Published:Updated:

ஸ்ரீபதி பத்மநாபா: தன்னை சொற்களில் மறந்து வைத்துவிட்டுப்போன கலைஞன்!

ஸ்ரீபதி பத்மநாபா: தன்னை சொற்களில் மறந்து வைத்துவிட்டுப்போன கலைஞன்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீபதி பத்மநாபா: தன்னை சொற்களில் மறந்து வைத்துவிட்டுப்போன கலைஞன்!

கரிகாலன் - ஓவியம் : பிரேம் டாவின்ஸி

ஸ்ரீபதி பத்மநாபா: தன்னை சொற்களில் மறந்து வைத்துவிட்டுப்போன கலைஞன்!

கரிகாலன் - ஓவியம் : பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஸ்ரீபதி பத்மநாபா: தன்னை சொற்களில் மறந்து வைத்துவிட்டுப்போன கலைஞன்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீபதி பத்மநாபா: தன்னை சொற்களில் மறந்து வைத்துவிட்டுப்போன கலைஞன்!

ரு முறை ஸ்ரீபதி பத்மநாபா வீட்டுக்கு அழைத்திருந்தார். மிகச் சிறிய வீடு, ஆனால் மகிழ்ச்சியும் அன்பும் ததும்பி வழிந்த இல்லமது. சரிதா, பாரதி என தேவதைகள் நடமாடிய வீடு. பாரதி அழகாகப் பாடினாள். அன்று தொண்டையில் லேசாக அவளுக்குப் பிரச்னை. இருந்தாலும் எனது விருப்பத்துக்காகப் பாடினாள். ‘பறக்கும் ராசாளியே ராசாளியே நில்’, ‘ஏனோ வானிலை மாறுதே’ என மழலைக்குரலில் இனிமையை ஊற்றிப் பாடினாள். பிறகு ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்திலிருந்து ‘காத்திருந்நு... காத்திருந்நு’ பாடியபோது மனசை அவளுடைய சிறு குரல் வருடிச் சென்றது.

ஸ்ரீபதி பத்மநாபா: தன்னை சொற்களில் மறந்து வைத்துவிட்டுப்போன கலைஞன்!

எங்களுக்கு, சகோதரி சரிதா சாப்பிட பிட்டும் (செரட்டையில் வேகவைத்தது) கடலைக் குழம்பும் பப்படமும் அவித்த நேந்திரம் பழமும் பால் கலக்காத சாயாவும் கொடுத்தார். சாப்பிடும்போது பாரதியும் ஸ்ரீயும் ‘பணமும் பிரதாபமும் நமுக்கெந்தினா, புட்டுண்டல்லோ! புட்டின் பொடியுண்டல்லோ! புட்டே வா! புட்டின் பொடியே வா!’ என ஒரு மலையாள நாட்டுப்புறப் பாடலைப் பாடினார்கள். நிச்சயமாக இந்த எளிய புட்டு தராத எந்தச் சுவையையும் பணமோ புகழோ தரப்போவதில்லை.

அன்பு மிளிரும் ஓர் இல்லத்தில் எனக்குக் கிடைத்த அந்தப் புட்டே அன்றைய பொழுதை அர்த்தப்படுத்தப் போதுமானதாக இருந்தது. இப்படி ஸ்ரீபதியுடன் நினைத்து நினைத்து மகிழக் கிடைத்த அனுபவங்கள் ஞாபகத் தாழியில் நிறைய இருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனையோ பகல்கள், எத்தனையோ இரவுகள், ஸ்ரீபதியோடு கேரளாவிலும் தமிழகத்திலும் பல நகரங்களுக்கு இணைந்து பயணித்தி ருக்கிறேன்; தங்கியிருந்திருக்கிறேன். அவரை ‘ஸ்ரீ’ என்பேன். பதிலுக்கு அவர் ‘கரிக்ஸ்’ என்பார், அதிகம் பேசமாட்டார். எப்போதும் சிந்தனைவயப்பட்டவராக, கனவில் சஞ்சரிப்பவராக இருப்பார். பேசும்போது சொற்கள் உடைந்துவிழும். சொற்பமாகப் பேசினாலும் ஏதோ நிறைய பேசியது போன்ற நிறைவிருக்கும். அவரோடு கழிக்கும் பொழுதுகள் மிகவும் பயனுடையவையாக அமைந்திருந்தன.

ஸ்ரீபதியிடம் ஒரு நல்ல பழக்கம். ஒருபோதும் பிற இலக்கியவாதிகள் குறித்து எதிர்மறையாகப் பேசியதே இல்லை. யார் குறித்துப் பேசினாலும் அவர்களுடைய நல்ல பகுதிகளை மட்டுமே பகிர்ந்துகொள்வார். கலை வாழ்வு என்பது பந்தயமில்லை. இதில் வெற்றியோ தோல்வியோ எதுவுமில்லை. இதை அறிந்து நிதானமாக இயங்கினார்.

கலை இலக்கியத்தின் எந்தப் பகுதியோடு அவரை அடையாளப்படுத்திக்கொள்வது என்பது சற்றே சிக்கலானது. ஏனென்றால், அத்தனை திறமைகளைக்கொண்டிருந்தார். அவரை ஒரு கவிஞர் எனக் கூறலாம் என்றால் புனைவுகளையும் சீரான அளவில் எழுதியிருக்கிறார். நூலாகத் தொகுக்கும் அளவில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். மலையாளத்திலும் தமிழிலும் பாடல்கள் எழுதியிருக்கிறார். திரைத்துறை, தொலைக்காட்சி சார்ந்த அனுபவங்களைப் பெற்றிருந்தார். மொழிபெயர்ப்பாளராக அவரது பங்களிப்பு குறிப்பிடக்கூடிய அளவில் இருக்கின்றன. ‘ஆரண்யம்’ எனும் இலக்கியப் பத்திரிகையை நடத்தினார். அநேகமாக மூன்று இதழ்கள் வந்திருக்கலாம். வடிவமைப்பால், உள்ளடக்கத்தால் அது இலக்கியப்புலத்தில் திகைப்பை உருவாக்கியிருந்தது. பதிப்புத்துறையிலும் ஈடுபட்டிருக்கிறார்.

முகநூலில் அவரது எழுத்து பாணி தனித்துவம் உடையது. கேலியும் கிண்டலும் நிரம்பி வழிவது. அவரது முகநூல் எழுத்துகள் பத்தி வகைமையைச் சார்ந்தவை. இலக்கிய அரங்குகளில் அவரது பேச்சு தனித்துவமானது. நிதானமாக, சற்று திக்கித்திணறி, பொருள் பொதிய அவர் பேசுவதைக் கேட்பது சுவாரஸ்யமாக இருக்கும். நினைவின் அடுக்குகளை ஒவ்வொன்றாகத் திறந்து செய்திகளை எடுத்துவருதின் சிரமத்தையும் அக்கறையையும் கொண்டிருந்த பேச்சு அவருடையது. அந்தப் பேச்சில் அங்கதம், எள்ளல், ஆழம் பொதிந்து கிடக்கும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீபதி பத்மநாபா: தன்னை சொற்களில் மறந்து வைத்துவிட்டுப்போன கலைஞன்!

இப்படிப் பல்துறை வித்தகராக இருந்தும் ஸ்ரீபதிக்கு இத்திறமைகளைச் சந்தைப்படுத்தும் ஆற்றல் இல்லை. ஆற்றல் இல்லை என்பதைவிட அதில் ஆர்வமில்லை என்பதே சரியாக இருக்கும். எங்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் இயல்பு அவருக்கு இருந்ததில்லை. அமைதியான நாகரிகமான இயக்கம் அவருடையது. அதேவேளை, அவருக்குள் ஒரு கலகக்காரன் எப்போதும் ஒளிந்திருந்தான். அந்தக் கலக மனமே அவரைப் பிழைக்கத் தெரியாதவராக மாற்றியிருந்தது. காசுக்காக மனதுக்குப் பிடிக்காதவற்றைச் செய்வதில் சோர்வையும் தயக்கத்தையும் கொண்டிருந்தார். அதேவேளை ஒரு விஷயம் அவருக்குப் பிடித்ததாக இருந்தால், அதை விரைந்து முடிக்கும் ஆற்றலும் அவருக்கு இருந்தது. இதை ‘நான்காவது கோணம்’ பத்திரிகையைக் கொண்டுவரும் வேளையில் அறிந்தேன். சில சமயம் போதுமான அளவு படைப்புகள் வந்திருக்காது அல்லது வந்தவை சுமாராக இருந்திருக்கும். அப்போது ஸ்ரீபதியை வெவ்வேறு பெயர்களில் எழுதக் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். அலுப்பே இல்லாமல், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வகையில் புதிது புதிதாக எழுதிக் கொடுப்பார். அவரது சோம்பேறித்தனம், நிர்பந்தப்படுத்துவதி லிருந்து... காலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது பிடிக்காததிலிருந்து உருவானது.

நள்ளிரவுகளில் சிகரெட் புகை கவிய, அவர் உருவாக்கும் புனைவுவெளி இலக்கியத்துக்கு அபூர்வமான அழகியலைத் தந்திருக்கிறது. எளிமையும் சொற்சிக்கனமும் மாயத்தன்மையும் அவரது படைப்புகளில் பின்னிப் பிணைந்திருந்தன. யதார்த்தத்தின் சுடுமணலில் கால்வைக்கப் பிடிக்காமல் புனைவெளியில் சஞ்சாரம் செய்யும் ஸ்ரீபதியைப் பெரும்பாலான இரவுகளில் கவனித்திருக்கிறேன். அவரது பருவம், இரவுகளால் ஆனது. அவரது ஞாபகம், கனவுகளிலிருந்து எழுவது. மலையாளத்தின் மாந்த்ரீகப் பின்னணியும், தமிழ் நிலத்தின் அகமரபும் இணைந்து (குறிப்பாக) கவிதைகளில் புது அழகியலை உருவாக்கியவர் ஸ்ரீபதி.

‘ஐயோ நான் என்னை
எங்கோ
மறந்துவைத்துவிட்டு வந்திருக்கிறேனே’


என்பார் குஞ்ஞுண்ணி. அப்படி தன்னை எங்கோ மறந்துவைத்துவிட்டவர் போலத்தான் ஸ்ரீபதி நடந்துகொள்வார். சில சமயம், வைக்கம் முகம்மது பஷீரிடம் சில சமயம் மகள் பாரதியிடம், சில சமயம் அனுமோளிடம் தன்னை மறந்து வைத்துவிட்டதுபோல இருப்பார்.

ஸ்ரீபதி படைப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும். அவரது தோற்றம், அவரது பாவனைகள், அவரது நடவடிக்கை அனைத்திலும் நாகரிகத்தின் ஒளி மின்னும். அலட்சியமாகக் கலைந்த அவரது தலை, மெல்லிய தாடி, வற்றி ஒடுங்கிய வதனத்தில் தேடலின் ஒளி பொருந்திய தீவிரமான சிறிய விழிகள், என அவரைப் பார்க்கவே பாந்தமாக இருப்பார். அவர் உடை அணிவதும் நேர்த்தியாக இருக்கும். புது இடத்துக்குப் பயணிக்கிறபோது, புதிய ஆடைகளை அணிந்து செல்வதில் ஆர்வம் காட்டுவார். பூப்போட்ட சட்டைகளை, வட இந்திய குர்தி வகையைச் சார்ந்த ஆடைகளைப் பெரும்பாலும் தெரிவுசெய்வார்.

மனதுக்குப் பிடித்த நண்பர்களுக்கு, சரிதா சமைக்கும் கேரள மணம் கமழும் உணவு வகைகளைப் பரிமாறி ரசிப்பார். அவரது அலுவலகத்தில் ஒருநாள் தங்கயிருந்தேன். மதிய உணவுக்கான நேரம் வந்தது.  “ஹோட்டலுக்குப் போவோமா?” என்றதும்,  “வேண்டாம், சரிதா சாப்பாடு கொடுத்துவிடுவார்” என்றார். சாப்பாடும் வந்தது. சோற்றைத் தட்டில் வைத்தவர், ஒரு பாத்திரத்திலிருந்து குழம்பை எடுத்து ஊற்றினார். “இந்தக் குழம்பை இதுவரை நீங்கள் சாப்பிட்டிருக்க முடியாது, இது பழக்குழம்பு!” என்றார். “சுடவைத்த பழைய குழம்பா?” என்றேன் வேடிக்கையாக.  “நேந்திரம் பழத்தை வெட்டிப்போட்டுச்  செய்த பழக்குழம்பு” என்றார். நம்மூர் மோர்க்குழம்புபோல் இருந்தது. இது கேரளாவின் சிறப்பு. இதுபோல் அவரோடு ஆலப்புழா சென்றிருந்தபோது, பழம்பொறி வாங்கித் தந்தார். வாழைக்காயால் பஜ்ஜி போடுவதுபோல, நேந்திரம் பழத்தால் செய்யும் பஜ்ஜி அது!

பொதுவாக மலையாளிகளிடம் ஒரு கர்வம் மறைந்திருக்கும். மற்றவர்களைவிட தாங்கள் திறமையானவர்கள் என்கிற நம்பிக்கையால் எழும் கர்வமது. ஸ்ரீபதி அப்படிப்பட்டவர் அல்லர். தன்னை முழுமையாக, தமிழராக உணர்ந்தவர். மலையாளச் சாதிப்படிநிலையில் மேலடுக்கில் உள்ள நம்பூதிரி சமூகப் பின்னணி கொண்டவர் ஸ்ரீபதி. இருப்பினும், சனாதன மரபுக்கு எதிரான முற்போக்கு மனம் படைத்தவர். அய்யப்பன் கோயில் விஷயத்தில் மலையாளிகள் கடைப்பிடிக்கும்  பிற்போக்குத் தனத்தைக் கடுமையாக எதிர்த்தவர். இங்கிருப்பவர்கள் பெரும்பாலும் மலையாள இலக்கியச் சூழலை வியக்கும் வேளையில், தமிழ் இலக்கியம் குறித்து உயர்வான  எண்ணமுடையவராக ஸ்ரீபதி இருந்தார். 

கவிதைகள், மொழிபெயர்ப்பு, சிறுபத்திரிகை, கட்டுரை என ஸ்ரீபதியின் நூல்கள் ஓரளவு வந்திருக்கின்றன. அவர் எழுதி நூலாக்கம் பெறாத படைப்புகளும் நிறைய இருக்கின்றன. எழுதிய அளவு, அவற்றை நூலாக்கம் செய்யும் முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. இத்தனைக்கும் புத்தகம் தயாரிக்கும் தொழிலில் இருந்தவர். அந்த வகையில் அவரது சிறுகதைகள் தொகுத்து நூலாக்கப்பட வேண்டியது அவசியமான முயற்சியாகும். அவரது முகநூல் குறிப்புகள் பல இலக்கிய அந்தஸ்து உடையவை. அவற்றைத் தெரிவுசெய்து தொகுத்தால் தமிழுக்குப் புதுவகைமை நூல்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

ஸ்ரீபதி இப்பெருவாழ்வை நிகழ்காலத் துளிகளின் தொகுப்பாகப் பார்த்தவர். நாளையைவிட தன் முன்னால் இருக்கும் நிகழ்காலத்தை வாழ்ந்துபார்க்க விரும்பிய கலைஞன். நாளுக்கு நாள் உருகித் தேயும் தன் ஆகிருதி குறித்து அஞ்சாமல், காலத்திடம் தன் மனைவியையும் மகளையும் ஒப்புக் கொடுத்து, ஒரு விபரீதமான கணத்தில் மௌனமாக விடைபெற்ற கலைஞன். அவரை அனுபவம் செய்ய இப்போது அவரது சொற்களே இருக்கின்றன. குஞ்ஞுண்ணி சொல்வதுபோலத் தன்னை தனது சொற்களில் மறந்து வைத்துவிட்டுபோன கலைஞன் ஸ்ரீபதி பத்மநாபா!

ஸ்ரீபதி பத்மநாபா: தன்னை சொற்களில் மறந்து வைத்துவிட்டுப்போன கலைஞன்!

ஸ்ரீபதி

ந்தாம் வகுப்பு படிக்கும்போது
எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.
சரஸ்வதி டீச்சரிடம் கேட்டேன்:
எனக்கு எதுக்கு ஸ்ரீபதின்னு பேர் வெச்சீங்க?
வித்யாசமா இருக்கட்டும்னு
பத்மநாபன் ஆசைப்பட்டு வைத்தது என்றார் அவர்.
என்னா அர்த்தம் அதுக்கு?
லட்சுமிங்கறது பணத்தோட தெய்வம்.
அவளோட பேரு ஸ்ரீ.
அவளுக்குப் புருஷன் எப்படியிருப்பான்?
அதுதான் நீ. ஸ்ரீ பதி.

ஏழாம் வகுப்பு படிக்கும்போது
கருப்புசாமி கேட்டான்:
என்னடாது உன் பேரு? ஸ்ட்ரீ பதீ?
என்னடா அர்த்தம்?
சரஸ்வதி டீச்சர் சொன்னதை
அப்படியே ஒப்பித்தேன்.
வகுப்பைச் சுற்றி
“ஏய் லட்சுமி புருசா...
லட்சுமி புருசா...’’
என்று துள்ளிக்கொண்டு
ஓடினான் அவன்.

த்தாம் வகுப்பு படிக்கையில்
ஒரு நாள் பத்மநாபன்
என்ன செய்தார் தெரியுமா?

இறந்துபோய்விட்டார்.

மூன்று பெண் குழந்தைகளுக்குக்
கிடைக்காத பாக்கியம்
கடைப்பையனான எனக்குக் கிடைத்தது.
தோளில் தூக்கிக்கொண்டுபோய்
சொக்கம்புதூர் சுடுகாட்டில்
எரித்துவிட்டு
கவுண்டர் தோட்டத்தில்
குளித்துவிட்டு வந்தேன்.

அதற்குள்
கேரளத்தின் வலக்கோடியிலுள்ள
பரிப்பாயில்லத்திலிருந்து
கடுமையான உத்தரவு வந்திருந்தது:
பத்மநாபனின்
சாம்பலையாவது
ஒரு கிண்ணத்தில் எடுத்துவந்து
சொந்த இல்லத்தில்
அடக்கம் செய்யவேண்டும்.

காடும் மலையுமாய்
குறிஞ்சியாய் நிற்கிற
பரிப்பாயில்லத்தின் முற்றத்தில்
ஒரு பகல் பொழுதில்
பத்மநாபனின் சாம்பல் கிண்ணம் புதைக்கப்பட்ட
அந்தக் கமுகு மரத்தினடியில்
சிகரெட் புகைத்துக்கொண்டு அமர்ந்திருக்கையில்
பூமியின் அடியிலிருந்தா
வானத்திலிருந்தா, தெரியவில்லை.
கிண்டலான ஒரு குரல் அழைத்தது:
“டேய்... லட்சுமி புருசா...”
பத்மநாபனா?
கருப்புசாமியா?  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism