Published:Updated:

''விருத்தாசலம் இலக்கியவாதிகள் நிறைந்த நகரம்!''

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

''விருத்தாசலம் இலக்கியவாதிகள் நிறைந்த நகரம்!''

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

Published:Updated:
''விருத்தாசலம் இலக்கியவாதிகள் நிறைந்த நகரம்!''
##~##
ளம், கீதாரி, ஆறுகாட்டுத் துறை போன்ற நாவல்கள் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் சு.தமிழ்ச்செல்வி. தன்னுடைய சொந்த ஊரான விருத்தாசலத்தைப் பற்றி இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்!

''வெளியூர்களுக்குச் சென்று திரும்பும்போது புறவழிச் சாலை வழியாகக் காட்சி அளிக்கும் விருத்தாசலத்தைப் பார்க்கும்போது 'நம் ஊர்’ என்கிற பாதுகாப்பு உணர்வு வந்துவிடுகிறது. தாலிச் செயினை அறுத்துக்கொண்டு ஓடும் திருடர்களும், பசியின் பொருட்டு பாலியல் தொழிலாளி ஆனவர்களும், பிச்சை எடுக்கும் முதியவர்களும், மேஜை துடைக்கும் சிறுவர்களும் நிறைந்து இருக்கும் இந்த நகரில்தான் முன்பொரு காலத்தில் சிவபெருமான் மலை வடிவத்தில் காட்சி அளித்தாராம்.

இப்படிக் கீர்த்திகளையும் அபகீர்த்திகளையும் கொண்ட இந்த நகரில் எனக்கும் ஒரு வீடு இருக்கிறது. எங்குச் சுற்றி அலைந்தாலும் என் வீட்டுக்கு வரும்போதுதான் நிம்மதியாக உணர முடிகிறது.

''விருத்தாசலம் இலக்கியவாதிகள் நிறைந்த நகரம்!''

கிராமிய விழுமியங்களை இழக்காமல், நகரமயமாதலுக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டவர்கள் இந்த ஊர் மக்கள். ஸ்கூட்டியில் அலுவலகம் செல்லும் பெண்களும், ஆடி மாதம் மாரியம்மன் கோயிலுக்கு வேண்டிக் கொண்டு அலகு குத்திக்கொள்ளும் பெண்களும் இணைந்தே இந்த நகரில் வாழக் கற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

பழமலைநாதர் கோயில், கொளஞ்சியப்பர் கோயில், மணிமுத்தாறு இவை இந்த நகரின் தொன்மைமிகுப் பெருமைகள். ஞானக்கூத்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்ற பெருங்கவிகளால் பாடப்பட்ட நகர் இது. இன்று இதன் அறங்கள் மாறி இருக்கின்றன. இந்த அவலத்தின் ஒரு எளிய எடுத்துக்காட்டு மணிமுத்தாறு நதியின் சீரழிவு.

''விருத்தாசலம் இலக்கியவாதிகள் நிறைந்த நகரம்!''

திருமணிமுத்தாறு நதியில் நீராடினால் கவலைகள் அழியும், அஞ்ஞானம், சோம்பல், தரித்திரம் அகன்றுவிடும் என்று மணிமுத்தாற்றின் பெருமைப் பேசுகிறது விருத்தாசலபுராணம். ஆனால், நகரத் தின் எல்லாச் சாக்கடைகளும் இன்று மணி முத்தாற்றில்தான் சங்கமிக்கின்றன. இந்த ஆற்றின்  மணலை எந்தவித மன உறுத்தலும் இன்றி சுரண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

விருத்தாசலம் இலக்கியவாதிகள் நிறைந்த நகரம் என்பது பெருமைப்பட வேண்டிய செய்தி. ஜெயகாந்தன், பழமலய், அறிவுமதி ஆகியோர் இந்த நகருக்கு நெருக்கமானவர்கள். இமையம், சபாநாயகம், கரிகாலன், கண்மணி குணசேகரன், பட்டி.சு.செங்குட்டுவன், புகழேந்தி ஆகியோர் தம் படைப்புகளால் அழகு செய்கிறார்கள். சுந்தரபாண்டியன், இளந்திரையன், அமிர்தராசு, ஹரிகிருஷ்ணா என இளம் படைப்பாளிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுவருவதும் மகிழ்ச்சியான விஷயம்.

சமூக அலுவலங்களுக்கு எதிராகப் போராடும் ஆற்றல் உடையது இந்த மண். திராவிட இயக்க மூத்த போராளி அண்ணன் இராசு, இந்த நகரின் வணக்கத்துக்கு உரிய மனிதர். அவரைப் போலவே பொதுவுடைமைப் போராளிகளாக மலர்ந்திருக்கும் தோழர்கள் இராஜீ, அம்பேத்கர், சந்திரசேகர், கதிர், ஜெயகாந்த் சிங் போன்றோர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள்.

''விருத்தாசலம் இலக்கியவாதிகள் நிறைந்த நகரம்!''

எல்லா நகரங்களைப் போலவே விருத்தாசலமும் புறநகர் என்கிற பெயரில் தனது எல்லையை விரித்துக்கொண்டே  இருக்கிறது. வயலூர், மணவாளநல்லூர், சித்தலூர், பொன்னேரி, புதுக்கூரைப் பேட்டை போன்ற கிராமங்களை விழுங்கி ஒரு மிருகம் போல் இந்த நகரம் வளர்வதைப் பார்க்கும்போது பயமாகவும் இருக்கிறது. தங்கள் விளைநிலங்களை விற்று இந்த மக்கள் எல்.சி.டி. டி.வி-க்கள் வாங்குவதும், புதிய புதிய மோட்டார் பைக்குகள் வாங்குவதும், சாயங்காலத்தில் புறவழிச் சாலையோர மர நிழலில் மது அருந்துவதும் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

அப்புறம் ஒன்றை மறந்துவிட்டேன். எங்களுக்குச் சட்டமன்ற உறுப்பினராக விஜயகாந்த் ஐந்து ஆண்டுகள் இருந்ததையும் நினைவுகூர வேண்டி இருக்கிறது!''

படங்கள்: எஸ்.தேவராஜன்