Published:Updated:

துர்கா

துர்கா

துர்கா

துர்கா

Published:Updated:

நடிப்பு : ஐஸ்வர்யா 
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

##~##

''உங்க மகனை வெளியில கொண்டு வரவோ, காப்பாத்தவோ, இந்த உலகத்துல துர்கா அக்காவால மட்டும்தான் முடியும். இனி அவங்க அதுக்குத் தயாரா இல்லை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜத்தின் விழிகள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, எதிர்பாராத அந்தச் சம்பவம் அங்கே நடந்தது. அத்தனை பேரும் ஆடிப் போனார்கள்!

என்ன நடந்திருக்கும் அங்கே?!

அடுத்த எபிசோட் பரபரப்பாக அதிர வேண்டும் என்கிற முனைப்போடு, களத்தில் கலக்கியிருக்கிறார்கள் தோழிகள். போட்டி போட்டுக் கொண்டு தோழிகள் மோதியிருப்பது... வரவேற்கத்தக்கது.

சிவகாசி - சுதந்திரதேவி... இந்தத் தோழி, 'விவாகரத்துக்காக தயாரான நோட்டீஸை துர்கா கிழித்தெறிகிறாள்' என்று ரூட்டை தடாலடியாக மாற்றுகிறார். இது, அந்த கேரக்டரின் வேகத்தையே குறைக்கிறதே தோழி?

பெங்களூரு - கல்பகம் லட்சுமணன், 'ராஜம் மன்னிப்புக் கேட்கிறார்' என சரணாகதி படலத்தை ஆரம்பிக்கிறார். இப்போதைக்கு இது சரிப்பட்டு வரும் என்று தோன்றவில்லை!

துர்கா

மயிலாப்பூர் - காயத்ரி, மதுரை - பானுமதி, மங்கலம்பேட்டை - சுஜாதா, பொன்னமராவதி - சுபா ராஜ்குமார்.... இவர்கள் நால்வரும், 'ஆனந்த்... ரத்தவாந்தி, தற்கொலை' என்று ஆக்ஷன் சங்கதிகளில் இறங்கி விட்டார்கள். யதார்த்தம் அடிபடுவது போலிருக்கிறது. தொடர்ந்து முயற்சியுங்கள் தோழிகளே!

சென்னை - கஸ்தூரி, தாம்பரம் - நாச்சியார்... இந்த இருவரும் இயக்குநர் நாற்காலிக்கு பக்கத்தில் வந்து விட்டார்கள். ஏறத்தாழ உட்காரும் நேரம், அடுத்த தோழி அட்டகாசமான திருப்பத்தைத் தந்து பதவியைக் கைப்பற்றிவிட்டார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

நிலநடுக்கத்தை வைத்து, ஒரு புது சென்டிமென்டை உருவாக்கி, கதையின் போக்கையே திருப்பி, எபிசோட் இயக்குநர் நாற்காலியைப் பிடித்திருக்கும் விருதுநகர் - உதயராணிக்கு வாழ்த்துக்கள்!

''பாருடா ஆனந்த்... துர்கா உன்னை இப்பிடி காலை வாரி விட்டுட்டாளே? கேஸையும் வாபஸ் வாங்காம, உனக்கு விவாகரத்து நோட்டீஸையும் கொடுத்துட்டு நிக்கறாளே... இவ ஒரு பொம்பளைதானா?''

செந்தில் நெருங்கினான்.

''நிறுத்துங்க. இந்த ஆள், துர்காவைப் பேசின பேச்சுக்கு... இப்ப அனுபவிக்கறார். வெளியில போங்க.''

''உங்க கால்ல விழுந்து கேக்கறேன்... என் பிள்ளையை வெளியில விட்டுடுங்க...''

''அது நடக்காது. செஞ்ச தப்புக்குத் தண்டனை அனுபவிச்சுத்தான் ஆகணும்.''

''ஆனந்த்... உனக்காக உயிரைக்கூடக் கொடுக்க இந்த உலகத்துல அம்மா மட்டும்தான்டா இருக்கேன். பெத்தவளுக்கு மட்டும்தான்டா பிள்ளையோட அருமை தெரியும். பொண்டாட்டிகள் எவளுமே புருஷனைக் காப்பாத்த மாட்டா. ஒரு தாய் மட்டும்தான் கண்ணீர் வடிப்பா...''

- இதைச் சொல்லி ராஜம் கதறிய நேரம், அங்கே ஓர் சின்ன அதிர்வு உண்டானது.

துர்கா

மேஜை, நாற்காலி குலுங்கியது. பூமியில் ஓர் அதிர்வு. சில நொடிகளில் நிலநடுக்கம் என்பது தெரிய, அனைவரும் வெளியே தலைதெறிக்க ஓடினார்கள். செந்தில், சக போலீஸ்காரர்கள் என அங்குள்ள அனைவரும் மிரண்டு வெளியே ஓட, ராஜமும் ஓடினாள் முதல் நபராக.

நிலநடுக்க செய்தி பரபரவென மாநகர் முழுக்க பற்றிக்கொள்ள, இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமிக்கான வாய்ப்பு என சேதி வர, லாக்கப்பில் இருந்த ஆனந்த்தால் வெளியே வர முடியவில்லை. அவனைப் பற்றி யாரும் கவலைப்படும் நிலையில் அங்கே இல்லை. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ஆனந்த்துக்கு... உடம்பு முழுக்க மின்சாரம் பாய்ந்தது!

'கடவுளே! நான் இங்கே லாக்கப்ல மாட்டிக்கிட்டேனே! இந்தக் கட்டடம் இடிஞ்சா, என் கதி? என்னை யார் காப்பாத்துவாங்க?’

திக்கென்றது. உயிர் பயம் ஒரு நொடி மின்சாரமாக உடம்பு முழுக்க விறுவிறுவெனப் பாய்ந்தது.

துர்காவின் வீட்டில்... குழந்தை அஞ்சு உட்பட அனைவரும் வெளியே வந்துவிட, துர்கா படக்கென செல்போனை எடுத்தாள். செந்திலுக்கு டயல் செய்யத் தொடங்கினாள். ஆனால், லைன் கிடைக்கவே இல்லை. விடாமல் முயற்சித்தாள்.

''துர்கா... சொல்லுங்க. உங்க ஏரியாலயும் நிலநடுக்கமா? நாங்க ஸ்டேஷனுக்கு வெளியேதான் நிக்கறோம்...''

''ஆனந்த் லாக்கப்ல இருப்பாரே... அவருக்கு ஏதாவது ஆயிட்டா?''

செந்திலுக்கு சுருக்கென்றது!

''ஸாரிக்கா... அதை நான் யோசிக்கல!''

கான்ஸ்டபிளுக்கு உடனே உத்தரவிட்டான்.

''உள்ள வாங்க... ஆனந்த் உட்பட மூணு பேர் லாக்கப்ல இருக்காங்க. அவங்களை பாதுகாப்பா வெளியில கொண்டு வரணும்.''

செந்திலும் உள்ளே போனான். லாக்கப்பிலிருந்த மற்ற இருவர் பீதியுடன் நிற்க, ஆனந்த் அதிர்ச்சியில் மயக்கமாகி விழுந்து கிடந்தான். செந்தில் இதை எதிர்பார்க்கவில்லை.

''அவங்க ரெண்டு பேரையும் கவனமா வெளியில கொண்டு போய் வைங்க. ஆனந்த்தை உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். ஜீப்பை ரெடி பண்ணுங்க...''

ஆனந்த் ஜீப்பில் கிடத்தப்பட, ''ஐயோ... என் பிள்ளைக்கு என்னாச்சு?'' என்று அலறினாள் ராஜம்.

துர்கா

''ச்சீ... வாயை மூடு! நிலநடுக்கம் உண்டானதும் உயிர் பயத்துல வெளியிலதானே ஓடி வந்தே? அப்ப பிள்ளையைப் பத்தி நெனச்சியா? விலகு!'' என்று எகிறினார் ஒரு கான்ஸ்டபிள்.

செந்திலை ஏற்றிக்கொண்டு ஜீப் புறப்பட்டது. ராஜம் பின்னால் ஓடி வந்தாள். ஆஸ்பத்திரி வாச லில் ஜீப் வந்து நிற்க, அங்கே நோயாளிகள்கூட உயிர் பயத்தில் வெளியே வந்துவிட்டார்கள். பெரும்பாலான டாக்டர் களும், நர்ஸ்களும் வெளியில்தான் இருந் தார்கள். செந்தில் ஆடிப் போனான்.

வரும் வழியில் செந்தில், துர்காவுக்கு போன் செய்து நிலைமையைச் சொல்லிஇருந்தான். நடேசனிடம் சொல்லிவிட்டு... துர்கா புறப்பட, ''நானும் வர்றேன்மா. அவன் மேல உள்ள பாசத்தால வரல. உனக்குத் துணையா நான் வர்றேன்!'' என்று கூடவே புறப்பட்டார்.

செந்தில் போராடி, ஒரு டாக்டரைப் பிடித்து ஆனந்த்தை உள்ளே சேர்த்துவிட்டான்.

'இனி நிலநடுக்கம் வராது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை’ என்ற செய்தி தொலைக்காட்சியில் தொடர்ந்து வந்து கொண்டிருக்க, மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அவரவர் வீடுகளுக்குப் புறப்பட, போக்குவரத்து நெரிசலில் திக்கித் திணறியது மாநகரம். தட்டுத்தடுமாறி ஒருவழியாக துர்கா வந்து சேர... அதேநேரம் ஆனந்த்துக்கான சிகிச்சை தொடங்கியிருந்தது. பயத்தில் உண்டான ஆழமான மயக்கம். அதைத் தெளிவிக்கும் முயற்சி!

''உள்ளே ட்ரீட்மென்ட் நடக்குதுக்கா. உங்க ஒருத்தரைத் தவிர, ஆனந்த் பற்றி யாருக்குமே தோணலைக்கா.''

''ஏன்? ராஜம் அங்கேதானே இருந்தா? அன்வர் சொன்னானே போன்ல?''

- நடேசன் கேட்டார்.

''முதல்ல வெளியில ஓடி வந்தது அவங்கதான்!''

''உயிருக்கு முன்னால தாய்ப் பாசம் சந்தி சிரிச்சுருச்சா?''

''விடுங்க மாமா. ஆனந்த் நிலைமை என்னானு பார்க்கலாம்.''

டாக்டர் ஆழமாக பரிசோதனை செய்து, வேண்டிய முதலுதவிகளைச் செய்துவிட்டு வெளியே வந்தார்.

''மயக்கம் தெளியல. ஆழமான அதிர்ச்சி. உயிர் பயம். லாக்கப்ல இருக்கோம்... கட்டடம் இடிஞ்சுட்டா கதி என்னாகும்னு நடுங்கி மயக்கமாகியிருக்கார். இதயத் துடிப்பும் சரியா இல்லை. நாடித் துடிப்பும் தப்பா இருக்கு!''

''ஆபத்தா டாக்டர்?''

- செந்தில் கேட்டான்.

''மயக்கம் தெளியட்டும். டெஸ்ட் எடுத்துப் பார்த்துடலாம்.''

ஏறத்தாழ மூன்று மணி நேரம் - மயக்கம் தெளிந்துவிட்டது. உடனே டெஸ்ட் எடுக்க அழைத்துப் போனார்கள். சகல மருத்துவ பரிசோதனைகளையும் முடித்து, திரும்பவும் அறைக்குக் கொண்டு வந்தார்கள். நடேசன், துர்கா, செந்தில் மூவரும் உள்ளே வர, ஆனந்த் கண் திறந்தான். செந்தில் அருகில் வந்தான்.

''எனக்கே தோணல. துர்காக்கா போன் பண்ணின பிறகுதான், நானே லாக்கப்ல இருந்து உங்களை வெளியே எடுத்தேன்.''

நடேசன் பார்த்தார்.

''உன்னைப் பெத்தவ ராஜம். பக்கத்துல இருந்துருக்கா. உயிர் பயத்துல அவ முதல்ல ஓடி வந்துருக்கா. என் பிள்ளையைக் காப்பாத்துங்கனு சொல்லக்கூட இல்லை. காரணம், அந்த நொடியில அவளுக்கு தன்னைப் பத்தின சிந்தனை மட்டும்தான். ஆனா, துர்கா மட்டும்தான் உன்னை நெனைச்சு, செந்திலுக்கு உடனே போன் போட்டா. தொப்புள் கொடியை தாலிக் கொடி ஜெயிச்சுடுச்சு!''

''மாமா... இதெல்லாம் எதுக்கு?''

''சொல்ல வேண்டிய நேரத்துல சொல்லிடணும் துர்கா. உன்னைக் கொல்ல வந்தவன், கொடுமைப்படுத்தினவன், கூடாத பேச்சுக்களை பேசினவன், குணங்கெட்ட தாயை அதிகமா நம்பினவன், இன்னிக்கு யாரால காப்பாத்தப்பட்டிருக்கான்?''

ஒரு மணி நேரம் உருண்டோட... டாக்டர் இவர்களை அழைத்தார்.

''இதயம் பலவீனமா இருக்கு. பலமான அதிர்ச்சி வந்தா, தாங்காது. சர்க்கரை, ரத்த அழுத்தம், எல்லாமே தாராளமா இருக்கு. நிறைய ட்ரீட்மென்ட் எடுக்கணும்.''

''இங்கே வெச்சுக்கணுமா டாக்டர்?''

- செந்தில் கேட்டான்.

''ரெண்டு நாள் இருந்து, ட்ரீட்மென்ட் எடுக்கட்டும். அப்புறமா சொல்றேன்.''

''ஆனந்த் கஸ்டடியில இருக்கிற காரணமா... எங்க கான்ஸ்டபிள் ஒருத்தர் இருப்பார்'' என்று சொல்லிவிட்டு செந்தில் வெளியே வந்தான்.

'’அக்கா, உங்க வீட்டுக்குப் போயிடலாம். நிறையப் பேசணும்.''

துர்கா வீட்டுக்கு அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

''மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கணும்க்கா...''

''ரெண்டும் மேஜர் கேஸ் இல்லையா? என்னைக் கொல்ல வந்தது, குறுக்கே வந்த டிரைவர் குத்துப்பட்டது...''

''ஆமாம்க்கா.''

''சம்பந்தப்பட்ட நான், கேஸை வாபஸ் வாங்கிக்கறேன்.''

''எதுக்கும்மா?''

''மாமா... ஆனந்த் மேல நமக்கு கோபமும் உச்சகட்ட வெறுப்பும் இருக்கலாம். ஆனா, அதை வெளிப்படுத்தற நேரம் இது இல்லை. இதய பலவீனம் தவிர... ஒடம்புல ஏராளமான நோய்கள் ஆனந்துக்கு.''

''செஞ்ச பாவம்மா!''

''மாமா... நான் இப்ப ஒரு மனைவியா பேசல... மனுஷியா பேசிட்டு இருக்கேன்!''

நடேசன் நிமிர்ந்தார்!

''செந்தில்... பாதிக்கப்பட்டவங்க கேஸை வாபஸ் வாங்க முடியாதா? அதுவும் நான் அவருக்கு மனைவிதானே? நீங்க நெனச்சா செய்ய முடியாதா? அந்த டிரைவர் சம்சாரத்தோட கால்ல விழுந்து, நஷ்ட ஈடுகொடுத்து இதை சரிக்கட்டலாம்னு நம்புறேன். ஒரு போலீஸ் அதிகாரியா மட்டுமில்லாம, எனக்கொரு தம்பியா இருந்து, இதை நீங்க செய்வீங்களா செந்தில்?''

சுதா அழுதுவிட்டாள்!

''அக்கா... உங்க முன்னால நிக்கக்கூட எங்களுக்கெல்லாம் தகுதி இல்லை. எப்பேர்ப்பட்ட வைரத்தை மனைவியா அடைஞ்சுருக்கார் ஆனந்த்!? அதைத் தக்க வெச்சுக்கத் தெரியலியே?''

''அதுக்குக் காரணம்... கேடுகெட்ட ராஜம். சில அம்மாக்கள், மகனுக்கு நல்லது செய்றதா நெனச்சு, அவனோட வாழ்க்கையில நெருப்பை மூட்டறாங்க. இவ அதுல முதல் இடத்துல இருக்கா. மகன் தூக்குல தொங்கினாலும் தப்பில்லை - மருமக தாலி அறுந்து போகணும்னு சந்தோஷப்படற கேவலமான பொம்பளை!''

''மாமா... இப்ப இதெல்லாம் எதுக்கு?''

''இல்லை துர்கா. அந்தக் கேடுகெட்டவள கட்டின புருஷன் நானும் தண்டிக்கல, பெத்த பிள்ளைகளும் தட்டிக்கேக்கல, அதுதான் தப்பு!''

சுதா குறுக்கிட்டாள்!

''அம்மாக்கள் சறுக்கும்போது பெண்கள் கேக்கணும்பா. ஆரம்பத்துல அம்மாவுக்கு நானும் கல்பனாவும் ரொம்ப கொம்பு சீவி விட்டுட்டோம். அதுக்காக வெக்கப்படறோம்!''

''விடு சுதா. செந்தில் என்ன செய்யப் போறீங்க?''

''நீங்க புகாரை வாபஸ் வாங்குங்க. அந்த டிரைவரையும் பார்த்துப் பேசலாம்.''

''செந்தில்... இதுல சமூக, அரசியல் செல்வாக்கு வேணும்னா, எங்க பழைய சேர்மனை நான் கூட்டிட்டு வர்றேன். அவருக்கு ஆளுங்கட்சி லெவல்ல நல்ல பலமிருக்கு.''

''சரிக்கா.''

''ஸாரி செந்தில்... உங்களுக்கு நான் நிறைய கஷ்டம் கொடுக்கறேன்.''

''அப்படி நான் நினைக்கலக்கா. சுதா மூலமா எனக்கொரு அற்புதமான அக்கா கெடச்சதுக்கு நான்தான் கொடுத்து வெச்சுருக்கேன்.''

புறப்பட்டுப் போய்விட்டான். துர்கா ஒரு பெருமூச்சுடன் வந்து உட்கார்ந்தாள்.

''துர்கா... நான் கொஞ்சம் பேசலாமா?''

''சொல்லுங்க மாமா...''

''அவன் கூட இனி நீ வாழ முடியுமா?''

துர்கா நிமிர்ந்து பார்த்தாள்!

''வேண்டாம்மா. அவனுக்கு ஒரு மனுஷியா இருந்து நீ உயிர்ப் பிச்சை கொடுத்துட்டே... தப்பில்லை. மனைவியா இருந்து வாழ்க்கைப் பிச்சை போடணுமா?''

''அந்த எண்ணம் எனக்கும் நிச்சயமா இல்லை மாமா.''

''வயசானாலும் தாம்பத்யம் உசத்திதான். ஆனா... ராஜத்தை ஒருக்காலும் நான் மன்னிக்கத் தயாரா இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் அவ செத்தாச்சு. ஆனந்த் குணமாகி, மத்தவங்க உதவி அவனுக்கு அவசியம் இல்லைனு ஆகும்போது, அவனை நீ விவாகரத்து பண்ணிடும்மா. உனக்கும், உன் குழந்தைக்கும் அதுதான் நல்லது.''

அவர் எழுந்து போய்விட்டார். துர்கா கண்களை மூடிக்கொண்டு சாய்ந்தாள்.

''அம்மா!''

- பள்ளிக்கூடம் விட்டு அஞ்சு உள்ளே ஓடி வந்தது.

''என்னம்மா? ஒடம்பு சரியில்லையா? ஏம்மா உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?''

''இல்லைடா ராஜாத்தி... தலைவலியா இருக்கு.''

''அத்தே... தைலம் எடுத்துட்டு வா. நான் அம்மாவுக்குத் தடவிவிடறேன்.''

சுதா கொண்டு வந்து தர, அஞ்சு தன் பிஞ்சு விரல்களால் அதை எடுத்து, துர்காவின் நெற்றியில் மெல்லத் தடவ, துர்காவுக்கு வேதனை பொங்கியது. கூடவே பெரிய ஆறுதலாகவும் இருந்தது. குழந்தையைத் தன்னோடு இறுக அணைத்து முத்தமிட்டாள்.

''போ... யூனிஃபார்மை கழட்டிட்டு, அத்தைகிட்ட டிபன் வாங்கிச் சாப்பிடு.''

குழந்தை போனதும்... துர்கா எழுந்து உள்ளே வந்தாள். அழுகை பொங்கியது!

'உனக்காகத்தானே இத்தனை வலிகளையும் நான் தாங்கறேன். நீ ஒருத்தி இல்லைனா, என் வாழ்க்கைப் பாதையே வேற மாதிரி இருந் திருக்குமே. இனிமே என்னோட பாதை எது? நான் எந்தத் திசையில பயணிக்கப் போறேன்?’

- கேள்விகள் திரண்டு கழுத்துக்கு முன் தூக்குக் கயிறு போலத் தொங்கியது.

அதே நேரம், ஆனந்த் ஆஸ்பத்திரியில் விழித்திருந்தான். ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. மற்ற இணைப்புகளும் உடலுடன் பொருந்தியிருக்க, திரும்பத் திரும்ப அந்த லாக்கப் - நிலநடுக்கம், அத்தனை பேரும் வெளியேறிய காட்சி - குறிப்பாக ராஜம் ஓடிய ஓட்டம்! நடேசன் ஆஸ்பத்திரியில் வந்து கேட்ட கேள்வி! 'தொப்புள் கொடியை தாலிக் கொடி ஜெயிச்சுடுச்சு!’ - அது திரும்பத் திரும்ப ஒலித்தது.

துர்காவை நடுரோட்டில் வைத்துக் கொலை செய்ய எடுத்த முயற்சி, பேசிய மோசமான வார்த்தைகள், நினைக்க நினைக்க நெஞ்சுக்குள் சூறாவளி. அந்த நிலநடுக்கம்... கட்டடங்களைவிட, ஆனந்தின் இதயத்தை மிக பலமாகவே உலுக்கியிருந்தது. நர்ஸ் உள்ளே வந்தாள்.

''உங்கம்மா வந்திருக்காங்க. நீங்க அதிகமா பேச வேண்டாம். நீங்களும் தொந்தரவு பண்ணாதீங்கம்மா. சீக்கிரமா பார்த்துட்டு வந்துடுங்க.''

அவள் விலக, ராஜம் புயலாக உள்ளே வந்தாள்.

''ஆனந்த்... உனக்கு என்னடா ஆச்சு?''

ஆனந்த் பேசவில்லை!

''நிலநடுக்கம் ஏற்பட்ட உடனே, என் உயிரைப் பத்தி நான் கவலைப்படல. உன்னைக் காப்பாத்த துடிச்சேன். என்னை அங்கே நிக்க விடாம போலீஸ் இழுத்துட்டுப் போய் வெளியில விட்டுச்சு. கதறினேன்டா. கேக்கல. அப்புறமா நான் கெஞ்சிக் கேட்டுத்தான் உன்னை வெளியில கொண்டு வந்திருக்காங்க!''

ஆனந்த் கண்களை அகட்டினான்!

அருகில் வந்து ராஜம் தொட்டாள்.

''கையை எடு. நான் ஒரு நல்ல தாய்க்குப் பிறக்கல. அசிங்கம் புடிச்ச ஒருத்தி என்னைப் பெத்தெடுத்திருக்கா!''

''ஆனந்த்!''

- அலறினாள் ராஜம்!

''அதுதான் நிஜம். இல்லைனா, நல்ல ஒரு மனைவியை அசிங்கப்படுத்தி, அவளைக் கொல்ற அளவுக்கு நான் கிரிமினலா இருந்திருக்க மாட்டேன். உயிர் பயத்துல ஓடிப்போன நீ, பொய் சொல்லி இப்ப உறவை புதுப்பிச்சுக்க வந்திருக்கியா? நீ எல்லாத்துக்கும் துணிஞ்சவ. உன் முகத்துல இனி நான் முழிக்கக் கூடாது. என் உயிர் இப்பவே போயிடணும். நீ ஒரு சண்டாளி, கொலைகாரி... ஆபாசமான அம்மா! போ! போயிடு!''

ஆனந்த் கூச்சலிட, ரத்த அழுத்தம் சரசரவென ஏற, கூச்சல் கேட்டு உள்ளே ஓடி வந்த நர்ஸ் மிரண்டு, ''என்னம்மா செஞ்சீங்க? ஐயோ... அவர் முகம் கோணி, வாய்ல நுரை தள்ளுதே!''

சில நொடிகளில் இரண்டு டாக்டர்கள் ஓடி வர, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஆனந்த் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்டான். கதவின் உச்சியில் அபாயத்தை அறிவிக்கும் சிகப்பு விளக்கு எரிய, ராஜம் நிலைகுலைந்து நின்றாள்!

ஆனந்துக்கு என்ன நேரப் போகிறது?!

- தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை

செய்தியைச் சொன்னதுமே... ''வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிக அற்புதமான பிறந்த நாள் பரிசு அவள் விகடனின் இந்த இயக்குநர் நாற்காலி. ஆம், இன்றைக்கு எனக்கு பிறந்த நாள்'' என பூரித்துப் போனார் விருதுநகரைச் சேர்ந்த உதயராணி.

துர்கா

''பேங்க் வேலையில் இருந்து வி.ஆர்.எஸ். வாங்கி முழுநேர இல்லத்தரசியாக மாறிய பின்பு... அவள் விகடன்தான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். என் மகனுக்கும் ரொம்பப் பிடிக்கும்... விரும்பி வாசிப்பான். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறது'' என்றவரின் குரலில் வார்த்தைகளில் வடிக்க முடியாத சந்தோஷம்... அது என்றென்றும் நிலைக்கட்டும்!

இவருக்கு 'வி.ஐ.பி. சூட்கேஸ்’ அன்புப் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி

இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-66808023 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லிவிட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்த கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக படைக்கும் வாசகிக்கு சூட்கேஸ் பரிசு! இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism