##~## |
பிரின்டர் குறித்து ஒரு கவிதை
என் இடப்புறம்
முட்டாள்தனமான மௌனத்தில்
ஆழ்ந்திருக்கும்
அந்த எட்டு வயது
பிரின்டர் இயந்திரத்தைக் குறித்து
ஒரு கவிதை எழுதுவேன் என
ஒருபோதும் நினைக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சின்ன வயதில்
என் மகன் கிறுக்கிய
ஒரு கிராமச்சாலைப் படமோ
கண்ணீரால் நனையவிருக்கும்
ஒரு மரண அறிக்கையையோ
உற்சாகம் மிக எழுதப்பட்ட
ஒரு கவிதையையோ
வேலை நிறுத்தத்துக்கான
ஓர் அறிவிப்பையோ
ஆயுள் காப்பீட்டுக்கு அழைக்கும்
விற்பனைக் கடிதத்தையோ
ஒரே ஸ்வரத்தில் வெளியே துப்புகிறது!
சில சமயங்களில்
பிடிக்காமல் போகுமோ தெரியாது
வெற்றுத் தாளையும் வெளியே தள்ளும்.
வேறொரு சமயம் கோபத்தின் உச்சமாய்க்
காகிதத்தைக் கசக்கி எறியும்.
எல்லா நேரமும் இயங்கத் தயாரான
பாவனையுடன் கண் சிமிட்டும் அதை
எல்லா நேரமும் நம்ப முடியாது.
எல்லாம் அதனுள்ளே நிறைந்திருந்தும்
என் போலவே
எதுவும் அதன் வசமில்லை!
- சுந்தர்ஜி

கள்ள ரயில்
குழந்தைகள்
ஓட்டிய ரயிலில்
கள்ளத்தனமாய்
ஏறிய கடவுள்
இறங்குமிடம் வந்த பிறகும்
இறங்காமலேயே
இருந்துவிட்டார்!
- வே.விநாயகமூர்த்தி
அவமானம்
பிடிபட்ட மீனின்
கண்களில் நிரம்பி வழிகிறது
மரண பயத்தைவிடவும் அதிகமாய்
சிறு புழுவுக்காகச் சென்று
ஏமாந்த அவமானம்!
- நிஷாந்தன்
அலமாரிகளின் கதை
களவுகளுக்குப் பயந்தபோது
கதவுகள்
அகம் மூடப்பட்டபோது
அலமாரிகள் வந்திருக்கலாம்
புத்தக அலமாரி
இடத்தை அடைப்பதாய்ப்
புடவைகளின் புலம்பல்.
புடவை அலமாரி
பாழாய்ப்போவதாய்
புத்தகங்களின் ஆதங்கம்.
மர அலமாரி
மதிப்பாய் இல்லை.
ஆடி பதித்த அலமாரியின்
விலை என்ன?
நாப்தலின் உருண்டைகள்
நிறைய ஆகின்றன.
எப்படியும் வாங்கிவிட வேண்டும்
இரும்பு அலமாரி
இந்த முறையேனும்.
வருடக் கணக்காய்ப்
பூட்டியே கிடக்கின்றன
தாத்தாக்களின் அலமாரிகள்
புதையல் கனவுகளோடு.
வசதியான வீடுகளில்
பூட்டி வைக்கப்படுகின்றன
இருப்பதை ஒளிக்க.
இல்லாத வீடுகளில்
சாத்திவைக்கப்படுகின்றன
இயலாமையை மறைக்க.
எதை வைத்தாலும்
இயல்பு மாறாமல்
பாதுகாக்கின்றன
அலமாரிகள் மட்டும்!
- ம.இராதா
