Published:Updated:

தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் !

யூமா வாசுகி ,ஹரன்

##~##

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளில் கராயா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு முறை அவர்களுக்குப் பெரிய ஆபத்து வந்தது.

எங்கு இருந்தோ பயங்கரமான இரண்டு குரங்குகள் அங்கே வந்தன. அந்தக் குரங்குகள் கராயார்களைத் தாக்கின. பலரையும் கடித்துக் கொன்றன. கிராமங்களில் புகுந்து பயிர்களை அழித்தன. குரங்குகளுக்குப் பயந்து மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்கள்.

அங்கே ஒரு வீட்டில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் சொன்னான், ''நான்தான் வீரன். வீரர்களுக்கு எல்லாம் வீரன்.''

இதைக் கேட்ட இரண்டாமவன்,  ''நானும் வீரன். வீரர்களுக்கு எல்லாம் வீரன்!'' என்றான்.

மூன்றாமவன், ''நான் கோழை. உலகிலேயே மிகப் பெரிய கோழை'' என்றான்.

தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் !

உடனே மூத்தவன், ''எது வந்தாலும் நாம் இந்த ராட்சசக் குரங்குகளைக் கொன்று, நம் மக்களைக் காப்பாற்ற வேண்டும். இளையவன் வீட்டிலேயே இருக்கட்டும். அவன் ஒரு பயந்தாங்கொள்ளி அல்லவா...'' என்றான்.

இருவரும் தம்பியை வீட்டில் இருக்க வைத்தார்கள். வில் அம்புகளையும் மற்ற ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குச் சென்றார்கள்.

அமேசான் நதிக்கரை வழியாகக் குரங்குகள் வாழ்கின்ற காட்டினுள் நுழைந்தார்கள். அங்கே ஒரு பெரிய குளம் இருந்தது. அவர்கள் ஏற்கெனவே தாகத்தால் தவித்துக்கொண்டு இருந்ததால், நீர் பருகுவதற்காகக் குளத்தை நோக்கிக் குனிந்தார்கள். திடீரென்று உரத்த குரலில் குளம் பேசியது...

''குடிக்காதீர் கலக்காதீர்
என் தண்ணீரைக் குடிக்காதீர்
குளத்தின் உள்ளே
ஒரு தவளையும் உண்டே!''

திடீரென்று தண்ணீரின் நிறம் மாறியது. குளத்தின் அடியில் இருந்து பெரிய தவளை ஒன்று மேலே வந்தது. ''வீரர்களே... நீங்கள் குரங்குகளைக் கொல்வதற்காகப் புறப்பட்டவர்கள் தானே? குரங்குகள் எங்கே இருக்கின்றன என்று நான் சொல்கிறேன். அதற்குப் பதிலாக உங்களில் ஒருவர் என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்!'' என்றது.

தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் !

''ஒரு தவளையைத் திருமணம் செய்து கொள்வதா? எங்களுக்கு விருப்பமில்லை!'' என்ற சகோதரர்கள், தவளையை ஓங்கி உதைத்தார்கள். பாவம் அது... தண்ணீரில் மூழ்கி மறைந்தது.

அவர்கள் காட்டின் உட்பகுதியில் நுழைந்தார்கள். ராட்சசக் குரங்குகளின் கூச்சல் கேட்டது. திடீரென வெளிப்பட்ட அந்தக் குரங்குகள், மரக் கிளைகளை ஒடித்து அவர்களைத் தாக்கின. சகோதரர்கள் இருவரும் ஓடத் தொடங்கினார்கள். ஓடி ஓடிக்  காட்டில் திசை தவறிவிட்டார்கள்.

சகோதரர்களைக் காணவில்லையே என்று அஞ்சினான் கடைசித் தம்பி. அவர்களைத் தேடிக்கொண்டு பயத்துடன் காட்டுக்கு வந்தான். அவனுக்கு மிகவும் பசித்தது. காட்டுச் செடிகளில் சில செடிகளின் கிழங்குகளைத் தோண்டிச் சாப்பிட நினைத்தான். அவன்தான் போதிய பலம் இல்லாதவன் ஆயிற்றே! கிழங்குகளைத்  தோண்டி எடுக்க அவனால் முடியவில்லை.பறவைகளை வேட்டையாடுவதைத் தவிர்த்தான். அங்கும் இங்கும் நடந்தான். அப்போது, ஒரு பொந்தில் இருந்து பெரிய பாம்பு இறங்கி வந்தது. ''அடேய் கோழைப் பையா இதோ! மந்திரசக்தி வாய்ந்த அம்பு!'' என்று ஓர் அம்பைக் கொடுத்துவிட்டு,

''அம்பைக் கொண்டு சென்றிடுவாய்
துன்பம் தருவோரை வென்றிடலாம்!''

என்று பாடியது. மந்திர சக்திபெற்ற  அம்பை அவன் பணிவுடன் பெற்றுக்கொண்டான். பிறகு, அந்தப் பாம்பு தன் வாயில் இருந்து கொஞ்சம் விஷமும் எண்ணெயும் எடுத்தது. இரண்டையும் நன்றாகக் குழைத்து அவன் உடலில் பூசியது. உடனே அவன் பெரிய பலசாலியாக மாறிவிட்டான்.

''அரக்கக் குரங்குகளை நானே
அடித்துக் கொல்வேன் நிச்சயம்!
காட்டில் தொலைந்த அண்ணன்களைக்
கண்டுபிடிப்பேன் கட்டாயம்!''

என்று பாடினான். அப்போது பாம்பு, ''அந்தக் குரங்குகள் உண்மையிலேயே குரங்குகள் அல்ல. இரண்டு அரக்கர்கள்தான் குரங்கு வேடத்தில் திரிகிறார்கள். குறி பார்த்து சரியாக அம்பை எய்தால், இரண்டு அரக்கர்களும் செத்து விழுவார்கள். நீ செல்லும் வழியில் குளக்கரையில் ஒரு தவளையைச் சந்திப்பாய். அந்தத் தவளை சொல்வதுபோல் செய்!'' என்றது.

அவன் வில் அம்புடன் குரங்குளைத் தேடிச் சென்றான். வழியில் பெண் தவளையைப் பார்த்தான். அந்தத் தவளை, ''என்னை நீ  திருமணம்  செய்துகொள்வாயா?'' என்று கேட்டது.

தவனை இளவரசியும் குரங்கு அரக்கர்களும் !

'பாம்பு எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறது. தவளையைத் திருமணம் செய்துகொள்வோம். அது நன்மை தரும்  என்று நினைத்த அவன், ஒரு மலர்க் கொடியைச் சூட்டி தவளையைத் திருமணம் செய்துகொண்டான்.

தவளையும் அவனும் காட்டு வழியே நடந்தார்கள். தூரத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் பொந்தும் மிகப் பெரிதாக இருந்தது. பொந்துக்குள் தெரிந்தன குரங்குகளின் தலைகள்.

உடனே தவளை சொன்னது, ''தலைகள் தெரியுது அஞ்சாதே!

அம்பு தொடுப்பாய் தயங்காதே!''

அவன் அம்பு எய்தான். அது சரியாக ஒரு குரங்கின் நெற்றியில் பதிந்தது. உடனே இரண்டு குரங்குகளும் இறங்கி ஓடின. அவன் மீண்டும் அம்பை எய்தான். குரங்குகளின் மேல் தோல் கழன்று விழுந்தன. குரங்குத் தோலில் இருந்த அரக்கர்கள் மடிந்தார்கள்.

அரக்கர்களிடம் இருந்து கழன்று விழுந்த குரங்குத் தோலை எடுத்தான் தம்பி. அதை ஒரு கொடி போலக் கம்பில் கட்டி உயர்த்திக்கொண்டு ஆடினான்.

''வென்றேனே நான் வென்றேனே
அரக்கக் குரங்குகளை வென்றேனே!''

பிறகு தவளையும் அவனும் காட்டுக்குள் தொலைந்த அண்ணன்களைத் தேடிப் புறப்பட்டார்கள். ஓர் இடத்தில் அவர்களைக் கண்டுபிடித்தார்கள். தம்பியை அணைத்துக் கொண்ட அண்ணன்கள், ''தம்பி, உனது பணிவுதான் உனக்கு வெற்றியைக் கொடுத்து இருக்கிறது. வீரம் இருந்தும் எங்கள் ஆணவமே தோல்வியைக் கொடுத்தது'' என்றார்கள்.

பிறகு, அவர்கள் வீட்டை அடைந்தார்கள். வீட்டுப் படியில் கால்வைத்ததும் அந்தத் தவளை, அழகான இளவரசியாக மாறியது. ''ஒரு சாபத்தின் காரணமாக நான் தவளையாக மாறிக் குளத்தில் வாழ்ந்தேன். உனது கருணையால் சாபத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன். இனி நாம் மகிழ்ச்சியாக வாழலாம்!'' என்றாள்.

பழைய வீடு இருந்த இடத்தில் அழகான அரண்மனையைக் கட்டி அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தார்கள்.