தமிழர் அடையாளம் என்பது தமிழினத்தின் கருத்தியல் வெளிப்பாடுதான். தமிழினத்திற்கென ஆழமான மெய்யியல் உண்டு. அதன் மூல நூலாக இன்றும் உள்ளது ‘தொல்காப்பியம்’. தமிழின் இடைக்கழகத்தில் இயற்றப்பட்ட நூல் இது. ஆயினும், முதற் கழக நூல்களின் சாரத்தையும், ஐந்திரம் எனும் தொன்மையான மெய்யியல் செறிவையும் உள்ளடக்கி இதனை இயற்றினார் தொல்காப்பியர். தொல்காப்பியப் பாயிரம், ‘முந்து நூல் கண்டு முறைப்படத் தொகுத்து’ என்று தெளிவுபடுத்துகிறது. அதே பாயிரம் வேறொரு செய்தியையும் தாங்கியுள்ளது,

`வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி’

சமூகத்தில் வழக்கத்தில் உள்ளவையும், ஆன்றோரால் கல்வியறிவினால் செய்யப்படுபவையும் ஆகிய இரண்டையும் முதலாகக்கொண்டு, எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று பிரிவுகளைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் என்பது கருத்து.இதுதான் மரபு எனப்படுவது. கற்றோர் அவை எந்த முடிவு எடுத்தாலும் அதைச் சமூகம் ஏற்க வேண்டும் என்பதில்லை. சமூக வழக்கம் என்பதற்காக அதை ஆன்றோர் ஏற்க வேண்டியதில்லை. வழக்கு, செய்யுள் ஆகிய இரண்டும் சூழலுக்கேற்ப பொருந்துமாறு செய்தல்தான் மரபு. இல்லையேல் அது பழைமைவாதம். தொல்காப்பியப் பாயிரம் தமிழர் மரபியலின் சான்றாக நிற்கிறது. தொல்காப்பியர் சமூகக் கருத்துகளின் வழக்கங்களையும், ஆன்றோர் கருத்துகளையும் இணைத்துப் பொருத்தித்தான் நூலை இயற்றியுள்ளார் என்பதை அந்நூலைக் கற்கும்போது விளங்கிக்கொள்ளலாம்.

ஒருபுறம் சமூகத்தில் நிலைபெற்றுவிட்ட வழக்கங்கள் மறுபுறம் ஆய்வோர் கருத்துகள் என இரண்டும் இருக்கையில் ஒரு சமூகத்தலைவர் இவ்விரண்டையும் எவ்வாறு பொருத்துகிறார் என்பதே அவரது ஆளுமையைக் காட்டும்.

இராசராசச் சோழர் இவ்வாறான ஆளுமைமிக்க தமிழின அடையாளமாக வாழ்ந்தவர்.

தமிழ்ச் சமூகப் பகுப்பு

தமிழ் மரபில் சமூகப் பிரிவின் இலக்கணம் என்னவெனத் தொல்காப்பியம் உரைக்கிறது.

அரசர், அந்தணர், வேளாளர், வணிகர் ஆகிய நான்கும் சமூகப் பிரிவுகள். இந்த நான்கு பிரிவினரும் பிறப்பால் அமைவோர் அல்லர். அதாவது பிறப்பின் அடிப்படையில் சமூகக் குலங்கள் அமைவதில்லை. அவ்வாறு அமைந்தால், அது சாதிப் பிரிவினை ஆகும். இதனைத் தொல்காப்பியரே தெளிவு படுத்துகிறார்,

`ஊரும் பெயரும் உடைத் தொழிற் கருவியும்
யாருஞ் சார்த்தி அவைஅவை பெறுமே’

(மரபியல் 75)
இதன் பொருள்,

‘ஊர், பெயர், தொழிற் கருவி ஆகியவை அவரவருக்கு ஏற்ப அனைவருக்கும் உரிமையுடையவையே’ என்பதாகும். எந்தப் பிரிவினர் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பது திணிக்கப்பட்டதல்ல என்ற கருத்தினை இந்த விதி விளக்குகிறது.

‘தலைமைக் குணச்சொலும் தத்தமக் குரியதோர்
நிலைமைக் கேற்ப நிகழ்த்துப வென்க’

(மரபியல் 76)

தலைமைப் பண்பைப் பொறுத்தவரை, அவரவரும் தமது நிலைமைக்கேற்பவே நிகழ்த்திக்கொள்ள வேண்டும் என்கிறது இவ்விதி. தலைமைப் பண்பு என்பது, பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது, தொடர்புடையவர், குறிப்பிட்ட சூழலில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே முடிவுசெய்யப்படும்.

‘பிறப்பினால் தகைமை அமைவதில்லை’ எனும் இதே கருத்தினைத்தான் திருவள்ளுவர்,

‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’ என்றார்.

‘பிறப்பினால் எவ்வுயிரும் ஒத்தவையே. செய்யும் தொழிலாலும் சிறப்பு ஒவ்வாது/ஏற்புடையதாகாது. ஆகவே, எக்குலத்தில் பிறப்பினும் எத்தொழில் செய்யினும் யாவரும் ஒத்தவரே’ என்பது பொருள்.

அந்தணர்

அந்தணர் எனப்படும் பிரிவினர் குறித்து இன்றுள்ள கருத்துகளுக்கும் உண்மைக்கும் பொருத்தமே இல்லை. தொல்காப்பிய இலக்கணத்தின்படி, அந்தணர் எனப்படுவோர் ஆறு வகை ஒழுக்கம் உடையோர்.

‘ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்’ இந்த அறுவகை ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும் அந்தணர் என்பது தமிழ் மரபு. ஓதல் என்பது, கல்வியை உரக்கச் சொல்லுதல். கற்றவர், தன் கல்வியைப் பிறருக்கு உரக்கச் சொல்லிக் கற்பிக்க வேண்டும். ஓதுவித்தல் என்றால், பிறரையும் ஓதுவாராக மாற்ற வேண்டும். வேட்டல் என்பது, வேண்டுதல் ஆகும். வேண்டு வனவற்றை இறையிடம் வேண்டுதல், வேட்டல். இவ்வாறு வேண்டும் முறைமை
களையும் பிறருக்குக் கற்பித்து அவர்களையும் வேண்டச் செய்ய வேண்டும். தனக்குக் கிடைப்பவற்றைப் பிறருக்கு வழங்குதல், ஈதல் ஆகும். தன்னிடம் இல்லாதபோது வெட்கமின்றி, ‘ஈவீர்’ எனக் கைநீட்டவும் வேண்டும். அது ‘ஏற்றல்’ ஆகும்.

அந்தணராக இருப்போர் கல்வி, இறைச் சடங்குகள், பொருள் ஆகிய மூன்றிலும் தன்னிறைவு அடைந்திருக்க வேண்டும். அதேவேளை, தம்மிடம் உள்ளவற்றை தாமே வைத்துக்கொள்ளாமல் பிறருக்கு வழங்குதல் வேண்டும் என்பது சாரம். இவ்வளவு நெறிமுறைகள் கூடிய அந்தணரே, அரசருக்கு அறிவுரை வழங்க வேண்டும். இது தொல்காப்பியம் பதிவுசெய்த தமிழ் மரபின் கொள்கைகளில் ஒன்று.

ஆரியக் கருத்துகள் இவற்றுக்கு நேர் எதிராக இருந்தன என்பதை விளக்கத் தேவையில்லை. ஆரியச் சமூகக் கொள்கை, பிறப்பினால் அமைவது. கர்மம், தர்மம், தண்டம் என்பது அதன் முக்கொள்கை. கர்மம் – பிறப்பினையும், தர்மம் – சமூக அடுக்குநிலைகளையும், தண்டம் – இவற்றை மீறுவோருக்கான தண்டனைகளையும் கொண்ட கருத்துகள்.

தமிழகத்தில் ஆரியம்

இராசராசச் சோழர் எந்தக் குலத்தவர் என்பதைக்கூட எவரும் அறுதியிட்டு உரைக்கவியலாது. அவர் மட்டுமல்ல, தமிழ் மரபில் வந்த எந்த அரசருக்கும் குலம்கூட இல்லை. சாதி எனும் கருத்துக்கே இடமில்லை. ஆகையால்தான், இராசராசச் சோழரைப் பல தமிழ்ச் சாதியினர் தமக்கானவராகக் கொண்டாடுகின்றனர்.

பிற்காலச் சோழருக்கு ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்திற்குப் படையெடுத்த பல்லவர்களின் தொடக்கக் காலக் கல்வெட்டுகள் ‘பல்லவர்கள் பரத்வாஜ கோத்திரத்தார்’ எனக்குறிக்கின்றன. ஆரிய பிராமணருக்குரிய கோத்திரம் அது (பல்லவர் வரலாறு/ முனைவர் மா.இராசமாணிக்கனார்). சமூக மாந்தரை இராசராசச் சோழர், பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் களைந்த நிலையில் அரவணைத்தார் என்பதை எண்ணற்ற சான்றுகளால் விளக்கலாம். ஒருசில இங்கு குறிக்கப்படுகின்றன.

அவர் காலத்தில், தஞ்சையின் பெரும் தெருக்களில் ஒன்றான சூரசிகாமணிப் பெருந்தெருவில் வாழ்ந்தோரது பட்டியல் இது:

குயவர்கள், வண்ணத்தார், ஈரங்கொல்லிகள் (துணி வெளுப்போர்), நாவிதர்கள் (முடி திருத்துவோர்), கணித நூலோர் (சோதிடர்)

(‘தஞ்சாவூர்’ -முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்)

பெருவுடையார் கோயில் நிர்வாகத் திற்காக, அக்கோயிலில் பணி செய்தவர்களின் பட்டியலைப் பல்வேறு கல்வெட்டுகள் பதிவுசெய்துள்ளன.

நட்டுவம் செய்யும் ஆசார்யார்கள் – 12
கானம் பாடுவோர் -5
ஆரியம் பாடுவோர் - 3
தமிழ் பாடுவோர் - 4
கொட்டி மத்தளம் இசைப்போர் - 2
முத்திரைச் சங்கு ஊதுவோர் -3
விளக்குப் பணியாளர் - 7
நீர் தெளிப்பவர் - 4
குயவர்கள் - 10
துணி வெளுப்பவர் - 2
நாவிதர் - 6
துணி தைப்பவர் - 2
கன்னார் - 1
தச்சர் - 5
சாக்கைக் கூத்தர் -4

உள்ளிட்ட மொத்தம் 258 பேர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் அவரவரது பணிக்கேற்ப, ஒன்றரை முதல் 2 காணி நிலம் வரை வழங்கப்பட்டது.

(‘இராஜராஜேச்சரம்’, குடவாயில் பாலசுப்ரமணியன்)

பிராமணருக்குச் சோழப் பேரரசு நிலவுரிமையை வாரி வழங்கவில்லை. சில சான்றுகள் இவை,

‘சோழ நாட்டு வளமான விளைநிலங்களின் பெரும்பகுதி, பிராமணர்களுக்குக் கொடையளிக்கப் பட்டிருந்தது என்பது உண்மைக்கு மாறானதாகும். சோழநாட்டுக் கல்வெட்டுகளில் கிடைத்த 1300 ஊர்ப்பெயர்களை வைத்துப் பார்க்கும்போது, 250 ஊர்களே பிராமண ஊர்களாக இருந்திருக்கின்றன. இது 19.25% மட்டுமே’

‘பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை மேற்பார்வை செய்வது, அரச நடைமுறையாக இருந்தது. அவர்களது நில வருவாய் தணிக்கை செய்யப்பட்டது. கணக்குகளை முறையாக ஒப்படைக்கும்படி பிராமணர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்’

‘அதிகாரிகளுக்கும் படைத் தலைவர்களுக்கும் கொடை நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அவர்களது நிலங்கள் மேற்பார்வை செய்யப்படவில்லை’

‘பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் அவர்களுக்கு ஒருபோதும் முழு உரிமை இல்லை. அதாவது, மங்கலமாக வழங்கப்பட்ட நிலங்களை அரசன் அனுமதிக்கும் கால எல்லைவரைதான் பயன்படுத்த முடியும். அதன்பிறகு, கரையோலை முறை எனும் பொதுமுறையின்படி, இடம் மாற்றித் தரப்படும். தொடர்புடைய பிராமணர்கள் அங்கு செல்ல வேண்டும்.’

‘முறையாகக் கணக்கு ஒப்படைக்காத பிராமணர்களுக்குத் தண்டத் தொகை விதிக்கப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன’

(‘சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்’ -முனைவர் மே.து.இராசுகுமார்)

இவற்றைக்காட்டிலும் முகாமையான உண்மை ஒன்றை மேற்கண்ட நூல் தாங்கி நிற்கிறது.

‘சோழர்கள், பிராமணர்களுக்கு வழங்கிய சதுர்வேதிமங்கலங்களில் சாகுபடி செய்யும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. அதாவது, உழுவித்து உண்ணும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக, அக் கிராமத்திற்குரிய நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி மட்டுமே பிராமணர்களுக்கு வழங்கப்படும்’ என்பதே அவ்வுண்மையாகும்.

ஊர்களில் உள்ள பிற குலத்தவருக்கும் விளைச்சலில் பங்கு வழங்கப்பட்டது. அதுபோல பிராமணருக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு பங்கு வழங்கப்பட்ட கிராமங்களே சதுர்வேதி மங்கலங்கள் ஆகும்.

இந்தச் சதுர்வேதி மங்கல முறைக்கான தொடக்கம், களப்பிரர் காலத்துக் கல்வெட்டுகளில் உள்ளன. பூலாங்குறிச்சிக் கல்வெட்டு பின்வரும் செய்திகளை உரைக்கிறது.’

‘பார்ப்பனருக்கு நிலம் வழங்கும் பிரமதேய முறை, களப்பிரர் காலத்தில் இருந்தது. இவர்கள் கன்னடப் பார்ப்பனர்கள் ஆவர். இந்த பிரமதேய நிலங்களை வாங்கவும் விற்கவும் முடியும். அதாவது, இந்த நிலங்கள் இலவசமாகப் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டன. பின்னர் அப்பார்ப்பனருக்கே முழு உரிமை உடையனவாக விடப்பட்டன. அரசுக்கு அந்நிலத்தில் உரிமை இல்லை. கோயில்களுக்கென நிலங்கள் ஒதுக்கப்பட்டன. அந்த நிலங்கள் பார்ப்பனர்களின் பயன்பாட்டுக்கென கொடையாக அளிக்கப்பட்டன.

கோயில்களின் பூசை உரிமையைக் குறிப்பிட்ட குலத்தவர்தான் செய்ய வேண்டும் என்ற முறை களப்பிரர் காலத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.’

(‘முன் தோன்றி மூத்த குடி’ -பேராசிரியர் குணா)

களப்பிரருக்கு முந்தைய தமிழ் வேந்தர், அந்தணருக்கு நிலம் வழங்கினர். அந்தணர் எனும் பொருளை முன்னர் விளக்கினேன். சான்றாக, குமட்டூர் கண்ணனார் எனும் அந்தணர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனிடம் ஐந்நூறு ஊர்களைப் பெற்றார் என்கிறது ‘பதிற்றுப் பத்து’. குமட்டூர் கண்ணனார், பாணர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதை அவர் பாடலே காட்டுகிறது. இவ்வாறு வேந்தரிடம் நிலம் பெறுதல் அந்தணருக்குத் தமிழ் மரபில் இருந்த உரிமை.

கோயில்களின் வழிபாட்டு உரிமை பிராமணருக்கு அளிக்கப்பட்டமை, களப்பிரர் காலம் ஏற்படுத்திய சீர்குலைவு.

களப்பிரர் காலம்தான் தமிழைத் ‘த்ரமிள’ எனக் கல்வெட்டில் பொறித்தது. வச்சிரநந்தி எனும் களப்பிர முனிவர் தமிழ்க் கழகத்தை நடத்தினார். தமிழ்க் கழகம் எனும் பெயரை, ‘த்ரமிள சங்கம்’ எனச் சிதைத்தனர் களப்பிரர்.

அச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்ட நூல்களில் ஒன்று, ‘ஆசாரக் கோவை’. பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று இது. ஆரிய பிராமணிய ஒழுக்கங்களைத் தமிழில் பதிவுசெய்த முதல் நூல் இது. ஆசாரம் எனும் சொல்லே வடசொல்தான்.

‘ஆசாரக்கோவை’, வடமொழி ஸ்மிருதிக் கருத்துகளைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல் ஆகும். (‘பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள்’ -முனைவர்.ச.வே.சுப்பிரமணியன்)

தீண்டாமையை ஒரு வாழ்வியலாக முன்வைக்கும் நூல் இது.

‘கீழ்மக்களைத் தொட்டால் குளித்துவிடுக’ என்பது ஆசாரக்கோவையின் விதி. (பாடல் 10). இதுபோன்ற பல விதிகள் உள்ளன.

களப்பிரர், பல்லவர் காலத்திற்கு முன் தமிழர் வரலாற்றில் அயல்மொழிச் சிக்கல், சாதிப் பிரிவுச் சண்டைகள் ஆகியன இருந்ததாக இதுவரை எவரும் சான்றுகாட்டி நிறுவியதில்லை. ஆனால், இவர்கள் காலத்திற்குப் பிந்தைய நிலைகள் எவ்வளவு சீரழிவுகளைக் கொணர்ந்தன எனப் பல்லாயிரம் சான்றுகளால் காட்டவியலும்.

இராசராசச் சோழர் ஆட்சி, இச்சீர்கேடுகள் தொடங்கி ஏறத்தாழ எட்டு நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய சூழலில் அமைந்தது. ஆரியக் கருத்துகளை அடியோடு ஒழித்தலும் பிராமணரை ஒறுத்தலும் வெற்றுக் கற்பனைகளாக இருக்கலாம். உண்மையான சமூக நிலைகளுக்கு இது பொருத்தமற்ற கருத்து.

தமிழ் மரபு, தன் இயல்புகளைப் பாதுகாத்து வந்துள்ளது. அதேவேளை அயலவரின் கருத்துகளுக்கு இடமளித்து, அவர்தம் கொள்கைகளில் ஏற்கத்தக்கவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆரிய பிராமணர் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்திற்கு வந்து நிலைபெற்றவர்கள். அவர்களைத் தமிழ்ச் சமூகம் வெறுத்து ஒதுக்கவில்லை. அதேவேளை அவர்களது சமூகப் பிரிவினைகளை ஏற்கவும் இல்லை.

இராசராசச் சோழர் தமிழ் மரபியலில் நின்று ஆரியரை உள்வாங்கினார். அவர்களது முந்தைய நிலைமைகளைத் திருத்தினார். குறிப்பாக, கோயில்களில் தமிழ் மொழியே வழிபாட்டு மொழி எனும் நிலையைச் சோழர்கள் உறுதிசெய்தனர். இராசராசச் சோழர் எழுப்பிய பெருவுடையார் ஆலயத்தின் தலைமைப் பூசாரி, பவனபிடாரன் என்பவர். தேவாரம் பாடுவோர், பிடாரர் எனப்பட்டனர். தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட திருமுறைகளை மீட்டெடுத்துத் தொகுத்தவர் இராசராசர். இந்தப் பன்னிரு திருமுறைகளும், ஆரிய வைதீக சமயக்கொள்கைகளை எதிர்த்தவை என்பது தமிழ்ச் சமயம் அறிந்தோர் அறிந்த மெய்மை.

பெருவுடையார் கோயிலை நிர்வகித்தோர் பட்டியல் இது,

1. மாமன்னன் இராசராசன்

2. வீரசோழன் குஞ்சரமல்லன் எனும் ராசராசப் பெருந்தச்சன் எனும் தலைமைக் கட்டடக் கலைஞர்.

3. மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலைக் கட்டடக் கலைஞர்)

4. இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலைக் கட்டடக் கலைஞர்)

5. மாமன்னனின் தமக்கை குந்தவைப் பிராட்டியார்.

6. சேனாதிபதி கிருஷ்ணன் இராமன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன்.

7. ஸ்ரீகாரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் (கோயிலின் நிர்வாக அதிகாரி)

8. ஈசான சிவபண்டிதர் எனும் இராஜகுரு

9. இராசேந்திர சோழன்

10. சைவ ஆசாரியார் பவனபிடாரன் (தலைமை குருக்கள்)

11. கல்லில் எழுத்து வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாளுருடையான்

(இராஜராஜேச்சரம்/ முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியம்)

தமிழ் மரபுக் குலத்தவரே பெரும்பான்மை நிலைகளிலும் இருந்தமையைக் காணலாம். அதேவேளை, மும்முடிச் சோழ பிரம்மராயர் எனும் பிராமணரும் இவர்களுள் உண்டு. நீண்டகாலமாக நிலைத்துவிட்ட பிராமணச் சமூகத்தை ஒழிப்பது அல்லது வெறுப்பது மனித இயல்புகொண்ட எவருக்கும் நோக்கமாக இருக்காது. அவர்களிடம் உள்ள பாகுபாட்டுக் கருத்துகளை எதிர்த்து, அவர்களையும் அரவணைப்பதே தலைமைப் பாங்கு. அப்பாங்கு இராசராசருக்கு அமைந்திருந்தது.

தேவரடியார்

தேவரடியார் முறை வழியாகப் பெண்களுக்குக் கோயில்களில் சிறப்பிடம் வழங்கியவர் இராசராசர். அரசகுலப் பெண்கள் பலர் தேவரடியாராக மாறினர். தேவதாசி எனும் பாலியல் முறை பிற்காலத்தில் விஜயநகர ஆட்சியில் உருவாக்கப்பட்டது. தேவரடியார் குறித்த பெருவுடையார் கோயில் கல்வெட்டுச் சான்றுகள் எல்லாம் அவர்கள் கண்ணியமாக வாழ்ந்தமையைக் காட்டுகின்றன.

‘தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள்’ எனும் நூலை இயற்றிய ஆய்வாளர் லெஸ்லி.சி.ஓர் இவ்வாறு வியக்கிறார்,

‘கி.பி. 985 முதல் 1070 காலத்தில் குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன’ என்கிறார் அவர்.

இராசராசச் சோழர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு கி.பி.985.

விஜயநகர, நாயக்க மன்னர் ஆட்சிக் காலத்தில், பெண் சொத்துரிமை தேய்ந்து சிதைந்ததையும் அவர் தன் நூலில் காட்டுகிறார்.

மும்மலம் கடந்தவர்

தமிழ் மொழி, இறையியல், சமூக நிலை ஆகிய யாவும் தமிழர் மரபுக் கொள்கைகளிலிருந்து விலக்கப்பட்ட காலம் களப்பிரர், பல்லவர் ஆட்சிக் காலம். வடமொழியைத் தமிழில் கலக்கும் முறையை களப்பிரர் அறிமுகப்படுத்தினர். ‘மணிப்பிரவாளம்’ என அதற்குப் பெயரிட்டனர். ஏரி தூர் வாருவதற்கான பட்டயம்கூட வடமொழியில் பதிக்கப்பட்டது.

நாயன்மாரும் ஆழ்வாரும் செய்த பணிகளால் தமிழ் மரபு நிலைபெற்றது. அம்மரபின் மிகச் சிறந்த தொடர்ச்சி இராசராசச் சோழர். அவர் எழுப்பிய ஆலயத்திற்கு அவர் இட்ட பெயர் ‘இராஜராஜேச்சரம்’ என்பதாகும்.

அம்மையப்பருக்கு ஆலயம் எழுப்பி, அதற்குத் தன் பெயர் இட்டவர் அவர். ‘நான்’ எனும் ஆணவம் நீங்கப்பெற்று, ‘யாமே சிவம்’ எனும் உணர்தல் இது. இவ்வுணர்தலின்றி இவ்வாறு பெயரிட வாய்ப்பில்லை.

‘என் காலத்திற்குப் பின்னர் நான் அமைத்த நீர்நிலைகளைப் பராமரிக்கும் மனிதரின் பாதத்தை என் தலையில் தாங்குவேன்’ எனக் கல்வெட்டு பொறித்தவர் அவர். ஆலயத்திற்கு 12 ஆடுகளைப் பராமரித்தவர் பெயரும் அவ்வாலயக் கல்வெட்டில் உள்ளது. தன் முயற்சியே பெரிது எனும் கன்மத்தைக் கடந்தவர்களுக்கே வாய்ப்பது இத்தன்மை.

‘போரில்கூட பிராமணரைக் கொலை செய்தால், பிரம்மஹத்தி தோஷம் எனும் பாவம் ஆட்கொள்ளும்’ என்பது ஆரியக் கொள்கை. ‘மேலைச் சாளுக்கிய மன்னன் சத்யாசிரியனுடன் செய்த போரில் இராசராசன் அங்கிருந்த பிராமணர்களையும் கொலை செய்தான்’ என்று சாளுக்கியக் கல்வெட்டு கூறுகிறது. (உடையார்குடி கல்வெட்டு ஒரு மீள் பார்வை -குடவாயில் பாலசுப்ரமணியன்)

தம் ஆளுகைக்குட்பட்டு ஆரியம் பாடுவோருக்கு நிலம் வழங்கினார், தம்மைப் போரில் எதிர்ப்போர் எப்பிறப்பாயினும் கொலையும் செய்தார். மாயை எனும் மூன்றாம் மலத்தைக் கடப்போருக்கு வாய்ப்பது இச்செயல்.

‘அயல் மொழிச் சொற்களை எவ்வாறு உள்வாங்கிச் செரித்துத் தமிழாக்க வேண்டும்’ எனத் தொல்காப்பியம் விதி வகுத்துள்ளது. தமிழ் மரபு பல அயல் கருத்துகளையும் உள்வாங்கிச் செரித்துச் செம்மாந்து வாழ்கிறது. இராசராசச் சோழர் அந்தத் தமிழ்ப் பண்பின் அடையாளம். தமிழ் மரபின் சிறந்த அடையாளம், இராசராசச் சோழர்!