Election bannerElection banner
Published:Updated:

`வாசிப்பு என்பது தியானத்தைப் பயிலுதல்!’ - கார்த்திக் நேத்தா #WorldBookDay

`வாசிப்பு என்பது தியானத்தைப் பயிலுதல்!’ - கார்த்திக் நேத்தா #WorldBookDay
`வாசிப்பு என்பது தியானத்தைப் பயிலுதல்!’ - கார்த்திக் நேத்தா #WorldBookDay

`வாசிப்பு என்பது தியானத்தைப் பயிலுதல்!’ - கார்த்திக் நேத்தா #WorldBookDay

சில மாதங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் `நோ ஃப்ரெண்டு பட் தி மவுன்டெய்ன்ஸ் (No Friend But the Mountains)’ என்ற நூலுக்கு, விக்டோரியா இலக்கியப் பரிசு கிடைத்தது. ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான இந்தப் பரிசைப் பெற, நூல் ஆசிரியர் பேரூஸ் பூச்சாணி வரவில்லை. காரணம், அவர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய குடியுரிமை மறுக்கப்பட்ட அகதி. தனது அகதி முகாமில் இருந்தபடி வாட்ஸ்அப் செய்திகளாகப் பத்திரிகையாளர் ஒருவருக்கு அனுப்பி, நான்கு வருடத்துக்குப் பிறகு அதை நூலாக்கினர். அகதிகளின் வலியைச் சொல்லும் அந்த நூலை, தற்போது பலரும் கொண்டாடுகின்றனர். எழுத்தாளருக்கான குடியுரிமையை மறுத்த அரசு, புத்தகத்துக்கு விருது கொடுக்கிறது. இந்தச் சம்பவம் புத்தகத்தின் வலிமைக்கு, எழுத்தின் நோக்கத்துக்கு சமீபத்தியச் சான்று. 


இன்று, உலகப் புத்தக தினம். புத்தகங்கள் குறித்து படைப்பாளிகள் பலரும் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் அவசியம் குறித்து உலகெங்கிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்றைய தினம் அனுசரிக்கப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான். வாசிப்பின் அவசியத்தை, புத்தகத்தை நோக்கி மனிதச் சமூகத்தை நகர்த்துவது. புத்தகம் வெறும் காகிதங்களாக மட்டுமே இல்லாமல் பெரும் ஆவணங்களாக மாறி நிற்பது அதன் உள்ளடக்கத்தால்தான்.

`இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
வாழா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீர உள் ஊற்றைத் தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆள்கிறேன்'

- கார்த்திக் நேத்தா

பலரின் வாழ்வை, வலியை, மனச்சிடுக்குகளை தனது படைப்பின் மூலம் வெளிப்படுத்தும் பணி செய்பவன் கவிஞன். தத்துவம், சுயசரிதை, நாவல், கவிதைகள் என வாசிக்க, தெரிந்துகொள்ள பலவும் காத்து நிற்கின்றன. உலகப் புத்தக தினத்தையொட்டி தனது கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் அதைச் செய்துவரும் கவிஞர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவிடம் வாசிப்பு குறித்தும் புத்தகங்கள் குறித்தும் கேட்டோம்...

``என் வாழ்வின் எல்லா காலங்களிலும் நான் பலவற்றை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் அது என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. பல்வேறு நூல்களை வாசித்தாலும், `நான் யார்', `நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்?' என்ற அகம் சார்ந்த கேள்விகளுக்குப் பதில் தரக்கூடிய நூல்கள்தான் எனக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. பொதுவாக, வாசிப்பைப் பற்றிச் சொல்லச் சொன்னால் இவ்வாறு சொல்லலாம். வாசிப்பு, அகந்தையைக் கொடுக்கும். பிறகு, அகந்தையைக் குறைக்கும். வாசிப்பு, குழப்பத்தின் தொடர்ச்சியாகத் தெளிவைக் கொடுக்கும். வாசிப்பு, குண இயல்புகளைக் கண்டடையும்; குணக்கோளாறுகளைச் சுட்டிக்காட்டும்; பாவனைகள், பகட்டுகள் எல்லாம் அலை ஓய்ந்த பிறகு, உணர்வுகளும் உணர்ச்சிகளுமே பிரதானம் என்பதை உணர்த்திவிடும்.

வாசிப்பின் வழியாக அறிவின் மமதை எழுந்தால் அது அகந்தையின் அனுபவமே தவிர, வாசிப்பின் அனுபவமாகாது. வாசிப்பின் வழியாக உயிர்களின்பால் அன்பு சுரந்தால், நாம் தேர்ந்த வாசிப்பாளன். வாசிப்பு எனது எல்லா கோளாறுகளையும் சுட்டிக்காட்டியது. என் குண இயல்புகளை உற்று நோக்கப் பெரிதும் உதவிவருகிறது.  வாசிப்பு என்பதே தியானத்தைப் பயிலுதல்தான். நான் உருவாக்கிய படைப்புகள் எல்லாம் நான் பயின்றதன் விளைச்சலாகத்தான் பார்க்கிறேன்.

தற்போது பாடல் எழுதிக்கொண்டிருப்பதற்கு இடையில் ஓய்வு நாளில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் அப்படி வாசித்ததில் சில புத்தகங்கள் என்னை மிகவும் பாதித்தன. அவற்றை வாசகர்களுக்கும் பரிந்துரைக்க விரும்புகிறேன். யூமா வாசுகியின் கவிதைகள், சூஃபி கவிதைகள், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் `Freedom From The Known', கோபி கிருஷ்ணனின் கதைகள், திலீப்குமார் கதைகள் ஆகியவை அகம் சார்ந்த புரிதல்களுக்கு வழிவகுக்கும்.

ஆரம்பத்தில் நாம் வாசிக்கும்போது, நமக்கு நிறைய தெரிந்திருக்கிறது என்ற அகந்தை தோன்றும். அது அல்ல வாசிப்பதன் நோக்கம். தொடர்ச்சியாக நாம் வாசிக்கிறபோது அந்த அகந்தை காணாமல்போய், நமக்கு ஓர் அமைதி கிடைக்கும். நாம் படித்து கண்டடைந்த விஷயங்களால் ஒரு ஞானம் கிடைக்கும். அது நமக்கு வாழ்வில் மிகப் பயனுள்ளதாக இருக்கும். எனவேதான் வாசிப்பு அவசியம் என்கிறேன்." 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு