Published:Updated:

`இஸ்லாமிய மக்களின் வாழ்வை பாசாங்கின்றி பதிவுசெய்த படைப்பாளி, மீரான்!’ #RIPThoppilMuhammedMeeran

`இஸ்லாமிய மக்களின் வாழ்வை பாசாங்கின்றி பதிவுசெய்த படைப்பாளி, மீரான்!’ #RIPThoppilMuhammedMeeran
`இஸ்லாமிய மக்களின் வாழ்வை பாசாங்கின்றி பதிவுசெய்த படைப்பாளி, மீரான்!’ #RIPThoppilMuhammedMeeran

மிழகத்தின் கடற்கரையோர கிராமத்தில் இன்றைய தினம் வீசும் காற்று, கண்ணீரின் உப்புச்சுவையும் சேர்த்து இழுத்துவரும். தங்கள் மண்ணின் கதைகளை, மனிதர்களை, கொடுவாய் ஒழுக அசந்து தூங்கும் மக்களை, நாற்காலிகளையும்கூட தனது எழுத்தில் பதிவுசெய்த ஒப்பற்ற படைப்பாளிக்கான கண்ணீர் அவை. நேற்றைய தினம் நள்ளிரவில் தோப்பில் முஹம்மது மீரான் இயற்கையோடு சேர்ந்தார். அவரைப் பிரிந்த துக்கம் தாளாமல் அவரின் வாசகர்களும், சக எழுத்தாளர்களும் அவரது இல்லம் நோக்கி விரைந்து கொண்டுள்ளனர். 

`இஸ்லாமிய மக்களின் வாழ்வை பாசாங்கின்றி பதிவுசெய்த படைப்பாளி, மீரான்!’ #RIPThoppilMuhammedMeeran

தோப்பில் முஹம்மது மீரான், தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத படைப்பாளி. இஸ்லாமிய குடும்ப வாழ்வை, பாசாங்கில்லாமல் பதிவுசெய்தவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் அவருக்கு உண்டு. மீரான் 1944-ல் கன்னியாகுமரியின் தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்தார். 1988-ல் வெளியான இவரது `ஒரு கடலோர கிராமத்தின் கதை' தோப்பில் முஹம்மது மீரான் என்ற அசலான படைப்பாளியை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தது. இயல்பு மாறாத இவரது வட்டார மொழிநடை,  கைகளிலிருந்து நழுவி ஓடும் வழவழப்பான கடல்மீனையும் உப்புக்காற்றையும் வாஞ்சை குறையாது வாசகர்களுக்குச் சேர்த்தது. 

`இஸ்லாமிய மக்களின் வாழ்வை பாசாங்கின்றி பதிவுசெய்த படைப்பாளி, மீரான்!’ #RIPThoppilMuhammedMeeran

பெரும்பாலும் தனது நிலத்தைக் குறித்தே எழுதிய இவரின் படைப்புகளில் துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி போன்றவை முக்கியமானவை. 1997-ம் ஆண்டு தன்னுடைய `சாய்வு நாற்காலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். இதுவரை 6 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் சிறுகதை, புதினம் எழுதினார். எழுத்தின் மீது இவர்கொண்ட காதலுக்கு, இவருடைய 73-ம் வயதிலும் எழுதி, கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த `குடியேற்றம்' புதினமே சாட்சி. 

மீரானின் நண்பரும், சக எழுத்தாளருமான சோ.தர்மன், தோப்பில் முஹம்மது மீரான் பற்றி நம்மிடையே பேசினார்... 

`இஸ்லாமிய மக்களின் வாழ்வை பாசாங்கின்றி பதிவுசெய்த படைப்பாளி, மீரான்!’ #RIPThoppilMuhammedMeeran

``இஸ்லாமிய வாழ்வியலில் உள்ள பல்வேறு பிரச்னைகளை வெளி உலகுக்குத் தெரியாத அவர்களின் வழக்கங்களை தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் மீரானுக்குப் பெரும்பங்கு உண்டு. அவருடைய படைப்புகள் அனைத்தும் இஸ்லாமியச் சமூகம் குறித்து நமக்குக் கிடைத்த மிகப்பெரும் ஆவணங்கள். சாகித்திய அகாடமி போன்ற விருதுகளைப் பெற்றவர், அகாடமி தேர்வுக் குழுவிலும், பாடநூல் தேர்வுக் குழுவிலும் இருந்தவர். பல விருதுகளும் பொறுப்புகளும் பெற்றபோதும் எளிமையாய் இருந்த இனிய மனிதர்.

அவர் எனக்கு நெருங்கிய நண்பர். என் போன்ற பல சின்ன எழுத்தாளர்களுக்கு அவர் ஒரு நல்ல வழிகாட்டி. அவர் வீட்டில் அனைவருமே வெகு இயல்பாய்ப் பழகக்கூடியவர்கள். மூன்று நாள்களுக்கு முன்னால் அவர் மகனிடம் பேசியபோது, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகச் சொன்னார்கள். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துவரப்பட்டதும், அவரைச் சந்திக்கக் கிளம்பலாம் என்று இருந்தபோது, இன்று காலை அவர் தவறிவிட்டார் என்ற தகவல் வந்தது. அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியா ஒன்று" என தன் வருத்தத்தைத் தெரிவித்தார். 

`இஸ்லாமிய மக்களின் வாழ்வை பாசாங்கின்றி பதிவுசெய்த படைப்பாளி, மீரான்!’ #RIPThoppilMuhammedMeeran

கடல்சார் மக்களின் கண்ணீரை, புன்னகையை, அவர்தம் பாடுகளைத் தூண்டில்கொண்டு பிடிக்காமல், வலைகொண்டு மொத்தமாய் அள்ளி எழுத்துகளாக்கியவர் தோப்பில் முஹம்மது மீரான். அவர்தம் கதைகளைப்போல அவரின் கடலும் வானமும் சந்தித்துக்கொள்ளும் அந்த நெடுந்தொலைவில், தனது `சாய்வு நாற்காலி' யில் அமர்ந்தபடி மீரான் ஓர் எளியவனின் கதையை எழுதிக்கொண்டுதானிருப்பார் என, வழியனுப்புவோம் மீரானை!

Vikatan