Published:Updated:

கல்லுக்குள் இசை!

கல்லுக்குள் இசை!

##~##

ல்லிலே கலை வண்ணம் மட்டும் அல்ல... இசை வண்ணமும் காண முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் நாமக்கல் மாவட்டம், கூலிப்பட்டியைச் சேர்ந்த சிற்பி சின்னக்கண்ணு. சிற்பக் கலைஞரான இவர், நாகஸ்வரம், தவில், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளைக் கல்லில் செதுக்கி, அதில் இசைப்பதையும் சாத்தியமாக்கி இருக்கிறார்!

 ''என் சொந்த ஊர் தாரமங்கலம் பக்கத்தில் இருக்கும் சின்னப்பம்பட்டி. சின்ன வயசுல நான் பள்ளிக்கூடம் போகாம அம்மி, உரல் கொத்திட்டு இருக்கிற இடத்துக்குப் போய் தினமும் வேடிக்கை பார்ப்பேன். இதைக் கேள்விப்பட்டு கோபமான அப்பா, என்னைத் தலைகீழாகக் கட்டி கிணத்துல இறக்கினார். அன்னைக்கு ஊரைவிட்டு ஓடியாந்துட்டேன். அப்ப எனக்கு வயசு ஆறு. எங்கெங் கயோ அலைஞ்சு திரிஞ்சு நான் வந்து சேர்ந்த இடம் மகாபலிபுரம்.

கல்லுக்குள் இசை!

எனக்கு அந்த ஊர் சொர்க்கம் மாதிரி இருந்துச்சு. ஊர் முழுக்க உளிச் சத்தம். எங்கே பார்த்தாலும் சிற்பக் கூடங்கள். ஒரு பட்டறையில் உட்கார்ந்துக்கிட்டு சிற்பிகள் செதுக்குறதையே பார்த்துட்டு இருந்தேன். ராத்திரி வேலையை முடிச்சுட்டு சாப்பிட உட்கார்ந்தவங்க, என்னைப் பற்றி விசாரிச்சிட்டு, சாப்பாடு கொடுத்தாங்க. ஒரு பாட்டி என்னை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் படுக்கவெச்சு, காலையில் குளிக்கவெச்சு புதுக் கோவணம் கட்டிவிட்டு, கையில் சுண்டலைக்கொடுத்து கடற்கரையில் விற்கச் சொன்னாங்க. ராத்திரியில சுண்டல் வித்தேன். பகல்ல என் குருநாதர் திருஞானசம்பந்தரோட பட்டறையில் எடுபிடி வேலை பார்த்தேன்.

கல்லுக்குள் இசை!

ஒருகட்டத்துல சுண்டல் விற்பதை நிறுத்திட்டேன். என் குருநாதரும் அவருடைய மனைவியும் என்னை அவங்க புள்ளையாப் பார்த்துக்கிட்டாங்க. குருநாதர் எனக்குச் சிலை செதுக்கும் நுட்பங்களைக் கத்துக்கொடுத்தார். 11 வயசுலயே முழுச் சிலையையும் செதுக்கினேன். இப்படியே ஆறு வருஷம் ஓடிடுச்சு.

ஒருநாள் எங்க ஊர்க்காரர் ஒருத்தர் மகாபலிபுரத்துல என்னைப் பார்த்துட்டு வீட்டுக்குத் தகவல் சொல்லிட்டார். அடுத்தநாளே எங்க அம்மா, அப்பா வந்து என் குருநாதரிடம், 'இந்தப் பையன் செத்துப் போயிட்டான்னு எருக்கன் செடியில பால்கூட ஊத்திட்டோம். இவன் உசுரோட இருக்கான்னு சொன்னதும் உடனே வண்டியைப் பிடிச்சு வந்தோம்’னு அழுதாங்க. அப்புறம் என்னை ஊருக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ஆறு மாசம் இங்கயும் ஆறு மாசம் மகாபலிபுரம் போவதுமா இருந்தேன். கல்யாணம் பண்ணின பிறகு தனியா பட்டறை போடலாம்னு நாமக்கல் கூலிப்பட்டிக்கு வந்து  இந்த எம்.சி. சிற்பக்கலைக் கூடம் ஆரம்பிச்சேன்.

கல்லைப் பொறுத்துதான் சிற்பம். ஒரு கல்லை, கையால் தொட்டுப் பார்க்கும்போதே இது சிலை ஆகுமா, ஆகாதானு நல்ல சிற்பியால் சொல்லிவிட முடியும்.  கல்லைத் தட்டுனா ஒலி வரும். ஆனா, அதே கல்லால நாகஸ்வரம் செஞ்சா இசை வருமானு யோசிச்சேன். பல நாகஸ்வர வித்வான்களிடம் கேட்டப்ப வாய்ப்பே இல்லைனுட்டாங்க. ஒரு மாசம் கடுமையா உழைச்சு மூன்றரை கிலோவிலும், நான்கு கிலோவிலும் ரெண்டு நாகஸ்வரங்களை மூணு அடி நீளத்துல செதுக்கினேன். அதை நாகஸ்வர வித்வான்களிடம் கொடுத்தேன். அவங்க இசைக்கும்போது

கல்லுக்குள் இசை!

பிரமாதமான இசை வந்துச்சு. இதற்கு நிறைய பரிசுகளும், பாராட்டுப் பத்திரங்களும் கிடைச்சுது.

அப்புறம் 20 கிலோ எடையில் தஞ்சாவூர் தவிலும், 400 கிராம் எடையில் புல்லாங்குழலும் செதுக்கி, இசைக்கவும் செய்தேன். தஞ்சைப் பெரிய கோவில் ஆயிர மாவது ஆண்டு விழாவில், கலைஞர் இதைப் பார்த்து வியந்து பாராட்டினார். ஸ்டாலினும் என் கையைப் பிடித்து முத்தம் கொடுத்தார். இப்படி நான் செதுக்குறது மட்டும் இல்ல... என்னைப் போல அடுத்த தலைமுறை கலைஞனை உருவாக்கணும். அதுதான் என் லட்சியம்...'' என்று முடித்தார் நிறைவாக!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்

அடுத்த கட்டுரைக்கு