Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

Published:Updated:
சொல்வனம்!

பிராய்லர் கோழிகளும் மெட்ரிக் பள்ளிகளும்

பொழுதடைய வீடடையும்
விடியக் கூவித் துயில் களைந்து
வெட்டிய கழுத்தும் ஒய்யார நடையுமாய்
குப்பைமேட்டு வெளி கிடந்தலையும்
வீதி தேவதையாய்
எவரையும் அண்டவிடாது அடைகாத்து
றெக்கை சிறகுகளில் பொத்தி வளர்க்கும்
தாய்க் கொற்றவை
அடைகாக்க முட்டையின்றிக் கத்திக் கத்தி
தலை முழுகி இறகு மூக்குத்தி குத்தித் திரியும்
பாவமாய் வாசல் கிளறி
அம்மாவிடம் 'சக்களத்தி’ ஏச்சு வாங்கி
ஊதாங்குழாயில் அடிவாங்கும் சேட்டைக்காரி
அவளே மடியில் போட்டு மஞ்சள் தடவி
'அடிச்சிட்டேன்ல நான் ஒரு கூறு கெட்ட சிறுக்கி’
பாசம் வெல்லும் அவள் பிள்ளையாய்
பல்லி, கரப்பான் தின்று செரிக்கும் கொல்லிப் பாவை
பருந்து அடித்து பறந்த குஞ்சு மீட்டதுண்டு ஓங்கார நீலி
பாம்போடு சண்டையிட்டு
மடிந்த வீர சரித்திரம் அதற்குண்டு
பிராய்லர் கோழிகளும்
மெட்ரிக் பள்ளிகளும் அறியாது
எங்கள் நாட்டுக் கோழிகள் வரலாறு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சு.வீரமுத்து

 சிநேகம்

திருவிழாவில்
எதேச்சையாய் எதிர்ப்பட்ட
வகுப்புத் தோழியிடம்
கண்களாலும் கைகளாலும்
மௌன சைகை காட்டி
கடந்துபோகிறாள் சிறுமி
பெரும் சந்தடிகளுக்கிடையே
இரு அப்பாக்களின் பின்னரும்
நீண்டு செல்கிறது
சிநேகத்தின் அறுபடா இழையன்று.
நாளை இவ்விடத்தில்
திருவிழாவின் குப்பைகளைக்
கிளறிக்கொண்டிருக்கும்

##~##
பைத்தியமொன்றின்
கைகளில் கிடைக்கக்கூடும்
யாரோ யாருக்கோ
அன்பொழுகத் தந்து தவறிப்போன
சிறு பரிசொன்று!

 - கே.ஸ்டாலின்

தயவுகூர்ந்து வெளிப்படுத்துங்கள்

னது அறையைப் போல்
உங்களது அறையிலும்
நான்கு சுவர்கள்தான்.
ஒரு சுவர் முழுவதும் அழுகை
மற்றொரு சுவர் முழுக்கக் கோபம்
மூன்றாம் சுவர் முழுக்கச் சிரிப்பு
வெகுகாலமாய் அத்தனையும்
தேக்கியபடி நிற்கும்
சுவர்கள் ஒரு நாள்
பாரம் தாங்காது
இடிந்து விழ வாய்ப்புண்டு.
இப்படியே இதுவும் கடந்துபோகுமென
எப்போதோ எவரோ
சொல்லிச் சென்றதை எண்ணி
உங்களை நீங்களே
சமாதானப்படுத்திக்கொள்கிறீர்கள்.
எப்படிக் கடக்குமெனத் தெரியவில்லை.
நான்காம் சுவரென ஒன்றிருப்பது
அதில் கதவிருப்பது
அதை உள் தாழிட்டிருப்பது
இவையெல்லாம் மறந்து
உட்புறமாய் அமர்ந்து
வெறித்துக்கொண்டிருக்கிறீர்கள்
மாறி மாறி மூன்று சுவர்களையும்.
ஞாபகம்கொள்க
என் நான்காம் சுவர்
எப்பொழுதும் திறந்தபடியே இருக்கிறது!

- கு.விநாயகமூர்த்தி

பெயர்ச்சி

மாமா இறந்த
சில தினங்களுக்குப் பிறகு
அக்கா வீட்டுக்குச்
சென்றிருந்தபோது
ஆழ்ந்த அமைதி
சூழ்ந்திருந்த வீட்டில்
பூவும் பொட்டும் இல்லாமல்
அக்கா அழுதுகொண்டிருக்க
பூ பொட்டோடு
மாமா சிரித்துக்கொண்டிருந்தார்
புகைப்படத்தில்!

- வீ.விஷ்ணுகுமார்

சொல்வனம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism