Published:Updated:

“கற்பனையைவிட உண்மை நம்பமுடியாததாக இருக்கிறது!”

ஆ.இரா.வேங்கடாசலபதி
பிரீமியம் ஸ்டோரி
ஆ.இரா.வேங்கடாசலபதி

ஆ.இரா.வேங்கடாசலபதி; சந்திப்பு: வெய்யில்படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

“கற்பனையைவிட உண்மை நம்பமுடியாததாக இருக்கிறது!”

ஆ.இரா.வேங்கடாசலபதி; சந்திப்பு: வெய்யில்படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

Published:Updated:
ஆ.இரா.வேங்கடாசலபதி
பிரீமியம் ஸ்டோரி
ஆ.இரா.வேங்கடாசலபதி

வீனத் தமிழ்ச் சமூக வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பல்வேறு கோணங்களில் ஆய்வுவெளியில் முன்வைத்த, பதிவுசெய்த வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி. ஆய்வு, எழுத்து, பதிப்பு, மொழிபெயர்ப்பு என வரலாறு மற்றும் தமிழ் இலக்கிய வெளியில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். வரலாற்றை புனைவெழுத்துக்குரிய சுவாரஸ்யத்துடனும் படைப்பூக்கம் மிக்க மொழியாலும் விரித்துச் செல்பவர். ‘சிகாகோ’ உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். தற்போது, ‘சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன’த்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். சென்னை அடையாற்றில் உள்ள அவரது பணியிடத்தில் ஒரு நன்பகல் வேளையில் சந்தித்தோம். இந்தக் கோடைக்காலத்தின் முதல் மழை தூரத் தொடங்கியது. உரையாடலும்...

“கற்பனையைவிட உண்மை நம்பமுடியாததாக இருக்கிறது!”

“உங்களுக்குப் பிடித்த ஒரு பழமொழியைச் சொல்லுங்களேன். அங்கிருந்து தொடங்கலாம்...” “எழுத்துபூர்வமான ஆதாரங்களையே அதிகமாகக் கையாளும் ஆராய்ச்சி யாளனாகிய என்னிடம் இந்தக் கேள்வியில் தொடங்குவதில் ஒரு நகைமுரண் உண்டு.ஆகவே ஒரு ‘க்’ வைத்துச் சொல்கிறேன். சிறந்த பழமொழிக்கு அடையாளம், அதை அச்சிட முடியாது என்பார்கள். அச்சிடக்கூடிய பழமொழிகளை ஒன்றுக்கு இரண்டாகவே தருகிறேன். ‘கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன், வானத்தைக் கீறி வைகுண்டம் போனானாம்.’ மற்றொன்று, ‘பானை ஓட்டையானாலும் கொழுக்கட்டை வெந்துவிட்டது.’ முதல் பழமொழியின் பொருத்தத்தை விளக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். இரண்டாவது பழமொழி, என்னைப் பற்றிய சுயமதிப்பீடு.”

“உங்களுடைய பெயர், ஆய்வாளர் என்று சொன்னவுடன் ஏற்பதற்குரிய பெயராக அமைந்திருக்கிறதே எப்படி?”

“இது முற்றிலும் தற்செயல். எழுத்து என்பது ஏதோ ஒருவகையில் தனித்துவம் சார்ந்தது. பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்வார்கள். உண்மையில் பெயரில் நிறைய இருக்கிறது. புழக்கத்தால் பழகிப்போன பெயர்கள் செலாவணி இல்லாத காசுகள்போல் மதிப்பிழக்க வாய்ப்பிருக்கிறது. பெயரில் தனித்தன்மை தொனிக்கும்போது, கூடுதல் கவனமும் நம்பிக்கையும் ஏற்படுவது இயல்பு. பெயரைப் பார்த்ததுமே வாசகருக்கு எழுத்தாளரைப் பற்றிய ஒரு பிம்பம் தோன்றுகிறது அல்லவா? எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு உண்டுதானே. எத்தனையோ சுப்பிரமணியங்களும் எத்தனையோ பாரதிகளும் இருந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இல்லாமலாக்கிவிட்டு, பாரதி தனித்து விளங்கினான். பாரதிதாசன் என்பதும் தனித்த அடையாளமாகிவிட்டது. அவரை அடியொற்றி எத்தனையோ தாசர்கள் தோன்றிவிட்டார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் என்ற பெருவழக்கிலுள்ள பெயரில் எழுதுவதால் ஏற்படும் குழப்பங்களைப் பற்றி எஸ்ரா ஒரு சுவாரஸ்யமான கட்டுரை எழுதியிருக்கிறார்.

புனைபெயர் வைத்துக்கொள்ளும் ஆசை இளம்வயதில் எல்லாருக்கும் வரும். கொள்கை முழக்கமாக இளமையில் சூட்டிக்கொண்ட பெயர், பிற்காலத்தில் சுமையாகிப்போவதும் உண்டு. இதில் தப்பித்தவர் புதுமைப்பித்தன். சொ.விருத்தாசலம் பிள்ளை என்ற பெயரில் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ வெளிவந்திருந்தால் எப்படி இருக்கும் என்று என்னால் கற்பனையே செய்துபார்க்க முடியவில்லை.

இரண்டு முதலெழுத்துகள் கொண்டவர்களுக்கு, புனைபெயர் தேவைப்படுவதில்லை. டி.கே.சி., ம.பொ.சி., க.நா.சு., லா.ச.ரா. என்றாலே தனித்துவம் வந்துவிடுகிறது. ‘ரகுநாதன்’ என்பதைவிட ‘தொ.மு.சி. ரகுநாதன்’ என்றால் ஓர் ஆளுமைச் சித்திரம் தோன்றிவிடுகிறது. ஜெயகாந்தனுக்குப் பிரச்னையே இல்லை; இயற்பெயரிலேயே புனைபெயருக்குரிய கவர்ச்சி அமைந்துவிட்டது. தன் தந்தையின் பெயரை முன்னொட்டாக வைத்துக்கொண்டார் சுந்தர ராமசாமி. ஈர்ப்பு மிக்க அந்தப் பெயர் இடைவெளி இல்லாமல் ‘சுந்தரராமசாமி’ என்று அச்சானால், ஒரு மில்லி மீட்டரில் அந்த ஈர்ப்பே இல்லாமலாகிவிடுகிறது. ‘இப்படிச் சேர்த்து எழுதினால் தன்னை ரம்பம்வைத்து அறுப்பதுபோலிருக்கிறது’ என்று போலிக் கோபத்துடன் ஒரு இடத்தில் அவர் எழுதியுமிருக்கிறார்.

ஆதார், பான் கார்டு, வங்கிக் கணக்கு எல்லாவற்றிலும் சீர்மை தேடும் கண்காணிப்பு அரசு உள்ள சூழலில், புனைபெயர் கொண்டவர்கள் எப்படி இயங்குகிறார்கள் என்று அடிக்கடி தோன்றும்.

மயிலை சீனி.வேங்கடசாமி, நா.வானமாமலை, க.கைலாசபதி, எ.சுப்பராயலு என்று பல ஆராய்ச்சியாளர்களுக்கு இயல்பாகவே தனித்தன்மையான பெயர் அமைந்ததுபோல் எனக்கும் அமைந்துவிட்டது.” (சிரிக்கிறார்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கற்பனையைவிட உண்மை நம்பமுடியாததாக இருக்கிறது!”

“அப்படியென்றால் நீங்கள் புனைபெயரே வைத்துக்கொண்டதில்லையா?”

“கையெழுத்துப் பத்திரிகை நடத்தியபோது வைத்துக்கொண்டேன். நல்லவேளையாக அதையெல்லாம் சீக்கிரமே கைவிட்டுவிட்டேன். என் இயற்பெயரே பல வகைகளில் வசதியாகப்போய்விட்டது. சாதி, மதம், வர்க்கம், பாலினம், பிரதேசம் என்ற வகையில் மட்டுமல்ல, வயதின் காரணமாகவும் வேறுபாடும் பாரபட்சமும் காட்டும் சமூகம் தமிழ்ச் சமூகமாகும். கரிகாலன், ‘நரை முடி தரித்து நீதி வழங்கினான்’ என்பதுதானே நம் மரபு. வயது குறைந்தவன் வரலாறு எழுதுவதைத் தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொண்டது விந்தைதான். இதற்கு என் பெயரும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இரண்டு நெட்டெழுத்துகளை முதலெழுத்து களாகக்கொண்ட நீண்ட பெயர், முதிய தோற்றத்தைத் தந்துவிடுகிறது என்றே நினைக்கிறேன். என் எழுத்தைப் படித்துவிட்டு நேரில் சந்திப்பவர்கள், ‘வயதானவரை எதிர்பார்த்தேன்’ என்று சொல்லக் கேட்டுப் பழகிவிட்டது. ஐம்பது வயதான பிறகும் இதே எதிர்வினை வருவதுதான் ஆச்சர்யம். இளம் ஆய்வாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை, இதுமாதிரி ஒரு பெயரை வைத்துக்கொண்டு பழைய விஷயங்களைப் பற்றி எழுதிக்கொண்டுமிருந்தால், அழகான இளம் ரசிகைகள் அமையமாட்டார்கள்!”

“உங்களது சிறார் பருவத்து சந்தோஷமாக எந்த விஷயம் இருந்தது?”

“ஒரு மனிதனின் ஒட்டுமொத்த ஆளுமையைத் தீர்மானிக்கக்கூடியதான அனுபவங்கள், பதினைந்து வயதுக்குள் அமைந்துவிடுகின்றன என்ற உண்மை வயதாக ஆக உறுதிப்படுகிறது. என்னுடைய இளமைக்காலம் மகிழ்ச்சியாக இருந்ததாக நினைவில்லை. அதற்கு உடல்நலமும் ஒரு காரணம். சதா மூக்கொழுகிக்கொண்டிருக்கும். விளையாட்டிலும் தேர்ச்சி இல்லை. கிரிக்கெட் ஆடினால், முதல் பந்திலேயே அவுட்டாகிவிடுவேன். பேட்மின்டன், பம்பரம், கோலி, கில்லி எதிலும் தேறியதில்லை. கடைசிக்கு அடுத்த இடம் என்று ஒன்று இல்லாததால், எனக்குக் கடைசி இடம் தவறாமல் கிடைத்துவந்தது. அனைத்துத் தோல்விகளிலிருந்தும் விடுதலை அளிக்கக்கூடியதாக வாசிப்பு அமைந்தது. நடுத்தர வர்க்கச் சூழல், ஆங்கிலவழி சி.பி.எஸ்.இ கல்வி ஆகியவற்றின் காரணமாக, அந்த வயதுக்குரிய ஆங்கிலப் புத்தகங்களை, அதாவது ‘எனிட் பிளைட்டன்’, ‘ஹார்டி பாய்ஸ்’ காமிக்ஸ் நூல்களை நிறைய வாசித்தேன். இன்றும்கூட ‘ஆஸ்டரிக்ஸ் காமிக்ஸ்’ உயர்ந்த தளத்திலான, எல்லா வயதினருக்கும் உரிய நகைச்சுவையுடன் அலாதியானதாக, படிப்பதற்கு இன்பமான அனுபவமாக இருக்கிறது.”

“ஆங்கில வாசிப்பிலிருந்தவருக்குத் தமிழ் மொழியின் மீது ஆர்வம் எப்படி ஏற்பட்டது?”

“ஆரம்பக்கட்ட ஆங்கில வாசிப்பை முடித்து, அடுத்த பருவத்துக்கான ஆங்கில வாசிப்பை நோக்கி நகர வேண்டிய நேரம்... அப்போது ‘ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு’ மதுரையில் (1981 தொடக்கத்தில்) நடந்தது. பாரதிதாசனின் தமிழுணர்வு பெரும் மன எழுச்சியை ஊட்டியது. 1981 இறுதியிலிருந்து ஓர் ஆண்டு ‘பாரதி நூற்றாண்டு’ மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னை நகரமெங்கும் நாள் தவறாமல் கூட்டங்கள் நடக்கும். அரசாங்கம் ஒரு பக்கம் என்றால், இலக்கிய அமைப்புகள் ஒரு பக்கம் பாரதியைக் கொண்டாடிக்கொண்டிருந்தன. இவ்வளவு சிறப்பாகத் தமிழகத்தில் எந்த ஆளுமையின் நூற்றாண்டு விழாவும் முன்னெடுக்கப்படவில்லை என்று சொல்லலாம். குமரி அனந்தன் தியாகராய நகர் ‘ராமகிருஷ்ணா பள்ளி’யில் சனிக்கிழமைதோறும் ஓராண்டுக்கு நடத்திய ‘சிந்தனைப் பண்ணையில் பாரதி’ கூட்டங்கள் மிக முக்கியமானவை. தமிழ்நாட்டின் முக்கியமான அத்தனை பாரதி அறிஞர்களும் தமிழ் அறிஞர்களும் ஆளுமைகளும் அங்கு வந்து பேசினார்கள். தமிழார்வம் நெருப்பாக மூண்டது. 10 முதல் 12-ம் வகுப்புவரை கோடம்பாக்கம் அரசுப் பள்ளியில் படித்தேன். ஷிப்ட் முறையில் இயங்கிய பள்ளி அது. வாசிப்பதற்கு அதிக நேரம் கிடைத்தது. அந்த மூன்று ஆண்டுகளும் ஆங்கிலப் புத்தகம் ஒன்றுகூடப் படிக்கவில்லை என்று நினைவு. கள், காமம், காதல் இவற்றைவிடவும் போதை தருவது கருத்து. கருத்துகள் தரும் போதை அலாதியானது; முடிவற்றது. 1980-கள் தொடங்கி, ஒரு பத்தாண்டுக்காலம் அதன் உச்சத்தில் திளைத்தேன். அப்படியான போதையில் மண்ணில் கால்கள் பாவாமல் மிதந்துகொண்டே திரிந்தது நினைவிலிருக்கிறது. தமிழியக்கம், திராவிட உணர்வு, தேசிய இயக்கச் சிந்தனைகள், இடதுசாரிக் கருத்துகள் என்று எல்லாம் ஒரே சமயத்தில் அலைமோதிக்கொண்டிருந்தன. ஆக்கபூர்வமாக எதையாவது செய்தே தீர வேண்டும் என்ற வெறி மூண்டது.”

“பொது இலக்கியக் கூட்டங்கள் செல்வது, அங்கு வரும் ஆளுமைகளின் உரை கேட்பது தாண்டி, குறிப்பிட்ட ஆளுமை யாரையேனும் சந்தித்து உரையாடினீர்களா?”

“ ‘முகம்’ மாமணியைச் சந்தித்தது முதல் திருப்புமுனை. ஏழ்மையான பின்னணியில் பிறந்து, கடும் உழைப்பால் முன்னேறியவர். தாமாகப் படித்துப் பட்டம் பெற்றவர். பெரியார் வழியினர். மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் அப்போது கூட்டம் நடத்தத் தொடங்கியிருந்தார். மாணவர்களுக்கு விநாடி வினா போட்டி என்ற அறிவிப்புத் தட்டியைப் பார்த்து, கூட்டத்துக்குப் போனேன். பிப்ரவரி 1981, முதல் ஞாயிற்றுக்கிழமை. போட்டியில் கேட்ட கேள்விகளே வித்தியாசமாக இருந்தன. ‘சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்திலுள்ள சிலை யாருடையது?’ என்று கேட்டார். கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய ‘வள்ளுவர் உள்ளம்’ புத்தகம் பரிசாகக் கிடைத்தது. அப்போது மாமணிக்கு வயது 50. எனக்குப் பதினான்குகூட ஆகவில்லை. என்றாலும் என்னை ஆட்கொண்டுவிட்டார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைப் பிற்பகலும் அவரை தவறாமல் சந்திக்கத் தொடங்கினேன். தாம் கற்றதை, கேட்டதை, வாழ்ந்ததைச் சொல்வார். தீராத வேட்கையுடன் கேட்டுக்கொண்டி ருப்பேன். அவருடைய நூலகம் முழுவதையும் ஓரிரு வருடங்களில் படித்து முடித்துவிட்டேன். ‘இலக்கிய வட்ட’க் கூட்டத்திற்கு உரையாற்ற, பல முக்கிய ஆளுமைகளை அவர் அழைத்து வருவார். நாரண துரைக்கண்ணன், சுரதா, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, கா.அப்பாத்துரை, பூவண்ணன், கு.ராஜவேலு, சிவகாமி சிதம்பரனார், அவ்வை நடராசன் முதலானவர்கள் 1981–82-ல் வந்ததாக நினைவு. பேச்சாளர்களை முடிவுசெய்ததும் பேச்சுத் தலைப்பு தொடர்பான நூலைப் படிக்கக் கொடுப்பார். கூட்டம் நடப்பதற்கு முன்பு, அதைப் படித்துவிட வேண்டும். பிறகு நேரில் விவாதிப்போம். அடுத்து அதைவைத்து ஒரு கட்டுரை எழுதி, கூட்டத்தில் படிக்க வேண்டும். எவ்வளவு அரைவேக்காட்டுத்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் இருந்தாலும் கட்டுரை எழுதுவதை ஊக்கப்படுத்துவார்.”

“அங்கு பேச வந்த முக்கியப் பேச்சாளர்களில் யவரேனும் உங்களை அதிகம் ஈர்த்தார்களா?”

“ஈர்த்தார்களா என்று சாதாரணமாகக் கேட்டுவிட்டீர்கள். இரண்டு பேச்சாளர்கள் என் வாழ்க்கையையே திருப்பிப் போட்டுவிட்டார்கள். ஏப்ரல் 1982, முதல் வாரக் கூட்டத்திற்குப் புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றிப் பேச ரகுநாதன் வந்தார். அதற்கு முன்பே, ‘புதுமைப்பித்தன் கதைகள்’ ஸ்டார் பிரசுரத்தின் முதல் பதிப்பு, அதுவும் ஜெயகாந்தன் மெய்ப்புப் பார்த்தது, அதைப் படிக்கக் கொடுத்திருந்தார் மாமணி. நூலைப் படித்தது யுகாதி நாள். உண்மையிலேயே அது எனக்கு ஒரு ஊழியின் பிறப்பாகவே அமைந்துவிட்டது. ‘பொன்னகரம்’ கதையில் புதுமைப்பித்தன் விவரிப்பார்... ‘ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான் செய்கிறது. போகக்கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா? ... குழந்தைகள்தான் என்ன ‘கிளக்ஸோ’ குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க?’ இந்த வரிகளைப் படித்ததும் அதிர்ந்துபோனேன். ரகுநாதனின் உரையைக் கேட்டதும் அவர் எழுதிய ‘புதுமைப்பித்தன் வரலாறு’ நூலைத் தேடிப் படித்தேன். அது ஒரு தனிக்கதை. ‘அவனுக்கே பிச்சனானேன்’ என்ற நெடுங்கட்டுரையில் அதை விவரித்திருக்கிறேன். புதுமைப்பித்தனின் படைப்புகள் மட்டுமல்ல, அவருடைய ஆளுமையும் என்னை ஆட்கொண்டுவிட்டது. புதுமைப்பித்தன் படைப்புகளுக்கான செம்பதிப்பைத் தயாரிப்பதற்கான உத்வேகம் அதிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். அகிலன், நா.பார்த்தசாரதி, சுஜாதா, ஜெயகாந்தன் என்று படிப்படியாகத்தானே தமிழ் வாசகர்கள் பெரும்பாலும் புதுமைப்பித்தனிடம் வருவார்கள்? நான் நேராக வந்துவிட்டேன்.”

“த.கோவேந்தனும் உங்களை பாதித்த முக்கியமான நபர் அல்லவா?” ஆமாம். ரகுநாதன் பேசிய அடுத்த மாதமே பாரதிதாசன் பற்றி த.கோவேந்தன் பேசினார். கோவேந்தன் பேச்சு சண்டமாருதமாக இல்லை. மேசை முன், நாற்காலியில் அமர்ந்தவாறே பேசினார். திடீரென்று ரகுநாதனின் ‘இலக்கிய விமர்சனம்’ நூலிலிருந்து சுத்தானந்த பாரதியைப் பற்றி ஒரு வரியை எடுத்துப் போட்டார். ‘அவர் எழுதிய பாடல்களின் அளவு கடல் போன்றது, அவற்றின் ஆழமோ உவர்கழியைவிடக் குறைவானது’. செய்திகளும் பாடல் வரிகளும் கருத்துத் தெறிப்புகளும் இடையறாமல் வந்தன. திக்குமுக்காடிப் போனேன். பேசப் பேச அவர் முகத்தில் அறிவுக் களை ஒளிவிட்டது. வ.உ.சி ஆய்வில் தலைப்பட்டிருந்த நேரம். ‘செந்தமிழ்ச் செல்வி’யின் வ.உ.சி. நூற்றாண்டு மலர் தம்மிடம் இருந்ததாக அவர் சொல்லவும் அடுத்த வாரமே அவர் வீட்டுக்குச் சென்றேன். கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் முதல் தெருவில் அவர் வீடு இருந்தது. அஞ்சல் துறையின் ஒப்புதல் இல்லாமலேயே  ‘பாவேந்தர்’ பெயரை அந்தத் தெருவிற்கு அவர் வைத்துவிட்டார் என்பதால், தேடிக் கண்டுபிடிக்க கொஞ்சம் முயற்சி தேவைப்பட்டது. ஒத்திக்கு எடுத்த பழைய வீடு. புத்தகங்கள்தான் வீட்டின் சுவர்களைத் தாங்கி இருந்தன என்று சொல்ல வேண்டும். 

“கற்பனையைவிட உண்மை நம்பமுடியாததாக இருக்கிறது!”

முதல் சில சந்திப்புகளிலேயே ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை எட்டு மணிக்கு அவர் வீட்டில் ஆஜராகிவிடுவேன். தமிழ் மரபிலக்கியத்திலும் இலக்கணத்திலும் அவர் வல்லவர். பண்டை இலக்கியக் கல்வி அவரிடமிருந்துதான் அதிகமும் கிடைத்தது. தமிழின் பெரும் இலக்கியப் பரப்பை அவர் அறிமுகப்படுத்தினார். ‘திருக்குறள்’ பாடம் எடுத்தார். மு.அருணாசலம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ (8–16 நூற்றாண்டு) முதலான நூல்களை அவர்தான் அறிமுகப் படுத்தினார். சோவியத் இலக்கியம், இடதுசாரி இலக்கியங்கள், மார்க்சிய நூல்கள் எல்லாம் அவர் நூல் சேகரிப்பில் மண்டிக்கிடக்கும். ‘பாப்பேலா நெரூடா’ புகழ்பெற்ற பெங்குவின் பதிப்பு அவர்தான் படிக்கக் கொடுத்தார்.”

“உங்கள் வயதுக்கும் அவர் வயதுக்கும் இடையில் சீனப்பெருஞ்சுவரே எழுப்ப முடியுமே!”

“உண்மைதான். நான் அவரைச் சந்தித்தபோது, ஐம்பதாம் வயதில் அடியெடுத்து வைத்திருந்தார். எனக்குப் பதினைந்து. வயது வேறுபாடு பார்க்காமல் பல அறிஞர்கள் என்னிடம் பழகியது, என் வாழ்க்கையில் அமைந்த பேறு. கோவேந்தனுக்கு நிலையான பணி இல்லை. மற்றவர்களுக்கு நூல் எழுதிக்கொடுப்பார். ஊதியத்திற்காகப் பிஎச்.டி ஆய்வேடுகளும் எழுதித் தருவார்.”

“பிஎச்.டி ஆய்வேடுகள் எழுதித் தருவாரா... உண்மையாகவா? கல்விப்புலத்தில் அப்போதே இது ஆரம்பித்துவிட்டதா? அதிர்ச்சியாக இருக்கிறது...”

“தமிழக உயர்கல்வியின் சீரழிவு அண்மையில் ஏற்பட்டதல்ல. அது எப்போதோ தொடங்கிவிட்டது. அதைப் பற்றிய விவாதத்தைத் தனியாக வைத்துக்கொள்வோம். புதுமைப்பித்தனும் கோவேந்தனும் எனக்கு வேறொரு பாடத்தையும் கற்றுத் தந்தனர். எழுத்தை முழுநேரப் பணியாக வைத்துக்கொள்ளக் கூடாது என்பதே அது. ‘புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம். உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை’ என்பதுதான் ரகுநாதன் எழுதிய ‘புதுமைப்பித்தன் வரலாறு’ நூலின் முதல் வரி. அதனால்தான் வங்கி வேலை பார்க்கலாம் என்று நான் பி.காம். படித்தது. கல்லூரியில் நுழைந்த உடனேயே கணக்கு பார்க்கும் வேலை ஒத்துவராது என்று புரிந்துவிட்டது வேறு கதை.”

“சரி, வ.உ.சியிடம் எப்படி வந்துசேர்ந்தீர்கள்?” “ஒன்பதாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடமுறையிலே படித்தேன் என்று சொன்னேனல்லவா? சிறப்பான பாட வடிவமைப்பு என்றபோதும், அது வட இந்தியாவை மையம்கொண்டே அமைக்கப்பட்டிருந்தது. அப்பாடத்திட்டத்தில் வ.உ.சி என்ற பெயரையே பார்க்க முடியவில்லை. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நூலகங்களில் தேடிப்பார்த்தால், வ.உ.சி பற்றி ம.பொ.சி எழுதிய நூலைத் தவிர எதுவும் இல்லை. அப்போது சென்னை ‘பிரிட்டிஷ் கவுன்சில்’ நூலகத்துக்குச் சென்றுவருவது வழக்கம். அங்கே ஏராளமான ஐரோப்பிய ஆளுமைகளைப் பற்றிய வரலாற்று நூல்கள் கிடைக்கும். சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ‘பேடன் பவல் வாழ்க்கை வரலாறு’ மிகுந்த ஆர்வத்தைத் தந்தது. இவ்வளவு விரிவான வரலாறுகள் ஏன் நம் நாயகர்களுக்கு எழுதப்படுவதில்லை என்ற ஆற்றாமை உண்டானது. நாமே ஏன் எழுதக் கூடாது என்றும் தோன்றியது. முதல்நிலை ஆதாரங்கள் எல்லாம் ஆவணக்காப்பகத்தில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன். உடனே எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகத்திற்குச் சென்றேன்.”

“உள்ளே விட்டார்களா?”

(சிரிக்கிறார்) “பள்ளிச் சிறுவர்களை யெல்லாம் உள்ளே விடமுடியாது என்று சொல்லி உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே, மறைமலையடிகள் நூலகம், பெரியார் திடல் நூலகம் ஆகிய இடங்களுக்குப் போனேன். கல்லூரியில் சேர்ந்த முதல் மாதத்திலேயே ஆவணக்காப்பகத்திற்குள் நுழைய அனுமதி வாங்கினேன். முதல் மூன்று மாதங்களிலேயே ஒரு வரலாற்று ஆய்வாளனாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். வ.உ.சி-யின் முழுமையான வரலாற்றை எழுத ஆசைப்பட்டேன். அவரை அடியொற்றிப் பின்சென்றேன். அந்தப் பயணம், தமிழ் வாழ்வை வரலாற்றைக் கண்டறியவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. தேசிய இயக்கம், தொழிலாளர் அமைப்பு, சைவ சமய மறுமலர்ச்சி இயக்கம், திராவிட இயக்கம், இலக்கியம், பதிப்பு என விரிந்த தளத்தில் வ.உ.சி இயங்கியிருந்தார். அவரை அறிந்துகொள்ளும் முயற்சி என்னைத் தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளராக மாற்றிவிட்டது.”

“வ.உ.சி கடிதங்களை அப்போதுதான் தொகுத்தீர்களா?”

“பாரதி நூற்றாண்டைப் பற்றிச் சொன்னேனல்லவா? அந்த ஆண்டிலேயே ரா.அ.பத்மநாபன் தொகுத்து வெளியிட்ட ‘பாரதி கடிதங்கள்’ நூல் மிகுந்த மனக்கிளர்ச்சி யைத் தந்தது. ‘தம்பி, நான் ஏது செய்வேனடா! தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்குச் சம்மதமில்லை’ என்ற வரிகளைப் படித்தபோதும், ‘மண்ணெண்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக சாதாரணமாகவும் அதிக விரைவாகவும்’ தன்னுடைய புத்தகங்கள் விலையாகும் என்ற பாரதியின் வரிகளையும் படித்தபோது அதிர்ந்தேன். ரா.அ.பத்மநாபன் பாரதியின் 23 கடிதங்களைத் தொகுத்திருந்தார். இரு நூறாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கீட்ஸ். ஷெல்லி கடிதங்களெல்லாம் நூற்றுக்கணக்கில் வந்திருக்க, அண்மையில் வாழ்ந்த பாரதிக்கு ‘23’தானா என்ற ஏமாற்றமும் இருந்தது. ஏன் வ.உ.சி-க்கும் அப்படி ஒரு தொகுப்பு கொண்டுவரக் கூடாது என்று நினைத்தேன். 43 கடிதங்கள் கிடைத்தன. ‘சேகர் பதிப்பகம்’ 1984-ல் அதை வெளியிட்டது. சிறு வயது முதலே வாழ்க்கை வரலாற்று நூல்களை வாசிக்கும் விருப்பம் எனக்கிருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். உளவியல் நோக்கில் அணுகினால், இளமைப் பருவம் தனக்கான ஆதர்ச நாயகர்களைத் தேடக்கூடிய பருவம் அல்லவா... எனவே வ.உ.சியின் பின் சென்றேன்.”

“உங்களுக்கு அப்போது 17 வயது. அந்த இளமைப்பருவத்தில் மனதை ஈர்க்கிற ‘அதிசாகச நாயகர்களான’ சினிமா ஹீரோக்கள்மீது நாட்டம் ஏற்படவில்லையா?”

“நல்லவேளையாகத் தப்பித்தேன். இலக்கியமும் வரலாறும் என்னைக் காப்பாற்றிவிட்டன. அன்றைக்கும் இன்றைக்கும் சினிமாதான் தமிழ் இளைஞர்களைப் பெரிதும் ஈர்க்கும் காந்தசக்தியாக இருந்துவருகிறது. ஆற்றலுள்ள இளைஞர்களெல்லாம் சினிமாவுக்குள்தான் நுழையத் துடிக்கிறார்கள். இதன் விளைவாகப் பிற துறைகளெல்லாம் வறுமைப்பட்டு நிற்கின்றன.”

“வெகுசன வெளியில் ஆய்வாளர் என்கிற ஒரு பாத்திரமே அறிமுகமாகவில்லை எழுத்தாளர்கள், நுண்கலைகள் சார்ந்த ஆளுமைகள் குறித்து சினிமா வழியாகவாவது மக்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். எதார்த்தத்தில் ஓர் ஆய்வாளர் இந்தச் சமூகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்?”

“கற்பனையைவிட உண்மை நம்பமுடியாததாக இருக்கிறது!”

“ஆம். எழுத்தாளர்கள் எப்படி இருப்பார்கள், எப்படிச் செயல்படுவார்கள் என்று வகைமாதிரியான சில சித்திரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. புதுமைப்பித்தன், வ.ரா., கு.ப.ரா முதலான முக்கியமான பதினைந்து இருபது எழுத்தாளர்கள் 1941-ல் எடுத்துக்கொண்ட புகழ்பெற்ற படம் ஒன்று உண்டு. எல்லோரும் கதர் ஜிப்பாவும் வேட்டியும் கட்டியிருப்பார்கள். இதில் ஒரு உடைவை ஏற்படுத்தியது ஜெயகாந்தன்தான். அவரைப் பார்த்துப் பல போலிகள் உருவானது வேறு செய்தி. இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் பெர்மூடா அணிந்து பீர்க் குவளையுடன் தோன்றுகிறார்கள். ஆய்வாளர்கள் பற்றி வகைமாதிரியான சித்திரம் உருவாகாமல் போனதற்குக் காரணம், அவர்களுடைய செயல்பாடுகளில் தனித்துவம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை என்று நினைக்கிறேன். தெருவில் நடந்து சென்றால் யாருக்கும் அடையாளம் தெரியாது. ஸ்பீல்பர்கின் ‘இண்டியானா ஜோன்ஸ்’, கண்ணாடி போட்டு, கோட் சூட் அணிந்து சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பாடம் எடுத்துக்கொண்டிருப்பார். அப்படியில்லாத சமயங்களில் காடுகளிலும் பழம் நாகரிகங்களிலும் சாகசம் புரிந்து வில்லன்களைத் தீர்த்துக் கட்டுவார். அவர் தொல்லியலாளர். கீழடி அகழ்வாய்வுக்கு வெறும் 55 லட்சம் ரூபாய் ஒதுக்கும் நாட்டில் தொல்லியலாளர் அப்படியெல்லாம் சாகசம் செய்ய முடியாதுதானே? வரலாற்று ஆய்வாளர்கள் தம் முழு ஆயுளையும் கழிக்க விரும்பும் இடம், நூல்நிலையங்களும் ஆவணக்காப்பங்களும்தான். காலை முதல் மாலை வரை அவர்கள் பழைய ஆவணங்களில் மூழ்கிக் கிடப்பார்கள். இடையிடையே தேநீர் அருந்துவார்கள். புகைபிடிக்கும் தலைமுறை இப்போது அருகிவிட்டது. மாலையில் சில வேளைகளில் மது. வாய்ப்பு அமையும்போதெல்லாம் சக ஆய்வாளர்களுடன் கலந்துரையாடுவார்கள், அரட்டையடிப்பார்கள். இந்தக் கால அட்டவணை எப்போதும் சாத்தியமில்லை. பல்கலைக்கழகத்துக்குப் போகவேண்டும்; பாடம் எடுக்க வேண்டும்; விடைத்தாள் திருத்த வேண்டும்; ஆய்வு மாணவர்களை வழிநடத்த வேண்டும்; கல்வி நிலைய அதிகாரிகளுடன் மல்லுக்கட்ட வேண்டும். இதன் காரணமாக கோடை விடுமுறைக்காக ஏங்காத வரலாற்று ஆய்வாளர்களே இல்லை. ‘திராவிடச் சான்று’ நூல் எழுதிய தாமஸ் டிரவுட்டான், ‘லண்டன் பிரிட்டிஷ் நூலகத்திலேயே தன்னைப் புதைத்துவிட்டால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்’ என்று ஒருமுறை சொன்னார். எல்லா வரலாற்று ஆய்வாளர்களின் கனவும் அதுதான். நூலக மேசையில் ஒவ்வொரு ஆய்வாளரின் நடவடிக்கைகளையும் அவதானிப்பது சுவாரசியமானது.”

“நூலகத்திலேயே காலத்தைக் கழித்தால் எப்போதுதான் ஆய்வு உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்?”

“ஆவணக்காப்பகங்களில் கணிசமான காலத்தைக் கழித்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு தலைப்பு தொடர்பாகப் போதுமான தரவுகளைத் திரட்டிவிட்டோம் என்று நிறைவுகொண்டதும் எழுதும் பணி தொடங்குகிறது. எழுதுவதற்கு மன அமைதியும் கால இடைவெளியும் தேவை. ஆவணக்காப்பகத்தில் தகவல் திரட்டும்போது இன்பத்தில் திளைக்கும் ஆய்வாளர், எழுத உட்காரும்போது ஐயமும் மலைப்பும் சுயவெறுப்பும் கொள்கிறார். துண்டுதுக்காணியாகச் சேகரித்த ஏராளமான தரவுகளை ஒரு வாதச் சரட்டில் இணைக்க வேண்டும். தொடக்கப் பகுதியை எழுதும் வேளையில் கடும் மன ஒருமிப்பும் கட்டுப்பாடும் தேவை. இந்தக் கண்டத்தைத் தாண்டினால் எழுத்து சூடு பிடிக்கும். கடைசிச் சுற்றில் மீண்டும் சண்டிமாடுபோல் எழுத்து இடர்செய்யும். கட்டுரையின் கரட்டு வடிவத்தை ஆய்வாளர்கள் கருத்தரங்குகளில் வெள்ளோட்டம் விடுவார்கள். சக ஆய்வாளர்களிடம் கொடுத்து கருத்து கேட்பார்கள். பின்பு செப்பம் செய்து, செம்மைப்படுத்துவார்கள். ஆங்கில ஆய்விதழிலோ, ஆங்கிலப் பதிப்பகம் வழியே புத்தகமாக வெளிவந்தால் அவர்களும் ஒன்று அல்லது இரண்டு வல்லுநர்களிடம்  கையெழுத்துப்படியைக் கொடுத்துக் கருத்து கேட்பார்கள். கட்டுரை வெளிவருமா வராதா என்பதை இவர்கள் முடிவே தீர்மானிக்கும். இவர்கள் யார் என்று ஆசிரியருக்குத் தெரிவிக்க மாட்டார்கள். வல்லுநர்கள், முற்றிலும் மறுக்கலாம் அல்லது திருத்தச் சொல்லலாம். இதற்கடுத்து  பதிப்பாசிரியர் பார்ப்பார், பிரதி செம்மையாக்குநர் திருத்துவார், மெய்ப்பு நோக்குபவர் பிழைகளைக் களைவார், வெளிவந்த பின் மதிப்புரையாளர்கள் பிரித்து மேய எல்லா வாய்ப்பும் உண்டு. யாரும் படிக்காமல் கிணற்றில் விழுந்த கல்லாவதே ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளின் விதி. பத்திரிகை பேட்டி வரை ஓர் ஆய்வாளன் வருவதெல்லாம் அபூர்வம்.”

“பொதுவாகக் கலைஞர்கள் தீவிரமாக இயங்குவதற்கான ஒரு பிரத்யேக மனநிலை ‘Mood’ வேண்டும் என்பார்கள். ஆய்வாளர்களுக்கும் இது பொருந்துமா? உங்களுடைய இயங்குமுறை எப்படியானது?   புனைவுப் படைப்புகளைப்போல முழுமை எய்தாமல், எப்போதும் மாற்றத்திற்கும் விரிவுக்கும் சாத்தியமுள்ள ஒன்று ஆய்வு. ஓர் ஆய்விலிருந்து முற்றிலுமாக எப்போது வெளியேறுகிறீர்கள். முழுமையின்மை அல்லது விடுபடல் என்பதொரு அழுத்தமாக மனதிலிருந்துகொண்டே இருக்காதா?”

“ஆய்வுலகுக்கு வெளியே இருப்பவர்களுக்கு ஆய்வாளர்கள் செயல்படும் முறை புதிராக இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆய்வு என்பது ஒரு தேர்ந்த கைவினைத் தொழில் போன்றது.ஆவணக்காப்பகங்களிலும் நூலகங்களிலும் தேடல் தொடங்குகிறது என்று சொன்னேன் அல்லவா. விரிவான வாசிப்பிலிருந்து உருவான ஓர் ஆய்வுக் கேள்வி, தலைப்பு இவை இல்லாமல் ஆவணக் காப்பகத்தில் நுழைந்தால், திக்குத்தெரியாத காட்டில் தொலைந்துபோனதுபோல் ஆகிவிடும். சில கருதுகோள்களோடு ஆவணங்களைத் தேடும்பொழுதுதான் இசைவாகவும் மறுப்பாகவும் பல தரவுகள் கிடைக்கும். தேடியது கிடைக்கும்போது, தேடாத பல செய்திகளும் கிடைக்கும். இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொள்ளும் திறந்த மனத்தோடு இருக்க வேண்டும். என் அனுபவம் இரண்டைக் கூறுகிறேன். வ.உ.சி ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தபோதுதான் கணித மேதை இராமானுஜனின் தொலைந்துபோய்விட்டதாகக் கருதப்பட்ட மதிப்பெண் பட்டியலைக் கண்டெடுத்தேன். இது எளிய உதாரணம். இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை உணர, அந்த மதிப்பெண் பட்டியல் கிடைக்கவில்லை என்று தெரிந்திருக்க வேண்டுமல்லவா? ‘தமிழ்ப் பதிப்பியல்’ வரலாறு பற்றி  பிஎச்.டி ஆய்வுசெய்துகொண்டிருந்தபோது, 1920-40கள் தொடர்பான ஏராளமான நூல்கள், இதழ்களைப் படித்துக்கொண்டிருந்தேன். திடீரென, அதற்கு முந்தைய காலப்பகுதியில் இல்லாத வகையில் 1930-களில் ‘காப்பி குடிப்பது’ பற்றிய குறிப்புகள் ஏராளமாகத் தட்டுப்பட்டன. ரத்தச்சுவை கண்ட ஆட்கொல்லிப் புலி போல் ஆய்வு மனம் விழிப்படைந்தது. இந்தக் குறிப்புகளையெல்லாம் தனித்தனித் துண்டு அட்டைகளில் பதிந்துகொண்டேன். சில ஆண்டுகளில் இந்தக் கோப்பு பருத்துவிட்டது. அடுத்து இதுதொடர்பான திட்டமிட்ட தேடல் தொடங்கியது. பண்பாட்டு வரலாறு தொடர்பான ஒரு கருத்தரங்கத்திற்கு அழைப்பு வந்தபோது, தமிழகத்தில் காப்பி குடிக்கும் பழக்கத்தைப் பற்றிக் கட்டுரை எழுத முற்பட்டேன். முற்றிலும் தனித்தனியான நூற்றுக்கணக்கான செய்திகளையும் மேற்கோள்களையும் ஒரு குறிப்பிட்ட சட்டகத்தில் அடக்கி, ஒரு வாதத்தை முன்வைக்க வேண்டும். இதுதான் ஆய்வெழுத்து முன்வைக்குல் சவால். முதலில் தொகுத்துவைத்த துண்டு அட்டைகளை வகைப்படுத்தி, நாம் முன்வைக்கும் வாதத்துக்கு ஏற்ப அவற்றை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும். நன்னூலாரின் மொழியில் சொல்வதென்றால், ‘முறையின் வைப்பு’ எனலாம். கட்டுரையின் அமைப்பை ஒரு படமாக  வரைந்துகொண்டால் எழுதுவதற்குத் தோதாக இருக்கும். பின்பு எழுதத் தொடங்கலாம். எவ்வளவு திட்டமிட்டாலும் எழுத்தின் போக்குக்கு விட்டுவிட வேண்டும். படைப்பின் மர்மம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் இடம் இது. சராசரி ஆய்வும் தேர்ந்த ஆய்வும் இங்கேதான் கிளைபிரிகின்றன. சுவையான மேற்கோள்களை அப்படியே கையாள்வது எனக்குப் பிடித்தமானது. ஒரு குறிப்பிட்ட வரிசையில் மேற்கோள்களை அடுக்கி, இணைப்பு வரிகளைச் சேர்ப்பதன் மூலம் ஒரு வாதம் உருப்பெற்றது; சுவாரசியமும் நம்பகத்தன்மையும் கூடின. தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்கள், சாதிய வழக்கங்கள், தேசிய இயக்கக் கருத்தியல், திராவிட இயக்கத்தின் எழுச்சி ஆகியவற்றின் பின்னணியில் இந்தக் கட்டுரையை அமைத்தேன். ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ என்ற வ.ரா-வின் மேற்கோளையே தலைப்பாக்கினேன். இது ஒரு உதாரணம். எல்லாக் கட்டுரைகளும் இப்படித்தான் உருப்பெறும் என்று சொல்ல வரவில்லை. ஆனால் ஒன்று, படைப்பூக்கம் இல்லாமல் ஆராய்ச்சி செய்யமுடியாது, கூடவும் கூடாது. மன எழுச்சி இல்லாதபோது, எழுத முடியாது. எழுதினாலும் தேறாது, சோபிக்காது.”

“இவ்வளவு முன்தயாரிப்புகளோடு எழுதுகிறீர்கள். உங்களது வாசகர்கள் யார் என்ற துல்லியமான ஒரு சித்திரம் உங்களிடம் உண்டா?”

“எழுதத் தொடங்கிய காலத்தில் யாரும் படிப்பார்கள் என்று நினைத்து எழுதியதில்லை. முக்கிய வரலாற்றுச் செய்திகள் என்று கருதியதை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆத்திரத்தோடும் அவசரத்தோடும் எழுதினேன். எனக்கு மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் தந்தவற்றை வாசகரிடம் பகிர்ந்துகொள்ளும் அடங்காத ஆசைதான் என்னை எழுதவைத்தது. மாமணி நடத்திய ‘முகம்’ இதழில் சிறுசிறு கட்டுரைகளாகத் தொடங்கி, ‘ஈரோஸ்’ அமைப்பினர் நடத்திய (நட்புறவுப்) ‘பாலம்’, ‘நாவாவின் ஆராய்ச்சி’ முதலான இதழ்களில் எழுதினேன். சேகர் பதிப்பகம், மக்கள் வெளியீடு, பொன்னி, சவுத் விசன் புக்ஸ் ஆகிய பதிப்பகங்கள் வழியாக நூல்களை வெளியிட்டேன். முதல் பத்தாண்டுகளில் வாசகர் எதிர்வினை என்று சொல்லும்படி அதிகம் இல்லை. அதன் உள்ளடக்கம் காரணமாக, ‘திராவிட இயக்கமும் வேளாளரும்’ நூலுக்குப் பல மதிப்புரைகள் வந்தன. ‘பாரதியின் கருத்துப்படங்கள்’ நூல் அதன் தயாரிப்புக்காகக் கவனம்பெற்றது.

“கற்பனையைவிட உண்மை நம்பமுடியாததாக இருக்கிறது!”

இதில் ஒரு உடைவை ஏற்படுத்தியது ‘காலச்சுவடு’. சுந்தர ராமசாமி 1987–88-ல் நடத்திய இதழை உயிர்ப்பிக்க வேண்டும் என்று கண்ணன் விரும்பினார். ஒரு ஆண்டுக்கு மேல் திட்டமிட்டார். அந்தச் சமயத்தில் என்னோடு விரிவாகக் கலந்து பேசினார். 1994 கடைசியில் ‘காலச்சுவடு’ மீண்டும் வெளிவந்தது. சுந்தர ராமசாமியின் நூல்களை வெளியிடுவதையே முதன்மையான நோக்கமாகக்கொண்டு ‘காலச்சுவடு’ பதிப்பகத்தையும் கண்ணன் விரைவில்  தொடங்கினார். இதழில் தொடர்ந்து எழுத வேண்டும் என்று அவர் என்னை வற்புறுத்தியது விந்தையாக இருந்தது.   ‘மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் சான்றாதாரங்களும் நிறைந்த நீண்ட கட்டுரைகளை யார் படிப்பார்கள்?’ என்றேன். ‘படிக்காமல் போகமாட்டார்கள்’ என்றார் கண்ணன். எனக்கு நம்பிக்கையில்லாமல்தான் பங்களிக்க ஆரம்பித்தேன். 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் நம்பிக்கை வீண் போகவில்லை என்பது இன்னமும் வியப்பாகத்தான் இருக்கிறது. சி.வை.தாமோதரம் பிள்ளைக்கும் உ.வே.சாமிநாதையருக்குமான பதிப்புப் பூசலைப் பற்றி ஒரு கட்டுரையை கடந்த ஆண்டு எழுதினேன், 17 முழுப் பக்கங்கள். இடைவெளியோ இடையீடுகளோ இல்லாமல் அப்படியே வெளியிட்டார் பொறுப்பாசிரியர் சுகுமாரன். நீண்ட கட்டுரை என்று முதலில் மலைப்பவர்கள், படிக்கத் தொடங்கியதும் எழுத்தோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டுவிடுகிறார்கள் என்பது என் அனுபவம். எழுத்துபூர்வமான ஆதாரங்களை மறுக்கும் சமூகமான தமிழ்ச் சமூகத்தில், செப்பமாகப் பதிப்பித்த ஆவணத் தொகுப்புகளை வெளியிடுவது முக்கியம் என்றும் கருதினேன். அதையும் யார் படிப்பார்கள் என்று தெரியாமல்தான் வெளியிட்டேன். எனது ஆராய்ச்சிக்குத் துணைநின்ற ஆவணங்களை வாசகரிடம் முன்வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இன்றுவரை உறுதியாக இருக்கிறேன். 2000-த்தில் ‘புதுமைப்பித்தன் கதைகள்’ செம்பதிப்பு வெளியிட்டபோது, அது இவ்வளவு வரவேற்பைப் பெறும் என்றோ, பெரும் விவாதத்துக்கு உள்ளாகுமென்றோ நினைத்தே பார்க்கவில்லை. காலம்தான் எவ்வளவு மாறிவிட்டிருக்கிறது. என் எழுத்துகள் ‘காலச்சுவ’டில் வெளிவந்ததைவிடத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான பல ஆளுமைகளின் படைப்புகள் அதன்வழியாக வெளிவர நானும் ஒரு காரணம் என்பதில் எனக்கு அதிகம் பெருமை உண்டு.”

“சுந்தர ராமசாமியின் எழுத்துகளை எப்போது வாசித்தீர்கள்? அவரை எப்போது சந்தித்தீர்கள்?”

“ ‘ஒரு புளியமரத்தின் கதை’தான் நான் படித்த சுந்தர ராமசாமியின் முதல் நூல். மை அடைந்த தமிழ்ப் புத்தகாலயப் பதிப்பு. ‘க்ரியா’ வெளியீடாக வந்த ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலை 1983 கோடை விடுமுறையில் படித்தபோது, பெரிய அதிர்ச்சிக்கு ஆளானேன். புதுமைப்பித்தன் பற்றிய சுந்தர ராமசாமியின் குறிப்புகள் அவரை மனதுக்கு நெருக்கமாக உணரவைத்தன. புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதனுடன் அவர் கண்ட நேர்காணல் அந்த நெருக்கத்தை மேலும் அதிகப்படுத்தியது. ஆனால், நாவலில் இடம்பெற்ற இடது சாரி இயக்கம், தனித்தமிழ், தமிழ்ப் பண்பாடு பற்றிய விமர்சனங்கள் துணுக்குறச் செய்தன. நேரில் சந்தித்து அவரிடம் விவாதிக்க வேண்டும், சண்டைபோட வேண்டும் என்ற வேகம் ஏற்பட்டது. இரண்டு முறை வாய்ப்பு தவறி, 1986 அக்டோபரில் அவரை நாகர்கோவிலில் சந்தித்தேன். 1994 வரை ஆண்டுக்கு ஒரு முறையோ, இரு முறையோ சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. தொலைபேசி பரவலாகாத காலம். கடிதப் பரிமாற்றம் நடக்கும். யோசித்து, நிதானமாக எழுதி, மெருகேற்றித் தட்டச்சிட்ட அவர் கடிதங்கள் வரும் நாள்கள், பண்டிகை நாள்போல் கொண்டாட்டமாக இருக்கும். 1995-ல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்ததும், வாரந்தோறும் நாகர்கோவில் செல்வது வழக்கமானது. பேசிப் பேசிக் கருத்தைக் கவர்பவர்கள் பலர். சுந்தர ராமசாமியோ பேச்சுக்குச் செவிமடுப்பதன் மூலமாகவே எதிராளியை ஆட்கொண்டுவிடுவார். சுந்தர ராமசாமி வீடு விசித்திரமானது, வாசலில் தயங்கித் தயங்கி நின்றால் அவர்களை உறவினர் என்று எளிதில் கண்டுகொள்ளலாம். யோசிக்காமல் சமையலறை வரை புழங்கினால் அவர்கள் நண்பர்கள்.”

“ஆய்வியலில் உங்களது முன்னோடிகளாக, பின்பற்ற வேண்டியவர்களாக நீங்கள் (அன்று) கருதியவர்கள் குறித்துச் சொல்லுங்கள்...”

“கைலாசபதி எழுத்தில் முழு உடன்பாடு இல்லாவிட்டாலும் ஈடுபாடு உண்டு. அவருடைய எழுத்து முறை அதற்கு முக்கிய காரணம்.  இ.பி.தாம்சன், எரிக் ஹாபஸ்பாம், கிறிஸ்தபர் ஹில் முதலான பிரிட்டிஷ் மார்க்சிய ஆய்வாளர்களின் அறமும் திறமும் முன்னுதாரணங்களாக இருந்தன. ரத்தமும் சதையுமாக நான் சந்தித்த முதல் முழு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் என்று சொல்லலாம். அவருடைய அறிமுகம் 1985-ல் கிடைத்தது. முழுவதும் புத்தகங்கள் அடுக்கப்பட்ட அறையில் அவர் அமர்ந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். நூல்களோடு அவருடைய அறிவுத் தேட்டம் நின்றுவிடவில்லை. சிவசுப்பிரமணியன் அளவுக்குக் கள ஆய்வு செய்த தமிழக ஆய்வாளர்கள் இருக்க முடியாது. வரலாறு, இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், கல்வெட்டு என்று பல துறைகளிலும் அவர் பங்களித்திருக்கிறார். எதிர்பார்ப்புகள் இல்லாமல் செய்த ஆய்வுகள் இவை. ஐம்பதாண்டுகளாக இடையறாமல் ஆய்வில் ஈடுபட்ட தமிழக ஆய்வாளர்கள் எத்தனை பேரைச் சொல்ல முடியும்? விருந்தோம்பலுக்கும் பொருள் வசதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர் வீட்டில் இரண்டாயிரம் இட்லிகள் சாப்பிட்டிருப்பேன் என்பது தோராயமான கணக்கு!

‘தமிழ்ச் சமூகம் சென்னை நகரத்திற்கு வெளியேயும், நூலகங்களுக்குப் புறத்தேயும் விரிந்துகிடப்பதைத் தம் ஆய்வு, களப்பணி, நேர்ப்பேச்சு ஆகியவற்றின் மூலம் உணர்த்திவரும் அவருடைய புலமைக்கும் அன்புக்கும் என்னுடைய நூல் ஒன்றை அவருக்குக் காணிக்கையாக்கியிருக்கிறேன். 1988-ல் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தொடர்பு ஏற்பட்டது. சில ஆண்டுகள் நெருங்கிய பழக்கத்தில் இருந்தோம். வெறும் தகவல்கள் சார்ந்த தேடல் ஆய்வாக மாட்டாது; கோட்பாடு முக்கியம் என்ற பாடம் அவர் தொடர்பால் கிடைத்ததே. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு.) சென்று படிக்க வேண்டும் என்று என்னை உந்தித் தள்ளியவர்களில் முக்கியமானவர் பாண்டியன். ஜே.என்.யு-வின் அறிவுச் சூழல் அலாதியானது; இந்தியாவில் வேறெங்கும் காண முடியாதது. கடந்த ஐந்தாண்டுகளாக அதன்மீது நடந்துவரும் சங்கப் பரிவாரங்களின் தாக்குதல் மன்னிக்க முடியாதது. கல்விச் சாலைகளை அழிக்க முனையும் கயவர்களுக்கென நரகத்தில் தனி எண்ணெய்க் கொப்பரைகள் காய்ந்து கொண்டிருக்கின்றன.”

“பழமொழிகள், செறிவான அரிய சொற்கள், நகைச்சுவை, இலக்கிய, பண்பாட்டுக் கூறுகளை நினைவூட்டி விஷயத்தோடு இணைத்துச் சித்திரிப்பது என உங்களது ஆய்வுக் கட்டுரைகள் தனித்தன்மை கொண்டிருக் கின்றன. இந்தச் சொல்முறையை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்?”

“வரலாறு என்பது இலக்கியம், சமூக அறிவியல் இரண்டின் கலவையாகும். முற்காலத்தில் வரலாறு என்பது இலக்கியத்தின் பகுதியாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. வரலாற்றியலின் தந்தை ஹிரோடோட்டஸ், 18-ம் நூற்றாண்டின் பெரும் அறிவாளுமையான எட்வர்டு கிப்பன் ஆகியோர் எழுதிய வரலாறுகளை இலக்கிய வாசகர்கள்தாம் படித்தார்கள்.

“கற்பனையைவிட உண்மை நம்பமுடியாததாக இருக்கிறது!”

20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் வரலாற்றை, சமூக அறிவியலின் பகுதியாகக் கருதத் தொடங்கினார்கள். புற உலகை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்; இதன் மூலமாகச் சமூக மாற்றத்தை உண்டாக்க முடியும் என்ற எண்ணம் உருவானது. மார்க்சியக் கோட்பாடு இதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்க்சியம் தவிர நவீனமயமாக்கக் கோட்பாடுகள், பிரெஞ்சு  ‘அனால்ஸ்’ வரலாற்று மரபு ஆகியவையும் வரலாறெழுதியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. சமூகவியல், மானிடவியல் முதலான அறிவுப் புலங்களும் வரலாற்றுப் புலத்தோடு ஊடாடிப் புதிய முறையியல்களுக்கு வழி ஏற்படுத்தின. இவை கல்விப்புலம் சார்ந்த ஆராய்ச்சித்துறைகளில் மேலோங்கின. இதன் விளைவாக, ஒருபுறம் குறைவானவர்கள் மட்டும் கல்வித் தேவைகளுக்காகப் படிக்கும் சிறப்புத்துறையாக வரலாறு அமைந்துவிட்டது. இருந்தாலும், வரலாறு என்பது வாசிப்புக்குரியது என்ற எண்ணம் முழுவதும் வலுவிழந்து போகவில்லை. ஐரோப்பாவில், முக்கியமாக இங்கிலாந்தில், வரலாற்றுப் புத்தகங்களுக்குப் பெரிய சந்தை உண்டு. எந்தப் புத்தகக் கடைக்குப் போனாலும் வரலாற்று நூல்கள் அடைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பிரெஞ்சு வரலாற்றாசிரியர்கள் பலர் நாயக அந்தஸ்து பெற்றவர்கள். சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்க வேண்டுமென்றால், வரலாற்று நூல்களைப் படித்தவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றும் இருக்கிறது. வரலாற்று நூல்களைப் பொழுதுபோக்கிற்காகவும் இலக்கியச்சுவைக்காகவும் அறிவானந்தத்திற்காகவும் படிப்பவர்கள் பலர் உண்டு. இலக்கிய வாசிப்பின் மூலம் வரலாற்று ஆய்வுக்கு வந்ததால், எனக்கும் இயல்பாக இந்த வகையான வரலாற்றில் ஈடுபாடு வந்தது. சிக்கலான சமூக, வரலாற்று அசைவியக்கங்களைப் பகுத்தாய்ந்து மொழிக்குள் சிறைபிடிப்பதற்கு எழுத்தாளுமை வேண்டும். இலக்கியத்தைவிட எழுத்தாளுமை வெளிப்படும் இடம் உண்டா என்ன? பொருள் பொதிந்த தொடர்கள், பழமொழிகள், இலக்கிய வாசகங்கள் ஆகியவை சொல்லவந்த கருத்துக்குக் கருவியாக முன்னிற்கின்றன. பல்வேறு வரலாற்றுத் தரவுகளை ஒரு கதையாடலாகக் கட்டமைப்பதற்கு இலக்கிய எழுத்துமுறை தவிர்க்க முடியாதது.”

“இதை மேலும் விளக்க முடியுமா? இலக்கியம் கற்பனை சார்ந்தது, அதன் வடிவச் சுதந்திரம் எல்லையற்றது. ஆய்வுக் கட்டுரைகள் அப்படியா?”

“வரலாறு என்பது ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு கதையாடல். இறுதி உண்மைகளை முன்வைப்பது அல்ல அதன் நோக்கம் (அது சாத்தியமா என்பது வேறு விஷயம்). புற உலகை, அதன் அசைவியக்கங்களைப் புரிந்துகொள்வதே அதன் நோக்கம். வரலாற்று நூல்களின் கட்டமைப்பேகூட இலக்கியத்திலிருந்து பெற்றதைப் பார்க்க முடியும். அரசியல் வரலாறு, மரபான காவிய வடிவத்திற்குக் கடமைப்பட்டிருக்கிறது. புலனாய்வு வடிவத்திற்கும் வரலாற்றுப் பனுவலுக்கும் நேர்த்தொடர்பு உண்டு. இரண்டுமே ஒரே காலத்தில், அதாவது 19-ம் நூற்றாண்டின் கடைசியில் தோன்றியவைதான். எஞ்சிய தடயங்களை வைத்துதானே இரண்டுமே கட்டமைக்கப் படுகின்றன. பாரதி காப்புரிமை பற்றிய என் நூல், துப்பறியும் கதைபோல் எழுதப்பட்டிருப்பதைப் பலர் சுட்டியிருக்கிறார்கள். சில இடங்களில் நாடகத்தன்மையும் இருக்கும். துன்பியல் நாடகம் என்ற வடிவமும் எனக்கு உவப்பானது. வாசகரின் நெஞ்சை நெகிழ்த்த, அதுவும் தமிழ் வாசகர்களை  நெக்குருகச் செய்ய இதைவிடச் சிறந்த வடிவம் வேறில்லை. ‘மருத்துவக் கலைக்களஞ்சியம்’ தந்த மேதையான டி.வி.சாம்பசிவம் பிள்ளை, கால் நூற்றாண்டுக்கு மேல் பாடுபட்டு மகாபாரதத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்த ம.வீ.இராமாநுஜாசாரியர் ஆகியோரின் வாழ்க்கை, இயல்பிலேயே துன்பியல் நாடகம் என்ற வடிவத்திற்குள் அடங்கிவிடும். ஆனால், இதைக் கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. இல்லாவிட்டால் பீம்சிங் படம்போல் மிகை உணர்ச்சி நாடகமாக, அழுவாச்சிக் காவியமாகிவிடும். ‘ஆஷ் அடிச்சுவட்டில்’ நூலை, பல குரல்கள் ஒலிக்கும் நாவல் தன்மையில் அமைக்க முயன்றிருக்கிறேன். நெடும் கட்டுரை என்ற வடிவமும் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘Stephen Jay Gould’ கட்டுரைகள் எட்டமுடியாத முன்னுதாரணங்களாகவே தோன்றுகின்றன. ‘நியூ யார்க்கர்’ கட்டுரைகள், ‘லண்டன் ரெவ்யூ ஆஃப் புக்ஸ்’ மதிப்புரைகள் எல்லாம் எழுத்துப் பாடங்களாகும்.”

“ஆய்வுக் கட்டுரைகளும் படைப்பூக்கம் நிறைந்த ஒன்றுதான், அதாவது கிட்டத்தட்ட ஓர் இலக்கியப் பிரதிக்கு நெருக்கமாகத்தான் இதுவும் உருவாக்கப்படுகிறது என்கிறீர்கள்...”

“ஆம். வரலாறெழுதியலில் இலக்கியக் கூறுகள் நீக்கமற நிறைந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். தலைப்பு வைப்பதற்கு மிகவும் மெனக்கெடுவேன். அது சரியாக அமைந்தாலே பாதி வெற்றி. ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ தலைப்புக்காகவே முதலில் பலரின் கவனத்தைக் கவர்ந்தது என நினைக்கிறேன். ‘எழுக, நீ புலவன்’, ‘முச்சந்தி இலக்கியம்’ ஆகியவை எனக்குப் பிடித்த பெயர்கள். ‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ இயல்பாக அமைந்த பெயர். நயமாகத் தலைப்பு அமையாவிட்டால், ‘நாவலும் வாசிப்பும்’, தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை’ என்று நேரான தலைப்புகளை வைத்துவிடுவேன். தொடக்க வரி என்பது வாசகரைச்  சிக்கவைக்கும் தூண்டில். அது ஒரு மேற்கோள் வரியாகவோ, திகைக்கவைக்கும் புதிய செய்தியாகவோ, ஆர்வத்தைத் தூண்டும் ஒரு இலக்கிய வரியாகவோ அமைவது நல்லது. முடிக்கும்போது முத்தாய்ப்புவைக்க முயல்வேன். செய்திகளைக் கோத்துச் செல்வதில் ஒரு தர்க்கம் இருக்க வேண்டும். தர்க்கத்தின் ஒழுங்கு வாசகனைக் கட்டிப்போட வேண்டும். நடையில் ஒரு மெலிதான அங்கதமும் நகைமுரணும் நுட்பமான நகைச்சுவையும் அமைந்தால், வாசகன் நம்மிடமிருந்து தப்பமுடியாது. அணி இலக்கணம் கூறும் சொல்லணி, பொருளணிகளெல்லாம் வரலாற்றுக் கதையாடலிலும் இடம்பெற வேண்டும் என்பது என் விருப்பம். மோனை என்பது தமிழுக்கு வாய்த்த இயல்பான அழகு. அதனைக் கவனமாகப் பயன்படுத்தினால் வாசிப்புச் சுவை கூடும். உம்மை, உம்மைத் தொகை இரண்டுமே தமிழின் பலமாகும். இடம் அறிந்து பயன்படுத்தினால் பொருட்செறிவும் அழகும் வாய்க்கும்.  நன்னூலின் பொதுப்பாயிரம் எனக்கு மிகப் பிடித்தமானது. பவணந்தி முனிவர் சொல்லும் பத்துக் குற்றம், பத்து அழகு, முப்பத்திரண்டு உத்தி, எழுவகை மதம், சூத்திர நிலை, நல்லாசிரியர் இலக்கணம் எல்லாம் மிகவும் நுட்பமானவை. எழுத்தாளருக்குப் பயன்படும் கையேடு. இதன் செல்வாக்கு என் எழுத்தில் உண்டு என நம்புகிறேன். பவணந்தி முனிவர் குற்றமாகச் சொல்லும் ‘மற்றொன்று விரித்தல்’ என்பதை அடிக்குறிப்புகளில் பிறிதொன்றை விரிவாகச் சொல்வதன் மூலம், அதனை அழகாக மாற்ற முயன்றிருக்கிறேன். விரிவான பின்னிணைப்புகளை நூல் இறுதியில் சேர்ப்பேன். முக்கியமாக இவையெல்லாம் இயல்பாக அமைய வேண்டும். வலிந்து செய்தால் துருத்திக்கொண்டு நிற்கும். எழுதும்போது எதுவும் பிரக்ஞை பூர்வமாக நிகழ்வதில்லை. தரவுகளைப் பலநாள் மனதில் ஊறப்போட்டு ஊறப்போட்டு, திடுமென ஒரு நேரத்தில் அணங்குற்றதுபோல் எழுதுவேன். எழுதி முடித்த பிறகு உடலும் மனமும் களைத்துப்போகும். ஓட்டப்பந்தயக்காரன் ஓடி முடித்ததும் எழும் பரவசம் உடலில் பரவும். கால இடைவெளிவிட்டு எழுதியதைச் செப்பனிட்டு மெருகேற்றும் வேலை நடக்கும். பா.மதிவாணன், பழ.அதியமான் மாதிரியான சில நண்பர்களுக்குப் படிக்கக் கொடுப்பேன். பாராட்டைப் புனுகுபோலவும் குறைகளைப் பஞ்சுப்பொதிபோலவும் அவர்கள் தருவார்கள். திருத்தங்கள் செய்ததும் அச்சுக்குப் போகும்.”

“ஆவணக் காப்பகங்கள், தொல்லியல்துறை போன்றவற்றை அணுகுவது; ஆதாரங்களைப் பெறுவது எளிமையானதாக ஜனநாயகபூர்வமாக இருக்கிறதா? குறிப்பாக அவை வெளிப்படைத்தன்மையோடு உள்ளனவா?”

“முதல்நிலை ஆதாரங்களைத் தேடி எடுத்து, தரவுகளைத் திரட்டுவதே ஆராய்ச்சியின் முதல் படி. நூலகங்களும் ஆவணக்காப்பகங்களும் முறையாகப் பராமரிக்கப்படாத நம் நாட்டில், இதைச் செய்வதற்குள் பாதி ஆயுள் முடிந்துவிடும். தனிப்பட்டவர்களிடம் உள்ள ஆவணங்களைப் பொறுத்தவரை பல சிக்கல்கள் உண்டு. சிலர் சித்த வைத்தியர்கள் போல் பதுக்கிவைத்துக் கொண்டு எதையும் தரமாட்டார்கள். கயவர்களால் ஒருமுறை ஏமாற்றப்பட்டவர்கள், உண்மையான ஆய்வாளர்கள் செல்லும்போது சந்தேகக் கண்ணோடு பார்ப்பார்கள். வேதாளத்திற்கு வாழ்க்கைப்பட்ட பின்பு முருங்கை மரம் ஏறத் தயங்கக் கூடாதல்லவா? எப்படியோ நம்பிக்கை ஏற்படுத்தியாக வேண்டும். 35 ஆண்டுகளுக்கு மேலாகப் பழைய ஆவணங்களைத் தேடிவருகிறேன். இனிப்பும் கசப்பும் துவர்ப்புமான பல அனுபவங்கள் உண்டு, அதுகுறித்து ஒரு பெரிய நூலே எழுதலாம்.”

“வெளிநாடுகளில் நிலை என்ன?”

“ ‘முச்சந்தி இலக்கியம்’ நூலின் பிற்சேர்க்கையில் உள்ள பாடல்கள் பெரும்பாலானவற்றை ‘லண்டன் பிரிட்டிஷ் நூலக’த்தில் கை வலிக்கப் பென்சிலால் பிரதி எடுத்தேன். அங்கு பேனா பயன்படுத்த அனுமதி இல்லை. இப்போது, பிரிட்டிஷ் நூலகம் கைபேசி, கையடக்க கேமரா போன்றவற்றைக் கொண்டு படம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. தொழில்முறை கருவிகளோடு படம் எடுக்க அனுமதி இல்லை. உலகிலுள்ள அரசுசார் ஆவணக் காப்பகங்களிலெல்லாம் இந்த அனுமதி உள்ளது. இந்திய ஆவணக்காப்பகங்களுக்கு நிதி ஒதுக்கீடும் போதாது, பராமரிப்பும் போதாது. படம் எடுக்கவும் அனுமதிப்பதில்லை. இது மாற வேண்டும்.”

“தேடல் மற்றும் ஆவணம் சார்ந்த விஷயங்களில் இணையம் ஒரு பெரிய வெளியைத் திறந்துவிட்டிருக்கிறதே?”

“ஆமாம். தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இப்போது ஆராய்ச்சி முறையில் ஒரு புரட்சியே ஏற்பட்டுவருகிறது. இதைப் பலரும் உணரவில்லை. எங்கோ மூலையில் கிடக்கும் ஓர் ஆவணத்தையோ, நூலையோ இன்று எளிதில் இணைய வழி அடையாளம் காண முடிகிறது. ஸ்கேன் மூலம் பிரதியைப் பகிரமுடிகிறது. தேடல் மென்பொருளால் உள்ளடக்கத்தைச் சலித்தெடுக்க முடிகிறது. வருடக்கணக்கில் தேடியெடுத்த ஆவணங்களையெல்லாம் ஒரு சொடுக்கில் இன்று எடுப்பது சாத்தியம். இந்த வாய்ப்புகளையெல்லாம் பார்க்கும்போது, 20 ஆண்டுகள் முந்திப் பிறந்துவிட்டோமோ என்று தோன்றும். இனி வரும் தலைமுறையில் ஆராய்ச்சியின் தன்மையே மாறப்போகிறது என்பதில் ஐயம் இல்லை. புதிய வாய்ப்புகள் முன்பு எண்ணிப்பார்க்கவும் முடியாத ஆய்வுகளைச் சாத்தியப்படுத்தும். ஆனால், ஆராய்ச்சி என்பது வெறும் ஆவணத் திரட்டல் மட்டும் அல்ல. தேடலும் ஆராய்ச்சியின் இன்றியமையாத ஒரு பகுதி.”

“ஒரு ஆய்வாளராக நீங்கள் கண்டறிந்தும், சொல்லாமல் மறைத்துவைத்திருக்கும் விஷயங்கள் உண்டா?”

“வரலாற்றுத் தகவல்கள், உண்மைகள் என்பன வேறு, வரலாற்று ஆராய்ச்சி என்பது வேறு. அரிய வரலாற்று உண்மைகள் ஆழத்தில் புதைந்துள்ளன என்றும் அவற்றை வெளிக்கொணர்வதே ஆராய்ச்சி என்றும் நம்புவது பாமரத்தன மானது என்பது இந்நேரம் புலப்பட்டிருக்கும். ஒரு வரலாற்றுச் செய்தியை அதன் பின்புலத்தில்வைத்து, சமூக அசைவியக்கத்தோடு பொருத்திப் பார்ப்பதே வரலாறு. பாரதி மன்னிப்புக் கடிதம் எழுதினான் என்பது வரலாற்றுச் செய்தி. ஏன் எழுதினான், அக்கடிதம் என்ன சூழலில் எழுதப்பட்டது, அதன் விளைவுகள் என்ன, முக்கியத்துவம் என்ன என்பதையெல்லாம் பகுப்பாய்வது வரலாறு. சில வரலாற்றுச் செய்திகள் சுவாரசியமானவை. இராமானுஜனின் மதிப்பெண் பட்டியல்போல. பாரதியின் ஐந்து புகைப்படங்கள் மட்டுமே கிடைத்திருந்த நிலையில் ஆறாவதாக ஒரு படத்தை ய.மணிகண்டன் கண்டெடுத்ததுபோல. அதற்குமேல் இவற்றுக்கு முக்கியத்துவம் இல்லை. எனவே, தனி வரலாற்றுச் செய்திகளை அப்படியே வெளியிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை, அவை அதனளவிலேயே சிறப்பு முக்கியத்துவம் உடையதாக இல்லாதவரை.”

“எல்லீஸின் பெருமுயற்சி செய்து சேகரித்த ஆவணங்கள் ‘அடுப்பெரிக்கவும் கோழி வறுக்கவும்’ பயன்பட்டது என்று, அவர் குறித்த கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.விரக்தியிலோ மிகையாகவோ சொல்லப்பட்டதா அல்லது அது உண்மைதானா?”

“இது எல்லிஸின் நண்பர் எலியட், சமகாலத்தில் எழுதியது. பல சமயங்களில் கற்பனையைவிட உண்மை நம்ப முடியாததாக இருக்கிறது. இது வரலாற்றின் புதிர் மட்டுமல்ல, வாழ்க்கையின் புதிரும்கூடத்தான்.”

“ ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ கட்டுரையில் இடம்பெற்ற, ‘கூலி என்ற தமிழ்ச்சொல் இடம்பெறாத உலக மொழி இல்லை’ என்ற உங்கள்  வாக்கியத்தின் முன் மலைத்துப்போய் நின்றுவிட்டேன். இது ஒரு தனி நூலுக்கான முதல் வாக்கியம் என்று தோன்றவில்லையா?”

“உண்மைதான். 1840-களில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதும் ‘ஒப்பந்தக் கூலி முறை’ (Indentured Labour System) அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் இது அடிமை முறையைவிடக் கொடுமையானதாக நடைமுறையிலிருந்தது. ஐந்தாண்டு ஒப்பந்தம் போட்டு இலங்கை, மலேசியா, பிஜி, மொரீசியஸ், ரீயூனியன், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா என உலகம் முழுவதிலுமான தேயிலை, காப்பி, கரும்பு, ரப்பர் தோட்டங்களுக்குப் பஞ்சத்திலும் வறுமையிலும் அடிபட்ட தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஐந்தாண்டு வேலைசெய்தால் பயணம் இலவசம். கையில் கொஞ்சம் காசும் நிற்கும் என்று அழைத்துச் செல்வார்கள். இந்தத் தரகு வேலை செய்தவர்கள் ‘கங்காணி’கள். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் மட்டுமே குடியேற்றம் அனுமதிக்கப்பட்டது. கடுமையான வேலைச் சுரண்டல். இப்படிச் சென்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தமிழர். அதனால்தான் இன்றுவரை உலக மொழிகளிலெல்லாம் ‘கூலி’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது. ‘கங்காணி’ என்ற சொல் இல்லாத ஆங்கில அகராதி இல்லை. தப்பி ஓடினால் குற்றம். கூலி இழப்போடு நீதிமன்றத் தண்டனையும் உண்டு. ‘இந்தத் தோட்டங்களில் ஐந்தாண்டு வேலை செய்தால் தாயைக் கொன்ற பாவம் தீரும்’ என்று பெயரறியாத ஓர் எழுத்தாளர் சொன்னது இங்கே நினைவுக்கு வருகிறது. ஒப்பந்தக் கூலி முறை பற்றிப் பாரதி எழுதியிருக்கிறான். புதுமைப்பித்தன் ‘துன்பக் கேணி’ கதை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. இதைப் பற்றியெல்லாம் ஆராயாமல் ‘துன்பக் கேணி’யைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதுதான் நம் பல்கலைக்கழகங்களின் பங்கு.”

“21-ம் நூற்றாண்டின் கால் பாகத்தை நெருங்கவிருக்கிறோம். இக்காலகட்டத்தில் நம்பிக்கைக்குரிய இளம் ஆய்வாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்களா?”

“என் பார்வையில் இன்று செயல்பட்டுவரும் முக்கியமான ஆய்வாளர்களாக மூவரைக் குறிப்பிடுவேன். பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், யாப்பு ஆகியவற்றில் தேர்ந்தவர் ய.மணிகண்டன். சிறந்த பதிப்பாசிரியர். கடந்த சில ஆண்டுகளாகப் பாரதி ஆய்வில் முனைப்புடன் இருக்கிறார். தேங்கியுள்ள பாரதியியலில் மணிகண்டனின் முயற்சிகள் முக்கிய உடைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இவருடைய ஆய்வுகள், ‘கற்றார்க்கன்றி மற்றார்க்குக் களியாதே’ என்ற வகையைச் சார்ந்ததாகையால் போதுமான கவனம் பெறவில்லை என்று நினைக்கிறேன். இவருடைய பாரதிதாசன் ஆய்வுகளும் முக்கியத்துவமுடையவை. ‘மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்’ பலரும் கவனிக்காமல் போய்விட்ட முக்கிய நூலாகும். திராவிட இயக்க முப்பெரு நூல் (Dravidian Trilogy) எழுதியிருப்பவர் பழ.அதியமான். ‘டாக்டர் வரதராசுலு நாயுடுவின் வரலாறு’ (பெரியாரின் நண்பர்),  ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்’ பற்றிய நூல், விரைவில் வெளிவரவுள்ள ‘வைக்கம் சத்தியாகிரகம்’ ஆகியவை நவீனத் தமிழக வரலாற்றைப் புரிந்துகொள்ள இன்றியமையாத நூல்களாகும். வைக்கம் சத்தியாகிரகத்தில் பெரியாரின் பங்கைக் கேள்வி கேட்பவர்கள், இவருடைய புத்தகம் வந்ததும் வாயடைத்துப்போவார்கள். விரிவான தகவல் திரட்டு, நுட்பமான எழுத்து ஆகியவை அதியமானின் பலம். ‘சக்தி’ கோவிந்தன், ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் பற்றி இவர் எழுதிய நூல்கள் ஒரு ‘போனஸ்’. ‘அலாவுதீன் பூதம்’ என்று பெருமாள் முருகன் வருணித்த ப.சரவணன் பல முக்கியமான பதிப்புச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டுவந்த ‘அருட்பா, மருட்பா போராட்டம்’ தொடர்பாக இவர் திரட்டிய ‘கண்டனப் பெருந்திரட்டு’ ஆய்வு நூல், அதற்குத் தீர்மானமான முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. உ.வே.சாமிநாதையர் எழுத்துகளையும் பதிப்புரைகளையும் வகைதொகைப் படுத்தி இவர் வழங்கியுள்ள தொகுதிகளும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பேருதவி யாகும் துணைநூல்கள். ந.கோவிந்தராஜன், ஜெ.பாலசுப்பிர மணியம், கோ.ரகுபதி ஆகியோர் அடுத்து என்ன ஆய்வுகளை வெளியிடவுள்ளனர் என்பதை ஆவலோடு எதிர்நோக்கி யுள்ளேன்.

“எதிலெல்லாம் உங்களுக்கு ஆர்வம் இருக்கக்கூடும் என்று யூகிக்க முடியாதவாறு, எல்லாத் தளங்களிலும்  இயங்கியது திட்டமிட்ட ஒன்றுதானா?”

“இப்படிப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது காட்சிப்பிழை. தோற்ற மயக்கம். அனைத்துக்கும் தொடர்பும் தொடர்ச்சியும் உண்டு.”

“ஏன் கேட்கிறேனென்றால், ம.இலெ. தங்கப்பாவின் சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகளை பெங்குவின் மூலம் வெளியிட்டீர்களே. அது எப்படி நிகழ்ந்தது?”

“ம.இலெ.தங்கப்பா, கோவேந்தனின் இணைபிரியா நண்பர். அவர் மூலமாகத்தான் தங்கப்பா அறிமுகமானார். தங்கப்பாவுக்கும் எனக்கும் 35 ஆண்டுப் பழக்கம். அவருடைய தமிழ் உரைநடையிலும் ஆங்கிலக் கவிதை நடையிலும் எனக்குத் தீராக்காதல். பழந்தமிழ்ப் பாடல்களை அநாயாசமாகவும் அழகாகவும் அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார். ஆனால், அவருக்கு உலகியல் தெரியாது. எனவே அவருடைய மக்கள் தொடர்பு அதிகாரியாக என்னை நானே அமர்த்திக்கொண்டேன். தங்கப்பாவின் மொழிபெயர்ப்புகளைத் தட்டச்சிட்டும் மூலத்தோடு ஒப்பிட்டும் அவருடனே கலந்துபேசி மெருகேற்றியும் இருபதாண்டுகள் வெவ்வேறு பதிப்பகங்களுக்குக் கையெழுத்துப் படியை அனுப்பிவந்தேன். போன வேகத்தில் அது திரும்பிவிடும், அக்காலச் சூழல் அப்படி. நானும் ஆங்கிலத்தில் எழுதி, கல்வித்துறையில் ஓரளவு அறிமுகமான பிறகுதான் என் முயற்சிகள் கைகூடின. என் நூல்கள் ஒன்றிரண்டை ஓரியண்ட் லாங்மனில் பணியாற்றியபோது வெளியிட்ட இரா.சிவப்ரியா பெங்குவின் பதிப்பாசிரியரானார். அவரிடம் நான் முன்மொழிந்த முதல் திட்டம் தங்கப்பாவின் மொழிபெயர்ப்புதான். பாடல்களைப் படித்த சிவப்ரியா கிறங்கிப்போனார். பெங்குவின் தலைமைப் பதிப்பாசிரியர் ரவி சிங், மலைத்தார். மேற்பார்ப்புக்காக அரவிந்த கிருஷ்ண மெஹ்ரோத்ராவுக்குக் கையெழுத்துப்படி போனது. ‘யார் இந்தத் தங்கப்பா? இவ்வளவு காலம் எங்கே இருந்தார்?’ என்று அவர் வியந்தாராம். 2010-ல் ‘Love Stands Alone’ நூல் வந்தது. சாகித்ய அகாடமியின் ஆங்கில மொழிபெயர்ப்பு விருதையும் பெற்றது. நடுவர் குழுவில் தமிழர் ஒருவர்கூட இல்லாததே இதற்குக் காரணம் என்பது என் ஊகம். செம்மொழி நிறுவனம் வழங்கும் ‘தொல்காப்பியர் விருது’க்கு மூன்று முறை தங்கப்பா பெயர் முன்மொழியப்பட்டது. விருது கிடைக்கவில்லை என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா?”

“ஆங்கிலத்தில் நவீனத் தமிழ் இலக்கியத்தைக் கொண்டுசேர்ப்பதில் எந்த முன்னெடுப்புகளுமே தமிழில் இல்லையே?”

“ஆங்கிலப் பதிப்பகங்கள், உலகப் பல்கலைக்கழக அறிஞர்கள் இவர்களுடனான தொடர்புகளைப் பயன்படுத்தி, தமிழ் இலக்கியம் இன்னும் பரவலாக அறியப்பட வேண்டும் என்பதில் எனக்குப் பெரும் ஆர்வம் உண்டு. ‘தராதலத்து பாஷைகளில்... தமிழ்ப் பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி’ என்ற பாரதிதாசனின் பாட்டு வரி ஒரு காலத்தில் தாரக மந்திரமாக எனக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆர்வத்தை மட்டுமே முதலீடாகக்கொண்டு இதைச் சாதிக்க முடியாது. அனைத்துலகப் பதிப்பகச் செயல்பாடுகளும் சட்டமுறைகளும் தெரிந்தவர்களே இதில் தலையிட முடியும்.  ‘காலச்சுவடு’ வழியாக 20 தமிழ் எழுத்தாளர்களின் நூல்களாவது இதுவரையில் ஆங்கிலத்தில் வெளியிடுவதில் வெற்றிபெற்றிருப்போம். ஆங்கிலம் தவிர பிரெஞ்சு, ஜெர்மன், கட்டலான், கொரியன் முதலிய மொழிகளிலும் சில முன்னெடுப்புகள்  கூடியுள்ளன. இந்தி மொழிக்கு அரசாங்கம் எவ்வளவோ உதவிசெய்கிறது. தமிழுக்குத் தனிமனிதர்கள்தான் பங்களிக்க வேண்டியிருக்கிறது.”

“ஆங்கிலத்திலும் நீங்கள் கணிசமாக எழுதுகிறீர்கள். உங்களுடைய தமிழ், ஆங்கில எழுத்துகளிடையே மொழி, உள்ளடக்கம், வெளிப்பாட்டு முறை சார்ந்து என்ன வேறுபாடு?”

“கல்வியாளன் என்ற முறையில் தொழில் சார்ந்து ஆங்கிலத்திலும், ஈடுபாடு சார்ந்து தமிழிலும் எழுதிவந்தேன். வெகுசன ஊடகங்களில் எழுதுவதில் எனக்குத் தயக்கம் உண்டு. அதற்கான மொழி என்னிடம் இல்லையோ என்ற ஐயமே தயக்கத்திற்குக் காரணம். 1980-களில் க.நா.சு., வெங்கட் சாமிநாதன், என்.எஸ்.ஜகந்நாதன் போன்றோர் தமிழ்ப் பண்பாடு, திராவிட இயக்கம் பற்றி ஆங்கில இதழ்களில் எதிர்மறையாக எழுதுவார்கள். படித்தால் கோபம் வரும். அப்போது இரண்டொரு மறுப்புரைகள் எழுதியிருக்கிறேன் என்றாலும் தொடர்ச்சியாக எழுதும் சூழல் அமையவில்லை. புத்தாயிரத்தில் காலமும் சூழலும் மாறின. தமிழ்ப் பார்வையோடு தென்னாட்டு விஷயங்களை அவ்வப்போது எழுதும் வாய்ப்பு அமைந்தது. இந்தி எதிர்ப்பு, அண்ணா பற்றி ‘இந்தியா டுடே’ சிறப்பிதழ்களில் எழுதியது கவனம்பெற்றது. இடையிடையே ‘இந்து’ ஞாயிறு இலக்கிய இணைப்பிலும் எழுதிவந்தேன். இருந்தாலும், ஜெயலலிதா 2014-ல் சிறையிலடைக்கப்பட்ட காலகட்டத்தில் ‘இந்து’ ஆங்கில நாளேடு அரசியல் சார்ந்த கட்டுரைகளை எழுத அழைத்தது. ஜல்லிக்கட்டு, மதுவிலக்கு முதலானவை பற்றி எழுதிய கட்டுரைகளில் தமிழ்ப்பார்வை வலுவாக முன்வைக்கப் பட்டது என்று கருதுகிறேன். 24 மணி நேரத்துக்குள் 1,200 சொற்களில் எழுத வேண்டும், நச்சென்றும் இருக்க வேண்டும். இது ஒரு சவால். இதை எதிர்கொண்டு எழுதிமுடிக்கும்போது, மயிர்க்கூச்செறிவு ஏற்படும்; உடனுக்குடன் எதிர்வினையும் கிடைக்கும். தமிழில் எழுதினால் மதிக்காத தமிழர்கள், ஆங்கிலத்தில் எழுதினால் பரவசமாவார்கள். வெகுசன ஆங்கில நாளேடுகளில் எழுதிக்கொண்டிருந்தால் அதற்கு முடிவேயில்லை. வேறு வேலை செய்யவே முடியாது. எனவே, இதை மிகவும் குறைத்துவிட்டேன். கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் ‘டெலகிராப்’ நாளிதழில் ‘பண்பாட்டு வரலாறு’ தொடர்பாக ஒவ்வொரு மாதமும் எழுதுகிறேன். ‘ட்ரிப்யூன்’ நாளேட்டில் புத்தக மதிப்புரைகள் எழுதுகிறேன். ‘தமிழக வரலாறு’ பற்றிய நூல்களை ஆங்கிலத்தில் எழுதிவருகிறேன். இந்திய அறிவுலகில் தமிழ் சார்ந்து சில சலனங்களேனும் ஏற்படலாம் என்பது ஆசை, நம்பிக்கை. தமிழுக்கும் தமிழருக்கும் அனைத்திந்திய அளவில் உரிய இடமும் அங்கீகாரமும் இல்லை என்பதில் எனக்கு ஆறாத வருத்தம் உண்டு. வங்காளிகளும் மலையாளிகளும் முன் வரிசையில் நிற்கிறார்கள். குறை அவர்களிடம் இல்லை, நம்மிடம்தான்.”

“இன்னும் ஆய்வுவெளியில் கவனப்படுத்த வேண்டிய விஷயங்கள் என்னென்ன?”

“இதற்கு ஒரு தனிப் புத்தகம்தான் எழுத வேண்டும். தமிழ்நாட்டைப் பற்றிய ஆய்வுகளையெல்லாம் வெளிநாட்டினர் தான் அதிகமும் செய்கிறார்கள். தமிழகப் பல்கலைக்கழகங்கள் இதைப் பற்றிய அவமானமோ, அக்கறையோ, அறிதலோ இல்லாமலிருக்கிறார்கள். எங்கு போய் அழ? யாரை நோக?”

“ஆய்வாளர் அ.கா.பெருமாள் ‘வயக்காட்டு இசக்கி’ என்னும் நூலில், ‘கள ஆய்வுகளில் கண்டறியும் எல்லா உண்மைகளையும் எழுதிவிட முடியாத சூழல் இருக்கிறது’ என்று குறிப்பிட்டி ருந்தார். நீங்கள் அப்படி உணர்கிறீர்களா?”

“வரலாற்றுக்கும் நிகழ்காலத்திற்கும் என்ன தொடர்பு, அது கடந்துபோன காலம் பற்றிய வெட்டிப் படிப்பல்லவா என்று சொல்லும் படித்த பாமரர்களுக்கு, அ.கா.பெருமாள் வெளிப்படுத்தும் அச்சம் சரியான பதிலடி ஆகும். வரலாற்றுத் தொடர்ச்சி இல்லாத சமூகம் உயிர்ப்பற்ற, உயிரற்ற சமூகம். வரலாற்றுப் பாடம் பயனற்ற படிப்பு (Non utility subject) என்று சொன்ன கல்வி அமைச்சரைப் பெற்ற பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. இது ஒருபுறம். நெடியதும் பன்மைத்தன்மையும், நெடுங்காலமாக வெளி உலகத்தோடு ஊடாட்டம் கொண்டதுமான சமூகம் நம்முடையது. சாதி, உட்சாதி, கிளை, கூட்டம், இனம், மதம், மொழி என்று பிரிவுகள் உள்ள நம் நாட்டில், நாம் நம்  அடையாளங்களைப் பேணுவதற்குச் சில கற்பிதங்களையும் தொன்மங்களையும் உருவாக்கிக்கொள்கிறோம். சமூகத்தில் உயர் நிலையிலிருப்பவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் இதில் அடக்கம்.  வழக்கொழிந்துவிட்டது என்று கருதப்படும் பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றும் சமூகக் குழுக்கள் இன்றும் இருக்கின்றன. சகோதரர்களுக்கு ஒரே பெண்ணைத் திருமணம் செய்துவைக்கும் சமூகங்கள் இருக்கின்றன. இந்த நிலவரங்களை (உண்மைகளை அல்ல) வெளிப்படுத்தும்போது எந்தத் தளத்தில், யாருக்கு, எந்த நோக்கத்திற்காகச் சொல்கிறோம் என்பது முக்கியம். மானிடவியல் துறையில் இனவரைவியல் எழுதும் ஆய்வாளர்கள், கள ஆய்வு செய்த ஊரை வெளிப்படுத்தக் கூடாது, புனைபெயரையே பயன்படுத்த வேண்டும். சமூக ஊடகங்கள் தறிகெட்டுச் செயல்படும், வெறுப்பரசியல் உச்சத்தில் இருக்கும் இன்றைய சூழலில், இந்த வரையறைகள் மீறப்படுகின்றன. கருத்துரிமையும் சட்டத்தின் ஆட்சியும் பலவீனமாக உள்ள சூழலில் ஆய்வாளர்களும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ‘மாதொருபாகன்’ நாவலை எழுதி பெருமாள் முருகன் பட்ட துன்பம் எளிதில் மறக்கக்கூடியதல்ல. சோழர் காலத்தில் நிலவிய கடும் அடக்குமுறை, சுரண்டல், நிலப்பறிப்பு, தீண்டாமை, கட்டாய உழைப்பு ஆகியவை பற்றி சோழர் வரலாற்றின் அரிச்சுவடியைப் படித்தவர்கள்கூட அறிவார்கள். எ.சுப்பராயலு, பர்ட்டன் ஸ்டெய்ன், நொயொரு கராஷிமா, ர.சம்பகலட்சுமி முதலானோர் இதைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார்கள். இதைப் பா.இரஞ்சித் பொதுவெளியில் பேசியது தேவையற்ற சர்ச்சைக்கு இடமாகிவிட்டது. கெடுவாய்ப்பாக நீதிமன்றத்தின் தலையீடு கருத்துரிமைக்குப் பாதகமாகவே இருக்கிறது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட கும்பல்களின் அச்சுறுத்தல், நீதியைக் காக்கவேண்டியவர்களின் கடமை வழு என இரண்டு பக்கமும் இடி.”

“உங்கள் ஆய்வுகளில் ‘பெரும்பணி’ என்று நீங்கள் கருதுவது?”

“ஆய்வுப் பணிகளில் பெரிதென்றும் சிறிதென்றும் இல்லை. கொல்லன் உலைக்களத்தில் எப்போதும் பல கருவிகள் கனன்றுகொண்டிருக்கும். அவ்வப்போது அதிலொன்றை எடுத்து வடிப்பான். அப்படித்தான் நானும். புதுமைப்பித்தன் மொத்தப் படைப்புகளின் கடைசித் தொகுதிகள், உ.வே.சாமிநாதையரின் கடிதக் கருவூலத் தொகுதிகளுக்கான வேலை நடக்கிறது. நீண்டகாலப் பணி என்றால், ‘பெரியார் வாழ்க்கை வரலாற்றை’ ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியைத்தான் சொல்ல வேண்டும். மலைப்பைத் தரும் வேலை, பல்லாயிரக் கணக்கான பக்கங்களில் அமைந்த சான்றுகள், நீண்ட வாழ்க்கை. இன்றைய காலச்சூழலில் முன்வைக்க வேண்டிய பெருவாழ்வு. என் ஆற்றலுக்கு மீறிய வேலை. பெரியார் வார்த்தைகளையே திருப்பிப்போட்டுச் சொல்வதென்றால், ‘இதற்குரிய யோக்யதை எனக்கில்லை. யோக்யதை இருப்பவர்கள் எழுத முன்வந்தால் இதை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருந்துவிடுவேன்’.”

“சோர்வுகளிலிருந்து எப்படி வெளியேறுவீர்கள். உங்களது ‘ரிலாக்ஸ்’ பொழுது என்பது என்ன?”

“சமூக அசைவியக்கங்களை அவதானித்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கு, வேலைக்கும் விளையாட்டுக்கும் வேறுபாடு இல்லை. கி.ராஜநாராயணன் வார்த்தைகளில் சொல்வதானால், எதையும் அனுபவிக்க விடாமல் ‘அரசியல் பன்னிக்குட்டி மேலே ஏறி உட்கார்ந்து கொண்டுவிடுகிறது.’ என்ன செய்யலாம், திரைப்படமும் தொலைக் காட்சியும் பார்த்துப் பல காலமாகிவிட்டது. விளையாட்டுகளின் வணிகமயமாக்கம் அதன்மீது ஒவ்வாமையை ஏற்படுத்திவிட்டது. இசை அறிவு துப்புரவாக இல்லாவிட்டாலும் மேற்கத்திய மரபு இசையும் கர்னாடக இசையும் கேட்பேன்.”

“சென்ற ஆண்டு உங்களுக்கு விளக்கு  ‘புதுமைப்பித்தன்’ விருது வழங்கப்பட்டது. எப்படி உணர்ந்தீர்கள்?”

“பொதுவாக ஓர் ஆய்வாளனுக்கும் விருதுக்குமான உறவு, கலைமானுக்கும் மேளத்துக்குமான உறவைப்போன்றது. புதுமைப்பித்தன் என் இலக்கிய வாழ்வின் ஊற்றுக்கண். அவர் பெயரில் அமைந்த ஒரு விருதுக்கு நான் தகுதியுள்ளவனெனச் சிலர் கருதுவது எனக்குப் பேருவகை அளித்தது என்பதை மறைக்க விரும்பவில்லை.”

“நேர்காணலின் நிறைவுக்குப் பொருத்தமான, உங்களுக்கு விருப்பமான கவிதை வரிகளைச் சொல்லுங்கள்...”

“இரண்டு பழமொழிகளோடு தொடங்கினோம். இரண்டு பாடல்களோடு முடித்துக்கொள்வோம்... ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று; ஏனையது தன்னேர் இலாத தமிழ். எழுத்தறியத் தீரும் இழிதகைமை, தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும் – மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனூல் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism