Published:Updated:

நண்பனே.. நண்பனே...

படுதலம் சுகுமாரன் கண்ணா

நண்பனே.. நண்பனே...

படுதலம் சுகுமாரன் கண்ணா

Published:Updated:
##~##

அன்று நான்காவது நாளாக, பள்ளிக்கு மூர்த்தி வரவில்லை. எல்லோரும் ரவியைத்தான் விசாரித்தனர். ஆசிரியர்கூட ரவியிடம், ''எங்கேடா உன் தோஸ்த்தைக் காணோம்?'' என்று கேட்டார்.

ரவிக்கு காரணம் தெரியவில்லை. அவன் ஊரைக் கடந்துதான் மூர்த்தியின் கிராமத்துக்குப் போக வேண்டும். ஒரே ஒரு முறைதான் ரவி அங்கே போய் இருக்கிறான். குடிசை வீடு. மூர்த்தியின் பெற்றோர், ரவியின் அப்பாவுக்குச் சொந்தமான செங்கல்சூளையில் வேலை பார்க்கிறார்கள். தனது மகன் மூர்த்தியை எப்படியும் படிக்கவைத்துவிட வேண்டும் என்பது அவர்கள் ஆசை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினமும் பள்ளிக்குக் கிளம்பும் ரவி, கூட்டு ரோடில் மூர்த்தியின் வரவுக்காகக் காத்திருப்பான். ரவியின் அப்பா, அவனை பஸ்ஸில் போகும்படி பணம் கொடுத்து அனுப்புவார். மூர்த்தியுடன் சேர்ந்து போக முடியாது என்பதாலேயே பஸ் பயணத்தைத் தவிர்த்து, நடந்தே வருவான் ரவி. மூர்த்தியோடு சேர்ந்து செல்வது ரவிக்கு சுகமான அனுபவம். பாடம் சம்பந்தமாகவும், சில நேரம் வேடிக்கைக் கதைகளும் பேசிக்கொண்டு நடப்பார்கள். வகுப்பிலும் பக்கம் பக்கமாகத்தான் அமர்வார்கள்.

நண்பனே.. நண்பனே...

மூர்த்தி ஒரு நாள் வராவிட்டாலும் ரவிக்கு என்னவோ போல் இருக்கும். நான்கு நாட்கள் பார்க்காததில் தாங்க முடியவில்லை. 'ஒருவேளை அவனுக்கு உடம்பு முடியாமல் போயிருக்குமோ?’ என்று யோசித்தான். சாப்பாடு சரியாக இறங்கவில்லை. இரவு எல்லாம் மூர்த்தி நினைவாகவே இருந்தது.

விடிந்ததும் அம்மாவிடம் சொல்லிவிட்டு, மூர்த்தியைப் பார்த்து வரக் கிளம்பினான் ரவி. தனியாகப் போகாமல், நண்பர்கள் குரு, சிவாவையும் சேர்த்துக்கொண்டான். மூர்த்திக்கு என்ன ஆகி இருக்கும் என்று விவாதித்துக்கொண்டே பஸ்ஸில் பயணித்தனர்.

மூர்த்தியின் வீட்டை அடைந்தனர். வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் விசாரித்தார்கள். ''அவன் இனிமேல் பள்ளிக்கூடம் வர மாட்டான் பிள்ளைகளா. அப்பன், ஆத்தாளோடு சேர்ந்து செங்கல் சேம்பருக்குப் போய்ட்டு இருக்கான்'' என்று சொன்னார் பாட்டி.

''ரவி, செங்கல் சேம்பர் எங்கே இருக்குனு தெரியுமா?'' என்று கேட்டான் சிவா.

''தெரியும் வாங்க'' என்று நடந்தான் ரவி.

வனாந்திரமான இடத்தில் இயங்கிக்கொண்டு இருந்தது சேம்பர். ஆங்காங்கே மண்ணைக் குவித்து, குழைத்து அச்சில் போட்டுக் கல் அறுத்துக்கொண்டு இருந்தார்கள். சூளையில் இருந்து புகை எழும்பிக்கொண்டு இருந்தது. பக்கத்தில் சிறியதாக ஆபீஸ் இருந்தது. செங்கல் ஏற்றிப்போக இரண்டு லாரிகள் இருந்தன.

ரவி, நண்பர்களுடன் ஆபீஸுக்குள் நுழைந்தான். ''இங்கே மூர்த்தினு ஒரு பையன் வேலை பார்க்கிறானா?'' என்று கேட்டான்.

அங்கே இருந்த ஆளுக்கு ரவியைத் தெரிந்து இருந்தது. ''உன்னை யார் இங்கே வரச் சொன்னது. பையன்களைச் சேர்த்துக்கிட்டு ஸ்கூலுக்குப் போகாம ஊர் சுத்துறியா? அப்பாவுக்குத் தெரிஞ்சா, தோலை உரிச்சுடுவாரு'' என்று விரட்டினார்.

''அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன். இப்ப மூர்த்தியைப் பார்க்கணும்'' என்று அழுத்தமாகச் சொன்னான் ரவி.

''செங்கல் அறுக்கிற இடத்துல அவன் அப்பாவுக்குத் துணையா இருக்கான். போய்ப் பார்த்துட்டு உடனே கிளம்பிடணும்'' என்று நிபந்தனையுடன் அனுப்பினார்.

நண்பர்களைப் பார்த்ததும் மூர்த்திக்கு சந்தோஷமாகிவிட்டது. மண்ணை மிதிப்பதை நிறுத்தி, அவர்களிடம் விரைந்தான். அவனை அந்தக் கோலத்தில் பார்க்க வருத்தமாக இருந்தது. ''ஏன் மூர்த்தியை ஸ்கூலுக்கு அனுப்பவில்லை?'' என்று மூர்த்தியின் அப்பாவிடம் கேட்டான் ரவி.

அவரோ கவலை தோய்ந்த குரலில், ''என்ன பண்ணட்டும் தம்பி, முன்பு இவன் அக்கா வேலைக்கு வந்துட்டு இருந்துச்சு. கல்யாணம் முடிஞ்சுபோயிருச்சு. கல்யாணத்துக்கு இருபதாயிரம் பணம் கை நீட்டி வாங்கிட்டோம்'' என்றார்.

''என்னை எப்படியாவது இங்கே இருந்து கூட்டிக்கிட்டுப் போயிடு ரவி. எனக்கு இந்த வேலை பிடிக்கலைடா. படிக்கணும்னு ஆசையா இருக்குடா'' என்று ஏக்கத்துடன் சொன்னான் மூர்த்தி.

''கவலைப்படாதே. அப்பாகிட்ட பேசி ஒரு வழி பண்றேன்'' என்று திரும்பினான்.

ரவியின் அப்பா முருகேசன், திட்டவட்டமாக மறுத்தார். ''அந்த மூர்த்தி உன் நண்பனாக இருக்கலாம். நல்லா படிக்கிறவனாகவும் இருக்கலாம். அதுக்காகப் பார்த்தால், பணம் நட்டம் உண்டாகும். அவனவன் தலைவிதிப்படி நடக்கும். நீ உன் வேலையைப் பார்'' என்று சொல்லிவிட்டார்.

ஒரு வாரம் கழிந்த நிலையில், வீட்டில் இருந்த முருகேசனுக்கு செங்கல்சூளையில் இருந்து போன் வந்தது. ''சீக்கிரம் வாங்க. அதிகாரிகள் ரெய்டுக்கு வந்திருக்காங்க'' என்றதும், வண்டி எடுத்துக்கொண்டு விரைந்தார்.

அங்கே, அரசாங்க ஜீப் நின்றிருந்தது. அதிகாரிகள் இருந்தனர். ''நாங்க குழந்தைத் தொழில்முறை ஒழிப்புத் துறையில் இருந்து வர்றோம். உங்க சேம்பரில் சின்னப் பையன்களை வேலைக்கு வெச்சு இருக்கிறதாப் புகார் வந்தது. வந்து பார்த்ததில் மூர்த்தி என்ற சிறுவன் உள்ளிட்ட மூவரை மீட்டோம். இவர்களை வேலையில் அமர்த்தியது சட்டப்படி குற்றம். இதற்கு, பத்தாயிரம் அபராதம் கட்ட வேண்டும். மறுத்தால், ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை'' என்றார்கள்.

நண்பனே.. நண்பனே...

வெலவெலத்துப்போன முருகேசன், அதிகாரிகளைக் கெஞ்சி, ''கைது நடவடிக்கை என் மரியாதையைக் குறைக்கும். அபராதத்தைக் கட்டிடுறேன். பசங்களையும் அனுப்பிடுறேன்'' என்றார்.

மூர்த்தி மீண்டும் பள்ளிக்கூடம் வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ''இனி படிக்கவே முடியாதோனு பயந்தேன்... எப்படியோ விடுதலை கிடைச்சுது'' என்றான்.

''எப்படியோ இல்லைடா, எல்லாம் ரவியால்தான். அவன் எவ்வளவு வேண்டியும், அவன் அப்பா உன்னை சூளையில் இருந்து விடுவிப்பதாக இல்லை. அப்போது, சிறார் தொழில்முறை ஒழிப்புத் துறை பற்றிய செய்தி ஒண்ணு பத்திரிகையில் வந்தது. அதைப் படித்ததும், ரவி புகார் எழுதி போஸ்ட் பண்ணிட்டான். அதன் விளைவுதான் அதிகாரிகள் நடவடிக்கையும், உன் விடுதலையும்'' என்றான் குரு.

ரவியைப் பெருமையுடன் பார்த்தான் மூர்த்தி. ''எனக்காக அப்பான்னும் பார்க்காம, புகார் பண்ணி இருக்கியே... நன்றிடா'' என்றான்.

''தப்பு செய்தவங்க யாராக இருந்தாலும் திருத்துவதற்கு நம்மால் ஆன முயற்சியைப் பண்ணணும். அந்த வகையில், நான் செய்த முயற்சிக்குப் பலன் கிடைச்சது. இதை மனசோடு வெச்சுக்கங்கடா. அப்பா காதுக்கு எட்டினா, என் கதை கந்தலாயிரும்'' என்று அபிநயித்தான் ரவி.

நண்பர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism