என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

சொல்வனம்

ஓவியங்கள் : ஹரன்

சொல்வனம்

கிளிப் பேச்சு!

 கூண்டுக் கிளிகள்
உங்களிடம்
என்ன பேசிவிடப்போகிறது?
திறந்துவிடுங்கள்
என்பதைத் தவிர்த்து!

- ரவிஉதயன்

பிள்ளைகள் ரயில்

சொல்வனம்

பாதங்களில்
சக்கரங்கள் பூட்டிய பாவனைகளில்
பிள்ளைகளே
பெட்டிகளும் பயணிகளுமானதில்
உருள்கிறதொரு தொடர்வண்டி

 ஓட்டுநனின் மனம்போன
பாதைகளைத்
தண்டவாளமெனப்பற்றி
அனாயாசமாய்க் கடக்கிறது அது
மெட்ராஸ்
டெல்லி
மும்பை
கொல்கத்தா நிலையங்களை
எந்த ஊரில்
அதிகம் பனிப்பொழிவு
இருந்ததெனத் தெரியவில்லை.

 'அவசரமா ஒண்ணுக்குப் போகணும்'' என்று
வெளியேறுகிறான் ஒரு பிள்ளை
அல்லது
ஒரு பயணி
அல்லது
கழன்றுகொள்கிறது
ஒரு பெட்டி!

- ப.தியாகு

ஊரடங்கு

 ந்தச் சாலையில்
நீங்கள் செல்லத்
தடை அமலில்
இருக்கிறது

இங்கு காய் மற்றும்
கனிகள் விற்பதற்கில்லை

அறுந்த செருப்பைப்
பழுது நீக்க இயலாது

தெருவோரங்களில்
கடை வண்டிகளுக்கு
அனுமதி இல்லை

சொல்வனம்

ஆம்புலன்ஸ்
நோயாளிக்கு
உயிர் இருக்கும் வரை
மாற்று வழியில் செல்லலாம்

உங்கள் வங்கிக்கு
செல்லும் வழி
மறுக்கப்பட்டிருக்கிறது

அரிசி மற்றும் தானியங்கள்
சேகரிக்கும் நிலையங்களை
அடையும் வழிகள்
தடைக்குட்படுகின்றன

பாதுகாப்பு கருதி
மருத்துவமனைகளில்
புறநோயாளிகளுக்கு
இன்றும் அனுமதி இல்லை

கட்டணக் கழிப்பறைகள்
இன்றும் இயங்காது

தவிர்க்க இயலாததால்
திரைக் காட்சிகள் மட்டும்
தக்க பாதுகாப்புடன்
தொடர்கின்றன

கொடுத்த
வாக்குறுதியின்படி
மலிவு விலையில்
தரமான சாராயம்
விநியோகிக்கப்படுகிறது

உங்கள்
தெருக்களில்
நமது தலைவர்களை
நினைத்துப்
பெருமூச்சுவிட்டபடி
காறி உமிழ்வதற்கும்
சிறுநீர் கழிப்பதற்கும்
தடை ஏதும் இல்லை!

- சுந்தர்ஜி.

யார் அந்த தேவதை?

 டையிலிருந்து திரும்பியிருந்த நான்
வரிசையில் நின்ற வாகனத்தை
எடுக்க வந்தவள்

சொல்வனம்

ஐந்தடி இடைவெளியில்
காத்திருந்தான் யுவன் ஒருவன்

புதிதாய் மினுமினுத்த
என்ஃபீல்டு வண்டியின்
பளபளத்த கண்ணாடியில்
இடது வலமாய்க் குனிந்து
மிகச் சரியாகவே இருந்த தலையை
இன்னும் சரியாகக் கோதிக்கொண்டான்

ஒப்பனை யாவும்
ஏதோ ஒரு தேவதைக்கென்று
மனம் சொன்னது

உடனே சென்றுவிடத் தோன்றவில்லை
காத்திருந்து பார்க்க நினைத்தேன்
நானும் அந்தத் தேவதையை!

- சுமதிராம்

மீனின் வீடு

 டது கையால்
தூரிகையின் வசமின்றி
ஒரு குழந்தை
கிறுக்கிய ஓவியம்
என நீங்கள் நினைப்பது
சரிதான்.

சொல்வனம்

வீட்டின் பின்புறம்
ஒரு நதி ஓடுவது
மட்டுமின்றி
நதிக்குள் நீந்தும்
மீன்களுக்கான
வீடுகளின் வசதி
குறித்தும்
இரவுகளில்
அவை எப்படி
உறங்குகின்றன
என்பதுபற்றியும்
குழந்தைகள் வரையும்
ஓவியங்களால் மட்டுமே
கவலைகொள்ள
முடியும்.

ஒரு கொக்கியில்
புழுவை மாட்டி
மீன்களைப் பிடிக்கும்
ஓவியங்களை
குழந்தைகள்
ஒருபோதும்
வரைந்ததும் இல்லை.
வரைய
விரும்பியதும் இல்லை!

- சுந்தர்ஜி.

எங்கும் வாய்த்திடும் சிறு புன்னகை

 ம்மட்டி வைத்து
ஓங்கி அடிப்பதுபோல
வெயில் தலையைப் பிளக்கும்
நண்பகல் நேரம்.

சொல்வனம்

லட்சுமி மில் சிக்னலில்
கைக்குட்டை, தொப்பி என
கைவசம் எதுவும் இல்லாத அப்பா
முன்புறம் அமர்ந்த மகனுக்குத்
தலைக்கவசம் கழட்டித் தருகின்றார்.

 ''நீ போட்டுக்க அப்பா
போலீஸ் மாமா நிக்கிறாரு.''

 ''பரவாயில்லடா, மாமா ஒண்ணும்
சொல்ல மாட்டாரு.''

 அணிந்துகொண்ட சிறுவன்
அதன் ஒற்றைச் சாளரம் திறந்து
அரை வட்டமாய்த் தலை திருப்பிப்
பெருமைகொள்கிறான்.

 கடந்து செல்கையில்
காவலரைப் பார்த்துக்
கையசைக்கின்றான் சிறுவன்.

 வாகன நெரிசலைச்
சரிசெய்தவாறு
காவலர் தந்த புன்னகை ஒன்று
பட்டாம்பூச்சியாய்
பறந்து சென்று
சிறுவனின் தோள் மீது ஒட்டிக்கொண்டது.

- சுமதிராம்

பள்ளத்தில் கிடக்கும் சொல்

சொல்வனம்

ரே ஒரு சொல்
கிடக்கிறது
இடைவெளி உருவாக்கிய பள்ளத்தில்.
தவிர்த்திருக்க வேண்டிய
அல்லது
சொல்லியிருக்க வேண்டிய சொல் அது.
பார்த்துக்கொண்டே நிற்கிறோம்
யார் இறங்கி எடுத்தெறிய
அல்லது
பயன்படுத்த என்று
தெரியவில்லை.
தெரிவதில்லை சூட்சுமம்
வேறு எத்தனையோ சொற்கள்
பள்ளத்தை நிரப்ப
கை வசம் இருப்பது!

- எஸ்.வி.வேணுகோபாலன்