Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

Published:Updated:
##~##

எலிகளானோம் நாம்

 உன் உயிர் பிரியும் இறுதி நாளுக்கு
முந்தைய நாள் வரை நீ சகஜமாகத்தானிருந்தாய்
மரணத்தின் விடியல் என்றறியாமல் துயிலெழுந்து
பல் துலக்கிப் பலகாரம் உண்டு
பாளை பஸ் நிலையம் ஓடி
பேருந்து பிடித்துப் பதறிப் பணி செய்து
வண்ணாரப்பேட்டை
பேராச்சி அம்மனைத் தரிசித்து
மகனைப் பற்றிக் கவலைப்பட்டு
மகளறியாமல் அவள் செல்பேசிய எண் பார்த்து
ஆயாசத்தோடு படுக்கப் போகும் வரை
நீ அறியாத உன் மரணம்
உன் காலுக்குக் கீழேதான் பரவிக்கொண்டிருந்தது
வாளியிலிருந்து சிந்திய தண்ணீர்
தரையில் பரவுவதைப் போல்
அடுக்களை இருட்டிலிருக்கும்
பூனையைக் கவனிக்காமல்
அதன் எதிரில் உலவும் எலியைப் போல்!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- மகாதேவன்

மரத்தைப் பிரசவிக்கும் பறவை

ஒரு மரத்தை
வெட்டும்போது
ஒரு பறவை
கதறும்.
எரிச்சல்கொள்ளத் தேவை இல்லை.

எங்கோ
ஒரு பழத்தை உண்டு
சிதைக்கவியலாத
அதன் விதையைச் சுமந்து
கழித்து...
பின்னது பயிராகி...
செடியாகி...
மரமாவதைப்
பார்த்து ரசித்திருந்தால்
நமக்கதன்
வேதனை புரியும்!

- நாவிஷ் செந்தில்குமார்

எனது சிகரெட்டின் விலை ஐந்தரை ரூபாய்

பெட்டிக்கடையோரம்
சிகரெட்டைப் பற்றவைக்கிறீர்கள்
நீங்கள் சுவாரஸ்யமாய்
பார்க்கும் இடைவெளிக்குள்
தன் வயிற்றைவிடச் சிறிய
வளையத்துக்குள் புகுந்து
வெளிவந்துவிடுகிறாள் சிறுமி
பாதி சிகரெட் கரையும் முன்
பிஞ்சுக் கால்களால்
கயிற்றில் நடந்து
ஒரு வேளை சோற்றுக்கும்
அடுத்த வேளை சோற்றுக்குமான
தூரத்தைக்
கடந்துவிடுகிறாள்
அவள் தட்டு ஏந்தி வரும்முன்
அவசரமாக சிகரெட்டை
எறிந்துவிட்டு நகர்கிறீர்கள்
எதையோ அங்கே
தவறவிட்டுவிட்டோமோ
என்று யோசிக்கும் உங்கள் மனதுக்கு
புகையும் சிகரெட் துண்டைத் தவிர
வேறெதுவும் இல்லை என்று
சமாதானம் சொல்லிக்கொண்டீர்களானால்
உங்கள் பெயர்
நானாகக்கூட இருக்கலாம்!

- ஸ்ந்த்யா ஸ்வரூபன்

நியாயமில்லை

அடுப்பினுள் தூங்கும் 
அந்தப் பூனைக்குத்
தெரிந்திருக்க நியாயமில்லை
எதுவுமில்லா வீட்டில்
எலியும் இருக்காதென்று!

- நவநி

கல்யாணி ராகம்

சொல்வனம்!

'முழம் என்ன விலை?’ எனக் கேட்டுவிட்டு
பொய்யாய் மறுதலிப்பது
புது மஞ்சள் மனைவிகளின்
வாசனை விதை!

'பரவாயில்லை வாங்கிக்கொள்!’ என
வாஞ்சையாய் இசைவது
கலாபக் கணவன்களின்
கல்யாணி ராகம்!
'புருஷன் வாங்கித்தரும்போது
வேண்டாம்னு சொல்லாதம்மா...’ எனப்
பாரம்பரியமாய்ச் சொல்வது
தெருவோரப் பூக்காரிகளின்
தெவிட்டாத கவிதை!

'நாம் கசங்கி வாடிய பிறகுதான்
பொழுது விடிகிறது!’ என
முயக்கமாய் முனகுவது
மல்லிகை - ரோஜாக்களின்
மயக்க மருதாணி!

- பாலநாயகர்

சொல்வனம்!