Published:Updated:

அழகர்சாமியின் நீச்சல்

கண்ணா கமலவேலன்

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

கொளுத்தும் வெயில் குறைந்துவிட்டது. முகில்வண்ணன் கோடை விடுமுறைக்கே திருவாரூர் அருகே உள்ள கிராமத்துக்குச் செல்ல நினைத்தான். அங்கே உயிர்த் தோழன் அழகர்சாமி இருக்கிறான். ஆனால்...

''இங்கே பாரு முகில், இன்னும் நீ சின்ன பையன் இல்லே. ஒன்பதாம் வகுப்புக்குப் போயிட்டே... பொறுப்பா நடந்துக்க. உனக்காக அப்பா ஸ்விம்மிங் கிளப்புல ஆயிரத்து ஐநூறு ரூபாய் கட்டி இருக்காரு. பேசாமல் ஸ்விம்மிங் கிளம்பற வழியைப் பாரு'' என்று அம்மா கறாராக கூறிவிட்டார்.

''சரிம்மா, இப்போ ஸ்விம்மிங் கிளாஸுக்குப் போறேன். பள்ளிக்கூடம் திறந்த பிறகு கண்டிப்பா ஒரு ஞாயிற்றுக் கிழமை அழகர்சாமி கிராமத்துக்குப் போவேன்'' என்றான். அம்மாவும் ஒப்புக்கொண்டார்.

பள்ளிக்கூடம் திறந்த இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையே விளமலுக்குப் புறப்பட்டான்.

''வாடா முகில், இப்பவாவது வந்தியே'' என அழகர்சாமி நண்பனைக் கட்டிப்பிடித்து வரவேற்றான். ''எங்க ஊரைச் சுற்றிக் காட்டுகிறேன்'' என்று வெளியே அழைத்துச் சென்றான்.

அழகர்சாமியின் வீட்டில் இருந்து 200 அடிகள் தூரத்தில் அழகான குளம் இருந்தது. குளத்தில் செந்தாமரை மலர்கள். தாமரை இலைகள் தண்ணீரில் ஆட்டம்போட்டன. வெள்ளை நாரைகள் தாமரை இலை மேல் நடை பயின்றன.

''ஓ... ஃபன்டாஸ்டிக்!'' முகில் துள்ளிக் குதித்தான்.

அழகர்சாமியின் நீச்சல்

குளக்கரையின் நான்கு பக்கங்களிலும் வேப்ப மரம், தென்னை, பூவரசம் என அணிவகுப்பு. கிழக்குப் பக்கத்தில் ஒரு ஆலமரம் விழுதுகளைப் பரப்பி  நின்றது. அந்த மரத்தின் அடியில் ஓர் பிள்ளையார். குருவிகளும் காக்கைகளும் ஆலமரக் கிளைகளில் அமர்ந்து தங்கள் மொழியில் உரையாடிக் கொண்டுஇருந்தன. முகில்வண்ணன்இதை எல்லாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து இருக்கிறான். இன்றுதான் நேரில் ரசிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

''முகில் வா, ரோட்டுக்கு அந்தப் பக்கம் போகலாம்'' என்றான் அழகர்சாமி.

தார் ரோட்டைக் கடந்து அந்தக்கரையை அடைந்தார்கள். அங்கே ஓடம்போக்கி ஆறு வெண் நுரை ததும்ப ஓடிக்கொண்டு இருந்தது.

''அழகரு... ரொம்ப அழகா இருக்குதுடா'' விழிகள் வியப்பில் விரிய முகில் உற்சாகமாய் பேசினான்.

ஆற்றங்கரையில் நாணல் புதர்கள் மண்டிக் கிடந்தன. மூங்கில் காடுகள் மணத்தைக் கொள்ளை அடித்தன.

ஆற்றங்கரையின் மர நிழல் அமர்ந்து வெகுநேரம் பேசி மகிழ்ந்தார்கள். அந்த நேரம் பெண் ஒருத்தி ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.

''அழகரு... இது யாரு?'' என்று கேட்டாள்.

''அக்கா, இவன் என்னோட டியர் ஃப்ரெண்ட்... பேரு முகில்வண்ணன்''

''ரொம்ப சந்தோஷம், நல்லாப் படிக்கணும். அழகரு ஆடுங்க ரோட்டுக்குப் போகுதுங்க. நாம அப்புறம் பார்க்கலாம்.'' என்ற அக்கா சென்றுவிட்டாள்.

''முகில், நான் ஆத்துல நல்லா நீச்சல் அடிப்பேன்'' பெருமை பொங்க சொன்னான் அழகர்சாமி.

''எனக்கும்தான் நீச்சல் தெரியும். கோடை விடுமுறையில் கத்துக்கிட்டேன்'' என்று முகில் முண்டா தட்டினான்.

''அப்படியா... ஆனால், ஆத்துல நீந்தறதுக்கு தனித்திறமை வேணும்'' என்றான் அழகர்சாமி.

''அப்படி எல்லாம் எதுவும் இல்லே, நீச்சல்ன்னா எல்லாமே ஒண்ணுதான்'' என்றான் முகில்.

''சரி முகில் நமக்குள்ளே வாக்குவாதம் வேண்டாம். நீ கரையிலேயே இரு. நான் குளிச்சிட்டு வந்துடறேன்'' என்ற அழகர்சாமி  ஆற்றில் இறங்கி நீந்தத் தொடங்கினான்.

முகிலுக்கும் நீச்சல் அடிக்கும் ஆசை எழுந்தது. உடனே சட்டை, பனியனைக் கழற்றிக் கரையில் வைத்தான். ''அழகரு, நானும் வரேன்டா'' என்று சொல்லிக் கொண்டே ஆற்றில் 'தொபுக்கடீர்’ என்று குதித்துவிட்டான்.

''வேண்டாம் முகில் வேண்டாம்'' என்று சத்தம் போட்டு கைகளை உயர்த்தி சொன்னான் அழகர்.

முகில் கேட்கவில்லை. சில நொடிகளிலேயே தண்ணீரில் தத்தளிக்கத் தொடங்கினான்.

''டேய் முகில், என்ன ஆச்சுடா? எங்கே இருக்கே?'' அழகரின் அலறல் ஆற்றங்கரை முழுதும் எதிரொ லித்தது.

''அழகர் என்னைக் காப்பாத்துடா. என்னால் நீந்த முடியலே'' முகில் அச்சத்தில் அலறினான்.

முகிலின் அலறல் சத்தம் கேட்டு ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்த அந்த அக்கா ஓடிவந்தாள்.

முகில் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டு இருந்தான். அடுத்த வினாடியே மின்னலாக ஆற்றில் பாய்ந்தாள் அக்கா. முகிலின் தலை முடியைப் பிடித்துத் தூக்கி கரையில் படுக்கவைத்தாள். முதலுதவி செய்தாள். அழகர்சாமியும் அவசர அவசரமாய் கரைக்கு வந்து சேர்ந்தான்.

''முகில் இப்ப எப்படி இருக்குது?''

''ம்... பரவாயில்லை. இந்த அக்கா நல்ல நேரத்துல வந்தாங்க'' பயம் தெளிந்து முகில் இயல்பாய் பேசினான்.

''டேய் முகில் இந்த அக்காவுக்கு ஆத்துல, குளத்துல, கிணத்துல எல்லாத்திலும் நீச்சல் அடிக்கத் தெரியும். தண்ணீர்ல தத்தளிக்கறவங்களைக் காப்பாத்தவும் தெரியும்'' மூச்சுவிடாமல் பேசினான் அழகர்சாமி.

முகில்வண்ணன் திகைத்து நின்றான். ''அப்படின்னா நீச்சலில் பல வகை இருக்குதா?''

''தம்பி, குளத்து நீர் தேங்கி நிற்பது. ஆற்று நீர் நெடுந்தூரம் ஓடிக்கொண்டு இருப்பது, ஆற்றின் போக்கில் நீச்சல் பழகணும். ஆற்றுல எதிர் நீச்சல் போடறதுக்கு உடலில் உறுதியும் மனதில் தெம்பும் வேணும். கிணறு வேறு வகை... முதல்ல நாங்க எல்லாமே குளத்துத் தண்ணியிலதான் நீச்சல் கத்துக்கிட்டோம்'' அக்கா விளக்கமாகக் கூறினாள்.

''அப்படின்னா ஸ்விம்மிங் பூல்ல  கத்துக்கிறது?'' என்று இழுத்தான் முகில்.

''அது ஓரளவு பயத்தைப் போக்கறதுக்குப் பயன்படும் அவ்வளவுதான். நீயும் வாய்ப்பு கிடைச்சா குளம், கிணறுனு நல்லாப் பழகிக்க'' அழகர்சாமி சொன்னான்.

''ம்... அக்கா ஒரு சந்தேகம்?'' என்றான் முகில்.

''கேளு தம்பி''

''நீங்க எல்லாம் நீச்சல் பழகறதுக்கு எவ்வளவு பணம் கட்டினீங்க?''

''பணமா? நீச்சல் பழகறதுக்கா? நல்ல கதையால்ல இருக்குது!'' அக்காவும் அழகர்சாமியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

அவர்களது சிரிப்பில் அக்காவின் ஆடுகளும் கலந்துகொண்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு