Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

Published:Updated:
##~##

உரிமை

 புது வீடு குடியேறியவுடன்
வழக்கமான சம்பாஷணைகளை
ஆரம்பித்திருந்தேன்.
அண்டை வீட்டாரிடம்
அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கையில்
அங்கு நின்றிருந்த குழந்தையிடம்
'உங்க பேரு என்ன?’ என்றேன்.
'தமிழ்... அரசி’ என்கிறாள்
கன்னக் குழி விழ.
வழக்கம்போலவே
வம்பிழுக்கும் தொனியில்
'இனிமே இது எங்க அம்மா’
என்கிறேன்.
'ம்ஹூம்... எங்க அம்மா’ என்கிறாள்.
'சரி, இது எங்க அப்பா.’
'ம்ஹூம்... எங்க அப்பா.’
இப்படியாக
தாத்தா, பாட்டி என நீள்கையில்
வாசலில் விளையாடும்
குழந்தைகளின் குரல் கேட்டு
வெளியே ஓடிவிடுகிறாள்.
விளையாட்டு முடிந்து
திரும்பிச் செல்கையில்
பக்கத்தில் நிற்கும் குழந்தைகளிடம்
கண்களை அகல விரித்து
மார்பின் மேல் கை வைத்து
என்னைக் காட்டி
'இது எங்க மாமா’ என்கிறாள்
உரிமையுடன் தமிழரசி.
இல்லை,
எங்க தமிழ்க் குட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கு.விநாயகமூர்த்தி

டைரி மலர்

லரொன்றை
சிறுமி தன் புத்தகப் பையினுள் மறைக்கிறாள்.
சிறு தெய்வமொன்றின் சிலைக்கு முன்
வைக்கிறாள் அம்மா.
தன் பழைய டைரிக்குள் அடைக்கிறார்
அப்பா.
மலரைக் கண்டுபிடிக்கும் போட்டி
துவங்கும் தருணம் மின்சாரம் திரும்புகிறது.
அத்துடன் நின்றுபோகிறது விளையாட்டு.
ஒரே செடியில் பூத்த மூன்று மலர்கள்
வெவ்வேறு புலத்தில்
வசிக்க ஆரம்பிக்கின்றன.
விதவிதமான புத்தகங்களுடன் உரையாடி
நல்லதொரு நட்பை வளர்த்துக்கொள்கிறது
புத்தகப் பை மலர்.
தெய்வத்தின் காலடியில்
நாளெல்லாம்கிடப்பதால்
தன்னைப் புனித மலரென்று எண்ணுகிறது
இரண்டாம் மலர்.
கலைக்கப்பட்ட கனவுகளுடனும்
ரகசியத் தவறுகளுடனும்
இந்தக் கவிதையின் வரிகளுடனும்
வாழப் பழகுகிறது
காய்ந்துவிட்ட கடைசி மலர்!

- நிலா ரசிகன்

விளிம்பு

'விளிம்புகளுக்கு அப்பால்
தொடுவானம்தானா?’ என்றொரு
கண்டுணர முடியாத வியப்பு
எப்போதும் இருக்கிறது.

 சர மழை பொழியும்
தனிமை ராத்திரிகளில்
சில்வண்டுகளோடு
ரீங்காரப் பழக்கம் தொடங்கியது.

 மோகன மயக்கம் தரும் அந்தியில்
மந்தகாச வெயிலில்
தூறலில் நனைந்தபடி
தனிமையோடு பேசிக்கொண்டு
மலை விளிம்புக்கு நடந்தேன்.

 திரும்பி வருகையில்
தொடுவானம்
மனசுக்குள் இருந்தது.

- நீ.ஸத்யநாராயணன்

சொல்வனம்!

இறுதி வார்த்தை

காலத்தின் புழுதியை அப்பியபடி
நெடுநாட்களாக
நின்றுகொண்டிருக்கிறது
அந்த கார்.

 துவக்கத்தில் ஒரு நாள்
தீவிரவாதியருவனின்
வெடிகுண்டைப்
பதுக்கியபடி நிற்பதாக
எல்லோரும் சந்தேகப்பட்டதுண்டு.

 போகப்போக
கல்லெறிக்கோ வெயிலுக்கோ
நாய்கள் மறைந்துகொள்ளவோ
அதற்குப் பின்
அவசரத்துக்கு ஆடவர் நின்று
சிறுநீர் கழிக்கவோ
வரும் போகும் விடலைகள்
தங்கள் பெயரைக் கிறுக்கிப் பார்க்கவோ

 வழி தொலைத்தவர்களுக்கு
அடையாளம் காட்டவோ
என மாறிப்போனாலும்

நிறுத்தப்பட்ட கடைசி நாளில்
'நாளை பார்க்கலாம்’
என அதை ஓட்டியவன்
சொல்லிச் சென்றதை
இன்னமும் நம்பிக் காத்திருக்கிறது
அந்த கார்!  

- சுந்தர்ஜி

சொல்வனம்!