

''விழுப்புரம் என்றதும் முதலில் நினை வுக்கு வருவது சாதிக் கலவரம்தான். 1978-ல் நடந்த இந்தக் கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் 12 பேர் இறந்துபோனார்கள்'' என்று துயரப் பெருமூச்சோடு, தன் ஊர் பற்றிப் பேசத் தொடங்கினார் எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''நான் பிறந்தது விழுப்புரம் என்றாலும் ஒன்பது வயதுவரை நான் வளர்ந்தது விழுப்புரம் அருகே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வழுத ரெட்டி என்ற ஊர் ஆகும். படித்ததும் அங்கு உள்ள ஆதி திராவிட நலப் பள்ளியில்தான். வழுதிபிராட்டி என்று சங்க இலக்கியத்தில் கூறப்படும் அம்மையார் வாழ்ந்த ஊர். பெயர் மருவி வழுதரெட்டி என அழைக்கப்படுகிறது என்பது ஒரு செய்தி.
அதன் பின்பு நகரத்தின் வடக்கே ஓரமாக இருந்த ஒரு குட்டைப் புறம்போக்கில் என்னுடைய ஆரம்ப கால வாழ்வும் படிப்பும் அமைந்தது. அந்தப் பகுதி 'புறாக்குட்டை’ என அழைக்கப்பட்டது. நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி அது. என் அம்மா பாக்கியமும் நகராட்சித் தொழிலாளியே. அப்பா பாவாடை கண் பார்வையற்றவர்.
நூற்றாண்டுப் பழமைமிக்க நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் உயர் நிலைக் கல்வி படித்தேன். 125 ஆண்டு கால ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தற்போது அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக இயங்குகிறது. விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்தபோதுதான் எனக்கான அரசியல் பார்வையின் ஆரம்பம் உருவானது.என்னு டைய வகுப்புத் தோழன் ஆதவனின் பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி-பாமா ஆகியோர் எனக்குள் பகுத் தறிவுச் சிந்தனைகளை விதைத்தனர்.


பேராசிரியர் கல்யாணியால் தொடங்கப்பட்ட கலை இலக்கிய அமைப்பான 'நெம்புகோல் மக்கள் கலை இலக்கிய இயக்கம்’ விழுப்புரத் தில் தோன்றிய மிக முக்கியமான இயக்கம். தமிழ்ச் சங்கம், தென்பெண்ணை, மருதம், சங்க இலக்கியம் பொதும்பர், கம்பன் கழகம், விடுதலைக் குயில்கள், நூறு பூக்கள், சுட்டு விரல், பாரதிபுலம், குறள் நெறி மாற்றம் என 15-க்கும் மேற்பட்ட கலை இலக்கிய அமைப்பு கள் விழுப்புரத்தில் இருக்கின்றன என்பதே கலை, இலக்கிய ஈடுபாட்டைச் சொல்லும். இருந்தாலும் இவைகளில் இருந்து வேறுபட்டு 'நெம்புகோல்’ இயக்கம் ஒரு வெகுசன அமைப்பாகக் கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே என முழங்கியது.

சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் 'கூவாகம்’ திருவிழாவுக்காக ஒரு மாதம் முன்னரே விழுப்புரத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் கூடுவார்கள் என்பது பலரும் அறிந்ததுதான்.
தெற்கையும் வடக்கையும் இணைக்கிற மிகப்பெரிய ரயில் நிலைய சந்திப்பு இங்கு உள்ளது. விழுப்புரம் அருகே உள்ள திருவக்கரையில்தான் உலகப் புகழ்பெற்ற 'கல் மரங்கள்’ உள்ளன. பல் வேறு கல்வெட்டுகளும் புராதானச் சின்னங்களும், தொன்மங்களும் விழுப்புரத்தில் கிடைத்து உள்ளன.

##~## |
பல அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் விழுப்புரத்தில் தொடங்கப்பட்டன. அது என்ன சென்டிமென்ட் எனத் தெரியவில்லை. தேர்தல் காலத்தில் கூடப் பல தலைவர்கள் விழுப்புரத்தில் இருந்தே பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்.
பல படைப்புகளை எழுதி இருக்கிற எனக்குள் இன்னும் அணையாமல் கனன்றுகொண்டு இருக் கிற ஆதங்கம் ஒன்று உண்டு. விழுப்புரம் சாதியக் கலவரத்தைப் படைப்பாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் அது. நிச்சயம் எழுதுவேன்; இயங்குவேன்!''
படங்கள்: ஆ.நந்தகுமார்