பிரீமியம் ஸ்டோரி

கதைப் பொருள்

 பாலமுருகனும் கணேசனும்

சொல்வனம்

பல்பொருள் அங்காடியில்
தற்செயலாய்ச் சந்தித்தபோது
பரஸ்பரம் நலம் விசாரித்தனர் - பின்பு
அலுவலகத்தில்
ஆனந்தன் அகம்பாவமாக நடந்துகொள்வதை
அரை மணி நேரம் விவாதித்தனர்

அடுத்த நாள் அலுவலகத்தில்
கணேசனும் ஆனந்தனும்
பதிவேட்டில் கையெழுத்திடுகையில்
பார்த்துக்கொள்ள நேரிட்டது - அங்கே
பாலமுருகனின் பண்புகள்
பத்து நிமிடம் பாடுபொருளாயின

அதே நாளின் இறுதியில்
தேநீர்க் கடையில்
எதேச்சையாகச் சந்தித்த
ஆனந்தனும் பாலமுருகனும்
ஆரத் தழுவிக்கொண்டனர் - பின்னர்
கணேசனின் செயல்களைக்
கருணையின்றி விமர்சித்தனர்

பிறிதொரு நாளில் மூவரும்
ஒன்றுசேர்ந்தனர் இப்போது
அதிகமாக அலட்டிக்கொள்ளும் அம்பிகா
கதைப் பொருள் ஆனாள்.

- நா.ராஜேந்திர பிரசாத்

முகமற்றவளின் சித்திரம்

சொல்வனம்

தொடர்ந்து தன் புகைப்படங்களை
மாற்றியபடியே இருக்கிறாள்
வெவ்வேறு அழகிகளின் படங்களால்
அவளது முகநூல் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது
ஒவ்வொரு சித்திரங்களின் வழியே
தன் அழகின்மையைக் கடந்து செல்கிறாள்
அழகிகளின் சித்திரம் கிடைக்காத நாளன்றில்
கண்கள் திறக்காத பூனைக் குட்டியின்
படமொன்றை வைத்துப்பார்க்கிறாள்.
அது
அழகின்மைக்கும் அழகுக்கும்
நடுவே அவளாகியிருந்தது.

- நிலா ரசிகன்

பறவைகளின் காவலாளி

முற்றத்தில் காயும்
தானியங்களைப் பார்த்துக்கொள்ளுமாறு

சொல்வனம்


நிஷாக் குட்டியைக்
காவலுக்கு வைத்துவிட்டு
அம்மா கடைக்குச் சென்றாள்
பொறுக்க வரும் காக்கைகளை
விரட்டாமல்
'சீக்கிரம்... சீக்கிரம்...
அம்மா வர்றதுக்குள்ளே
தின்னுக்கோ’
எனச் சொல்லும் நிஷாக் குட்டியின்
அன்பின் பெருவெளியைச்
சமன்படுத்த
வார்த்தை எதுவும் சிக்கவில்லை எனக்கு.

- ந.சிவநேசன்

சொல்வனம்

தரிசனம்

''அப்பா... சாமி தெரியல''
என்ற என் குழந்தையைத்
தூக்கிக் காண்பித்தபோது
கடவுளுக்குக் கிடைத்தது
குழந்தையின் தரிசனம்.

  - சின்னமனூர் ராஜமழை

களவும் கற்று பற

வுச்சி வீச்சமடிக்கும்
சமையலறை ஜன்னல் கதவைத்
தட்டியபடி காத்திருக்கின்றன
நான்கு காக்கைகள்

சொல்வனம்

துணி உலர்த்த வந்த பெண்
கைகொண்ட க்ளிப்புகளை
வண்ண மிட்டாய்களாக
எண்ணிச் சுற்றுகின்றன
தினமும் ஒரு கைப்பிடி
கஞ்சியோ, அப்பளமோ
சின்னவன் தின்ன இட்லியோ
போடுகிறாள் அவளும்
அவை ஏமாறாமல் இருக்க...
அரிசிச் சோறுண்டால்
அலறி அழைக்கும்
அண்டங்காக்கைகள்
ரொட்டி கண்டால்
யாருக்கும் அளிக்கப்
பிரியப்படாமல்
இறகு விரித்து மறைத்து
அலகுகொள்ளாமல்
அள்ளிப் பறக்கின்றன.

      - தேனம்மை லஷ்மணன்

சொல்வனம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு