Published:Updated:

காவலாளி... இரவுக் காவலாளி... காவலாளியே திருடன்..! `சௌக்கிதார்’ வரலாறு - ஹலோ... ப்ளூடிக் நண்பா!

காவலாளி... இரவுக் காவலாளி... காவலாளியே திருடன்..! `சௌக்கிதார்’ வரலாறு  - ஹலோ... ப்ளூடிக் நண்பா!
காவலாளி... இரவுக் காவலாளி... காவலாளியே திருடன்..! `சௌக்கிதார்’ வரலாறு - ஹலோ... ப்ளூடிக் நண்பா!

நாம் ஒரு பக்கம் திருப்பினால் அது ஒரு பக்கம் திரும்புகிறதே என வடிவேலு சொல்வது போல் பாஜகவைச் சேர்ந்த சுப்ரமணியன் சுவாமியிடம் “நீங்களும் சௌக்கிதாரா?” என ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கேட்கப்பட்டதற்கு “நான் பிராமணன், சௌக்கிதார் அல்ல. சௌக்கிதார் என்னிடம் ஆலோசனை கேட்டு தன் கடமையை ஆற்றுவான்” என்று திமிராய்ப் பதிலளித்தார். (பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் எல்லாம் ஏற்கனவே சௌக்கிதார் ஆகி விட்டது தனிக்கதை.)

முந்தைய பாகங்கள்

இன்று மோடியில் ஆரம்பித்து பா.ஜ.க ஆதரவாளர்கள் எல்லோரும் தம் பெயர்களுக்கு முன் `சௌக்கிதார்' எனப் போட்டுக்கொள்கிறார்கள் என்றாலும், இதற்குப் பின்னணியில் சிறிய‌ கதை ஒன்று இருக்கிறது. சில ஆண்டுகளாகவே இந்த‌ச் சொல் அரசியலில் புழக்கத்தில் இருக்கிறது. இந்தியில் `சௌக்கிதார்' (Chowkidar) என்றால் `காவலாளி' என அர்த்தம்.

பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராகவெல்லாம் அறிவிக்கப்படாத காலத்திலேயே 2013, மார்ச்சில் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, ஒரு பிரசாரக் கூட்டத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை ``நேருவின் குடும்பம், சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் இரவுக் காவலாளி (Night Watchman)'' எனக் கேலிசெய்தார். பிறகு, 2014-ம் ஆண்டில் மேற்கொண்ட‌ மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில், தான் தேசப்பிரதமராக அல்லாமல், காவலாளியாகவே பணி செய்வேன். மக்கள் பணத்தை எவரும் தொட‌ அனுமதிக்க மாட்டேன் என்பதாக‌ பல்டி அடித்தார். அப்போதே `சௌக்கிதார்’ வடக்கில் பிரபலம்.

2017-ம் ஆண்டு குஜராத் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, மோடியை `சௌக்கிதார்' என்றழைத்து, அதற்கு மீண்டும் உயிரளித்தார். பிறகு, கடந்த ஆண்டு ரபேல் ஊழல் விவகாரம் வெளியே வந்ததையொட்டி சென்ற‌ நவம்பரில் `சௌக்கிதார் ச்சோர் ஹை' (Chowkidar Chor Hai) என்ற கோஷத்தை ராகுல் காந்தி தொடங்கினார். அப்படியென்றால் `காவலாளியே திருடன்' என்று அர்த்தம். கடந்த டிசம்பரில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வேப்பமரத்தை அரிக்கும் பூச்சியைக் குறிப்பிட்டு `சௌக்கிதார் ச்சோர் ஹை' முழக்கத்தைச் சொன்னார் (பூச்சிகளை அழிக்க வேம்புப் பொருள்களைப் பயன்படுத்துவர்).

``மோடி, சௌக்கிதார்தான். ஆனால் யாருடைய சௌக்கிதார்?'' என காங்கிரஸ் கேள்வி கேட்டது. இதற்குப் பதிலளிக்கும் முகமாகவே மோடி `மேய்ன் பி சௌக்கிதார்' (Main Bhi Chowkidar) என்ற முழக்கத்தை முன்வைத்தார். அதாவது தன்னுடைய‌ ஆதரவாளர்கள் அனைவரையும் ``நானும் காவலாளிதான்" என்று சொல்ல வைத்தார். அதன் ஒரு பகுதியாகவே பா.ஜ.க காரர்கள் தம் ட்விட்டர் ஹேண்டில் முன்னொட்டாக சௌக்கிதார் என்பதைச் சொருகிக்கொண்டனர். அச்சமயத்தில்தான் இச்சொல் தெற்கே வந்தது.

ப்ரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்தில் நடத்திய தேர்தல் பிரசாரத்தில், விவசாயிகள் போன்று எளியவர்களுக்கு காவலாளி எவருமில்லை என்றும், பணக்காரர்கள்தாம் காவல்காரர்களை வைத்திருப்பார்கள் என்றும் சொன்னதாகக் குறிப்பிட்டார். ராகுல் காந்தி இன்னும் ஒரு படி மேலே போய், ``சௌக்கிதார் திருடுவதை மக்கள் கண்டுபிடித்து விட்டனர். இப்போது அவர் தான் தப்பித்துக்கொள்ள‌ ஒட்டுமொத்த இந்தியாவையும் சௌக்கிதார் என அடையாளப்படுத்திவிட்டார்'' என்பதாய் கேலி செய்தார். ``உங்கள் பிள்ளைகளை டாக்டர், இன்ஜினீயர் ஆக்குவார் எனப் பார்த்தால் சௌக்கிதார் ஆக்கி விட்டார் மோடி'' என அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டலடித்தார்.

`நாம் ஒரு பக்கம் திருப்பினால் அது ஒரு பக்கம் திரும்புகிறதே’ என வடிவேலு சொல்வது போல் பா.ஜ.கவைச் சேர்ந்த சுப்ரமணியன் சுவாமியிடம் ``நீங்களும் சௌக்கிதாரா?” என ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கேட்கப்பட்டதற்கு ``நான் பிராமணன், சௌக்கிதார் அல்ல. சௌக்கிதார் என்னிடம் ஆலோசனை கேட்டு தன் கடமையை ஆற்றுவான்” என்று திமிராய்ப் பதிலளித்தார். (பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் எல்லாம் ஏற்கெனவே சௌக்கிதார் ஆகி விட்டது தனிக்கதை.)

ஆனால், மோடி சொல்வது போல் ஒரு பேச்சுக்கு அவர் சௌக்கிதார் என்றே வைத்துக் கொண்டாலும் இங்கு எந்தக் காவல்காரன் ஒழுங்காய் வீட்டைப் பாதுகாத்திருக்கிறான்!

***

திருக்குறளுக்குப் பரிமேலழகர் முதல் சுஜாதா வரை பலர் உரையெழுதி விட்டனர். சொல்லப்போனால் வள்ளுவர் தவிர அனைவரும் அதற்கு உரையெழுதி விட்டார்கள். ஆனாலும், சலிக்காமல் இன்றைய நவீன‌ ஊடகங்களில் கூட‌ யாராவது எதாவது கோணத்தில் வள்ளுவரைத் தொடர்ந்து புரிந்துகொண்டபடிதான் இருக்கிறார்கள்.

அப்படியொன்றுதான் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் `காலைக் கதிரவன்’ நிகழ்ச்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:30 மணிக்கு வரும் #133 என்ற திருக்குறள் உரை தொடர். இதை எழுதுவதும் பேசுவதும் கயல்விழி. புராதனத்தையும், புதுமையையும் சமன் செய்தபடி, பாங்கான‌ உச்சரிப்பில், பாந்தமான உடைகளில், அழகான குரலில், அருமையான குறளொன்றை எடுத்துச் சில நிமிடங்கள் பேசுகிறார்.

இன்று நமக்குப்பிடித்த‌ ஒருவரின் இன்மையை உணர்வதை `மிஸ் யூ’ எனச்சொல்லிக் கொள்கிறோம். வள்ளுவர் அப்போதே பெண்டிரின் இந்த மனவோட்டத்தைப் பற்றிப் பேசியிருப்பதைப் பற்றி காமத்துப்பாலின் `நெஞ்சோடு கிளத்தல்’ அதிகாரத்தில் வரும் ‘காதல் அவரிலர் ஆகநீ நோவது / பேதைமை வாழியென் நெஞ்சு’ என்ற 1242-வது குறளை முன்வைத்து கயல்விழி பேசியதை ஒரு சோறுபதமாகக் கொள்ளலாம்.

யூடியூபிலும் உண்டு: இங்கே க்ளிக் செய்யவும். 

****

ஷங்கரின் `எந்திரன்’ படத்திலும் அதன் தொடர்ச்சியான 2.0 படத்திலும் மதன் கார்க்கி `பூம் பூம் ரோபோடா’ மற்றும் `ராஜாளி’ பாடல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் இடம் பெற்றுள்ள வரிகள் முறையே: ``ஐசக் அஸிமோவின் வேலையோ ரோபோ" மற்றும் ``ஐசக் அஸிமோவ் பேரன்டா". திரும்பத் திரும்ப ஐசக் அஸிமோவ் என்ற பெயரை ரோபோவுடன் தொடர்புபடுத்துகிறார் மதன் கார்க்கி. ஏன், யாரிந்த ஐசக் அஸிமோவ்?

அவர் ஒரு விஞ்ஞான மற்றும் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர். அமெரிக்கர். 20-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆர்தர் சி. க்ளார்க் மற்றும் ராமர்ட் ஹெயின்லெய்னுடன் இணைத்து அறிவியல் கதைகளின் `The Big Three’ என்று கொண்டாடப்படுபவர். ரோபோக்களைப் பாத்திரமாக்கி கதைகள் எழுதியிருக்கிறார். இவர் 1942-ல் எழுதிய‌ Runaround என்ற சிறுகதையில் ரோபோவியலின் (Robotics) மூன்று விதிகளைச் சொல்கிறார் (1950-ல் வெளியான‌ I, Robot என்ற அவரது சிறுதைத் தொகுதியில் இடம் பெற்றது). 2058-ல் வெளியாகும் Handbook of Robotics-ன் 56-வது பதிப்பில் இவ்விதிகள் வருவதாகக் கதை.

ரோபோக்கள் இவ்விதிகளைப் பின்பற்றி இயங்குவதாக வடிவமைக்கப்பட‌ வேண்டும்: 1) ரோபோ மனிதனுக்கு ஆபத்து ஏற்படுத்தலாகாது; தன் செயலின்மையால் மனிதனை ஆபத்தில் விடக்கூடாது. 2) ரோபோவானது மனிதர்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும் (முதல் விதியுடன் முரண்படாத வரையிலும்). 3) ரோபோ தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் (முதலிரு விதிகளுடன் முரண்படாத வரையிலும்).

பிற்பாடு, ரோபோக்கள் பிற‌ கிரக‌ங்களை, அதில் வசிக்கும் மனிதர்களை ஆள்வது போல் கதைகள் எழுதும் நிலை வந்த‌போது அஸிமோவ் கூடுதலாய் விதி ஒன்றை இணைத்தார். இம்மூன்று விதிகளுக்கும் மேலானது அது. பூஜ்ய விதி! Zeroth Law!

``ரோபோ மனித இனத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடாது; அதன் செயலின்மை மனித இனத்தை ஆபத்தில் விடக்கூடாது.” ஆக, இரண்டாம் மூன்றாம் விதிகளுக்கு இருப்பது போல் முதலாம் விதிக்கும் பூஜ்ய விதியையொட்டி விதிவிலக்கு சேரும். அதாவது மனித இனத்தைக் காக்க ஒரு மனிதனைக் காயப்படுத்தலாம் என்றாகும்!    

கவனித்தால் புரியும். ரோபோ மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தவே உருவாக்கப் படுபவை; அவற்றால் மனித இனத்துக்கு ஆபத்து வரலாகா என்பதே இவ்விதிகளின் அடிப்படை. ரோபோக்கள் மனிதர்களை ஆளும் நிலை வந்தால் கூட இவ்விதியில் மாற்றமில்லை. கடந்த 80 ஆண்டுகளில் எழுதப்பட்ட எல்லா ரோபோ கதைகளிலும் இவ்விதிகளை ரோபோக்கள் பின்பற்றும். அதை மீறும் ரோபோக்கள் அழிக்கப்படும். எந்திரனிலும் 2.0-விலும் கூட இம்மூன்று விதிகள் பின்பற்றப்படுவதைப் பார்க்கலாம்.

சிட்டி சனாவைக் காதலிப்பது அஸிமோவ் விதிகள்படி நியாயமா என யோசியுங்கள்!

***

`ரஸத்திலே தேர்ச்சி கொள்’ என்றான் பாரதி. ரஸம் அழகான சொல். ரஸம் - ரசம் – ரசனை. மலையாளக் கரையோரம் வடிவான பெண்டிரை `காணான் ரஸமுள்ள குட்டி' என்பர். இந்த‌ `ஹலோ… ப்ளூடிக் நண்பா!’ தொடருக்கு முதலில் ‘ரஸம்’ என்றுதான் பெயரிட யோசித்தேன். ஆனால், வடசொல்லென தனித்தமிழர் எள்ளல் செய்யக்கூடும்.

``வேண்டுமானால் `மிளகு ரஸம்’ என வை” என்றார் எழுத்தாள நண்பர். பதினைந்தாம் நூற்றாண்டின் வால்முனையில் போர்த்துக்கீசிய‌ வாஸ்கோட‌ காமா மிளகு தேடி வந்தது கூட கோழிக்கோட்டிற்குத்தானே ஒழிய தூத்துக்குடிக்கு அல்ல என்பது வேறு, உடன் நினைவுக்கு வந்து தொலைத்தது. அத்தனை காரமாக‌ எழுதும் திட்டமேதுமில்லை. 

``மேற்கே/ ரொமான்டிசிஸம்/ நாச்சுரலிஸம் / ரியலிஸம் / அப்பால் / இம்பிரஷனிஸம் / என் மனைவிக்கு / தக்காளி ரஸம்” என்ற பசுவய்யா வரி சுட்டி ``பெண்களைக் கவர‌ ரஸம் வைக்கிறாயா?” எனக் கண்ணடித்தாள் சிநேகிதி. வம்பு தவிர்க்க‌ நிராகரித்தேன்!

***

அடுத்த கட்டுரைக்கு