Published:Updated:

கிரிஷ் கர்னாட் - படைப்புகளின் வழி மரணம் வென்ற கலைஞன்!

கிரிஷ் கர்னாட் - படைப்புகளின் வழி மரணம் வென்ற கலைஞன்!
கிரிஷ் கர்னாட் - படைப்புகளின் வழி மரணம் வென்ற கலைஞன்!

"இந்திய நாடகத்துறையின் வரைபடத்தை மாற்றியமைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் கிரிஷ் கர்னாட். 1960களுக்குப் பிறகு நாடகத்துறையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. புராணக்கதைகளை வைத்து மட்டுமே நாடகங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் சமூகத்துக்கான கதைகளை நாடகமாக்கியவர்கள் வெகு சிலரே. கிரிஷ் கர்னாட் அதில் முன்னோடி."

எழுத்தாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்ட அன்று அவருக்கு இறுதி மரியாதை செய்வதற்காக `நானும் அர்பன் நக்சல்' என்ற பதாகையை கழுத்தில் மாட்டியபடி நுழைந்தார் கிரிஷ் கர்னாட். அவர் அந்தச் சமயம் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். தன் மூக்கின் கீழ் பொருத்தப்பட்டிருந்த நுண் குழாயுடன் வந்தவர் தனது இறுதி மரியாதையைச் செலுத்திவிட்டு, கௌரி லங்கேஷின் கொலைக்கு நீதியும் கேட்டார். பல புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ள கிரிஷ் கர்னாட் திரைப்படங்களில் நடிப்பதுடன், சில படங்களுக்குத் திரைக்கதையாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். கிரிஷ் கர்னாட் மேடை நாடகம், இலக்கியம் எனப் பல துறைகளில் தனது ஆளுமைத்திறனை அழுத்தமாகப் பதிவு செய்தவர். தனது திறமை மற்றும் பங்களிப்பிற்காக பத்மஶ்ரீ, பத்மபூஷன், ஞானபீடம் எனப் பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இவர், கலைப் பங்களிப்புக்காக மட்டுமன்றி தனது சமூகப் பணிகளுக்காவும் பெரிதும் மதிக்கப்படுபவர். 

கிரிஷ் கர்னாட் - படைப்புகளின் வழி மரணம் வென்ற கலைஞன்!

கிரிஷ் கர்னாட் 1938-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை மராத்தியில் பயின்ற கிரிஷ் கர்னாட். பின், கர்நாடக பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் புள்ளியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டத்தை தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெற்றார். இலக்கியம் மற்றும் நாடகத்தின் மீதான ஆர்வம் கர்னாட்டை எழுத்தாளராக்கியது. மகாபாரத கதாபாத்திரங்களை வைத்து அவர் எழுதிய `யயாதி' நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதை எழுதிய போது அவரது வயது 23. அவரது மரணம் குறித்து சென்னைக் கலைக் குழு ஒருங்கிணைப்பாளரும், நாடகவியலாளருமான பிரளயனிடம் பேசினோம்.

``இந்திய நாடகத்துறையின் வரைபடத்தை மாற்றியமைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் கிரிஷ் கர்னாட். 1960களுக்குப் பிறகு நாடகத்துறையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. புராணக்கதைகளை வைத்து மட்டுமே நாடகங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் சமூகத்துக்கான கதைகளை நாடகமாக்கியவர்கள் வெகு சிலரே. கிரிஷ் கர்னாட் அதில் முன்னோடி. அவரது துக்ளக் நாடகம், வெளிவந்த காலத்தைத் தாண்டியும் பலரால் கொண்டாடப்பட்டது. 

கிரிஷ் கர்னாட் - படைப்புகளின் வழி மரணம் வென்ற கலைஞன்!
கிரிஷ் கர்னாட் - படைப்புகளின் வழி மரணம் வென்ற கலைஞன்!

நாடகத்துறை மட்டுமன்றி `நியோ- ரியலிசம்' வகை சினிமாக்கள் வரத் தொடங்கிய காலத்தில் திரைத்துறையில் நல்லதொரு தொடக்கம் பிறந்தது. அந்தச் சமயத்தில் கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவலை கன்னடத்தில் திரைப்படமாக்கினர். அந்தப் படத்தில் கிரிஷ் கர்னாட் நடித்ததுடன் படத்தின் திரைக்கதையையும் எழுதினார். கலை குறித்தான அவரது பார்வை நுட்பமானது. தெளிவானது. ஆரம்ப காலத்தில் ஆக்ஸ்போர்டு பிரஸுக்காக சென்னையில் வேலை செய்தார் கர்னாட். அப்போது அவரும் அவரது நண்பர்கள் பலரும் இணைந்து மெட்ராஸ் பிளேயர்ஸ் என்ற நாடக அமைப்பைத் தொடங்கினர். நாடகம், ஓவியம் , சுயாதீன திரைப்பட இயக்கம் எனப் பல தளங்களிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர்.

கலை என்பது சமூகத்துடன் எவ்வளவு பொருந்திப்போகக்கூடியது என்பதை நன்கு அறிந்தவர் அவர். அவரது கலைத்துறை பங்களிப்பைப் போலவே சமூகத்துக்கான ஆபத்துகளின்போது தனது குரலை காத்திரமாகப் பதிவுசெய்தவர். கல்புர்கி படுகொலை செய்யப்பட்டபோது கிரிஷ் கர்னாட், கௌரி லங்கேஷ் இருவரும் களத்தில் போராடினர். அப்போது உளவுத்துறையினர் `நீங்களும் சிலரால் சுடப்படலாம்' என கர்னாட்டிடம் கூறினர். ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாமல் துணிச்சலாக இருந்தார். அடுத்த ஆண்டு கௌரி லங்கேஷும் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது `நானும் அர்பன் நக்சல்' எனக் கழுத்தில் அட்டையைத் தொங்கவிட்டபடி வந்திருந்தார். சமூகத்தில் மாற்று குரலாக ஒலித்தவர்களில் முக்கியமானவர் கிரிஷ் கர்னாட். அவரது இழப்பென்பது ஈடு செய்ய முடியாதது. அவர் எப்போதும் நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருப்பார்" என்றார் வேதனையுடன். 

'தங்களது பங்களிப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்தவர்களுக்கு மரணம் என்பது வெற்றுச் சொல்' என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உள்ளது. கிரிஷ் கர்னாட் மரணத்தை வெற்றுச் சொல்லாக்கி தமது படைப்புகளின் வழியே நிரந்தரமாக வாழக்கூடியவர். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு