Published:Updated:

``பாசிட்டிவாக இரு..." - சேத்தன் பகத்தின் `India Positive' பக்கங்கள்!

``பாசிட்டிவாக இரு..." - சேத்தன் பகத்தின் `India Positive' பக்கங்கள்!
``பாசிட்டிவாக இரு..." - சேத்தன் பகத்தின் `India Positive' பக்கங்கள்!

விவாதங்களுக்கு, எதிர் நம்பிக்கைகளுக்கு அதிகம் இடம் கொடுக்காமல், தன்னுடைய ட்வீட்டுகளையும், அதன் ரீட்வீட் எண்ணிக்கைகளையே ஒவ்வொரு கட்டுரைக்கும் இறுதியில் மேற்கோளாக வைத்திருக்கிறார் சேத்தன் பகத்.

இந்தியாவில் நெடுங்காலமாகத் தொடர்ந்துவரும் பிரச்னைகள் மற்றும் கடந்த ஆண்டு இந்தியாவின் முக்கிய பிரச்னைகள் ஆகியவை பற்றி, பெஸ்ட் செல்லர் எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் `India Positive'.

``இந்திய நாட்டில் கெட்ட விஷயங்களைவிட நல்ல விஷயங்கள் அதிகமாக இருப்பதாக நம்புகிறேன். எது முக்கியமோ அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அரசியல் விஷயங்களிலும், நடப்பு விவாதங்களிலும் ஆர்வம் குறைந்துவரும் இந்திய இளைஞர்களுக்கு, எளிமையாக சில விஷயங்களைத் தெரிவிக்க விரும்பியதன் விளைவுதான் இந்த `இந்தியா பாசிட்டிவ்' புத்தகம். கடந்த வருடம் இந்தியாவில் நடந்த எல்லா பிரச்னைகளைப் பற்றியும் இந்தப் புத்தகம் பேசும்... உங்களையும் பேசவைக்கும். அதுதான் இந்தப் புத்தகத்தின் இலக்கு” என்றார் சேத்தன் பகத்.

``பாசிட்டிவாக இரு..." - சேத்தன் பகத்தின் `India Positive' பக்கங்கள்!

'Five Point Someone', `2 states', `one night at the call center', `half girl friend', `what young india wants', `the girl in room 105' போன்ற புத்தகங்களை எழுதிய சேத்தன் பகத்தின் கட்டுரைத் தொகுப்பு இந்த `India Positive'. சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், நேச்சுரல்ஸ் நிறுவனர் சி.கே.குமரவேல், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவரான மோகன் குமாரமங்கலம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். நடிகை கஸ்தூரி, விழாவை நெறிப்படுத்தினார்.

``நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மிச்செல்லின் ஆடை, காவி நிறத்தில் இருக்கிறது. இது, மே 23-ம் தேதி வெளியாகவிருக்கும் தேர்தல் முடிவுகளை உணர்த்துவதாகத் தோன்றுகிறது” என்று பேச்சைத் தொடங்கிய சேத்தன் பகத், ``இந்தியாவில், முக்கியமாகச் சமூக வலைதளத்தில் இயங்குபவர்கள் எதிர்மறைக் கருத்தாளர்களாக மாறி வருகிறார்கள்” என்றார். புத்தகத்தில் பேசியிருப்பதும் அதுதான். பிரச்னைகளைப் பட்டியலிட்டு நேர்மறையான தீர்வுகளை நோக்கிச் செல்வோம் எனப் பாடம் நடத்துகிறது `India Positive' புத்தகம். இதைப் படித்துவிட்டு மேசையில் வைக்கும்போது `சாதிய, மத, வர்க்க ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய இந்தியச் சமூகத்தின் பிரச்னைகளை விமர்சிக்காமல், போராடாமல் நேர்மறையாகச் சிந்தித்தோ பேசியோ மட்டும் என்ன செய்துவிட முடியும்?' என்னும் கேள்வி எழாமல் இருக்காது. விவாதங்களுக்கு, எதிர் நம்பிக்கைகளுக்கு அதிகம் இடம் கொடுக்காமல், தன்னுடைய ட்வீட்களையும், அதன் ரீட்வீட் எண்ணிக்கைகளையும் ஒவ்வொரு கட்டுரைக்கும் இறுதியில் மேற்கோளாக வைத்திருக்கிறார்.

``பாசிட்டிவாக இரு..." - சேத்தன் பகத்தின் `India Positive' பக்கங்கள்!

கட்டுரைகளின் தலைப்புகளிலேயே முன்னுக்குப் பின் முரண் காட்டுகிறார் சேத்தன் பகத். ஓவராக `பக்த்’ மோடில் இருப்பது எந்த அளவுக்கு ஜனநாயகத்துக்குக் கேடு என்று ஒரு தலைப்பில் எழுதிவிட்டு, மதச்சார்பற்றவர்களையும் கேலி செய்கிறார். பால்கோட் தாக்குதல், மிகத் தேவையானது; மிகச் சரியாகச் செயல்படுத்தப்பட்ட ஒன்று என்று புகழும் அதே வேளையில், அதன் நம்பகத்தன்மையை விவரித்துக் கொடுக்கப்பட்ட பத்திரிகைச் செய்திகளைப் பேசவில்லை. சாதிரீதியான இட ஒதுக்கீட்டின் மீது கட்டுரைகளில் மிதவாதத் தாக்குதல் நடத்திவிட்டு, ஜனநாயகத்தின் கூறுகளுக்காக நிறைய வசனங்களை வைத்துவிட்டு, கல்வி வளாகங்களில் மாணவர்கள் பேசும் அரசியலையும் கிண்டல் செய்கிறார். இங்கே ஒரு குத்து, அங்கே ஒரு குத்து என்னும் ரேஞ்சில் கன்ஃப்யூஸ் செய்துள்ளார் சேத்தன். தேர்வு உரிமை, மக்களுக்கானது. அரசு, மக்களின் தேர்வுகளில் தலையிடாமல் உண்மையான வேலைகளையும் கொஞ்சம் பார்க்கலாம் என்று பேசும் சேத்தன் பகத், உணவு உட்பட மக்களின் தேர்வுகளில் அதிர்ச்சிகளைக் கொடுத்த ஆளும் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் எதையும் முன்வைக்கவில்லை.

வாசகர்களைக் கஷ்டப்படுத்தாத எளிமையான எழுத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார் சேத்தன் பகத். அமைதியாக இரு. பாசிட்டிவ்வாக இரு. முடிந்ததைச் செய் என்னும் மோடில் எழுதப்பட்டிருக்கும் `India Positive'ஐ வெளியிட்டிருக்கிறது Westland publications.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு