Published:Updated:

“நவீனக் கவிதை என்பதே உரைநடைதான்”

“நவீனக் கவிதை என்பதே உரைநடைதான்”
பிரீமியம் ஸ்டோரி
“நவீனக் கவிதை என்பதே உரைநடைதான்”

சபரிநாதன்

“நவீனக் கவிதை என்பதே உரைநடைதான்”

சபரிநாதன்

Published:Updated:
“நவீனக் கவிதை என்பதே உரைநடைதான்”
பிரீமியம் ஸ்டோரி
“நவீனக் கவிதை என்பதே உரைநடைதான்”

சாகித்ய அகாடமி, இளம் எழுத்தாளருக்கு வழங்கும் ‘யுவ புரஸ்கார்’ விருது இவ்வாண்டு கவிஞர் சபரிநாதனுக்கு அவரது ‘வால்’ கவிதைத் தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிநாதன், தற்காலக் கவிஞர்களில் தீவிரமாக இயங்கிவருபவர். இவரின் முதல் கவிதைத் தொகுப்பான ‘களம் காலம் ஆட்டம்’ தமிழ் இலக்கியப் பரப்பில் பரவலான வரவேற்பைப் பெற்றது. தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகளை ‘உறைபனிக்குக் கீழே’ எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர். யுவ புரஸ்கார் விருதுக்கான வாழ்த்துகளைத் தெரிவித்து, சில கேள்விகளை முன்வைத்தேன்.

“நவீனக் கவிதை என்பதே உரைநடைதான்”

“கவிதை பற்றிய உரையாடல்களில் சொற்சிக்கனம் குறித்து வலியுறுத்தப்படுவதுண்டு. ஆனால், நீங்கள் சொற்களை இறைத்து எழுதும் பாணியைத் தேர்ந்தெடுத்தது ஏன்?”

“கவிதை வடிவத்தைத் தொழில்நுட்பம் போலப் பயன்படுத்த முடியாது. ஒரு கவிதை உருவாகும்போதே அதற்கான வடிவத்துடன்தான் வருகிறது. பொதுவாகவே, சொற்களைச் சிக்கனமாகவும் இரைத்தும் எழுதும் இரு வழக்கங்கள் இருந்தே வருகின்றன. விட்மன் நிறைய வார்த்தைகளோடு எழுதியிருக்கிறார். எமிலி டிக்கின்சன் எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி எழுதுகிறார். தமிழில் தேவதச்சன், சொற்களைச் சுருக்க, தேவதேவன் அதிக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். என்னைப் பொறுத்தவரை இது இயல்பு சார்ந்த ஒன்று என்றே நினைக்கிறேன்.”

“இயல்பு என்பது வாசிப்பு முறையா, வாழ்க்கைச் சூழலா?”


“இரண்டும் கலந்ததுதான். உங்களுக்கான குரல் உருவாவது என்பது வாசிப்பு, நினைவுகள், விருப்பங்கள் எல்லாம் கலந்துதானே! ஒரு கவிஞருக்கே தெரியும் என்னவிதமாக தம்மால் எழுதமுடியும் என்பது. ஒருவேளை நான் சொற்சிக்கனத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினால், என் குரல் தடைப்படலாம். அதற்காக வார்த்தைக் கூட்டமாகவே எழுதுவதிலும் நம்பிக்கை இல்லை. கவிதை எழுதும்போது நமக்கு ஒரு எனர்ஜி வரும் இல்லையா? அது தடைப்படக்கூடாது.”

“கவிதையில் சொற்சிக்கனம் வேண்டும் எனப் பலரும் குறிப்பிட்டது, கவிதை உரைநடைத் தன்மை பெற்றுவிடக் கூடாது என்பதாலா?”

“நவீனக் கவிதைகள் என்பதே உரைநடையில் எழுதப்படுபவைதாம். வசனக்கவிதை என ஆரம்பித்தபோதே செய்யுள் தன்மையிலிருந்து விடுவிக்கப்பட்டதுதான். வேறுபடுத்திச் சொல்ல வேண்டும் என நினைத்தால், செய்யுளா, உரைநடையா என்று பார்க்கலாம். ஆனால், கவிதையில் இசைத்தன்மையை விட்டுக்கொடுக்காமல், சந்த நயத்துடன் பலர் எழுதியிருக்கின்றனர். பிரமிள் இறுதிவரை அப்படித்தான் எழுதினார். ஞானக்கூத்தன் தொடக்கத்தில் சந்தத்தோடும் பின்பு விலகியும் எழுதினார். ஆனால், அவற்றைச் செய்யுள் என்று சொல்ல முடியாது. அவற்றின் மொழி, இசைத்தன்மையைத் தருகிறது. முழுக்க உரைநடையாக எழுதுவதும் இருக்கத்தான் செய்கிறது. என்னுடைய முதல் தொகுப்பில் அப்படியான கவிதைகள் இருக்கின்றன.”

“ஒரு கவிதைக்கும் சமகாலத்துக்குமான உறவு எத்தகையதாக இருக்க வேண்டும்?”

“சமகாலம் என்பதை ஒரு சம்பவமாகச் சுருக்கிவிட முடியாது. ஒரு சம்பவம் நடக்கிறது என்றால், அது சமகாலத்தின் ஒரு பகுதிதான். சமகாலம் என்பது அதைத் தாண்டியதும்தான். அதில், நமக்கான நுண்ணறிவு, அணுகுமுறை உள்ளிட்டவை இருக்கின்றன. தேர்தல் அரசியல் அல்லாத ஓர் அரசியலும் இருக்கிறது. ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதுவதுதான் சமகாலம் என்று சொன்னால், அதில் உடன்பாடில்லை. ஆனால், சமகாலம் குறித்த மதிப்பு, பிரக்ஞையற்று ஒரு கவிதை எழுதுவதும் கஷ்டம்”

“கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்க் கவிதையில் முக்கியமான மாற்றங்களேதும் நிகழ்ந்திருப்பதாகக் கருதுகிறீர்களா?”

“அகம் சார்ந்த பூடகமானவற்றிலிருந்து விலகி, பரந்த வெளிக்கு வந்திருக்கிறோம். கவிதைக்குள் வெவ்வேறான வாழ்க்கை, விவரிப்புகள் வந்திருக்கின்றன. வெளி விரிந்ததும் சுதந்தரமும்தான் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் எனப் பார்க்கிறேன்”

தொகுப்பு: விஷ்ணுபுரம் சரவணன் - படம்: அசோக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!