Published:Updated:

மன்னாசமுத்திர துரைசாமி

பெருமாள்முருகன்ஓவியங்கள் : மருது

மன்னாசமுத்திர துரைசாமி

பெருமாள்முருகன்ஓவியங்கள் : மருது

Published:Updated:
##~##

பெருமழைச் சொட்டுக்கள் முத்தான் நெற்றிப்பொட்டில் வெங்கச்சங்கற்களாக விழுந்தன. வானத்தை அண்ணாந்து பார்த்தான். கருகும்மென்று இருந்தது. வெகுநேரம் நூல் பிடித்தாற்போல் கொட்டிய மழை இப்போது சொட்டுக்களாகக் குறைந்திருக்கிறது. இப்படியே படிப்படியாகக் குறைந்தால் நல்லது. மூன்று நாட்களாக இடைவிடாமல் பெய்து சலிக்கிறது. எல்லா இடங்களும் நசநசத்து ஈரம். ஆடுகள் ஒரு நிமிடம்கூடப் படுக்க முடியாமல் நின்றுகொண்டே இருக்கின்றன. ஒரு வேலையும் ஓடவில்லை. புற்கள் அழுகத் தொடங்கிவிட்டன. கடலைக் கொடிப் போர் இருப்பதால் ஆடுகள் அரை வயிறாவது நிரம்புகின்றன.

 அண்ணாந்த முகத்தில் மழைச் சரம் வந்து தாக்கத் தொடங்கியது. உடனே கொட்டாய்க்குள் போய் கட்டில் மேல் உட்கார்ந்துகொண்டான். மழையின் வேகம் கூடக்கூட... உள்ளேயிருந்த வெள்ளாடு களின் கத்தல் கூடியது. என்னவாகுமோ தெரியவில்லை. ஏரியில் தண்ணீர் நிறைந்து ஐந்தாறு ஆண்டுகள் இருக்கும். அப்போதும் இப்படித்தான். ஒன்றுக்கிருக்கக்கூட வெளியே போக விடவில்லை. ஏரிக்கரை ஓரமாக இருக்கும் அவனுடைய காட்டில் கடலை போட்டிருந்தான். ஏரி நிறைந்து காடு முழுக்கத் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது. மதகில் வழிந்து வெளியேறிக்கொண்டே இருந்தாலும், காட்டில் நின்ற தண்ணீர் மட்டம் குறையவே இல்லை. பூத்துச் செழித்திருந்த கடலைக் கொடிகள் அழுகி நீர்ச்சமாதி ஆகிவிட்டன. ஓர் ஏக்கரில் போட்டிருந்த கடலை முழுக்கவும் காலி. ஆடுகளுக்குக் கொடி பிடுங்கக்கூட வழியில்லை. இந்த வருசம் என்னவாகுமோ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மன்னாசமுத்திர துரைசாமி

ஆட்டுக் கொட்டாயைவிட்டு ஓலைக் குடையைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்குச் சோறுண்ணப் போனான். இருட்டில் தடுமாற்றம். பழகிய வழிதான் எனினும் தேங்கியும் ஓடியும் வெள்ளம் பாதையைப் புதிதாய் ஆக்கிவிட்டிருந்தது. எடுத்து வைக்கும் அடிதோறும் மழை தாக்கியது. இது இப்போதைக்கு ஓயாத பேய் மழைதான். மழையைப் பற்றிப் புலம்பிக்கொண்டே சோறு போட்டாள் செல்லாயி. அவன் ஒரு வார்த்தையும் பேசாமல் உண்டான். ''எதுக்கு இப்பிடி உம்முனு இருக்கற? ஒலகத்துல கோடானு கோடி உசுரு வாழுது. வூடு கட்டி ஒதுங்கிக் கெடக்கற மனுசனே இப்பிடிக் கஷ்டப்பட்டா அதுவெல்லாம் என்ன பண்ணும்? ஒரு பத்து நாளைக்கிக் கஷ்டப்பட்டா வருசம் பூரா வளமா இருக்கலாம். தொரசாமி மனசுவெச்சா இந்த வெருசம் ஏரி நெறஞ்சிரும். சனங்க நெல்லஞ் சோறு தின்னும். ஒண்ணயும் நெனைக்காத போயிப் போத்திப் படு போ'' என்றாள் அவள். அவனுக்கு அவளைப் பிடித்திழுத்து இரண்டு சாத்தலாமா என்றிருந்தது. ஏரி நீருக்குள் மூழ்கப்போகும் கடலைக் கொடிபற்றி அவள் வாயில் இருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.

எதுவும் பேசாமல் சோறுண்டுவிட்டுத் திரும்பும்போது லாந்தரைக் கையில் கொடுத்துவிட்டாள். காலடிக்குள் வெளிச்சத்தைத் தந்தது அது. அவன் யோசனை கடலைக் காட்டை எப்படிக் காப்பாற்றுவது என்றேதான் ஓடியது. ஏரிக்குக் காட்டை அரசாங்கம் எடுத்தபோது ஏரி நிரம்பினால் காட்டுக்குள் தண்ணீர் நிற்கும் என்பது தெரிந்தேதான் இருந்தது. என்றாலும், 'எப்பவோ ஒரு வருசம் தண்ணி வருதுன்னு காட்ட வுட்ற முடியுமா? அந்தக் காட்டுல நம்மளாட்டம் எளிய வெள்ளாமை எதுனா வெச்சுக்க வேண்டியதுதான்’ என்று அவன் அப்பன் சொல்லியிருக்கிறார்.

அப்பன் இருந்த வரைக்கும் சோளம்தான் விதைப்பார். சோளப் பயிர் ஆளுயரம் நிற்கும். ஏரி நிறைந்தாலும் கணுக்கால் அளவு தண்ணீருக்குள் போய்ச் சோளத்தட்டைப் பிடுங்கி வந்துவிடலாம். ஆனால், முத்து அந்தக் காட்டில் எப்போதும் கடலைதான் போடுகிறான். செம்மண் காட்டில் கொடிக் கடலை போட்டால் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். அந்த ஆசைதான். இந்த வருச மழையில் எப்படியும் ஏரி நிறைந்துவிடும். காட்டோடு கடலை போய்விடும். சோளம் விதைத்திருந்தால் பிரச்னை இல்லையே என்று இந்த மாதிரி சமயத்தில் தோன்றும். என்றாலும், ஆசை விடுவதில்லை. கடலையை எப்படியாவது காப்பாற்ற முடிந்தால் போதும். அடுத்த வருசம் சோளம் விதைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தான். எப்படிக் காப்பாற்றுவது?

ஆட்டுக் கொட்டாயில் தூக்கம் இன்றிப் படுத்துக்கிடந்தான். கொட்டாயின் மேல் மழை கொட்டுவதையும் அது குறைந்து சிணுங்குவதையும் ஓலைச் சத்தத்தை வைத்தே உணர்ந்தான். மழை பெரும்பாலும் ஊற்றிக்கொண்டேதான் இருந்தது. காட்டுக்குள் தண்ணீர் நிற்காமல் செய்ய வேண்டுமானால், ஏரி மதகு இன்னும் கொஞ்சம் உயரம் குறைந்திருக்க வேண்டும். தோளுயர மதகில் ஓரிடத்தில் மார் அளவு உடைப்பை ஏற்படுத்திவிட்டால் போதும். காட்டுக்குள் ஒரு சொட்டுத் தண்ணீர் நிற்காது. உடைத்துவிட்டால் யாராவது கண்டுபிடித்துவிடுவார்களா? அவன் காடு மட்டுமல்ல, இன்னும் சிலரின் காடுகளுக்கும் இந்தக் கதிதான். ஆக, யாரென்று தெரியும்? ஒவ்வொரு முறை ஏரி நிரம்பும்போதும் இந்த யோசனை மனதில் வரும். செயல்படுவதற்குள் காலம் கடந்துவிடும். இந்த முறை அப்படி ஆக விடக் கூடாது.

ஏரியின் வால் பகுதியில் கொஞ்சம் பேர் கொட்டா போட்டுக் குடியிருக்கிறார்கள். இந்நேரம் அவர்கள் காலி செய்துகொண்டு மேடேறி இருப்பார்கள். அவர்கள்கூட மதகை உடைத்துவிட வேண்டும் என்று நினைத்திருக்கலாம். யார் யார் மீதோ சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது. மதகை உடைத்துவிட வேண்டியதுதான் என்ற நினைப்பு பலமாக ஓடியது. சாக்குப் போர்வைக்குள் நெண்டிக்கொண்டேகிடந்தான்.  நீண்ட நேரத்துக்குப் பிறகு, ஒரு முடிவோடு எழுந்தான். மழை வலுத்துத்தான் இருந்தது. சாக்கைப் போர்த்திக்கொண்டு ஓலைக் குடையுடன் வெளியே வந்தான். லாந்தர் வேண்டாம். கொட்டாயின் ஓரத்தில் ஓடும் மழை நீரில் நீண்டுகிடந்த கடப்பாரையை எடுத்துக்கொண்டான். ஈரத்தில் விறைத்திருந்த கை கடப்பாரையைப் பிடித்ததும் சூடுகொண் டதாக மாறியதுபோல் இருந்தது. மழைக்குள் நடந்தான்.

மன்னாசமுத்திர துரைசாமி

இத்தனை அடர்இருளை அவன் வாழ்நாளில் கண்டது இல்லை. தடம் அவனுக்குப் பழக்கமானதுதான். கால்களை வேண்டும் என்றே சத்தம் வரும்படி ஓங்கி வைத்து நடந்தான். சேறு தெறித்துக் கால்களில் அப்பியது. எனினும் காலடிச் சத்தம் கேட்டுப் பூச்சிப் பொட்டுகள் பயந்தோடும் என்று அப்படியே நடந்தான். நேரத்தை அனுமானிக்க முடிய வில்லை. பொரியை வாரி இறைத்ததுபோல நிறைந்திருக்கும் வானம் இப்போது இருப்பதே தெரியவில்லை. கடப்பாரையால் மதகை இடிப்பது சுலபமாக இருக்குமா? பல காலமாகிவிட்ட ஏரி. அவனுடைய அப்பன் சின்னப் பையனாக இருக்கும்போது கட்டிய ஏரி. இந்தப் பக்கத்துக் கிணறுகள் எல்லாம் வருசா வருசம் தை தொடங்கியதும் காய்ந்துவிடும். ஐந்தாறு மாதங்களுக்குத் தண்ணீர் பெரும்பாடு. மாடு கன்றுகளை விற்றுவிட்டு மழை வந்த பின் புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். தண்ணீர் இல்லை என்றால் எதுவும் இல்லை. வேண்டாத சாமி இல்லை. வைக்காத வேண்டுதல் இல்லை.

ஒரு வருசம் இந்தப் பக்கம் குதிரையில் வந்த வெள்ளைக்காரத் துரை ஒருவருக்குத் தாகம். தொண்டை வறண்டு எச்சிலும் வற்றிவிட்டது. எங்காவது ஒருகை தண்ணீர் கிடைத்தால்தான் உயிர் பிழைத்துக்கிடக்கும் என்னும் நிலை. வழியில் இருந்த கிணறுகள் எல்லாம் வற்றிக்கிடந்தன. தாங்கள் குடித் துக்கொண்டு இருந்த சேற்றுத் தண்ணீரைத் துரைக்குக் கொடுக்க எல்லாருக்கும் தயக்க மாக இருந்தது. என்றாலும் உயிர்க் காரியம். எத்தனை வேகமாகக் குடித்தாரோ அதே வேகத்தில் எக்கி வாந்தி எடுத்தார். அந்தத் துரைதான் இந்த ஏரியைக் கட்டு வதற்குக் காரணம். ஏரி என்றால் சாமான் யப்பட்ட ஏரி அல்ல. சமுத்திரம். ஊருக்கே அப்படிப் பேராகிவிட்டது. 'மன்னாசமுத்திரம்.’ துரையின் பேர் மன்றோ. அவர் பேரைவைத்து 'மன்றோசமுத்திரம்’ என்று வைக்கப்பட்ட பெயர் இப்படியாகிவிட்டது.

எங்கெங்கோ இருந்து வேலை செய்ய ஆட்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். மண்ணை வெட்டுவதும் கூடையில் அள்ளி வந்து கொட்டுவது மாக வருசக் கணக்கில் வேலை நடந்தது. ஏரிக் கரையை மலைபோல உயர்த்த வேண்டும் என்றால் சும்மாவா? ஊரில் யாரும் அப்போது வெள்ளாமைக் காட்டுப் பக்கம் போகவில்லை. ஏரி வேலைதான். ஏரி வந்துவிட்டால் முப்போகம் நெல் நடலாம் என்று ஆசைப்பட்டார்கள். ஒரு வருசம் வீசியடித்த பெருமழையில் ஏரிக்கரை தூர்ந்து பாதி காணாமல் போயிற்று. என்றாலும் துரை அசரவில்லை. ஒரு வருசம் மழை முடிந்ததும் மதகைக் கட்டும் வேலை தொடங்கிற்று. மறு மழை வரும் முன் அதை முடித்தாக வேண்டும். மதகை மட்டும் சுண்ணாம்பும் முட்டையும் கலந்து கட்டுவதற்கு ஆறு மாதங்கள் ஆயிற்று.

ஏரி கட்டி முடித்த வருசம் நல்ல மழை. ஏரி நிரம்பியது. சுற்று வட்டாரக் கிணறுகளில் எல்லாம் கடைபோக நீர் ததும்பிற்று. அந்தப் பக்கத்துத் தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்துவிட்டது என்று தெரிந்த துரையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். துரையின் கால்களில் விழுந்தும் கையெடுத்தும் கும்பிட்ட மக்கள் அனேகம். அவரை எல்லாரும் கடவுளாகவே நினைத்தார்கள். இதைச் சொல்லிவிட்டு அவர் அப்பன் சொல்வார், 'ஏரியில வருசா வருசம் தண்ணி வல்லீனாலும் இந்தப் பக்கம் கெணத்துல குருவி குடிக்கற அளவுக்காச்சும் தண்ணி கெடக்கறது அந்த தொரசாமியாலதான்.’ ஏரிக் கரையோரம் காவலுக்கு வைக்கப்பட்ட முனியப்பன் கோயிலில் ஒரு பக்கம் முழுக்கால் அங்கராக்கும் சட்டையும் போட்டுக்கொண்டு கையில் துப்பாக்கி பிடித்தபடி துரைசாமி சிலையும் நிற்கிறது. முனியப்பனுக்குப் போலவே துரைசாமிக்கும் பூசை உண்டு. ஏரிப் பாசனத் தைப் பயன்படுத்தும் குடும்பங்களில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு பையனுக்குத் துரைசாமி என்று பெயர் இருக்கும்.

முத்தான் ஏரிக்கரைக்குப் போய்ச் சேர்ந்தபோது எங்கிருந்தோ வந்து ஏரிக்குச் சேரும் நீரின் போரோலம் கேட்டது. இருளில் ஒன்றும் தெரியவில்லை. ஒரு மின்னல் பளீரிட்டு மறையும்போது பார்த்தான். இன்னும் ஏரி நிறையவில்லை. தலைதட்டும் அளவு நீர் தெரிந்தது. ஏரி இரவுக்குள் நிரம்பிவிடும் என்பதை நீரோலம் உணர்த்தியது. ஏரிக் கரை யிலும் ஏரிக்குள்ளும் வளர்ந்திருக்கும் முட் களையும் மரங்களையும் ஆள்விட்டு வெட்டி வைத்திருந்ததால் அவனுக்குத் தடுமாற்றம் ஏதும் இல்லை. எல்லாவற்றையும் சுத்தம் செய்து வைத்திருந்தும் பல வருசம் ஏமாற்றி விடும் மழை. ஏரி காவலுக்கும் ஓர் ஆளைப் போட்டுவைத்திருப்பார்கள். மழைக் காலம் முடியும் மட்டும் காவல் இருந்தால்போதும்.

ஏரிக் கரை மீது நின்று பார்த்தபோது அவன் காடு முழுக்கவும் இருளாகத் தெரிந்தது. மறுமின்னல் அடிக்கும் வரை காத்திருந்தான். அடுத்த மின்னல் இடியோடு வந்திறங்கியது. அவன் காடு முழுக்கத் தளதளவென்று கடலைக் கொடிகள் அகண்டு படர்ந்திருந்த அழகை ஒரு கணம் கண்டான். காட்டுக்குள் நீரேற்றம் தொடங்கியிருந்தது. விடிவதற்குள் எல்லாம் நீருக்குள் மூழ்கிவிடும். இந்த வருச உழைப்பு முழுக்கப் பாழ்தான். எப்படியும் கடலையைக் காப்பாற்றிவிட வேண்டும். ஓலைக் குடையைக் கரை மேல் இருந்த ஊஞ்சக் கொத்தில் மாட்டிவிட்டுக் கடப்பாரையோடு கீழே இறங்கினான். மழை மேலும் வலுத்தது. வெற்றுடம்பில் சாட்டை வீசினாற்போல் துளிகள் விழுந்தன. கடப்பாரையைத் தூக்கியபடி மதகை நெருங்கினான்.

மதகின் முன்னிருந்த பாறைகள் இன்னும் பாசி படிந்திருக்கவில்லை. எனினும் கால்களை அழுந்த வைத்து மதகில் ஏறினான். மேல் பகுதி கூம்பு வடிவில் அமைந்திருந்தது. இருபுறமும் கால்களைப் போட்டு வாகாக உட்கார்ந்தான். நீளச் செல்லும் மதகைத் திரும்பிப் பார்த்தான். நேராக நிமிர்த்தி வைத்த பாம்பாக முன்னும் பின்னும் தெரிந்தது. இருபுறமும் சமமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டான். மையத்தில் உடைத்தால்தான் இருபுறத்து நீரும் ஒரே அளவாகத் திரண்டு வந்து வழியும். முன்புறமாக நகர்ந்து மீண்டும் சரிபார்த்தான். மதகின் உள்புறம் வைத்திருந்த கணுக்கால் பகுதி நீருக்குள் மூழ்கியது.  இன்னும் ஓரடி நீர் உயர்ந்தால் மதகின் கூம்புப் பகுதியை எட்டிவிடும்.

வாகான இடம் பார்த்துக் கடப்பாரையை ஓங்கிப் போட்டான். ணங்கென்ற சத்தத்தோடு கடப்பாரை கைகளில் இருந்து மேலெழும்பியது. மீண்டும் இரண்டு மூன்று முறை போட்டான். கடப்பாரை எதிர்த்து அடித்ததே தவிர, மதகில் சிறுகாயமும் பட்ட மாதிரி தெரியவில்லை. மதகின் மீது கோபம் மிகுந்து இரண்டில் ஒன்று பார்த்துவிடும் வேகம் வந்தது. எழுந்து நின்று கடப்பாரையை ஓங்கப் பார்த்தான். கால்கள் வழுக்கின. மீண்டும் உட்கார்ந்து முயன்றான். கால் மேல் நீரேறி உயர்ந்துகொண்டே வந்தது. அவன் எதையும் கவனிக்கவில்லை. மதகைச் சிதைத்துவிடும் ஆவேசம். ஓங்கி ஓங்கிக் கடப்பாரை யைப் போட்டபடியே இருந்தான். கடப்பாரைச் சத்தம் நீரோசைக்குள் ஒடுங்கியது.

கடப்பாரையை ஓங்கிய தருணம் ஒன்றில் மதகின் வெளிப்புறம் வைத்துஇருந்த காலை எதுவோ கவ்வுவது போலத் தெரிந்தது. சட்டென இழுத்த போதும் கால் வரவில்லை. ஓங்கிய கையை இறக்காமல்  குனிந்து பார்த்தான்.

முகத்தை நீர்த்தாரை மூடியிருக்க நிற்கும் செல்லாயி மின்னல் வெட்டில் தெரிந்தாள். காலை உதறிவிட்டுக் கடப்பாரையை மதகின் மேல் போட்டான். ஏதேதோ சொல்லிக்கொண்டு தன் கைகள் இரண்டை யும் உயர்த்திக் கடப்பாரை விழும் இடத் தில் வைத்தபடி மதகோடு ஒட்டிக்கொண் டாள். இத்தனை முறை கடப்பாரையைப் போட்டதில் லேசான காயம் விழுந்திருந்த இடத்தில் இப்போது செல்லாயி கைகள். கால்களால் அவள் கைகளை விலக்கப் பார்த்தான். அவள் அசையாமல் அப்ப டியே இருந்தாள். அவன் உதைக்கும்போது எல்லாம் அண்ணாந்து ஏதோ சொன்னாள். அவள் வார்த்தைகள் தெளிவாகக் கேட்கவில்லை.

மன்னாசமுத்திர துரைசாமி

இந்தச் சமயத்தில் எதற்கு வந்தாள்? பல்லிபோல மதகில் ஒட்டிக்கிடக்கும் அவள் கைகளை விலக்க முடியவில்லை. கடப்பாரையை ஊன்றிக் கீழே குதித்தான். அவள் தலைமயிரைக் கொத்தாகப் பற்றித் தூர இழுத்து வந்தான். இப்போது மழை குறைந்திருந்தது. ''போய்த் தொல சனியனே'' என்று அவளை உந்தித் தள்ளினான். ஊர்ந்தபடி அவன் கால்களைப் பற்றிக்கொண்ட அவள் ''வேண்டாம். வுட மாட்டேன்'' என்றாள். அவனை அசையவிடாமல் கால்களைப் பிடித்திருந்தாள். மீண்டும் அவள் மயிரைப் பற்றித் தூக்கி இழுத்து எறிந்தான்.

அவன் விட்ட வேகத்தில் மழையோடு அப்படியே ஓடினாள். அவள் ஓடும் வேகம் பார்த்துப் பயந்த அவன் பின்னாலேயே ஓடினான். திறந்தவெளியில் நின்றிருந்த முனியப்பன் கோயிலுக்குள் அவள் புகுவது மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது. கோயிலுக்குள் அவனும் நுழைந்தான். கண்ணுக்கு அவள் தென்படவில்லை. மின்னலின் துணையோடு எல்லாப்புறமும் பார்த்தான். வானம் முழுக்கப் பளீரிட்ட மின்னல் தோன்றியபோது விழித்துப் பார்க்கும் துரைசாமி சிலை தெரிந்தது. அதன் கையில் இருந்த துப்பாக்கி அவனையே குறி பார்த்துக்கொண்டு இருந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism