பிரீமியம் ஸ்டோரி

நடிப்பு : ஐஸ்வர்யா 
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா 
இயக்கம் : நீங்களேதான்

 ##~##

''நல்ல மனநிலையில இருக்கற நீங்க... ஏர்வாடி, குணசீலத்துல மனநோயாளிகளோட சேர்ந்து இருக்க முடியுமா ஆனந்த்?''

''இருக்கணும் டாக்டர். ஒரு உத்தமியைக் கொல்லப் பார்த்த பாவி நான். அவளைப் பற்றி நான் பேசாத அவதூறு என்ன பாக்கி? அந்தப் பாவங்களுக்கெல்லாம் எனக்கு நானே விதிச்சுக்கிற தண்டனை இது.''

- அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதான் ஆனந்த். டாக்டருக்கே கண்களில் நீர் பெருக்கெடுத்து விட்டது!

கதவு தட்டப்பட்டது. வெளியே யார்... டாக்டர் நாதமுனி என்ன செய்யப் போகிறார்?!

துர்கா

- என்று கடந்த எபிசோட் முடிந்திருக்க, 'அடுத்த எபிசோட் இயக்குநர் நாற்காலியை பிடித்தே தீரவேண்டும்' என்கிற வேகத்தில், தோழிகள் தந்திருக்கும் திருப்பங்கள் ஒவ்வொன்றும் சுவாரசியம்!

மதுரை - சந்திரா மாணிக்கம், பெங்களூரு - ராஜலட்சுமி... இந்த இரு வாசகிகளும், மகள் அஞ்சு மேல் ஆனந்த்துக்கு உள்ள பாசத்தை வைத்து, உண்மையை உடைத்து, கதையை உச்சகட்டத்துக்கே கொண்டு போகப் பார்க்கிறார்கள்!

திருவான்மியூர் - மாயா கிருஷ்ணமுராரி மற்றும் கூடுவாஞ்சேரி செல்லம் ஆகிய இரு சகோதரிகளும்... முறையே ஏர்வாடி, குணசீலம் என ஆனந்த்தை ஏறத்தாழ பேக் செய்து, சென்டிமென்ட் டிராமாவுக்குள் ஆனந்த்தை நுழைக்கிறார்கள்!

மாதவரம் - ஜெனி, திருநெல்வேலி - கோமதி, மதுரை - விஜயலட்சுமி... இவர்கள் மூன்று பேரும், 'டாக்டரிடம் ஆனந்த் பேசுவதை, துர்கா கேட்டு விடுகிறாள்' எனத் தொடங்குகிறார்கள். லாஜிக் ஒட்டவில்லை. ஆனால், அதன் மூலம் சில பல உணர்ச்சிப் போராட்டங்களை விதைக்க முயற்சித்து, கதையை நகர்த்தும் விதம் பாராட்டுக்குரியதாக இருக்கிறது!

மயிலாப்பூர் - உஷா, முகப்பேர் - சுபா... இந்த இருவரும், 'வேலை, சிகிச்சை என்று ஆனந்த் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறான்' என்கிறார்கள்.

கோயம்புத்தூர் - ராஜேஸ்வரி... 'கதவைத் தட்டியது செந்தில்தான். அவன் உள்ளே வர... ஆனந்த்துக்கு பைத்தியம் முத்திவிட்டது’ என டாக்டர் நம்ப வைக்கிறார். ஆனால், தீபிகாவுக்கு உண்மை தெரிந்து விடுகிறது. விளைவு என்ன?'

துர்கா

இப்படி அழுத்தமான திருப்பத்தைக் கொடுத்து, ஜம்மென இயக்குநர் நாற்காலியில் அமரும் இந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

''ப்ளீஸ் டாக்டர்... புரிஞ்சு கிட்டு உதவுங்க...''

கொஞ்ச நேரம் நெற்றியில் கை வைத்து ஆழமாக யோசித்த டாக் டர், ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவ ராக... உள் அறையில் ஆனந்த்தைப் படுக்க வைத்தார்.

''கண்களை மூடிட்டுப் படுங்க... நான் பாத்துக்கறேன்.''

கதவைத் திறந்தால்... வாசலில் யூனிஃபார்முடன் செந்தில்.

''உள்ள வாங்க.''

''இந்தப் பக்கம் ஆனந்த் வந்ததா ஒரு தகவல்...''

''இங்கேதான் இருக்கார். எங்க ஆட்கள் புடிச்சுட்டு வந்துட்டாங்க.''

''அப்படியா?!''

''ரொம்ப வயலன்டா இருந்தார். மயக்க ஊசி போட்டு, படுக்க வெச்சுருக்கேன்.''

செந்தில் உள்ளே வந்து பார்த்தான்.

''துர்காக்காவுக்கு தகவல் தரட்டுமா?''

''கொடுங்க மிஸ்டர் டி.எஸ்.பி. ஆனா... இனி, இங்கே இவரை வெச்சுக்க முடியாது. ஏர்வாடி, குணசீலம்னுதான் அனுப்பி வைக்கணும்.''

''கடவுளே... அக்கா, இதைத் தாங்குவாங்களா..?''

''வேற வழியில்லை. நிலைமை அதுதான்.''

''அவங்களைக் கூட்டிட்டு வர் றேன்.''

செந்தில் புறப்பட்டுப் போனான். உள்ளே டாக்டர் வர, ஆனந்த் எழுந்து உட்கார்ந்தான்.

துர்கா

''ஆனந்த் உண்மையிலேயே இந்தப் போராட்டம் தேவையா? உங்க மனைவியை நீங்க புரிஞ்சு கிட்டு மனசு மாறியாச்சு. நல்லபடியா அவங்ககூட வாழலாமே? ஆரம்பத்துலயே இந்த நாடகத்தை முடிச்சுடுங்க...''

''வேண்டாம் டாக்டர். எங் கம்மா ஒரு விஷப் பாம்பு. திரும்ப வும் பிரச்னைகள் வரும். நானும் இதுநாள் வரைக்கும் செஞ்ச தப்பு உறுத்தும். பாவங்களை மறந்துட்டு நிம்மதியா துர்கா கையால சோறு சாப்பிட முடியுமா?''

''சரி ஆனந்த்... இப்ப வருவாங்களே துர்காவும், உங்கப்பா வும்..?''

''என்னை ஒரு ரூம்ல செயினோ, கயிறோ போட்டுக் கட்டி வைங்க. ரொம்ப மூர்க்கமா இருக்கேன்னு சொல்லிடுங்க. சட்டமும் என்னைத் தண்டிக்கல. பாவம் செஞ்ச நான், சுயதண்டனை அனுபவிச்சு ஆகணும் டாக்டர்... ப்ளீஸ்!''

- கதறிவிட்டான்!

மீண்டும் தீவிரமாக யோசித்த டாக்டர்... ''சரி...!'' என்று சொன்னார் தலையை மேலும் கீழும் ஆட்டியபடியே!

இடம் மாற்றப்பட்டான். ஒரு மணி நேரத்தில் துர்கா, நடேசன், அன்வர், செந்தில் வரும்போது, ஆனந்த் கட்டப்பட்டிருந்தான் சங்கிலியால்!

''ஸாரிம்மா... கட்டுப்படுத்த முடியல. எனக்கு வேற வழியில்ல'' என்று டாக்டர் சொல்ல, துர்காவின் கண் களில் அருவி.

நடேசன் வேதனையுடன், ''பாவி ராஜம்! பிள்ளையை எந்த ஒரு நிலைமைக்குக் கொண்டு வந்துட்டா பாரு!'' என்று வெடித்தார்.

''எல்லாரும் வாங்க''

- டாக்டர் அழைத்தார்.

''ஆனந்த்தை இங்கே வெச்சுக்க முடியாது. ஏர்வாடி அல்லது குணசீலத்துக்கு அனுப்பறதைத் தவிர வேற வழியில்லை.''

''என்ன டாக்டர், நீங்களே இப்படி சொல்றீங்க. அதுவும் இந்தக் காலத்துல, இப்படியெல்லாமா சிகிச்சை கொடுப்பாங்க? கேக்கறதுக்கே நல்லாயில்லையே டாக்டர்.''

'ஆகா, கிடுக்கிபிடி போடுகிறாளே' என்று யோசித்த டாக்டர், ஆனந்த்தின் வேண்டுகோள்படி, ஏற்கெனவே எடுத்த முடிவில் அழுத்தமாக நின்றார்.

நடேசன் அருகில் வந்தார். ''வாம்மா போகலாம். சுயபுத்தி இல்லாம அவரவர் செய்யுற பாவங்களுக்கு தண்டனை அனுபவிச்சுத்தானே ஆகணும்.''

''டாக்டர்... அவரை எங்கே அனுப்பினாலும், அப்பப்ப தகவல் கொடுங்க''

- துர்கா குரல் கரகரத்தது.

அனைவரும் விடைபெற, டாக்டர் உள்ளே வந்தார்.

''துர்கா துடிச்சுப் போயிட்டாங்க ஆனந்த். இந்த நாடகம் வேணுமா?''

துர்கா

''வேணும் டாக்டர். எங்கப்பா அவளை படிப்படியா சமாதானப்படுத்திடுவார். நாளாவட்டத்துல இந்தக் காயம் ஆறிடும். சுதா கல்யாணம், அஞ்சு படிப்புனு துர்காவுக்கு நிறைய கடமைகள் இருக்கு. இந்த கையாலாகாதவன் குடும்பத்தை அவதானே தோள்ல சுமக்கறா? அட்லீஸ்ட் செஞ்ச பாவங்களுக்கு மட்டுமாவது நான் சிலுவை சுமக்கறேன். ஏர்வாடியில எப்ப விடப்போறீங்க?''

''அவசரப்பட வேண்டாம். நாலு நாள் அவகாசம் வேணும்.''

கட்டுகளை அவிழ்த்துவிட்டார்.

அதேநேரம் வீட்டுக்குள் இந்த விவரம் அறிவிக்கப்பட, ராஜம் புலம்ப ஆரம்பித்தாள்.

''என் ஒரே பிள்ளை, இந்த கதிக்கு ஆளாயிட் டானே!''

''அதுக்கு யாருடி காரணம்? அன்வர்... ஏதாவ தொரு முதியோர் இல்லத்தைப் பாரு. இந்த சனியனையும் ஒழிச்சுடலாம். சுதா... இவளை உள்ளே கூட்டிட்டுப் போ!''

- கூச்சலிட்டார்.

துர்கா சோர்ந்து போய் உட்கார்ந்திருக்க, நடேசன் அருகில் வந்தார்.

''இதப்பாரும்மா... இந்தக் குடும்பத்துல நீ முடிக்க வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு. படிப்படியா ஆனந்தை நீ மறக்க பழகணும்... வேற வழியில்லை. அவனோட தப்புக்கள் அவனை பலி வாங்கிடுச்சு. நீ துவண்டா, குடும்பமே துவண்டு போகும்!''

கல்பனா, சுதா, வராகன் அனைவரும் இதையே துர்காவுக்குச் சொல்ல, செல்போன் ஒலித்தது. துர்கா எடுத்தாள். சேர்மன் அவசரமாக அழைத்தார் - கம்பெனியில் முக்கிய விவாதம். அவசரமாக முகம் கழுவிக்கொண்டு, சேலை மாற்றிப் புறப்பட்டாள்.

''பாத்தியா? அழக்கூட உனக்கு நேரமில்லை. இனி நீ மாறணும் துர்கா...''

துர்கா காரில் ஏறினாள். பெட்ரோல் போட, டிரைவர் ஒரு பங்க்கில் காரை நிறுத்தினார். துர்கா கீழே இறங்கி நின்றாள். சில நொடிகளில் தீபிகாவின் கார் அங்கே நுழைந்தது.

''துர்கா!''

''எப்படியிருக்கீங்க தீபிகா?''

''நானே உங்களைப் பாக்கணும்னு நெனச்சேன். மென்ட்டல் ஆஸ்பிட்டலுக்கு டொனேஷன் கொடுக்கப் போனேன். அங்கே ஆனந்தை நான் பார்த்தேன்!''

''ஸாரி தீபிகா! உங்ககிட்ட நான் எதையுமே சொல்ல முடியல! ஏர்வாடியில சேர்க்கற நிலைமைக்கு அவர் வந்தாச்சு. மனசு உடைஞ்சு போயிருக்கு தீபிகா...''

''அத்தனை வயலன்டாவா ஆனந்த் ஆயிட்டார்?''

''ஆமாம் தீபிகா!''

''ஆர் யூ ஷ்யூர்?''

''செயின்ல கட்டிப் போடற நிலைக்கு வந் தாச்சு. உங்களால நம்ப முடியலை இல்லையா?''

டிரைவர் பணம் வாங்கிக் கொண்டு போய் கட்டினார்!

''ஸாரி தீபிகா... அவசரமா சேர்மன் மீட்டிங். ராத்திரி நான் பேசறேன்.''

துர்கா புறப்பட்டாள். தீபிகாவுக்கு பயங்கரக் குழப்பம். முதல் நாள் டொனேஷன் தர அவள் அங்கு போன நேரம், ஆட்டோவை விட்டு இறங்கி நிதானமாக டாக்டரின் அறையை நோக்கி நடந்த ஆனந்த்தைப் பார்த்தாள்.

அப்போதே துர்காவிடம் பேச நினைத்த தீபிகா, வேறு வேலை குறுக்கிட புறப்பட்டுவிட்டாள்.

''அவனா மனநோயாளி... அதுவும் தீவிரமான நோயாளி?''

காரில் ஏறி, நேராக அந்த மனநல காப்பகத்துக்கு வந்துவிட்டாள். டாக்டர் அந்த நேரத்தில் இல்லை. ஒரு சிஸ்டரை அழைத்து, ஆனந்தை எங்கே என்று விசாரித்தாள். அவர் கை காட்டிய அறையில் எந்த ஒரு கயிறும் பிணைக்கப்படாமல் அமைதியாக தியானத்தில் ஆனந்த் அமர்ந்திருந்தான்! இவளை கவனிக்காமல் அடுத்தடுத்த ஆசனாக்களை செய்து கொண்டிருக்க,

''குட்மார்னிங் ஆனந்த்!''

படக்கென திரும்பினான். வெளியே தீபிகா!

ஒரு நொடி தடுமாறிய ஆனந்த்; வெறி பிடித்தவன் போல எழுந்து, ''நீ யாரு? என்னைக் கொல்ல வந்திருக்கியா? எங்கம்மா உன்னை அனுப்பினாளா? சொல்லு!''

ஓடி வந்தவன் கை நீட்டி தீபிகா கழுத்தைப் பிடிக்க, ''நிறுத்துங்க ஆனந்த்! நடிப்பையெல்லாம் துர்காகிட்ட வெச்சுக்குங்க! எப்பவுமே ஏமாறக்கூடியவ அவதான்... நானில்லை!''

ஆனந்த் அப்படியே உறைந்துவிட்டான். தீபிகா முகத்தில் வெறுப்பு.

''நீ திருந்தவே மாட்டியா? ஓவியன்னு பொய் சொல்லி, என்னை ஏமாத்தினே. அப்புறமா துர்காவை கொலை செய்யற அளவுக்குப் போனே. இப்ப எதுக்கு இந்தப் பைத்திய வேஷம்? போலீஸ் கேஸ்ல இருந்து தப்பிக்கவா? நீ ஏர்வாடிக்குப் போற நிலைமைல இருக்கேனு துர்கா நம்பிட்டு இப்பவும் அழறா. உன்னை மாதிரி ஒரு கேவல மான, அசிங்கமான ஆம்பிளையை நான் பார்த்த தில்லை. டாக்டருக்கும் அல்வா கொடுக்கறியா?''

ஆனந்த் பேசவில்லை!

''விடமாட்டேன். நான் நேரா துர்காகிட்டப் போறேன். நீ ஒரு பித்தலாட்டக்காரன்னு சொல்லி, உன் முகமூடியை கிழிச்சுட்டுத்தான் மறுவேலை. துர்கா, உன் முகத்துல இனி முழிக்கக் கூடாது. அந்த உத்தமியை இனியும் ஏமாத்தினா, சத்யமா நீ உருப்படமாட்டே!''

வேகமாகத் திரும்ப, ஆனந்த் பதறிவிட்டான்!

''தீபிகா... நில்லு... அவசரப்படாதே! நான் சொல்றதைக் கேளு!''

துர்கா

''தெரிஞ்சு போச்சா? தெளிவா பேசற நீ, துர்காவை ஏமாத்தறேனு அப்பட்டமா தெரிஞ்சு போச்சா? விடமாட்டேன்! ஒரு நல்ல பொண்ணை நான் மீட்கலைனா, நான் பொண்ணா பொறந்த துக்கு அர்த்தமே இல்லை.''

கத்திக்கொண்டே திரும்ப, எதிரே டாக்டர் நாதமுனி!

''டாக்டர்... தீபிகாகிட்ட பேசுங்க, ப்ளீஸ்!''

''மேடம்... என் கூட வாங்க!''

''எதுக்கு?''

''நான் இங்கே டாக்டர். சைக்யாட்ரிஸ்ட். என்னையே சென்டிமென்டலா ஒரு உலுக்கு உலுக்கின மனுஷன் இந்த ஆனந்த். உள்ள வாங்க. ஆனந்த்... நீங்களும் வாங்க.''

தீபிகா டாக்டருடன் நடந்தாள். டாக்டர் நாத முனி தன் உருக்கமான குரலில் நடந்த சகலமும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தார். தீபிகா அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தாள். அவள் கண் களில் நீர். ஆனந்த் தலை குனிந்து அமர்ந்திருந் தான்.

''திருந்தின பிறகு துர்காகூட வாழலாமே ஆனந்த்?''

''அதைத்தான்மா நானும் சொன்னேன்!''

''இல்லை தீபிகா... பாடையில ஏறிப்படுத்தவன், உயிர் பிழைச்சு, மறுபடியும் படுக்கையில வந்து படுக்க முடியாது. நிச்சயமா துர்கா புது வாழ்க்கை தொடங்கணும்.''

''என்னிக்குமே நீங்க அவகூட சேரப் போற தில்லையா?''

''ஆமாம் தீபிகா. அந்தத் தகுதியை நான் இழந் தாச்சு. சன்யாசம் போனவன், காவியைக் கழட்டிப் போட்டுட்டு சம்சாரி ஆனா, கேலிக்கிடமாகும். என் நிலை இன்னிக்கு அதுதான். டாக்டர்... இந்த ஊர்ல நானிருந்தா பல பிரச்னைகள் புதுசா முளைக்கும். தயவு செஞ்சு ஏர்வாடில கொண்டு போய் விடுங்க. நாளாவட்டத் துல, நான் மறக்கப்பட்டு, துர்காங்கற ஒரு நல்ல பெண்ணோட புத்தகத்துல ஆனந்துனு ஒரு பக்கம் கிழிக்கப்படணும். தீபிகா... டாக்டருக்கு நீயும் சொல்லு தீபிகா!''

அதற்குமேல் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் நுழைந்து, கதவை மூடிக் கொண்டான். கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தான். தீபிகா, டாக்டரின் அறையில் அவருடன் தீவிர மாக இதுபற்றி விவாதிக்க ஆரம்பித்தாள்.

அதேநேரம்... துர்காவின் வீட்டில் கல்பனாவை அழைத்தார் நடேசன்.

''கல்பனா... ஜோசியர் வீட்டுக்குப் போயிட்டு வரலாமா..?''

''எதுக்குப்பா?''

''ராஜம் வெளியே வந்தாள்!

''எம்புள்ளை பைத்தியமாயாச்சு. அவன் எப்ப சாவான்னு கேக்கறதுக்கு போறார்டி!''

''கல்பனா... தூங்கும்போது இவ நாக்கை அறுத் துடு. இவ இனி பேசவே கூடாது. நீ கிளம்பு...''

கல்பனா சேலை மாற்ற வந்தாள்.

''அம்மா... நீ திருந்தணும்னு சொல்லல. உன்னைப் படைச்ச கடவுளாலகூட அதை நடத்த முடியாது. இத்தனை நடந்தும் இனியும் நீ தப்பாப் பேசினா, அத்தனை பேருமா உன்னை அடிச்சுத் துரத்து வாங்க. அந்த நிலைக்கு ஆளாகாதே. வெந்ததை தின்னுட்டு ஒரு மூலையில கிட!'' என்று சொல்லி விட்டு... நடேசனுடன் நடந்தாள். தெருக்கோடியில் ஆட்டோ பிடித்து புறப்பட்டனர்.

''எதுக்குப்பா இப்ப ஜோசியர்? ஆனந்த் எப்ப குணமாவான்னு கேக்கவா?''

''இல்லைம்மா. அதை நான் எதிர்பாக்கல. ஆனந்த்னு ஒருத்தனை மறக்க, நம்ம குடும்பமே பழகணும். அதுதான் துர்காவுக்கு நல்லது. ஸாரிம்மா! அவனோட அப்பாவா இருந்து இதைப் பேசும்போது உள்ளுக்குள்ளே எப்படி வலிக்குது தெரியுமா? ஆனா, துர்கா நிம்மதியா இருக்கணும்னா வேற வழியில்லைம்மா. அவன் சுமக்க வேண்டிய பாரங்கள் மொத்தத்தையும் அவ சுமக்கறாளே... அந்த நன்றிக்கடனை எப்படீம்மா நம்ம குடும்பம் அவளுக்கு செலுத்தப் போகுது?''

- அழுதுவிட்டார்!

''நீங்க சொல்றது நியாயம்தான்ப்பா...''

''நான் இப்பப் போறதே துர்கா ஜாதகத்தை ஜோசியர்கிட்ட காட்டத்தான்!''

''புரியலை!''

''ஒரு குடும்பத் தலைவனோட ஜாதகம்தான் அந்தக் குடும்பத்துக்கே வெளிச்சம் காட்டற கலங்கரை விளக்கம் இல்லையா? நம்ம குடும்பத்துக்கு நிஜம் துர்கா மட்டும்தான். அவளோட நிழல்கள் நாம எல்லாரும்.''

''உண்மைதான்ப்பா...''

''நம்ம ஜோசியர் உண்மையை முகத்துல அடிச்ச மாதிரி சொல்லுவார்.''

''சரிப்பா!''

ஜோசியர் வீட்டு வாசலில் ஆட்டோ நிற்க, நடேசனும் கல்பனாவும் வீட்டுக்குள்ளே நுழைந் தார்கள். உதவியாளரிடம் பெயரை கொடுத்து விட்டு காத்திருந்தார்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு, நடேசன் அழைக்கப்பட்டார். பழுத்த பழமான அந்த ஜோசியர், எழுபது கடந்தவர். தெய்வீகக்களை முகத்தில் வீசிக் கொண்டிருந்தது. இருவரும் வணங்கினார்கள்.

''உக்காருங்க நடேசன். நல்லாயிருக்கீங்களா?''

''இதுவரைக்கும் இல்லை ஜோசியரே. இனி எப்படீனு தெரியலை!''

''தப்பு நடேசன். கடவுள் நமக்கு நிறையக் குடுத்திருக்கார். அதை நம்மால புரிஞ்சுக்க முடியலை, அனுபவிக்கத் தெரியலை, மனசுல திருப்தியும் இல்லை.''

நடேசன் பதில் பேசவில்லை.

''சொல்லுங்க!''

''மருமகள் துர்காவோட ஜாதகம் கொண்டு வந்திருக்கேன். இன்னிக்கு என் குடும்பத்தை தாங்கிப் பிடிக்கற ஒரே சக்தி அவதான். அந்தக் குழந்தை வாழ்க்கையில சந்தோஷமே இல்லை.''

''கொடுங்க.''

வெகுநேரம் ஜாதகத்தைப் பார்த்தார். ஒவ் வொரு கட்டங்களாக விரல் பதிந்து, அடுத்த கட்டங் களுக்கு நகர்ந்து கண்கள் தீவிரமாக அலசத் தொடங்கியது. உதடுகள் மெள்ள உள்ளுக்குள்ளே அசைந்தது. ஏறத்தாழ இருபது நிமிடங்கள் பார்த்த பிறகு, ஜோசியர் நிமிர்ந்தார்.

''அற்புதமான ஜாதகம்! பலரைத் தாங்கிப் பிடிக்கற பெண்! கோடீஸ்வர அந்தஸ்தைத் தொடுவா! பேரும், புகழும் இமயத்தைத் தொடும்! பல ஆயிரம் பேர் வீட்ல இவளால் தினசரி உலை பொங்கும்! சமூகத்துக்கு உபயோகமான ஒரு உன்னத பொண்ணு இவ!''

நடேசன் பரவசப்பட்டார்!

''இவளோட மிகப்பெரிய பலவீனம் இவ புருஷன்தான்! இத்தனை கால வேதனைகளுக்கும் காரணம் அவன்தான். இவங்க கல்யாணம் நடந்தே இருக்கக் கூடாது. போகட்டும். அவன் விலகியாச்சு. இனி சேர்ந்து வாழற பாக்கியமே இல்லை!''

கல்பனா, அப்பாவைப் பார்த்தாள்!

''இவ ஜாதகப்படி, வாழ்க்கையில இன்னொரு ஆண் வருவான். பெரிய புயல் வீசும். ஆனா, அவன் வந்தே தீருவான். அவனால்தான் துர்கா பல உச்சங்களைத் தொடப்போறா. அவன் சீக்கிரம் வருவான்!''

நடேசனும், கல்பனாவும் மிரண்டு போனார்கள்!

வரப்போவது யார்?!

- தொடருங்கள் தோழிகளே...

ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,

மயிலாப்பூர், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு