நட்சத்திரங்களின் ஒளிச்சந்தி
பழக்கிய பறவை உச்சரிக்கும்
இறந்தவரின் செல்லப்பெயர்
உப்பாலும் நெருப்பாலும்
உண்ணாமுலை
இசைக்கு வளரும் தாவரங்களின் காதுகள் சகலத்தையும் கேட்டுக்கொண்டிருக்கின்றன
வட்டங்களால் வணங்கும்போது
கடவுள் ஒரு கணம் இறைச்சித் துண்டாய்த்
தோன்றியதை எவ்வளவு முயன்றும்
அழிக்க இயலவில்லை
அது
நட்சத்திரங்களின் ஒளிச் சந்தியில்
தொங்கும் ஞாபகம்
ஒரு பழைய நாணயத்தில் இருக்கும்
அரசியை வர்ணத்தில் வரைய முயலும்
ஓவியனாய்ச் சூரியன்
இரவிலிருந்து பகலைத் தீட்டிக்கொண்டிருக்கிறான்
ஒரு மரம் கரையில் இடுப்பு வரைக்கும்
நீரில் தலைவிரித்தும் நெடிய வருடங்கள்
நின்றுகொண்டிருக்கிறது.

அகதியின் இருதயம்!
கப்பல்களின் தளமேடையில்
இறைந்திருக்கும் தானியங்களை
மேயும் புறாக்களில் ஒன்று
வெகுநேரமாகத்
தலைகீழாய்க் கர்ணமடித்துக்கொண்டிருக்கிறது
அதனருகே
அகதி முகாமில் ஒரு ஜெபமாலை
சதா பின்னோக்கி உருட்டப்படுகிறது
கடந்த காலத்தை மீளக் கேட்கும் பிரார்த்தனையுடன்
தோட்டாக்கள் இடைவிடாமல்
காற்றில் தையலிடும் சப்தம்
ஒரு சிறுமியின் நினைவில்
இறந்த தாயின் தாலாட்டைப்போல்
இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது
வடிகட்டி எறிந்த இலைத்துகள்களைப் போலிருக்கின்றன சாரமற்று இந்த அந்தி மேகங்கள்
வா ஆழமாய் நா துழாவி முத்தமிடு
எனக்கு ஏதேனும் பாட வேண்டும்
போலிருக்கிறது.
