Published:Updated:

`துயரங்களில் இருந்து மீண்டு வர ஓவியங்கள்தான் உதவுச்சு!'- ஆசிரியர் உருக்கம்

`துயரங்களில் இருந்து மீண்டு வர ஓவியங்கள்தான் உதவுச்சு!'- ஆசிரியர் உருக்கம்
`துயரங்களில் இருந்து மீண்டு வர ஓவியங்கள்தான் உதவுச்சு!'- ஆசிரியர் உருக்கம்

இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம். குருவிகளைப் போல, அரிதிலும் அரிதாகவே சிட்டுக்குருவிகளை நேசிப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒருவர்தான் கலைத்திருமாறன். சென்னைப் புத்தகக் கண்காட்சியின்போது, இவரின் ஓவியங்களைப் பார்க்கவென்றே தனிக் கூட்டம் கூடியது.  இவரது வண்ணக் குருவிகளின் ஓவியங்களே‌ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

``விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள கச்சிராபாளையம் என் சொந்த ஊர். பிறந்தது, வளர்ந்தது எல்லாமே அங்கதான்.சின்ன வயசுல இருந்தே வரைய ரொம்பப் பிடிக்கும்‌. ஓவியம் முறையா கத்துகிட்டது  இல்ல. அப்ப இயல்பா வரையத் தொடங்குவதுதான் ‌இப்ப எனக்கு கைகுடுக்குது' 

``நான் முதுகலை ஆங்கிலம் படிச்சிருக்கேன். அரசுப் பள்ளியில் முதுகலை ஆங்கில ஆசிரியரா வேலை பாக்குறேன். நேரம் கிடைக்குறப்ப வரைவேன். கிடைக்கும் அட்டைகள்‌ அத்தனையிலும் வரைவேன்" என்று தான் வரைந்த படங்களின் தொகுப்பைக் கையில் கொடுத்தார். ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைக் காகிதங்களாக இருந்தன. தேசத்தலைவர்கள், தெய்வங்கள், இயற்கை காட்சிகள் என பல்வேறு படங்கள் அவற்றுள் இருந்தன. ஆனாலும், இடையிடையே வெவ்வேறு நிறமுடைய குருவிகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தன.
குருவிகள் ஓவியமான கதையைக் கூறத் தொடங்கினார்.

``எங்க‌ ஊர் பக்கம் நிறைய குருவிகள் இருக்கும்.நான் வரையத் தொடங்கின காலத்தில், குருவிகள்தான் நிறைய வரைவேன். குருவிகளை வரைந்து வரைந்து தான் ஓவியம் வரையவே கத்துகிட்டேன் என்றே ‌சொல்லலாம். எனக்கு குருவிகளை வரையும்போது அவ்வளவு ஆனந்தமா இருக்கும். இப்பவும்கூட ஒவ்வொருமுறையும் வரையத் தொடங்கும்முன் குருவிதான் முதல்ல வரைவேன். அதுக்கு அப்புறம்தான் மத்த ஓவியங்கள் வரையத் தொடங்குவேன்" என்றவரின் முகத்திலும் அத்தனை ஆனந்தம்.

என் வாழ்கையில ஒரு காலத்துல நடந்த துயர நிகழ்வுகளில் இருந்து மீண்டு வர இந்த ஓவியங்கள் தான் உதவுச்சு. அதுக்கு அப்புறம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வரைவேன். என் மாணவர்கள் யாருக்குப் பிறந்தநாள் வந்தாலும் ஒரு ஓவியத்தை வரைஞ்சு பரிசளிப்பேன். என்னோட ஓவியத்துக்கு பள்ளியில் ரசிகர்கள் நிறையபேர் இருக்காங்க. வேற யாரேனும் வரைய சொல்லிக் கேட்டா...ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கித்தரச் சொல்லுவேன். இலவசமா கொடுத்தா மதிப்பு இருக்குறதில்ல. சமீபத்துல அயல்நாட்டுக்காரங்க, என்னோட ஓவியங்களைப் பார்த்து ரொம்பப் பாராட்டினாங்க.சமூக‌ வலைதளத்தில் பதிவேற்றிய என்னோட சில ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைச்சிட்டு இருக்கு'' என்று புன்னகைத்தார். குருவிகளைப் பாதுகாக்க இப்படி பல கலைத்திருமாறன்கள் ஏதாவதொரு வடிவத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.