Published:Updated:

கவிதை: சொல்வனம்

கவிதை: சொல்வனம்

கவிதை: சொல்வனம்

கவிதை: சொல்வனம்

Published:Updated:
கவிதை: சொல்வனம்

அம்மாவும் குழந்தையும் ஒரு பயணமும்

அம்மாவின் கூந்தல் பூக்களை
விளையாட்டாக உதிர்த்துக்கொண்டே
வந்தது பயணம் முழுக்க
அந்தக் குழந்தை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூந்தலை விலக்க மனமில்லாமல்
ஒவ்வொரு முறையும்
செல்லமாய் அதட்டிக்கொண்டே
வந்தாள் அம்மா.

குழந்தையின் சிரிப்பிலும்
அம்மாவின் சிணுங்கலிலும்
சொர்க்கமாகிப்போனது பேருந்து.

பயணம் முடிந்து
அவர்கள் எழ
காலியான இருக்கையில்
உதிர்ந்துகிடந்தன
குழந்தையின் சந்தோஷமும்
அம்மாவின் வெட்கமும்!

- செல்வராஜ். எஸ்

##~##

சிறகு முளைத்த கூட்டுப்புழு

என் உலகம் உருண்டையானதல்ல
அது கன சதுர வடிவமுடையது
அதில் காற்று இல்லை
மின் விசிறி இருக்கிறது
அதில் சூரியன் இல்லை
மின் விளக்கு இருக்கிறது
அங்கே குயிலோசை கேட்பதில்லை
அவ்வப்போது
தொலைக்காட்சி இரைகிறது
என் உலகில் பக்கத்துத் தெருமாமாவின்
குழந்தையை இருந்த இடத்திலிருந்தே
முகநூல் மூலமாக
முத்தமிட வசதி இருக்கிறது
செயற்கையாய் செங்கல்லில் கட்டிய
என் உலகில் எல்லாம் இருக்கிறது
இருந்தும் சில நாட்களாய்
அங்கே மின்சாரம் இல்லை
எங்கும் ஒரே இருட்டு
வெறுத்து கண் அயர்கையில்
என் உலகின் கதவு திறக்கிறது
வெளியே ஓர் உருண்டையான
உலகம் எனக்காகக் காத்திருந்தது
அது மின்சாரத்தின் உதவி இல்லாமல்
இயங்கும் சக்தி பெற்றது!

- சைக்கிள்காரன்

அது பேய் வீடு அல்ல

மகுடஞ்சாவடி
நான்காம் குறுக்குத் தெருவிலிருக்கும்
21/6-ம் நம்பர் வீடு
பேய் வீடு எனவும்
அந்தத் தெருப் பக்கமே யாரும்
குடிவருவது இல்லை எனவும்
விசாரித்த வரை சொல்லிச் சென்றார்கள்.
இருபது வருடங்களுக்கு முன்பு...
மகுடஞ்சாவடி
நான்காம் குறுக்குத் தெருவில் இருக்கும்
21/6-ம் நம்பர் வீடு
தேவதை வீடு எனவும்
அந்தத் தெருவில் ஆங்காங்கே
கட்டிளம் காளைகள்
கூடி நிற்பதாகவும்
யாரும் சொல்லிச் செல்லவில்லை
அவர்களில் ஒருவன்தான் நானும்.
அழகாய்ப் பிறந்தது தவிர
எந்தப் பாவமும் அறியாது
பௌர்ணமி நாளன்றில்
தூக்கு மாட்டிக்கொண்ட
அந்தத் தேவதையிருந்த தேவதை வீடு
பேய் வீடாய் மாறிப்போக
காளைகளுள் ஒருவன்தான்
காரணமெனச் சொல்லப்பட்டது.
அது
யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்
நானாக வேண்டுமானாலும்!

- கு.விநாயகமூர்த்தி

அயல் தேசக் கனவு

இதற்கு முன்
ஒருபோதும்
சென்றிருக்காத
அயல் நாட்டின்
ஒரு வெறுமையான
தெருவிலிருந்து
துவங்குகிறது
அந்தக் கனவு

நகரவாசிகளின்
புதிரான மொழி குறித்தோ
பாஸ்போர்ட்
விசா தொடர்பான
ஆபத்துகள் குறித்தோ
நீளும் என் கனவுக்குக்
கவலை இல்லை.

திடுதிப்பென்று
இப்படி அயல்நாடு
வந்தால்
எங்கே தங்குவதென்பதுபற்றியோ
குறைந்தபட்சம்
காலை உணவு குறித்தோ
கொஞ்சமும் அக்கறை இல்லை.

குளிருக்குச் சற்றும்
பொருத்தமில்லாத
போர்வையுடனும்
கால்களுக்குச்
சப்பாத்துக்களுமின்றி
எத்தனை தூரம்தான்
இன்னும் கூட்டிச் செல்லுமோ
என நடுக்கத்துடன் தவிக்க
நல்ல வேளை
அந்தக் கனவின்
அடுத்த தெருவிலேயே
தென்பட்ட
என் வீட்டின்
படுக்கையறைக்குள்
புகுந்து போர்த்திக்கொள்ள

எனைத் தேடி
அடுத்த தெருவின்
அயல் தேசத்திலேயே
காத்திருக்கக்கூடும்
அந்தக் கனவு!

- சுந்தர்ஜி

படிக்கப் படிக்க உங்களுக்கும் கவிதை எழுதத் தோணுதா? குட்டியா... க்யூட்டா உங்க கவிதைகளை எழுதி 'சொல்வனம்’,

ஆனந்த விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, av@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்புங்கள். உங்கள் தொடர்பு எண்ணும் அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism