Published:Updated:

``சென்னைதான் நமக்கு அன்னை பூமி!’’ - `மெட்ராஸ் டே' எஸ்.முத்தையா நினைவுப் பகிர்வு

சக்தி தமிழ்ச்செல்வன்

`மெட்ராஸ் டே' கொண்டாட ஆரம்பப்புள்ளியாக இருந்தவர்களில் முக்கியமானவர் எஸ்.முத்தையா. ஏப்ரல் 20-ம் தேதி உயிரிழந்தபோது, எஸ்.முத்தையாவுக்கு வயது 89. சென்னையை மெட்ராஸாகவே நினைத்துச் சிலாகித்தவர் அவர்.

``சென்னைதான் நமக்கு அன்னை பூமி!’’ - `மெட்ராஸ் டே' எஸ்.முத்தையா நினைவுப் பகிர்வு
``சென்னைதான் நமக்கு அன்னை பூமி!’’ - `மெட்ராஸ் டே' எஸ்.முத்தையா நினைவுப் பகிர்வு

சென்னை, தமிழர்களின்... தமிழகத்தின் தலைநகரம். தொழில் நிமித்தமாகத் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து சென்னையை நோக்கி பலரும் இன்று வந்துகொண்டிருக்கிறார்கள். 400 வயதான இந்நகரை, சென்னையாகவும் அதற்கு முன்பான மதராஸாகவும் அறிந்தவர்கள் வெகுசிலரே. சென்ட்ரல், பக்கிங்காம் கால்வாய் என சென்னையின் பழைய வரலாற்றைச் சுமந்து நிற்கும் சின்னங்களுக்கு மத்தியில், பல மனிதர்கள் மெட்ராஸின் வரலாற்றை அழுத்தமாகப் பதிவுசெய்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.முத்தையா. மெட்ராஸ் என்ற சொல்லுக்குள் புதைந்துகிடக்கும் ஒரு கலாசார நகரத்தின் வரலாற்றை எண்ணற்ற மக்களுக்குக் கொண்டு சேர்த்தவர். 

``நம்மில் பலரும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வந்தவர்கள். ஆனாலும், பல பொழுதுகளில் சென்னை நமக்கு அன்னை பூமியாகவே இருந்துள்ளது. சென்னை, பலருக்கும் மெட்ராஸாக நீக்கமற நிறைந்துள்ளது. இந்த நகருக்கும் நமக்குமான நினைவுகளை அசைபோட்டுக்கொள்ளும் நாள்தான் `மெட்ராஸ் டே'.'' - 2004-ல் `மெட்ராஸ் டே’ கொண்டாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்குப் பிறகு எஸ்.முத்தையா சொன்ன வார்த்தைகள் இவை.

`மெட்ராஸ் டே' கொண்டாட ஆரம்பப்புள்ளியாக இருந்தவர்களில் முக்கியமானவர் எஸ்.முத்தையா. ஏப்ரல் 20-ம் தேதி உயிரிழந்தபோது, எஸ்.முத்தையாவுக்கு வயது 89. சென்னையை மெட்ராஸாகவே நினைத்துச் சிலாகித்தவர் அவர். `மெட்ராஸ் ரீ- டிஸ்கவர்டு' என்ற அவரது புத்தகம், சென்னை நகரின் தொன்மம் குறித்த தகவல்களைப் பலருக்கும் கொண்டுசேர்த்தது. 

மெட்ராஸ் நகரத்தின் மீது அளப்பரிய பிரியம்கொண்டிருந்த முத்தையா, சிவகங்கையில் பிறந்தவர். அவரின் தந்தை பிரித்தானிய இலங்கையில் பணியாற்றியதால் இலங்கையில் வசித்தனர். 1950-களில் அமெரிக்காவில் கலை மற்றும் பொறியியல் சார்ந்த படிப்புகளை முடித்தவர். இலங்கை திரும்பியதும் பத்திரிகையாளர் ஆனார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எழுத்தின் மீதான ஆர்வம், அவரை `தி டைம்ஸ் ஆஃப் சிலோன்’ பத்திரிகையில் பணியில் அமர்த்தியது. 17 ஆண்டுகளாக டைம்ஸ் ஆஃப் சிலோனில் பணிபுரிந்தார். அங்கிருந்து  ஓய்வுபெற்ற பிறகு, சென்னைக்கும் அவருக்குமான பந்தம்  தொடங்கியது.

டி.டி.கே மேப்ஸ் என்ற நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தார். அந்த நாளில் மெட்ராஸ் என்ற நகரத்தின் வரலாறு குறித்த தனது தேடலில் காத்திரமாக இயங்கினார். மெட்ராஸ் நகரின் சிறப்புகள், கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களுக்கு முன்பாகவே சென்னை எவ்வாறு நவீனம் பெற்று விளங்கியது போன்றவற்றை தனது முறையான ஆய்வுகளில் கண்டறிந்தார்.

சென்னையைப் பற்றிய தேடலின் பயனாய் அவர் எழுதிய நூல்தான் `மெட்ராஸ் ரீ- டிஸ்கவர்டு'. அந்தக் காலத்தில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் பலருக்கும் இந்நூல் சென்னை குறித்த மதிப்புமிக்க சித்திரத்தை உருவாக்கியது. Madras Miscellany என்ற இவரது தொகுப்பில் சென்னை குறித்த விரிவான கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. சென்னை மெரினாவில் உள்ள பழைய டி.ஜி.பி அலுவலகம் இடிக்கப்பட்டபோதும், மேலும் பல பழைய கட்டடங்கள் இடிக்க முற்பட்டபோதும் அதைத் தடுத்து நிறுத்த பெரிதும் போராடியுள்ளார் முத்தையா.

புத்தகங்களோடு நிறுத்தாமல் இணையதளத்திலும் சென்னையைப் பற்றி தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வந்தார். தனது வயதையும் பொருட்படுத்தாமல் பல கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார். மெட்ராஸின் பெருமையை இந்தத் தலைமுறைக்குக் கொண்டுசெல்வதில் அவரின் ஆர்வம் அளப்பரியது. அவர் மறைந்தபோது ஃபேஸ்புக், ட்விட்டர் எனப் பழைய சென்னைப் படத்தையும், முத்தையாவின் படத்தையும் இளைஞர்கள் பலரும் பதிவிட்டனர். தனது தீராத பங்களிப்பின் வழியே சென்னை நகரமெங்கும் நிறைந்து வாழ்வார் முத்தையா!