Published:Updated:

போர் விளையாட்டு !

கூத்தலிங்கம் ஹரன்

##~##

பள்ளிக்கூடத்தில் 'இன்டர்வெல் பெல்’ அடித்தார்கள். நாங்கள் முருகனை அழைத்து, 'சேதுவின் வகுப்புக்குப் போய், ஞாயிற்றுக் கிழமை அவனோடு போர் தொடுப்பதைச் சொல்லிவிட்டு வா’ என்றோம்.

முருகன் சேதுவிடம் சொன்னதும், ''வாங்கடா வாங்க... வந்து நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டுப் போங்க'' என்றானாம். தனக்கு ஆதரவான பயல்களைத் திரட்டி, அந்தப் போரை எதிர்கொள்ள முடிவுசெய்தான். மறுநாள் முதல் மணி அடிப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே பள்ளிக்கு வந்துவிட்டான். கால் சட்டையின் இரண்டு பைகளிலும் நிரப்பிவைத்து இருந்த நாவல் பழங்களைக் கொடுத்து, ஆட்களைப் பிடித்துக்கொண்டு இருந்தான்.

நான் ஐந்தாம் வகுப்பு 'பி’ கிளாஸுக்குள் ஓடிப்போய் கணபதியிடம் விஷயத்தைச் சொன்னேன். கணபதி, மணி, நான், சேகர், ரத்தினம் எல்லோரும் ஒன்று கூடினோம். எங்களிடம் இருந்த சில்லறைக் காசுகளை எடுத்து, கணபதியின் உள்ளங்கையில் வைத்தோம். எங்களுக்கான ஆட்களைத் திரட்டி, அவர்களுக்கு சவ்வு மிட்டாய்கள் வாங்கிக்கொடுத்தோம். அதைத் தின்றபடியே போர்த் திட்டம் பற்றிப் பேசினோம்.

ஞாயிற்றுக் கிழமை. காலை கஞ்சி குடித்ததும் ஓர் இடத்தில் கூடினோம். ஒவ்வொரு வீரர்களாக வந்தார்கள். ''முருகானந்தம் வரலியாடா?''

போர் விளையாட்டு !

''அவன் அம்மா, மாடு அவுத்துக் கொல்லையில விடச் சொல்லிருச்சாம். மாட்டை ஓட்டி விட்டுட்டு வந்துடுறேன்னான்'' என்று சொல்லிக்கொண்டே ராசாப் பய எங்களோடு ஆயுதங்கள் தயாரிக்கும் பணியில் இணைந்தான்.

மழைக் காலத்தில் தண்ணீர் வந்து கூடும் நீர்வாரிக் குட்டையின் புதருக்குள் இறங்கினோம். உயரம் உயரமாக வளர்ந்து இருந்த நாணல் தட்டைகளை முறித்து, முழ நீளக் குச்சிகளாக ஒடித்தோம். அந்தக் குச்சிகளின் முனைகளில் சப்பாத்திக் கள்ளியின் முட்களைச் செருகினோம். அதுதான் அம்பு. அதுபோல நிறைய அம்புகளைச் செய்தோம். சாமிவேல், குமார், ரவி இந்த மூணுபேரும் வில்களைத் தயாரித்தார்கள். நீளமான புலாங்குச்சிகளை ஒடித்துக் காவடி போல வளைத்து, குச்சியின் இரு முனைகளையும் சணலால் டைட்டாக இருக்கும்படி இணைத்தார்கள். இன்னும் சில வீரர்கள் களிமண்ணைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் காயவைத்தார்கள். சைக்கிள் டியூப்பைக் கிழித்துக் கவைக் குச்சிகளில் கேட்டாபெல்ட் கட்டினார்கள்.

போர் விளையாட்டு !

''ஏய், விடுத்தான் வந்துட்டான்டா'' என்று கரப்புச் சொன்னதும் நாங்கள்  ஆயுதத் தயாரிப்பைப் போட்டுவிட்டு, விடுத்தானிடம் ஓடினோம். கரப்பு அவனிடம் கேட்டான், ''சேது பக்கம் பயலுக நெறைய சேர்ந்துருக்கானுகளா? அவன் என்னென்ன மாதிரி ஆயுதங்களை வெச்சிருக்கான்?''

''அங்கேயும் பதினஞ்சு இருவது பயலுக இருக்கானுவ. கப்பிக் கல்லுகளைக் கொண்டுவந்து மறச்சி வெச்சிருக்கானுவ. அதோடு, மூணு நாய்களைக் கொண்டாந்து வெச்சிருக்கானுவ. கடிக்கப் பழக்குன நாய்களாம்'' என்றான் விடுத்தான். சாமிவேல் உடனே, ''எங்கம்மா தேடும். நான் போறேன்'' என்று நழுவினான்.

''போருக்கு நேரமாச்சு எல்லோரும் ரெடி ஆகுங்கடா'' என்றான் கணபதி.

குட்டைக் கரை ஓரம், கத்தரிப்பூ நிறத்தில் பூப்பூத்துக் கிடக்கும் நீண்ட காட்டுக் கொடிகளைப் பிடுங்கினோம். அதன் இலைகளை ஆய்ந்து, அந்தக் கொடிகளை நீள் சதுரமாக வீட்டின் அறை போல இணைத்துக் கட்டினோம். மிளாக் குச்சிகளை வட்டமாக வளைத்து ஸ்டெயரிங் போலச் செய்து முன் பக்கம் இணைத்தோம். இப்பொழுது வாகனங்கள் தயார். மூன்று தனித் தனி படைப் பிரிவுகளாக மூன்று வெவ்வேறு வாகனங்களில் (கொடி இணைப்பு) போய் நின்றுகொண்டோம். எங்களுக்கு எல்லாம் தளபதியாக நெருப்புக் குச்சி இருந்தான். அவன் தனது வாகனமாகிய சைக்கிள் டயரை குச்சியால் தட்டி உருட்டிக்கொண்டு வேகமாகப் போனான். அவனுக்கு இரண்டு பக்கத்திலும் வில்லேந்திய வீரர்கள் பாதுகாவலர்களாக ஓடினார்கள்.

அடுத்து வில் அம்புகளுடன் இருக்கும் வீரர்கள் அணிவகுத்து நிற்கும் அடுத்த கொடி வாகனம் புறப்பட்டது. அதை அடுத்து, களிமண் ரவை உருண்டை மற்றும் கேட்டா பெல்ட் வீரர்கள் வாகனம் புறப்பட்டது. பிறகு, கொடி வாகனம் புறப்பட்டது. அதில் தூது செல்பவர்களும், ஆயுதங்கள் தீர்ந்துபோனால், கற்களை அள்ளி வந்து உதவி செய்பவர்களும் இருந்தார்கள். அநேகம் பேர் நோஞ்சான் பையன்கள். அந்தப் படைப் பிரிவில்தான் நான் இருந்தேன். பல ஒற்றையடிப் பாதைகளைக் கடந்து வாகனங்கள் விரைந்தன.

சேதுவின் வீட்டுக்கு முன்னால் சடன் பிரேக் போட்டு வாகனங்கள் நின்றபோது, வாகனங்களின் நடுவில் நின்று இருந்த ஒரு சில வீரர்கள், கால்கள் பின்னித் தரையில் விழுந்தார்கள். சேதுவின் வீட்டுச் சூழலில் எதிர்ப் படையினர் யாரையும் காணவில்லை. சுப்பிரமணியை சேதுவின் வீட்டின் முன் பக்கமாகப் போய்ப் பார்த்து வருமாறு அனுப்பினோம். அவன் போனான். நெடு நேரம் ஆனது. திரும்பி வரவில்லை. கரப்பு, ''நான் பாத்துட்டு வரேன்'' என்று சொல்லிவிட்டுபோனான். சந்து மறைவில் நின்று பார்த்துவிட்டு வேகமாக வந்த கரப்பு, ''டேய், சுப்பிரமணி அவங்க வீட்டுத் திண்ணையிலே உக்காந்து நொங்கு தின்னுக்கிட்டு இருக்கான்டா. அவன இனி நம்ப வேண்டியதில்லை'' என்றான்.

போர் விளையாட்டு !

''துரோகிப் பய'' என்றான் கணபதி. இப்போது நெருப்புக்குச்சி சத்தமாகக் கத்திச் சொன்னான். ''டேய் சேது பயந்தாங்கோழி... ஒனக்கு துணிச்சல் இருந்தா நீ ரோசக்காரனா இருந்தா, ஒங் கூட்டாளிகளோடு வந்து எங்கள எதிர்த்துப் போர் செய்டா''

எதிர்த்தரப்பில் இருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. நாங்கள் அமைதியாகச் சேதுவின் வீட்டுப் படல் வழியைப் பார்த்தோம். அந்த வழியாகத்தான் அவர்கள் போருக்கு வரவேண்டும். யாரும் வரவில்லை. ''ஓடி ஒளிந்துவிட்டார்கள்'' என நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் மாடியின் மேல்புறங்களில் இருந்து சரேல் சரேலென கற்கள் பறந்து வந்தன. நாங்கள் வாய்க்கால் புதரிலும் மரங்களின் பின்புறங்களிலும் ஓடி மறைந்தோம். பறந்து வந்து ஒரு கல் முனுசாமியின் பின்மண்டையைத் தாக்கியது. இன்னொரு கல் கொழுக்கட்டையின் காலில் அடித்தது. அவன் நொண்டிக்கொண்டே வாய்க்கால் பொந்திற்குள் ஒளிந்தான்.

நாங்கள் ஆங்காங்கே ஒளிந்திருந்தோம். அவர்கள் மெதுவாக வாய்க்கால் பக்கம் வந்தார்கள். எங்களது படை வீரர்களிடம் இருந்து கிளம்பிய முட்கள் பதித்த அம்புகள், அவர்களை மொய்த்தன. அவர்கள் சேதுவின் வீட்டு வாசலை நோக்கி ஓடினார்கள். எங்கள் வீரர்கள் வில்களில் அம்புகளை ஏந்தியபடி  துரத்தினார்கள். அவர்கள் சேது வீட்டுக்குள் ஓடிப்போய் மூங்கில் படலை இழுத்துச் சாத்திவிட்டார்கள். நாங்கள் எல்லை தாண்டிப் போகக் கூடாது. அது பெரிய பிரச்னை ஆகிவிடும். அங்கேயே நின்றுவிட்டோம்.

அவர்களது படையின் கருத்தப்பன் நாய்களை உசுப்பிவிட்டான். இரண்டு நாய்கள் வேலியைத் தாண்டிக் குதித்து வெவ்வேறு திசைகளில் ஓடிவிட்டன. ஒரு நாய் மட்டும் எங்களை பார்த்து வந்தது. கரப்பு கேட்டாபெல்ட்டில் களிமண் ரவையைவைத்து குறிபார்த்து அடித்தான். அந்த நாய் 'வவ்...'' என்று நீளமாக ஊளையிட்டபடி ஓடியது.

அப்போது கட்டை வண்டியில் சேதுவின் அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார்கள். அங்கே நாங்கள் நின்றுகொண்டு இருந்த நிலையைப் பார்த்ததும் சேதுவின் அம்மா  திட்டிக்கொண்டே இறங்கினார். நாங்கள் ஓடிப்போய் புதர்களிலும் பொந்துகளிலும் ஒளிந்து கொண்டோம்.

இப்பொழுது போர் ஓய்ந்ததுபோல காணப்பட்டது. ஆனாலும் நெருப்புக்குச்சிப் புதருக்குள் உட்கார்ந்தபடி மற்ற பையன்களிடம் சொன்னான், ''அன்னிக்கி ஒருநாள் சேதுப் பய நம்மள அவன் வீட்டு நாவல் மரத்துல ஏறவிடாமத் தடுத்தானே ஞாபகம் இருக்கா. அவன வெளுத்துக் கட்டாம போகக் கூடாது''

வீட்டுக்குள் சேதுவின் அம்மா அவனை பொட்டுக்கடலை வாங்கி வரக் கடைக்குப் போகும்படி சொன்னது எங்களுக்குக் கேட்டது. நாங்கள் அமைதியாகப் பதுங்கி இருந்தோம்.  சேதுவின் தங்கை, வீட்டு வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்துவிட்டு, ''யாரும் இல்லை... எல்லாரும் போயாச்சு'' என்று வீட்டுக்குள் ஓடிப்போய்ச் சொன்னது. பிறகு, சேது வாய்க்கால் ஓரமாக இருக்கும் மண் ரோட்டுக்கு பாட்டுப் பாடியபடி வந்தான்.  புதருக்குள் மறைந்து இருந்த நாங்கள் சரேலென வெளிப்பட்டு, அவனைக் கண்டமேனிக்கு அடித்தோம். சத்தம் கேட்டு சேதுவின் அம்மா ஓடிவந்தார். நாங்கள் புகைபுகையாய் அங்கே இருந்து ஓடிப் போய்விட்டோம்.

எங்களது ஒவ்வொருவர் வீட்டுக்கும் தகவல்போனது. வீட்டுக்குப் போனால் அடி கிடைக்கும். ராச் சோறு திங்கக் கூட நாங்கள் வீட்டுக்குப் போகவில்லை. கோயில் மடங்களிலும் குளத்துப் படிக்கட்டுகளிலும் பதுங்கிக் கிடந்தோம். மறுநாள் எங்களை வீட்டில் இருந்து தேடிவந்து அவரவர்கள் பெற்றோர்கள் இழுத்துப்போனார்கள்.

சேதுவிற்கு காய்ச்சல் என்று சேதி வந்தது. நான், கரப்பு, ரவி மூணு பேரும் சேதுவைப் பார்ப்பதற்குப் போனோம். நாங்கள் தயங்கித் தயங்கி அவன் படுத்து இருந்த திண்ணையில் உட்கார்ந்தோம். எங்களைப் பார்த்ததும் அவன் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். எதுவும் பேசவில்லை. அவன் அம்மா காபியை எங்களிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார். நாங்கள் தயங்கினோம். ''பரவாயில்லை, குடிங்கடா'' என்றது சேதுவின் அம்மா. கரப்பு முதலில் டம்ளரை வாங்கிக் குடித்தான். ''ஏண்டா, ஒன்ன மாதிரி அவனும் ஒடம்புக்கு முடியாதவன்தானடா... பாரு, ரெண்டு நாளா அவன் எழும்பல'' என்றது.

சேதுவின் அம்மா வீட்டுக்குள் சென்றதும் நாங்கள் மூன்று பேரும் சேதுவின் கையைப் பிடித்தபடி சொன்னோம், ''சேது, அடுத்த போர் நடக்கிறப்ப நாங்க உன் பக்கம்தான் இருப்போம். இது சத்தியம்!''

சேது பெருமிதமாகச் சிரித்தான்.