Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

Published:Updated:

நான் உடைத்த செல்போன்கள்

கோபத்தில்
செல்போன் உடைப்பது
என் பழக்கமாகிவருகிறது

சொல்வனம்

 ஐந்து முறை செல்போன்களையும்
நான்கு முறை
உடைக்கக் கூடாது என்கிற சபதங்களையும்
அதற்குப் பலியாக்கியிருக்கிறேன்

 யாரிடமும் தீர்க்க முடியாத
ஆற்றாமைக்கு
எளிதில் கையில் கிடைக்கும் பொருள்
செல்போன்தான்

 கோபத்தில்
மற்றவர்களைத் தாக்குவது
கொலை.
செல்போனை உடைப்பது
தற்கொலை

 ரத்தச் சேதமின்றி
என் உறுப்புகளில் ஒன்றை
அறுத்தெறிந்து
சினம் ஆற்றிக்கொள்வதற்கு
ஒப்பானது அது

 கோபத்தின் வலியையும்
அதற்கான விலையையும்
உடைந்து சிதறுகிற
அதன் பாகங்கள்
உணர்த்திவிடக்கூடும்

 உடையும்போது எழும் சத்தம்
அதிலிருக்கும் எண்களுக்குரிய
அனைத்து நபர்களின்
ஒருமித்த அலறல்போல
காதுகொள்ளாமல் ஒலிக்கக்கூடும்

 உடைந்த பின்
உறையும் நிசப்தம்
அத்தனை நபர்களின்
ஒட்டுமொத்த மௌனத்தின்
அழுத்தத்தையும் நிரப்பக்கூடும்

 அப்போது அழைக்க நேர்பவர்கள்
என்னைத் தொடர்புகொள்ள
முடியாதபோது
நான் மரித்துவிட்டதைப் போல
உணரும் ஒரு வெறுமை
என்னையே தியாகம் செய்து
கோபம் போக்கிக்கொண்டதாய்
சற்று மனதை ஆற்றவும்கூடும்

 ஆயினும்
பிரியமானவர்களின் எண்களும்
குறுஞ்செய்திகளும்
செல்லோடு சேர்ந்து
சிதைந்து போகையில்
அவர்களையே தொலைத்துவிட்டதாய்
வலி உணரும் கணங்களும்
பயந்துபோய்
அங்கிருந்து அகலும்
வெளிர்ந்த முகங்களும்
மட்டுமே சொல்லும்
நான் உடைத்தது
வெறும் செல்போன்களை
அல்ல என்று!

-ஹேமா செல்வராஜ்

சொல்வனம்

எல்லோரும்...

ன்னையும் உன்னையும் அழைத்தவன்
அவனை அழைக்கவில்லை
என்னையும் அவனையும் அழைத்த நீ
இவனை அழைக்கவில்லை
உன்னையும் இவனையும் அழைத்த நான்
அவனை அழைக்கவில்லை
நான் நீ அவன் இவன்
எல்லோரும் சேர்ந்திருக்கும்
இந்தப் புகைப்படத்தை
என்ன செய்வதிப்போது
என் இனிய நண்பனே!

- செல்வராஜ் ஜெகதீசன்

 மணல் கடிகாரச் சிறுமிகள்

லகின் மிகப் பெரிய
மணல் கடிகாரமானாலும்
மிகச் சிறிய

சொல்வனம்

மணல் கடிகாரமானாலும்
இணைப்புக் குமிழியின் கீழே
ஒவ்வொருத்தியாகத்தான்
ஒரு மணல் சிறுமி
இறங்கிச் செல்கிறாள்
அவள் தலைக்கு மேலே
லட்சோப லட்சம் பேர்
காத்திருந்தாலும் கிரம ஒழுங்கு தவறாது
ஒவ்வொருத்தியாகவே
ஒவ்வொருத்தியும்
இறங்கி வருகிறாள்
மணல் கடிகாரங்களில்
அந்த மணல் சிறுமிகள்
ஒரு குழுவைவிட்டுப்
பிரிந்து மறு குழுவுக்குக்
குதிக்கும்போது கூடிப் பேசத்
தொடங்கிவிடுகிறார்கள்
அவர்கள் சொல்ல வருவது
கண்ணாடிச் சுவர்களின் வழியே
நமக்குத்தான் சரிவரப் புரிவதில்லை!

- வையவன்

சொல்வனம்