Published:Updated:

`தாடி வைத்திருப்பவர்களை குற்றவாளிகள் என்பது மோசமான மனநிலை!’ – லெனின் பாரதி

`தாடி வைத்திருப்பவர்களை குற்றவாளிகள் என்பது மோசமான மனநிலை!’ – லெனின் பாரதி
`தாடி வைத்திருப்பவர்களை குற்றவாளிகள் என்பது மோசமான மனநிலை!’ – லெனின் பாரதி

தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம்கொண்டவர்கள், படித்தவர்கள் அனைவருக்கும் பரிச்சயமான பெயர், பிரான்சிஸ் கிருபா. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனது கவிதைகளுக்காகவும் `கன்னி'  நாவலுக்காவும் பலராலும் கொண்டாடப்படுபவர். சுந்தர ராமசாமி விருது, சுஜாதா விருது, `கன்னி' நாவலுக்காக ஆனந்த விகடன் விருது போன்ற முக்கியமான விருதுகளைப் பெற்றவர்.  

நேற்றைய தினம், அவரை விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட செய்திகள் சமூக வலைதளமெங்கும் பரவிக்கிடந்தன. `அவர், மனநோயாளி ஒருவரைக் கொலைசெய்துவிட்டார்' எனச் செய்திகள் வெளிவந்தன. மாலையில் இயக்குநர் லெனின் பாரதி, கவிஞர் யூமா வாசுகி மற்றும் பிரான்சிஸ் கிருபாவின் நண்பர்கள் பலரும் காவல் நிலையத்திலிருந்து அவரை விடுவித்துவந்த புகைப்படங்கள் வெளியாகின. பிரான்சிஸ் கிருபாவின் வாசகர்களுக்கு அது பெரும் நிம்மதியைக் கொடுத்தது. `நேற்றைய தினம் என்ன நடந்தது?' என இயக்குநர் லெனின் பாரதியை தொடர்புகொண்டு பேசினோம். 

`தாடி வைத்திருப்பவர்களை குற்றவாளிகள் என்பது மோசமான மனநிலை!’ – லெனின் பாரதி

``தோழர் பிரான்சிஸ் கிருபா, எனக்கு நன்கு பரிச்சயமானவர். தற்போது ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. அன்று இரவு மார்க்கெட்டிலேயே தங்கியிருக்கிறார். சனிக்கிழமை (மே-5) வணிகர் தினம் என்பதால், கடைகளுக்கு விடுமுறை. அப்போது அங்கு சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர், வலிப்பு நோயால் துடித்துள்ளார். அங்கு இருந்தவர்களில் சிலர், அவரின் கைகளில் இரும்பு போன்றவற்றைக் கொடுத்துள்ளனர். அதன் பிறகும் அவர் வலிப்பின் காரணமாக கடுமையாகத் துடித்திருக்கிறார். அப்போது, பிரான்சிஸ் கிருபா துடித்துக்கொண்டிருந்தவரை தனது மடியில் கிடத்தி, அவரின் நெஞ்சை வருடிக்கொடுத்து முதலுதவி அளிக்க முற்பட்டுள்ளார். அதற்குள் அந்தத் தொழிலாளி இறந்துவிட்டார். அங்கு வந்த காவல் துறையினர் விசாரணைக்காக பிரான்சிஸ் கிருபாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பிறகு, செய்திகள் வெவ்வேறுவிதமாகப் பரவ, எனக்குத் தோழர் ஒருவர் மூலம் அழைப்பு வந்தது. நானும் பத்திரிகையாளர் கவின்மலர் உள்ளிட்ட தோழர்களும் காவல் நிலையம் சென்றோம். பிறகு எழுத்தாளர் திலகவதியைத் தொடர்புகொண்டு இதுகுறித்துப் பேசினோம்.

`தாடி வைத்திருப்பவர்களை குற்றவாளிகள் என்பது மோசமான மனநிலை!’ – லெனின் பாரதி

99 சதவிகிதம் அவர்மீது எந்தத் தவறுமில்லை. சி.சி.டி.வி காட்சிகளும் பிரான்சிஸ் கிருபா குற்றமற்றவர் என்பதற்குச் சான்றாகவே இருந்தன. இறந்த தொழிலாளியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் அவரது மரணம் இயற்கை மரணம் என்பதையே தெரிவித்தது. பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப்பட்டார். இதுதான் நடந்தது. ஆனால், இந்த ஒட்டுமொத்த சம்பவத்துக்குப் பின்னும் பிரான்சிஸ் கிருபா குறித்து நிறைய தவறான கருத்துகளும் வந்தன.

பிரான்சிஸ் கிருபா, அறம் சார்ந்து இயங்கும் படைப்பாளி; வணிக சமரசங்களுக்கு உட்படாதவர். இருக்க வீடு இல்லாத தெருவில் தங்கும் ஒருவரை, மனநோயாளி என முடிவுகட்டும் மனநிலையில் மனிதர்கள் இருப்பது வருந்தத்தக்கது. தாடி வைத்திருப்பவர்கள், தெருவில் வசிக்கும் விளிம்பு நிலை மக்கள்தான் குற்றவாளிகள் என்ற முன்முடிவுக்கு வருவது, மோசமான மனநிலை. வலிப்பு நோயால் இறந்துகொண்டிருக்கும் மனிதனை மடியில் கிடத்தி, ஏதாவது உதவி செய்ய முடியுமா... எனத் தவிக்கும் பிரான்சிஸ் கிருபா, வலி உணர்ந்தவன். பெருங்கருணைமிக்க ஒரு மனிதன்தான் இதைச் செய்ய முடியும். பிரான்சிஸ் கிருபாவுடன் பழகியவர்கள் அனைவருக்கும் தெரியும், அவனது அன்புள்ளம். நேற்று மாலை அவரைக் காவல் நிலையத்திலிருந்து அழைத்து வர உதவிய, சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக நின்ற தோழமைகள் அனைவருக்கும் நன்றி" என்றார் இயக்குநர் லெனின் பாரதி.

`தாடி வைத்திருப்பவர்களை குற்றவாளிகள் என்பது மோசமான மனநிலை!’ – லெனின் பாரதி

பிரான்சிஸ் கிருபாவின் கவிதை ஒன்று... 

`கணங்கள்தோறும் 
என்னை நானே 
தண்டித்துக்கொண்டிருக்கும்போது..
ஏன் 
நீயேனும் கொஞ்சம்
என்னை மன்னிக்கக்கூடாது?'

``பிரான்சிஸ் கிருபா, தன்னைதானே சிலுவையில் அறைந்துகொள்வானே தவிர, மற்றவர்களுக்காக சிலுவையைச் சுமக்க மட்டுமே தெரிந்த அன்பன்'' என்றனர் அவரது நண்பர்கள்.

வலிப்பு நோயால் இறந்த அந்த நபருக்கு அஞ்சலி!

Vikatan