவர் ராணுவத் தளபதியைச் சிறைப்பிடித்து,  ‘அவரை விட வேண்டுமானால் ராணுவ வீரர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி, தன் கருத்துகளைக் கேட்க வேண்டும்’ எனக் கோருகிறார். இதன்படி ராணுவ வீரர்கள் கீழ்த்தளத்தில் கூடுகின்றனர். மேல்தளத்தில் நின்று மிஷிமா தன் அமைப்பின் கொள்கைகளையும் அறிக்கையையும் வெளியிட்டுப் பேசுகிறார். தேசத்தையும் தேசத்தின் ஆன்மாவான மன்னரையும் காப்பாற்றுவதற்காக ராணுவம் மேற்கத்திய (அமெரிக்கச் சார்பு) உலக அரசியலை எதிர்த்து நிற்க வேண்டும், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும், ராணுவத்துக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும், நாட்டில் மன்னரின் அதிகாரத்துக்குச் சவாலாகக் கலகங்கள் நடைபெறக் கூடாது என்பவை அவரது கோரிக்கைகள்.

மிஷிமா: தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்?வீரர்களில் பலருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவர்கள் கூச்சலிட்டு எதிர்ப் பைத் தெரிவித் தனர். மிஷிமாவைப் பரிகசித் தனர். மிஷிமா இதை ஏற்கெனவே எதிர் பார்த்துத் தயாராக வந்திருந்தார். அவர் தளபதியை விடுவித்துவிட்டு, சாமுராய் முறையில் தன் சகா ஒருவரின் உதவியுடன் ‘செப்புக்கு’ எனும் முறை யில் தற்கொலை செய்துகொள்கிறார்.

இது ஒருவர் மண்டியிட்டு அமர்ந்து வாளால் தன் அடிவயிற்றைக் கிழிப்ப தாகும். குடல் வெளிவந்து ரத்தம் வெளிப்பாய, அவர் மெல்ல மெல்ல கடும் துன்பத்தை அனுபவித்து இறக்க நேரிடும். வேதனையை முடித்திட (இதற்காகவே நியமிக்கப்பட்ட) உதவியாளர் ஒருவர் அப்போது தனது வாளால் சாமுராயின் தலையைச் சீவிவிட வேண்டும். இதுவே சாமுராய் நடைமுறை. ஆனால் மிஷிமா தேர்ந்தெடுத்த உதவியாளரால் முதல் வெட்டில் துல்லியமாகத் தலையைச் சீவமுடியவில்லை. ஆகையால் இன்னோர் உதவியாளர் தன் வாளால் அக்காரியத்தை முடித்தார். மிஷிமாவின் இந்த முடிவு பல கேள்விகளை எழுப்புகிறது:

ஓர் எழுத்தாளன், அதுவும் நவீன எழுத்தாளன், ஏன் மன்னருக்காக உயிர் துறக்க வேண்டும்?

தன் எழுத்து வாழ்வின் உச்சத்தில் இருக்கிற ஒரு நட்சத்திரம், ஏன் இவ்வளவு அபத்தமாகத் தொனிக்கும் ஒன்றைச் செய்ய வேண்டும்?

தேசத்தைக் காப்பாற்ற உத்தேசித் திருந்தால் அவர் அரசியலில் புகுந்து போராடி இருக்கலாமே! அப்போதைய ஜப்பானிய பிரதமர், மிஷிமாவைத் தேர்தலில் போட்டியிட்டு மந்திரி சபையில் பங்கேற்கும்படிக் கேட்டுக் கொள்கிறார். ஆனால் மிஷிமா அதை ஏற்கவில்லை. ஏன்?

மரணத்தின் அழகியலை, செக்ஸுடனும் வாழ்வின் பூரணத் தன்மையுடனும் மிஷிமா தன் எழுத்தில் இணைக்கிறார். இதுவே அவரது இலக்கியப் பிரதிகளின் பெரிய சுவாரஸ்யம். இதே மரண அழகியலை நேர் வாழ்வில் அவர் ஏன் நிகழ்த்திப் பார்த்தார்?

மிஷிமாவின் ‘செப்புக்கு’வின் பிரதான இலக்கு, ஜப்பானின் வெளியுறவு அரசியலில் மாற்றத்தையும் அரசியலமைப்பில் திருத்தத்தைக் கோருவதும் மட்டுமல்ல எனக் காட்டுகிறது. இதற்கு முன்னர் மிஷிமா, பெரிய சமூக அரசியல் போராட்டங் களில் ஈடுபட்டவர் அல்ல. அறுபது, எழுபதுகளில் ஜப்பான் தன் சம்பிரதாயமான மரபார்ந்த கலாசார விழுமியங்களை விடுத்து, அமெரிக்கத் தாராளவாத எந்திரமயமாக்கல் போக்கை ஆவேசமாய்த் தழுவுகிறது. இரண்டாம் உலகப்போரின்போதான பெரிய சேதங்களும் வீழ்ச்சியும் இதற்கு ஒரு பிரதான காரணம். இந்த மேற்குடனான உறவால் ஜப்பான் செழிக்கிறது; புதிய பொருளாதார அலையினால் மிஷிமா போன்ற எழுத்தாளர்களும் பலனடை கிறார்கள். மிஷிமா தனது எழுத்தின் வருமானத் தால் மட்டுமே கோடீஸ்வரர் ஆகிறார்; நிறைய நாடகங்களை எழுதுகிறார்; அவரது நாவல்கள் படமாக்கப்படு கின்றன; அவை பெரும் வெற்றிபெறு கின்றன; அவர் நடிகராகிறார்; பாடி பில்டிங் செய்து மாடலாகிறார்; உலகெங்கும் அவரது புகழ் பரவுகிறது; நோபல் பரிசு வாய்ப்பு அவரது வீட்டு அழைப்பு மணியை அடித்து நிற்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில்தான் ஜப்பானியச் சமூகம் மிகப்பெரிய பண்பாட்டு உளவியல் வறட்சியை அனுபவிக்கிறது. வாழ்வில் பிடிப் பிழந்து, அர்த்தத்தை எதிலும் காண முடியாது எந்திரம்போல வாழ்ந்து, கேளிக்கைகளின் பின்னால் அலைந்து ஒரு தலைமுறை சீரழிகிறது. இந்த உணர்வுகளை மிஷிமாவும் தன் ஆன்மாவில் உணர்கிறார். தான் வாழ்வின்மீது கட்டுப்பாட்டை இழந்து சருகுபோல் மாறுவதை அறிகிறார். இலக்கியம்கூட இனி பெரிய சவால் அல்ல என அவருக்குத் தோன்றுகிறது அல்லது இலக்கியம் எதனால் தன்னை ஈர்த்ததோ அதை மேலும் உக்கிரமாய் தான் தேடி அடைய வேண்டிய காலம் கனிந்துவிட்டது என உணர்கிறார். இதை ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் உணர்த்தி தன் முடிவைத் தேடிக்கொள்வது அவசியம் என முடிவெடுக்கிறார்.

மிஷிமா: தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்?

மிஷிமாவுக்கு மன்னர்மீது தனிப்பட்ட பிரியமோ மன்னராட்சிமீது மயக்கமோ இல்லை. ஆனால் நவீன கார்ப்பரேட் தாக்கம், எந்திரமயமாக்கலால் மக்கள் அடிமையாகி, ஆன்ம சாரத்தை இழக்கும் நிலை, பண்பாட்டு வேர்கள் அறுக்கப்பட்டு சமூகம் மலினப்படும் சூழல் ஆகியவற்றை எதிர்ப்பதற்காக அவர் மன்னரை, அவர் மீதான வழிபாட்டை, ஒரு குறியீடாக பயன்படுத்துகிறார். இந்தச் ‘செப்புக்கு’ மூலம் மிஷிமா தெரிவித்த உண்மையானது, ஹைடெக்கர் தனது தத்துவத் தில் பேசியதுதான். நீட்சே  ஜெர்மனியில் இருந்தபடி ‘கடவுள் இறந்துவிட்டார், மீமனிதன் தோன்ற வேண்டிய காலம் அருகில் உள்ளது’ என அறைகூவியதுதான்.

ராணுவம் என்பது, அன்றாடம் மரணத்துடன் பௌதீகமான போராட்டங்களுடன் சம்பந்தப்பட்டது. இதை நவீன கார்ப்பரேட் யுகத்தின் குளிர்பதனப் பெட்டிக்குள் இருக்கும் காய்கறி போன்ற மனித வாழ்க்கைக்கு மாற்றாக மிஷிமா பார்த்தார். கோட் சூட் அணிந்து வெள்ளைக் காரனுக்காக ஜப்பானிலிருந்து வேலை செய்வதைவிட ஆயுதமேந்தி மரணத்தைத் தழுவுவது ஆத்மார்த்தமான, ஆழமான திருப்தி தரும் வாழ்க்கை என அவர் நம்பினார்.

ஜப்பானிய ராணுவம் போரில் ஈடுபடக் கூடாது என்பது அவர்களின் அரசியலமைப்புச் சட்டம் சொல்வது. கார்ப்பரேட் ஆன்மச் சீர்கேட்டிலிருந்து தேசத்தைக் காப்பாற்ற ஒரே வழி போர்தான் என நினைத்த மிஷிமா, மீண்டும் மீண்டும் ராணுவத்தை ஆயுதமேந்திப் போரிட அனுமதிக்கும்படி அரசியலமைப்பை மாற்ற வேண்டும் எனக் கோரினார். அதற்காக நிறைய பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார், கூட்டங்களில் பேசினார், அரசியல் தலைவர்களிடம் மன்றாடினார். ஆனால் யாரும் செவி சாய்க்காத நிலையில், அவர் தானாகவே ஒரு ராணுவ வீரனாக கடும் பயிற்சிகள் மேற்கொண்டு, ஒரு சின்ன தனியார் ராணுவத்தை உருவாக்கி, அவர்களின் தலைமையில் ஒரு சாமுராய் கலகம் செய்ய முயன்றார். அந்த முயற்சி, அவரது தற்கொலையில் போய் முடிந்தது.

முடிவாக, நாம் இன்னொரு கேள்வி யையும் கேட்க வேண்டும். மரணம் ஏன் இவ்வளவு வசீகரமாக இருக்கிறது?

மரணத்தை நாம் என்றுமே அறிய/ அனுபவிக்க முடியாது. எதை அறியவே முடியாதோ அதுவே எல்லையற்ற முழுமை ஆகிறது. இறைவனை ஒவ்வொரு மதமும் அறிய முடியா இருப்பாய் காண்பது இதனாலேயே. மரணமும் இறைவனுக்கு அடுத்தபடியாய் முழுமையின் வாசலாய் உள்ளது. ஆனால் மரணத்தை அறிவதில் ஒரு பிரதானச் சிக்கல் உண்டு. மரணம் என்றால் என்ன என முழுக்க உணரும் முன்பே, நாம் பரலோகத்தின் அழைப்பு மணியை அடித்துக்கொண்டிருப்போம். இப்போது, நகைமுரணாய் இந்த அசாத்தியமே முழுமையின் மிகப்பெரிய வசீகரத்தை மரணத்துக்கு அளிக்கிறது. அதனால்தான் நாம் மரணத்தை எதிர்கொள்கையில், துக்க வீட்டுக்குள் நுழைகையில், சிதைக்கு எரியூட்டத் தயாராகையில் திகைப்படை கிறோம். இந்தத் திகைப்பைச் சமாளிக்கவே நிறைய ஈமச்சடங்குகளை நமது பண்பாடுகள் உருவாக்கித் தந்துள்ளன. அவற்றையும் தாண்டி, மரணம் என்றுமே நமது அன்றாட மனவொழுக்கின் அடியில் கிடந்து நம்மை ‘வா...’ என அழைத்தபடி இருக்கிறது.

ஆக, மனித மனம் மரணத்தை நாடுவது என்பது ஒரு முழுமையை நாடுவதாகிறது. மிஷிமாவின் மனமும் அவ்வாறே முழுமையை நாடியது. ஆரம்பத்தில் கலையில், இலக்கியத்தில் நாடிய மனம், அவை போதாது என உணர்ந்து இப்போது பௌதீக உலகில், சமூகமனத்தில், தன் பண்பாட்டின் ஆழத்தில், இறுதியில் தன் தேகத்தின் அழிவில் முழுமையை நாடியது. இது எப்படிச் சாத்தியமாகும்?

நீங்கள் ஒரு பொருளையோ மனிதரையோ சாதனையையோ நாடுகையில் அது / அவர் கிடைத்ததும் அலுத்துவிடுகிறது. நம் தேடல் அடுத்தடுத்த நாட்டங்கள், இலக்குகள் எனத் தொடர்கிறது. இதில் நாம் ஒரு முழுமை யின்மையை, கசப்பை, அர்த்தமின்மையை மெல்ல மெல்ல உணரத் தொடங்குகிறோம். இதற்கு ஒரு தீர்வு, கனவுகளில் இருக்கிறது. சாத்தியமே இல்லாத அரசியல் சமூகப் புரட்சிகள், இலக்கிய இலக்குகள் தொடர்பான கனவுகளைப் பின்தொடர் வதில் இருக்கிறது. இந்தப் பின்தொடரும் முயற்சிகளில் ஆக உன்னதமானது, மரணத்தைப் பின்தொடர்வது. அதை ஒருநாளும்  ‘அடைந்து’விட முடியாது என்பதே அதை முழுமையின் வாசல் ஆக்குகிறது. இதுவே மிஷிமாவின் வாழ்நாள் தேடல், ஏக்கம், கனவு என பிளானகன் தன் நூலில் நுணுக்கமாய் நமக்கு உணர்த்துகிறார். மிஷிமாவின் அந்தக் கொடூரமான முடிவுக்கு அவர் ஓர் அழகான, ஆழமான விளக்கத்தை அளிக்கிறார்.

‘மிஷிமாவின் ஒரே தவறு, மரணத்தைத் திட்டமிட்டு அடைய முயன்றதே. அவ்வாறு அடைந்துவிட்டால் இந்த மனித வாழ்வில் என்ன மீதி இருக்கிறது? நாம் மனிதராகவே பின்னர் இருக்க முடியாதே.’

இந்நூலைப் படித்து முடிக்கையில் நமக்கு வாழ்வதும் சாவதும் எப்படி ஒரேசமயம் அபத்தமாக இருக்கிறது எனத் தோன்றுகிறது!

ஆர்.அபிலாஷ்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism