Published:Updated:

தோல்வி தந்த வெற்றி !

என்.சொக்கன் கண்ணா

##~##

'வெல்கம் பேக் வியூவர்ஸ், உங்க ஃபேவரைட் 'இளம் பாடகர்’ நிகழ்ச்சியோட செமி ஃபைனல்ஸ் நடந்துட்டு இருக்கு. இங்கே நாலு போட்டியாளர்கள் இருக்காங்க, இதுல மூணு பேர் மட்டும்தான் ஃபைனலுக்குப் போக முடியும், ஒருத்தர் இப்பவே வெளியேறி ஆகணும். அப்படி எலிமினேட் ஆகப்போறவர் யாருன்னு அறிவிக்கிறதுக்காக நம்ம மதிப்பிற்குரிய ஜட்ஜஸை மேடைக்கு அழைக்கிறோம்!’

கை தட்டல்களுக்கு நடுவே, அந்த இரண்டு நடுவர்களும் மேடை ஏறினார்கள். தங்களிடம் இருந்த காகிதங்களை ஒரு முறை புரட்டிப் பார்த்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''எல்லாருக்கும் வணக்கம், இன்னிக்குப் பாடின தினேஷ், தீபக், கிஷோர், மலர்விழி நாலு பேருமே ரொம்பப் பிரமாதமான திறமைசாலிங்க. வயசுல சின்னவங்களா இருந்தாலும்கூட, ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிடணும் என்கிற வேகத்தோடு அற்புதமா பெர்ஃபார்ம் பண்ணாங்க. இதுல ஒருத்தரை மட்டும் தேர்ந்தெடுத்து எலிமினேட் செய்யணும்னா, அது எங்களுக்கு ரொம்பச் சிரமமான வேலைதான்!''

அதே மேடையின் ஓர் ஓரமாக உட்கார்ந்து இருந்த அந்த நான்கு பேரும், நீதிபதிகளைப் பதற்றத்துடன் பார்த்தார்கள். அவர்களுடைய முகங்களில், 'யார் வெளியேறப்போகிறோமோ?’ என்கிற பதற்றமும் கவலையும் அப்பட்டமாகத் தெரிந்தது.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, நடுவர்கள் தங்களுடைய தீர்ப்பை அறிவித்தார்கள். ''இன்னிக்கு, இந்த செமிஃபைனலில் இருந்து வெளியேறப்போகிற அந்த இளம் பாடகர்... தீபக்!''

தோல்வி தந்த வெற்றி !

உடனடியாக, திடுக்கிடவைக்கும் இசை ஒன்று ஒலித்தது. சட்டென்று ஏழெட்டு கேமராக்கள் அந்தச் சிறுவன் தீபக்கின் முகத்தில் படிந்தன. இன்னும் சில கேமராக்கள் அவனுடைய அப்பா, அம்மாவை மொய்த்தன. இதில் யார் முதலாவதாக அழத் தொடங்குவார்கள் என்று எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

பின்னே? பல மாதங்களாக சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் இந்த 'இளம் பாடகர்’ நிகழ்ச்சியில் சங்கீதத்துக்கு அடுத்தபடியாக, அழுகைக்குதான் முக்கியத்துவம். ஒவ்வொரு வாரமும் யாராவது ஒரு சிறுவனோ, சிறுமியோ வெளியேற்றப்படுவார்கள். அவரும் அவருடைய பெற்றோரும் ஏமாற்றத்துடன் கதறி அழுவதைப் பல கோணங்களில் க்ளோஸப்பாகக் காண்பித்து, சோகப் பின்னணி இசையைத் தருவார்கள். தமிழ்நாடே கலங்கிப்போய் உச்சுக்கொட்டும். 'பாவம்யா!’ என்று தாய்மார்களும் பெரியோர்களும் கண்ணீரைத் துடைத்துக்கொள்வார்கள்.

இப்படி வாராவாரம் பலவிதமான அழுகைகளைப் பார்த்துப் பழகிப்போய் இருந்த ரசிகர்கள், இப்போது தீபக்கின் 'செமி ஃபைனல்’ கதறலுக்காகக் காத்திருந்தார்கள். அவனுக்காகப் பரிதாபப்படத் தயாராகிக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால், ஆச்சர்யமான விஷயம், தீபக் அழவில்லை. லேசாகச் சிரித்தான். இதமான குரலில் நடுவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொன்னான்.

உஷாரான நிகழ்ச்சித் தொகுப்பாளர், அவனைக் கிளறிவிட முயன்றார். ''தீபக், நீ ரொம்ப நல்லாத்தான் பாடினே, ஆனாலும் ஜட்ஜஸ் உன்னை எலிமினேட் செய்யத் தீர்மானிச்சுட்டாங்க. இனிமே நீ ஃபைனலுக்குப் போக முடியாது, எப்படி ஃபீல் பண்றே? வருத்தமா இருக்கா?''

''இல்லவே இல்லை சார்'' என்றான் தீபக். ''நாலு பேர்ல யாராவது ஒருத்தர் இன்னிக்கு எலிமினேட் ஆவோம்னு நல்லாத் தெரியும். ஆக, 25% நான் வெளியேற வாய்ப்பு உண்டுன்னு எதிர்பார்த்துதான் இங்கே வந்தேன். என்னால முடிஞ்ச வரைக்கும் நல்லாப் பாடினேன். அதே சமயம், என்னோடு பாடின மத்தவங்களும் பெரிய டேலன்ட் உள்ளவங்க. அவங்களும் என்னை மாதிரி இதே போட்டியில் பல ரவுண்ட்ஸ்ல ஜெயிச்சு வந்தவங்கதானே? அதனால, இப்படி ஒரு ரிசல்ட் வரக்கூடும்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.  மனசுக்குள்ளே சின்ன ஏமாற்றம் இருந்தாலும் வருத்தமோ, வேதனையோ கண்டிப்பா இல்லை!'' என்று தெளிவான குரலில் சொன்னான்.

தோல்வி தந்த வெற்றி !

''என்ன தீபக் இப்படிச் சொல்றீங்க? நீங்க ஃபைனலுக்குப் போய்...  ஜெயிச்சு இருந்தா, ஒரு வீடு, வெளிநாட்டுச் சுற்றுலானு ஏகப்பட்ட பரிசுகள் கிடைச்சு இருக்குமே'' என்றார் ஒரு நடுவர்.

''அட, பரிசுகளை விடுங்க. இந்தப் போட்டியில் ஜெயிச்சு இருந்தால், உங்களுக்கு சினிமாவிலே பாடும் வாய்ப்புக் கிடைக்கலாம், சடசடன்னு புகழோட உச்சிக்குப் போயிடலாம். அந்தச் சான்ஸை எல்லாம் மிஸ் பண்ணிட்டமோனு  தோணலையா?'' என்று விடாப்பிடியாகக் கேட்டார்.

''உண்மைதான் சார். ஆனா, நாலு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் என் அப்பா, அம்மா, ஃப்ரெண்ட்ஸ் தவிர, யாருக்கும் என்னைத் தெரியாது. ஒருத்தர்கூட என் குரலைக் கேட்டது இல்லை. இப்போ இந்த புரோக்கிராம்னால... லட்சக் கணக்கான மக்கள் நான் பாடுறதைக் கேட்டு ரசிச்சாங்க. அதுவே பெரிய விஷயம்தானே சார்? எப்பவும் கிடைச்சதை நினைச்சு சந்தோஷப் படுற மனசு வேணும். கிடைக்காததை நினைச்சு வருத்தப்பட ஆரம்பிச்சா, அதுக்கு முடிவே கிடையாதுன்னு எங்க அப்பா அடிக்கடி சொல்வார்.''

''வெல்டன் தீபக்'' என்று அவனைத் தட்டிக்கொடுத்தார் இன்னொரு நடுவர். ''தட்ஸ் தி ஸ்பிரிட், இந்த நிகழ்ச்சியில் எத்தனையோ சின்னப் பசங்க, பெரியவங்க கலந்துக்கிட்டு இருக்காங்க. அவங்களில் யாரும் உன்னை மாதிரி முதிர்ச்சியோடு பேசி, நான் பார்த்தது இல்லை. விஷ் யூ ஆல் தி பெஸ்ட்!'' என்றார்.

மீண்டும் திடுக்கிடவைக்கும் அந்தப் பின்னணி இசை ஒலித்தது. போட்டியில் இருந்து வெளியேறும் தீபக்குக்கு சில சிறிய பரிசுகளைக் கொடுத்தார்கள். வாழ்த்தி, அனுப்பிவைத்தார்கள்.

தீபக், புன்னகை மாறாமல் மேடையில் இருந்து கீழே வந்தான். அங்கே காத்திருந்த அவனுடைய பெற்றோர், அவனை அணைத்துக் கொண்டார்கள். அவர்கள் முகத்திலும் துளிக் கண்ணீர் இல்லை.

சில நிமிடங்களுக்குப் பின்னர், அவர்கள் ஸ்டுடியோவில் எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார்கள். வாசலை நோக்கி நடந்தார்கள்.

அங்கே ஒரு கோட்-சூட் பேர்வழி காத்திருந்தார். தீபக்கின் தந்தை கைகளைப் பற்றிக் குலுக்கினார். ''ஹலோ சார், என் பேரு மதிவாணன், உங்ககிட்ட ஃபைவ் மினிட்ஸ் பேசலாமா?''

''சொல்லுங்க சார், என்ன விஷயம்?''

''இன்னிக்கு ஸ்டேஜ்ல உங்க பையன் பேசினதைப் பார்த்து அசந்துட்டேன். இது எல்லாம் நீங்க எழுதிக் கொடுத்ததா? இல்லை, அவனே சொந்தமாப் பேசினானா?'' என்று கேட்டார்.

''இதை எல்லாம் யாராவது எழுதிக் கொடுப்பாங்களா சார்?'' என்று சிரித்த தீபக்கின் தந்தை, ''அந்த நேரத்தில் அவனுக்கே அப்படித் தோணி இருக்கு. மனசுல பட்டதைப் பேசினான்'' என்றார்.

''வெரி குட் சார். இந்த வயசுல இவ்ளோ மெச்சூரிட்டியோடு பசங்க பேசுறது பெரிய விஷயம்'' என்ற மதிவாணன், ''நான் இதே சானல்ல ஸ்டூடண்ட்ஸ்க்காக 'பேச்சுக் கலை’ பத்தி ஒரு நிகழ்ச்சி நடத்துறேன். அதில் ஒவ்வொரு வாரமும் உங்க பையனைச் சிறப்பு விருந்தினராகக் கூப்பிட்டு கௌரவிக்க விரும்புறேன். இயல்பாப் பேசுறது எப்படி என அவன் தர்ற டிப்ஸ்... மத்த பிள்ளைகளுக்குப் பயன்படட்டுமே'' என்றார்.

தீபக்கின் தந்தையும் தாயும் திகைப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அன்றைய நிகழ்ச்சியில் தீபக் பாடிய பாடலின் வரி ஒன்று அவர்கள் காதுகளில் மீண்டும் ஒலித்தது...

'ஒரு வாசல் மூடி,

மறுவாசல் வைப்பான் இறைவன்...!’