Published:Updated:

மீன் ராஜாவும் நானாபோஷோவும் !

ஹாசிப்கான் யூமா வாசுகி

மீன் ராஜாவும் நானாபோஷோவும் !

ஹாசிப்கான் யூமா வாசுகி

Published:Updated:
##~##

நானாபோஷோவின் பாட்டி பெயர் நோக்கோமி. மிகவும் வயதானவள். அவள் தலையில் ஒரு முடிகூட நரைக்கவில்லை. ஆனால், சமீப காலமாக எண்ணெய் தடவாததால் சில முடிகள் உதிர்ந்துவிட்டன. அதற்காக மிகவும் வருந்தினாள்.

ஒரு நாள் நானாபோஷோவிடம் சொன்னாள், ''குட்டிப் பேரனே,  எண்ணெய் தடவாமல் என் தலைமுடிகள் உதிர்கின்றன. உன் தாத்தா இருந்தபோது வாங்கித் தந்த எண்ணெய் தீர்ந்துவிட்டது. நீதான்  எனக்கு எண்ணெய் கொண்டுவந்து தர வேண்டும்!'' என்றாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பாட்டி, அந்த எண்ணெய் எங்கே கிடைக்கும்?'' என்று கேட்டான் நானாபோஷோ.

''வடக்குத் திசையில் ஒரு பெரிய ஏரி இருக்கிறது. அந்த ஏரியில் ஒரு மீன் ராஜா இருக்கிறது. அந்த மீன் ராஜாவின் பெயர் மெஷீனா மக்வாயி. உலகத்தில் உள்ள எல்லா மீன்களுக்கும் ராஜா. நீ அந்த ராஜா மீனைப் பிடித்து இங்கே கொண்டுவந்தால், நமக்கு நிறைய எண்ணெய் கிடைக்கும்'' என்றாள் பாட்டி.

வெற்றியுடன் வருவதற்கு நானாபோஷோவை ஆசீர்வதித்தாள் பாட்டி. மீன் பிடிக்கத் தூண்டிலும் படகும் வேண்டும். நானாபோஷோ ஒரு மரத்தை வெட்டி படகு செய்தான். ஓக் மரக் கிளையால் துடுப்பு செய்தான். பாட்டி, கயிறும் தூண்டிலும் கொடுத்தாள். நானாபோஷோ, நதி வழியே வடக்குத் திசையில் படகைச் செலுத்தினான். கடைசியில் ஒரு பெரிய ஏரியை அடைந்தான். ஏரியின் நடுவில் படகை நிறுத்தினான். தூண்டில் முள்ளில் இரையைக் குத்திவைத்து, ஏரியில் எறிந்தபடியே பாடினான்...

''மெஷீனா மக்வாயி மீன் ராஜாவே, தூண்டில் முள் வருவதைப் பார்க்கவில்லையா?

முள்ளின் முனையில் இருக்கும் இரையைக் கவனிக்கவில்லையா?

உடனே வந்து இரையை விழுங்கு!'' என்று பாடினான்.

மீன் ராஜாவும் நானாபோஷோவும் !

மீன்களின் ராஜாவான மெஷீனா மக்வாயி, ஏரியின் அடியில் படுத்தபடி  பாட்டைக் கேட்டது. தன்னை அழைத்துப் பாடுவது யார் என்று அறிய, மந்திரி மீனை ஏரியின் மேல் பகுதிக்கு அனுப்பியது.

மந்திரி மீனைப் பார்த்த நானாபோஷோ, ''உன் ராஜாவுக்குத் தைரியம் இருந்தால்,  தூண்டில் முள்ளைக் கடிக்கச் சொல் பார்ப்போம்!'' என்றான்.

மந்திரி மீன் கீழே சென்று ராஜாவிடம் செய்தியைச் சொன்னது. அதைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்டது மீன் ராஜா. வாலைச் சுழற்றி தண்ணீரில் அடித்தது. ஏரியே கொந்தளித்தது. ஆவேசமாக உருண்டு புரண்டவாறு மேலே வந்தது. வந்த வேகத்தில், நானாபோஷோவின் படகு ஆடித் தத்தளித்தது. குகை போன்ற வாயைத் திறந்தவாறு, மீன் ராஜா ஆவேசமாகப் பாய்ந்து வந்து, நானாபோஷோவையும் படகையும் விழுங்கிவிட்டது.

அடுத்த நொடி, மெஷீனா மக்வாயி வயிற்றுக்குள் கிடந்தான் நானாபோஷோ. எங்கும் இருட்டு. எதையும் பார்க்க முடியவில்லை.

எங்கோ ஓர் ஓசை கேட்டது... 'டொம் டமார்! டொம் டமார்! டொம் டமார்!’

'மீன் ராஜாவின் இதயத் துடிப்புதான் அது’ என்று நானாபோஷோவுக்குப் புரிந்தது. ஓசை கேட்ட இடத்தில் துடுப்பால் ஓங்கி அடித்தான். மீன் ராஜா செத்துவிட்டது.

அப்போது 'கர்கர்... கர்கர்!’ என்று ஏதோ சுரண்டுகிற சப்தம்.

எப்படியோ ஓர் அணில், மீன் ராஜாவின் வயிற்றுக்குள் வந்துவிட்டது. அது வெளியே செல்வதற்காக சுரண்டிச் சுரண்டி, ஒரு வழியை உருவாக்கப் பார்த்தது.

நானாபோஷோ அப்போது வெளியில் இருந்து வரும் வேறொரு ஓசையையும் கேட்டான். ''டக் டக் டக் டக் டக்....'' அவன் கூர்ந்து கவனித்தான். வெளியில் இருந்து ஒரு கடல் காகம், மீன் ராஜாவைக் கொத்தியது.

மீன் ராஜாவும் நானாபோஷோவும் !

அணில் உள்ளே சுரண்டியும், கடல் காகம் வெளியே கொத்தியும் ஏற்படுத்திய துளை வழியே, நானாபோஷோ வெளியே வந்தான். அணிலுக்கும் காகத்துக்கும் நன்றி சொன்னான்.

அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.  இறந்துபோன மீன் ராஜாவை, ஒரு பெரிய மரப் படகில் ஏற்றிக் கட்டினார்கள். ஏரியில் இருந்து நதிக்கு வந்து, நதியில் இருந்து வீட்டை நோக்கிப் படகைச் செலுத்தினார்கள். நானாபோஷோ மகிழ்ச்சியாகப் பாடினான்.

''ஐலசா ஐலசா
மெஷீனா மக்வாயிக்கு ஐலசா!
நோக்கோமி பாட்டி எண்ணெய்   தடவட்டும்
அணிலுக்கும் காகத்திற்கும் ஐலசா!''

மூவரும் வீட்டை அடைந்தார்கள். நோக்கோமி பாட்டி, மீன் ராஜாவின் உடலை வெட்டித் துண்டுகள் ஆக்கினாள். ஒரு பாத்திரத்தில் வேகவைத்து, எண்ணெயாக மாற்றினாள். கிடைத்த எண்ணெயை ஆயிரம் புட்டிகளில் ஊற்றினாள். தினமும் அதைத் தலையில் தடவிக்கொண்ட பாட்டி, ஊரில் இருப்பவர்களுக்கும் கொடுத்தாள். அவர்கள், அந்த எண்ணெயைத் தலையில் தடவிக்கொண்டார்கள். பிறகு, அந்த ஊரில் யாருடைய தலைமுடியும் உதிரவே இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism