Published:Updated:

கனவான்களின் ஆட்டம்

என்.சொக்கன்ஓவியங்கள் : ஸ்யாம்

கனவான்களின் ஆட்டம்

என்.சொக்கன்ஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

ந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், எங்கள் ஏரியாவில் பலருக்குக் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரே காரணம்... சச்சினோ, டோனியோ அல்ல... நிஷா!

 சேட்டுப் பொண்ணு என்று செல்லமாக அழைக்கப்படுகிற நிஷா, ஏதோ கல்லூரியில் என்னவோ படிக்கிறாள். மிஞ்சிய நேரத்தில் ஆர்வமாக கிரிக்கெட் வளர்க்கிறாள். நிஷா இங்கே வருவதற்கு முன்னால், எங்களுடைய காந்தி பார்க்கில் எந்த ஒரு விளையாட்டும் தனி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒரு மூலையில் சிலர் ஸ்டம்ப் நட்டு பந்தை விரட்டிக்கொண்டு இருப்பார்கள். இன்னொரு மூலையில் கால் பந்துகள் உருண்டோடும். நடுவில் சிலர் கபடி ஆடுவார்கள். இன்னும் சிலர் வலை கட்டாமல் இறகுப் பந்தோ வாலிபாலோ தட்டுவார்கள். உடம்பைக் குறைப்பதற்காக நடக்கிறவர்களும் ஓடுகிறவர்களும் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல்முறையாக நிஷா இந்தப் பூங்காவில் கால் பதித்தபோது, அங்கே கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்த எங்களுடைய அதிர்ஷ்டம், அவள் நேராக எங்களை நோக்கி வந்தாள். ''ஹாய் எவ்ரிபடி... ஐ யாம் நிஷா'' என்றாள் பக்கா பிரிட்டிஷ் உச்சரிப்பில். நாங்கள் பதில் சொல்லத் தோன்றாமல் திகைத்து நின்றோம்.

கனவான்களின் ஆட்டம்

காரணம், காந்தி பார்க் முழுக்க முழுக்க சேவல் பண்ணைதான். இங்கே பெண்கள் நுழைகிற வழக்கமே கிடையாது. அதுவும் நிஷாபோல் ஒருத்தி நுனி நாக்கு ஆங்கிலமும் இறுகப் பிடித்த ஜீன்ஸ், டி-ஷர்ட்டுமாக வந்து நின்றால் என்னத்தைப் பேசுவது? பராக்குப் பார்க்கதான் முடியும்.

நிஷா அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சட்டென்று தமிழுக்குத் தாவி ''எனக்குக் கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும், நானும் உங்களோட சேர்ந்துக்கலாமா?'' என்றாள். ''ஷ்யூர்'' என்றேன் நான். என்னுடன் இருந்த சிநேகிதர்களையெல்லாம் அவளுக்கு அறிமுகப்படுத்தினேன். எல்லாரும் ''ஹலோ'' சொல்லி முடித்ததும், ''புதுசா டீம் பிரிக்கலாமா?'' என்றேன்.

''அதெல்லாம் வேணாம். நீங்க எப்பவும்போல விளையாடுங்க'' என்றாள் நிஷா. ''எனக்கு கிரிக்கெட் வேடிக்கை பார்க்கத்தான் பிடிக்கும், விளையாடத் தெரியாது.''

அதன் பிறகு, ஒவ்வொரு நாளும் எங்களுக்கு முன்னால் நிஷா அங்கே ஆஜராகிவிடுவாள். கையில் எப்போதும் ஓர் ஆங்கில நாவல் இருக்கும். நாங்கள் வந்தவுடன் அதை மூடி வைத்துவிட்டு, முழு நேர கிரிக்கெட் ரசிகை ஆகிவிடுவாள். டாஸ் போடுவதில் ஆரம் பித்து ஒவ்வொன்றுக்கும் கை தட்டுவாள். பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் எகிறிக் குதித்துப் பாராட்டுவாள். அதற்காகவே நாங்கள் அதிக தீவிரத்துடன் விளையாட ஆரம்பித்தோம்.

அதே நேரம் எங்களைச் சுற்றி ஃபுட்பாலும் பேட்மிட்டனும் விளையாடிக்கொண்டு இருந்த மற்றவர்களும் நிஷாவைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். 'இந்தப் பெண் ணுக்குக் கிரிக்கெட் மீது மட்டும் என்ன இத்தனை ஆர்வம்?’ என்று பொறாமையுடன் வெறித்தார்கள்.

தொடர்ந்த நாட்களில் பலர் அங்கிருந்து இங்கே கட்சி மாறுவது வழக்கமாகிவிட்டது. மற்ற விளையாட்டுகள் காணாமல் போய் மொத்த மைதானத்தையும் கிரிக்கெட்டே ஆக்கிரமித்துக்கொண்டது. ஏழெட்டுப் பேரை மட்டும் வைத்துக்கொண்டு ஏதோ குத்துமதிப்பாக டீம் பிரித்து ஆடிக்கொண்டு இருந்த நாங்கள், நிஜ கிரிக்கெட் போட்டிகளில் வருவதுபோல, இந்தப் பக்கம் பதினொன்று அந்தப் பக்கம் பதினொன்று என்று பக்காவாக விளையாட ஆரம்பித்தோம். சுமாராக விளையாடுகிறவர்கள் இரக்கம் இல்லாமல் வெளியேற்றப்பட்டார்கள். திறமைக்கு மட்டுமே மரியாதை.

இத்தனை மாற்றத்துக்கும் ஒரே காரணம், நிஷாதான். அவளுடைய கைதட்டலுக்காகவும் பாராட்டுக்காகவுமே ஒவ்வொருவனும் குடம் குடமாக வியர்வை சிந்தினான். ஆச்சர்யமான விஷயம், நிஷா எங்களில் யார் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தவில்லை. அவளுக்கு இரண்டு அணிகளுமே ஒன்றுதான். விக்கெட் விழுந்தாலும் குதிப்பாள்; அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்தாலும் குதிப்பாள். அவளுக்கு எந்த டீம் எத்தனை ரன் எடுக்கிறது, யார் ஜெயிக்கிறார்கள் என்பன போன்ற லௌகீக விஷயங்களில் அக்கறை இல்லை. விளையாட்டை ரசிப்பதுதான் முக்கியம் என்பாள்.

அப்புறம், இந்தியாவில் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகிய இருவருக்கு மட்டுமே தெரிந்த கவர் ட்ரைவ், புல் ஷாட், தூஸ்ரா, யார்க்கர் இன்ன பிற கிரிக்கெட் வார்த்தை கள் எல்லாம் எப்படியோ நிஷாவுக்கு மனப்பாடம் ஆகியிருந்தன. சரியான நேரத்தில் அவற்றை எடுத்துத் தூவி எங்களை உற்சாகப்படுத்துவாள். நாங்கள் ஒன்றும் புரியாமல் தலையாட்டுவோம்.

முறையான பயிற்சி இல்லாதது மட்டும்அல்ல, நாங்கள் விளையாடப் பயன்படுத்திய பேட், பந்து, ஸ்டம்ப் எல்லாமே அரைகுறைதான். விக்கெட் கீப்பருக்குக் கை உறைகூடக் கிடையாது. ரன்னர் பேட்டுக்குப் பதிலாக ஒரு ஃப்ளைவுட் கட்டையைத்தான் செதுக்கிவைத்திருந்தோம். ஆனால், இதையெல்லாம் தாண்டி, நிஷா எங்களுடைய விளையாட்டை ரசித்தாள். இந்தக் கத்துக்குட்டிகளிடம் அவள் எதைக் கண்டாளோ தெரியவில்லை.

அதுவும், மேலோட்டமான ரசனை இல்லை. அநேகமாக இங்கே விளையாடிய எல்லாரையும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்குப் பழகியிருந்தாள் அவள். ''முத்துகிட்ட ஸ்பீட் இருக்கு. ஆனா, அக்யுரஸி போதாது''. ''பாலா டெக்னிக் சூப்பர். ஆனா, ஃபீல்டர் இல்லாத இடமாப் பார்த்துப் பந்தை அடிக்கத் தெரியலை''. ''உன்னோட ரன்னிங் பிட்வீன் தி விக்கெட்ஸ் ரொம்பப் புவர்''. ''ஃபீல்டர்னா ஓடணும், நீ ஏன் நடக்கறே ரகு?'' என்றெல்லாம் ஒவ்வொருவரையும் பக்காவாக எடைபோட்டு வைத்திருந்தாள். அவள் தவணை முறையில் வாரி வழங்கிய நிபுணத்துவம்தான் எங்களுடைய கிரிக்கெட் ஆர்வத்துக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்தது.

நல்லவேளையாக, எங்களில் யாரும் நிஷாவிடம் அத்துமீறிப் பழகவில்லை. கொஞ்சம் விஷயம் தெரிந்த சியர் லீடராக அவளை ஓரக் கண்ணால் ரசிப்பதுடன் நிறுத்திக்கொண்டோம். அதற்கு மேல் முன்னேற ஆசை இருந் தாலும், தைரியம் இல்லை. இத்தனையும் மாறியது, போன மாதத்தில் தர்மன் வந்த பிறகு.

கனவான்களின் ஆட்டம்

இந்த தர்மன் எங்கிருந்து வந்தான் என்று யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் பூங்காவின் தெற்கு மூலையில் ஒரு கூடாரம் முளைத்தது. அதற்கு வெளியே அடுப்பு மூட்டியபடி ஒரு பெண்ணும் அவளுடைய காலைச் சுற்றிக்கொண்டு சில பொடியன்களும் தென்பட்டார்கள். சற்றுத் தொலைவில் பீடி புகைத்தபடி ஒரு கல்லின்மீது உட்கார்ந்திருந்தான் இவன். அழுக்கு உடம்பு, பரட்டைத் தலை, கிழிந்த சட்டை, செருப்பு இல்லாத கால் என்று அந்தக் கால சினிமாவில் இருந்து நேராக இறங்கி வந்த ஏழைபோல இருந்தான்.

மறுநாள் காலை நாங்கள் ஸ்டம்ப் நட்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது, இவனும் ஆர்வத்தோடு நெருங்கிவந்தான். ''நானும் ஒங்களோட வெளையாட வரலாமா சார்?'' நாங்கள் அவனை எரிச்சலோடு பார்த்தோம். பதில் சொல்லாமல் திரும்பிக்கொண்டோம். ஆனால், நிஷா அவனைக் கவனித்துவிட்டாள். ''ஏய், நம்ம கிளப்புக்குப் புது மெம்பர்'' என்றாள். ''சாரையும் ஆட்டத்துல சேர்த்துக்கலாம், என்ன சொல்றீங்க?''

எங்கள் எரிச்சல் இன்னும் அதிகரித்தது. எங்களை எல்லாம் 'வாடா... போடா’ என்று விரட்டுகிற நிஷா, இந்த அழுக்குப் பயலைப் போய் 'சார்’ என்கிறாள். என்ன கொடுமை சரவணன் இது?

நிஷாவின் ஆதரவு கிடைத்ததும் தர்மன் பெரிதாகப் பல் இளித்தான். மற்ற யாருடைய அனுமதியும் தனக்கு முக்கியம் இல்லை என்பதுபோல் குடுகுடுவென்று ஓடி வந்து ஸ்டம்புக்குப் பக்கத்தில் நின்றுகொண்டான். நாங்கள் சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். எங்களில் யாருக்கும் தர்மனுடன் சரிசமமாகச் சேர்ந்து விளையாட மனம் இல்லை. ஆனால், அதற்காக நிஷாவை மறுத்துப் பேசவும் சங்கடமாக இருந்தது. வேறு வழியில்லை. நிஷாவுக்காக இந்தப் பயலை ஒப்புக்குச் சப்பாணியாக ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். எங்கேயாவது பவுண்டரி லைனில் ஃபீல்டிங் நிறுத்தி வைத்துவிட்டால் ஆச்சு, அவன்பாட்டுக்குப் பந்தைப் பொறுக்கிக்கொண்டு கிடக்கட்டும்.

தர்மனின் அதிர்ஷ்டம், நான் அடித்த முதல் பந்தே அவன் நிற்கிற பக்கமாகதான் விரைந்தது. சரசரவென்று அதை நோக்கி ஓடியவன் குனிந்ததும் தெரியவில்லை, நிமிர்ந்ததும் தெரியவில்லை, வீசியதும் தெரியவில்லை, மறுவிநாடி எதிர்ப் பக்கத்தில் இருந்த ஸ்டம்ப் எகிறியது. நான் ரன் அவுட்.

அவ்வளவுதான். அந்த மைதானமே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது. எல்லாரும் கீழே சரிந்துகிடந்த ஸ்டம்பை நம்ப முடியாமல் பார்த்தார்கள். நிஷா என்றைக்கும் இல்லாத உற்சாகத்துடன் துள்ளினாள். தர்மனை அள்ளித் தூக்கிக் கொஞ்சாத குறைதான். அந்த விநாடியை என்னால் என்றைக்குமே மறக்க முடியாது. நிச்சயமாக அந்தப் பந்து பவுண்டரிக்குச் சென்றுவிடும் என்கிற நம்பிக்கையில் அலட்சியமாக ஓடிக்கொண்டு இருந்த என்னை ஒரே வீச்சில் கலங்கடித்துவிட்டான் தர்மன்.

நான் மட்டும் இல்லை... எங்களுடைய கிரிக்கெட் கோஷ்டியில் இருந்த எல்லாருமே தர்மனைத் திகைப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இது நிஜமான திறமையா அல்லது காக்கா உட்காரப் பனம் பழம் விழுந்திருக்கிறதா? அந்த நினைப்பிலும் மண் விழுந்தது.

அந்த ஓவர் முடிந்ததும், எங்கோ நின்றிருந்த தர்மனின் கைக்குச் சென்றது பந்து. சும்மா காட்டுத்தனமாக எறிகிறானா அல்லது உருப்படியாகப் பந்து வீசுகிறானா என்று பார்க்க அவனை பவுல் செய்யச் சொன்னோம்.  

வாசிம் அக்ரம் ரேஞ்சுக்கு ஸ்டம்பில் இருந்து நெடுந்தூரம் நடந்து சென்றான் தர்மன். பின்னர், சரேலென்று திரும்பி விடுவிடுவென்று யாரையோ வெட்டிச் சாய்க்கப்போகிறவன்போல் ஓடி வந்தான். எதிர்பாராத கணத்தில் அவன் கையில் இருந்த பந்து விடுபட்டுப் பாய்ந்தது. அது நிச்சயம் 'பவுலிங்’ இல்லை, 'த்ரோயிங்’தான். ஆனால், அந்த வேகம் யாருமே எதிர்பார்க்காதது. பேட்ஸ்மேன் இலக்கு புரியாமல் எங்கோ மட்டையைச் சுழற்றிவிட்டுத் திணற, பந்து ஸ்டம்பைத் தாண்டி எகிறிப் பின்னால் நின்ற விக்கெட் கீப்பர் மணவாளன் கையைச் சுட்டுவிட்டுப் பறந்தது.இரண்டாவது பந்தும் அதே மாதிரிதான். ஆனால், இந்த முறை நேராக மிடில் ஸ்டம்புக்குக் குறிவைத்து வீசினான் தர்மன். பந்து மறுபடியும் பேட்டை ஏமாற்றிவிட்டு நைஸாக உள்ளே புகுந்து ஸ்டம்பைப் பெயர்த்தெடுத்தது. ''வ்வ்வ்வ்வ்வாவ்...'' என்று ஆனந்தக் கூச்சலிட்டாள் நிஷா. அதோடு, அந்த மைதானத்தில் எங்களுடைய கிரிக்கெட் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டே இரண்டு கச்சிதமான 'த்ரோ’க்களில் நிஷாவின் உள்ளம் கவர்ந்துவிட்டான் இந்தத் தடியன்.

அடுத்த சில நாட்களில் நான் என்னுடைய விளையாட்டைக்கூட மறந்துவிட்டு தர்மனைத்தான் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தேன். பயலுக்கு பவுலிங் ஆக்‌ஷன் சுமார்தான், அக்யுரஸியும் போதாது. ஆனால் அந்த வேகம், அதுதான் அவனுடைய ஆயுதம். மட்டையைச் சரியானபடி ஜாக்கிரதையாக வைக்காவிட்டால், ஒன்று ஸ்டம்ப் பிடுங்கிக்கொள்ளும்... இல்லாவிட்டால், எக்குத்தப்பாக பேட்டை உரசிக்கொண்டு விக்கெட் கீப்பரிடமோ ஸ்லிப்பிலோ பிடிபட்டு அவுட் ஆவோம்.

போதாக்குறைக்கு, பேட்டிங்கிலும் அவன் பெரிய கில்லாடியாக இருந்தான். எது கவர் ட்ரைவ், எது பேடில் ஸ்வீப் என்றெல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லைதான்... ஆனால், பந்து எங்கே வருகிறது என்பதை மிகச் சரியாகக் கணித்து, அதன் மேல் பூர்வ ஜென்ம விரோதம் கொண்டவனைப் போல் தாக்குவான். அவனுடைய கை வலிமைக்கு லேசாகத் தொட்ட பந்து கள்கூட சிக்ஸருக்குப் பறக்கும். இப்படி ஒவ்வொரு போட்டியிலும் ரன்களாகக் குவித்து, விக்கெட்களாகச் சரித்து, அதிவிரை வில் அவன் எங்களுடைய ஸ்டார் பிளேயர் ஆகிவிட்டான். தினமும் டீம் பிரிக்கும்போது அவனை எந்த அணியில் சேர்த்துக்கொள்வது என்று அடிதடியே நடக்கும் அளவு செம கிராக்கி. இத்தனைக்குப் பிறகும், எங்களால் அவனைச் சரிசமமாக நினைக்கவோ நடத் தவோ முடியவில்லை. இவன் வெறும் 'காட்டடி கோவிந்தன்’தானே?

ஏனோ, நிஷாவுக்கு இந்த வித்தியாசம் புரியவே இல்லை. அவனுடைய பரம ரசிகை ஆகிவிட்டாள். எங்களுக்கெல்லாம் எப்போதா வது போனால் போகிறது என்று கைதட்டல் பிச்சையிடுகிற அவள், தர்மனை மட்டும் ஒரு பக்தையைப் போன்ற பரவசத்துடன் பார்த்துக் கொண்டு இருந்ததும் எப்போதும் அவனையே பாராட்டிக்கொண்டு இருந்ததும் எங்களுக்கு எரிச்சலைத் தூண்டியது.

''நிஷா, எங்களையெல்லாம் ஆக்‌ஷன் சரி யில்லை, டெக்னிக் சொதப்புதுனு போட்டுக் காய்ச்சுவியே, இப்ப இவன் விளையாடறது மட்டும் ஒழுங்கா?''

''பசங்களா, சில நேச்சுரல் டேலன்ட்ஸுக்கு டெக்னிக்லாம் முக்கியம் இல்லை'' என்றவள், ''கொஞ்சம் சரியா பிராக்டீஸ் கொடுத்தா, சார்தான் அடுத்த ஷேவாக், தெரியுமா?'' என்று சொல்லி வேறு வெறுப்பேற்றினாள்.

நிஷா பேசப் பேச... எங்களுடைய காது, மூக்கு, கண்களில் எல்லாம் புகை பறந்தது. எழுதப் படிக்கத் தெரியாத தற்குறி, நாலு வார்த்தை கௌரவமாகப் பேச வராது, அழுக்குப் பட்டறை, ஏற்கெனவே கல்யாணம் ஆகி மூன்று பிள்ளை பெற்றவன்... இவனிடம் என்னத்தைக் கண்டாள் இவள்? ஏன் இந்தப் பொருந்தாத ஜொள்ளு?

அடுத்த வாரத்தில் ஒருநாள், தெரு முனையில் தர்மனைத் தனியாகப் பார்த்தேன். சிநேகமாகப் புன்னகைத்தான். நானும் சும்மா சிரித்துவைத்தேன்.

''உங்க வூடு எங்கிருக்கு சார்?'' என்றான் தர்மன்.

''இங்கதான் பக்கத்துல'' என்றேன். ''அப்புறம், உன்கிட்ட ரொம்ப நாளாக் கேட்கணும்னு நினைச்சேன், நீ எப்பப் பார் அந்த பார்க்லதானே சுத்திக்கிட்டு இருக்கே? ஏதும் வேலை வெட்டிக்குப் போறதா உத்தேசம் இல்லையா?''

''என்னங்க பெரிய வேலை?'' என்று சலித்துக்கொண்டான் அவன். ''இந்த பார்க்குக்கு வாட்ச்மேன்னு போட்டிருக்காங்க. வருமானம் எல்லாம் ஒண்ணும் பெரிசா இல்லை. அங்கேயே கூடாரத்துக்குள்ள முடங் கிக்கிடக்கறதால ஏதோ கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு.''

அன்று இரவு, அப்பாவிடம் தர்மனைப் பற்றிப் பேசினேன். அவனுக்கு எங்களுடைய ஃபேக்டரி யில் செக்யூரிட்டி வேலை வாங்கிக் கொடுத்தேன். மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம். அங்கேயே தங்கு வதற்கு குவார்ட்டர்ஸ்.

தர்மன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ''நிஜமாவா சார் சொல்றீங்க?'' என்று திகைத்து நின்றான். ''நீங்க தெய்வம் சார்'' என்று காலில் விழுந்தான்.

''அட, இதெல்லாம் எதுக்குய்யா? மொதல்ல உன்னோட பொருளைஎல்லாம் மூட்டை கட்டு. இன்னைக்கே புது வீட்டுக்குப் போய்ப் பால் காய்ச்சிடு, சரியா?'' தர்மனால் தன்னுடைய அதிர்ஷ்டத்தை நம்பவே முடியவில்லை. கண் கலங்கப் புறப்பட்டுப் போனான்.

மறுநாள், நாங்கள் வழக்கமான நேரத்தில் விளையாட்டைத் தொடங்கியபோது, தர்மன் அங்கே இல்லை. நிஷா கவலையோடு அவனுடைய கூடாரம் இருந்த இடத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

''என்னாச்சு நிஷா?'' ஒன்றும் தெரியாததுபோல் பக்கத்தில் சென்று விசாரித்தேன்.

''தர்மனைக் காணோமே'' என்ற அவள், ''திடீர்னு கூடாரத்தைக் கிளப்பிக்கிட்டு எங்கே போய்ட்டான்?''

''ஓ... அதுவா!'' கொஞ்சம் தயங்கு வதுபோல் சின்ன பிரேக் விட்டேன், ''நேத்திக்கு நீ ஊருக்குப் போய்ட்டே இல்ல, அப்போ இங்க ஒரு பெரிய பிரச்னை!''

''அச்சச்சோ... என்னாச்சு?''

'

கனவான்களின் ஆட்டம்

'யாரோ ஒரு பொண்ணு, இங்கே பார்க்ல ஜாகிங் போலாம்னு வந்திருக்கு. அவகிட்ட இந்தப் பய அசிங்கமா ஏதோ பேசிக் கையை நீட்டிட்டான்போல!''

''வாட்?'' நிஷாவின் முகத்தில் அதிர்ச்சி தெளிவாகத் தெரிந்தது. ''நம்ம தர்மனா?''

''ஆமா நிஷா, அது கொஞ்சம் தைரியமான பொண்ணுபோல... பளார்னு அவன் கன்னத்துல அறைஞ்சு ஊரைக் கூட்டிடுச்சு. எல்லாருமா சேர்ந்து அவனுக்குத் தர்ம அடி!''

''உசுர் போற நிலைமையில, நான்தான் அவனைக் காப்பாத்தினேன். ஏதோ பழகின தோஷத்துக்கு போலீஸ் கேஸ் ஆகாமப் பார்த்துக்கிட்டேன். 'இனிமே இங்க இருக்க முடியாது. வேற எங்கயாவது போய்ப் பிழைச்சுக்கோ’னு புத்தி சொல்லி அனுப்பி இருக்கேன்!''

நிஷா நம்ப முடியாத வியப்புடன் தர்மனின் கூடாரம் இருந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தாள். அவளுடைய கைகள் அனிச்சையாகத் துப்பட்டா வைச் சரி செய்தன.

அதன் பிறகு, தர்மன் அந்தப் பூங்கா பக்கமே வரவில்லை. நாங்கள் நிம்மதியாகவும் கண்ணியமாகவும் கிரிக்கெட் விளையாடினோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism