Published:Updated:

அடுத்த முறை

அசோகமித்திரன்ஓவியங்கள் : மருது

அடுத்த முறை

அசோகமித்திரன்ஓவியங்கள் : மருது

Published:Updated:
##~##

"ஏன்டா, நாளைக்கு எத்தனை மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பணும்?'

'ராத்திரி 10 மணிக்குக் கிளம்பினா சரியா இருக்கும்மா.'

'டாக்ஸிக்குச் சொல்லிவெச்சாச்சா?'

''ரமா வீட்டுல சொல்லிவெச்சிருக்கேன். காரை 8 மணிக்கே அனுப்பிடுவா.'

'அவ வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?'

'உனக்கு அவ வீட்டுல யாரைத் தெரியும்?'

'ஏன் தெரியாது? ஏன்டா, சம்பந்திகள் இல்லையா?

ஸ்ரீகுமார் பேசவில்லை.

'ஏன்டா, நான் ரமாவைப் பாக்க வேணாமா? என் பேரக் குழந்தையைப் பாக்க வேணாமா?' - அம்மா கெஞ்சலாகக் கேட்டாள்.

அடுத்த முறை

'இப்போ நான் மட்டும்தாம்மா வந்திருக் கேன்.'

'நீ இதுக்கு முன்னால ஒவ்வொரு தடவையும் அவளையும் அழைச்சுட்டுதான் வந்தாயாமே? இங்கே அழைச்சிட்டு வரவே இல்லை.'

'நான் இதுக்கு முன்னால ஒரே ஒரு தடவைதான் வந்திருக்கேம்மா.'

'அப்போ அழைச்சிட்டு வந்திருக்கக் கூடாதா?'

'அடுத்த முறை அழைச்சுட்டு வரேன்.'

'அடுத்த முறையா?'

அம்மாவுக்கு நம்பிக்கை இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவன் அம்மாவைப் பார்க்க வந்தபோது, அம்மா மிகவும் பருத்து இருந்தாள். முகம் நன்றாகவே இல்லை. இந்த முறை இன்னும் மோசம். எழுந்து உட்கார முடியாதபடி ஊதிப்போயிருந்தாள். அடுத்த முறை என்று ஒன்று இருக்க வேண்டும்.

அம்மா இப்போது சம்பந்தி உறவு கொண்டாடுகிறாள். மருமகளையும் பேரனை யும் பார்க்க ஆசைப்படுகிறாள். ஆனால், அவனும் ரமாவும் மாலையும் கழுத்துமாக வடபழனி கோயிலில் இருந்து வந்தபோது என்னவெல்லாம் நடந்தன? அம்மா எப்படி எல்லாம் கத்தினாள்? அவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. யார் இந்தப் பெண்? தன்னுடைய மகன் ஏன் மாலையிட்டுக்கொண்டு இருக்கிறான்? அவளும் மாலையிட்டுக்கொண்டு இருக்கிறாளே? இருவரும் ஒரே மாதிரி மாலை... சட்டென்று அவளுக்குப் புலப்பட்டது. அவ்வளவுதான். அவள் போட்ட கூச்சலில் தெருவே கூடிவிட்டது. அவளுக்குத் தெரியாமல் அவளுடைய உதவாக்கரை மகன் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான். அந்தப் பெண் அவன் சம்பளத்துக்கு வேலை செய்யும் கடை முதலாளியின் பெண். வேறு சாதி. ஆனால், அந்தப் பெண்ணை சாதிவைத்துத் தரம் பிரிக்க முடியுமா? அவளுக்கு மட்டும் அப்பா, அம்மா இல்லையா என்ன? குடும்பம் இல்லையா? அவளுக்குப் பணம், படிப்பு,  பெரிய பதவிகளில் இருக்கும் உறவினர்கள் உண்டு. அவளே இன்னும் ஏழெட்டு மாதங்களில் அமெரிக்கா செல்லப்போகிறவள்... இவை எல்லாம் ஒரு பொருட்டல்ல என்று பி.ஏ.கூடத் தேறாதவனைக் கல்யாணம் செய்துகொண்டவளை, அப்படிப் பட்ட ரமாவைக் கண்ணீரும் கம்பலையுமாக்கினாள் அம்மா. அன்று போனவள்தான் ரமா. திரும்ப அந்த வீட்டுப் பக்கம் வரவே இல்லை.

ரமா வீட்டிலும் வருத்தம்தான். ரமாவின் அப்பா சொன்னார், ''என்கிட்ட சொல்லி இருந்தா, நான் எல்லாருடைய சம்மதத்தையும் கேட்டுப் பத்திரிகைவெச்சுக் கல்யாணம் செய்திருப்பேனே, தம்பி. ஏன் இந்தத் திருட்டுக் கல்யாணம்? உங்க அப்பா, அம்மாக்குச் சொன்னியா?''

ஸ்ரீகுமார் ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பி வந்துவிட்டான். ஆனால், கல்யாணம் நடந்தது நடந்ததுதான்.

''நீ வேலைக்குப் போக வேணாம். மறுபடியும் உன் கடைக்காரன் பொண்ணு மூஞ்சி யில முழிக்க வேணாம்'' என்று அம்மா சொன்னாள். அந்தக் கடை வெற்றிலை பாக்கு விற்கும் கடை அல்ல; பளபளவென்று இருக்கும் சூப்பர் மார்க்கெட். அவன் பதில் சொல்லவில்லை. அம்மாவே மேலும் சொன்னாள், ''நான் உனக்கு நல்ல பொண்ணாப் பாக்கறேன்.'' அன்று ஸ்ரீகுமார் அவனுடைய அம்மாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தான்.

''அம்மா, நீ அப்பாவைச் சித்ரவதை பண்ற தோடு நிறுத்திக்கோ.''

அன்று அப்படி அவன் சொன்னபோது, அப்பாவும் வீட்டில்தான் இருந்தார். அது மட்டுமல்ல; அம்மாவின் அப்பா, அம்மாவும் இருந்தார்கள். ஸ்ரீகுமார் பதில் சொன்னவுடன் வீடு நிசப்தம்ஆயிற்று. அம்மாவை அப்பா கல்யாணம் செய்துகொண்ட நாளில் இருந்து  தன்னுடைய மாமனார் வீட்டிலேயே அப்பா தங்கிவிட்டார். அப்பாவின் அம்மா எங்கேயோ தனியாக ஒரு வீட்டில் இருந்தாள். ''ரெண்டு நாள், நாலு நாள்ல ஒரு தடவை வந்து பாத்துட்டாவது போயிட்டிரு. நீ சந்தோஷமா இருந்தாப் போதுண்டா'' என்று அப்பாவிடம் சொல்லியிருந்தாள் பாட்டி.

ஸ்ரீகுமார் பிறந்த பிறகும் அம்மாவுக்குப் பயந்துகொண்டு மாமியார் வீட்டோடே அப்பா இருந்தார். மாதத்தில் 20 நாட்கள் டூர் போகும் பிரிவுக்கு அவரே அலுவலகத்தில் எழுதிக்கொடுத்தார். அவருடைய அம்மா செத்தபோது, அவர் நாகர்கோவிலில் இருந்தார். அந்த நாளில் ஐஸ் பெட்டி வசதி எல்லாம் கிடையாது. புரோகிதர் முகத்தை மூடித்தான் பாடை கட்டச் சொன்னார். அப்பாவுக்குத் தன் மனைவியை ஒரு வார்த்தை, ஒரு கேள்வி கேட்கத் தெரியவில்லை. ஒன்றுக்கும் உதவாதவனாக வளர்ந்த மகன் அதைச் செய்துவிட்டான்.

அன்று முதல் வீடே மாறிப்போயிற்று. ரமா சொல்லிச் சொல்லி ஸ்ரீகுமார் மீண்டும் பி.ஏ. பரீட்சைக்குப் பணம் கட்டினான். இந்த முறை உறுதியாகப் படித்தான். அதற்குள் ரமா அமெரிக்கா சென்றுவிட்டாள். தினமும் போன் செய்தாள். அவன் மேலும் மேலும் படிக்க யோசனை சொல்லியவண்ணம் இருந்தாள். வேறு சில பரீட்சைகளும் எழுதச் சொன்னாள். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கச் சொன்னாள். அமெரிக்காவில் கடைவைத்து நடத்திக்கொண்டு இருந்த அவளுடைய சித்தப்பாவை உத்தியோகம் தரச் செய்து, கல்யாணம் நடந்த இரண்டாண்டுக்குள் ஸ்ரீகுமாரை அமெரிக்கா அழைத்துக்கொண்டுவிட்டாள். புராணக் காலத்தில்தான் இத்தகைய பெண்கள்பற்றிக் கதைகள் இருக்கின்றன. ஆனால், இந்த 20-ம் நூற்றாண்டிலும் உண்டு என்று ரமா நிரூபித்துவிட்டாள்.

ஸ்ரீகுமார் அமெரிக்கா போகப்போகிறான் என்று அப்பாவுக்குத் தெரியும். ஆனால், ஊருக்குப் போகும் நாள் அன்றுதான் அவன் அம்மாவிடம் சொன்னான். அவளுக்கும் ஏதோ நடந்துகொண்டு இருக்கிறது என்று தெரியும். ஆனால், மகன் வீட்டைவிட்டு, நாட்டைவிட்டே போகப்போகிறான் என்று தெரிந்தவுடன் அதிர்ந்துவிட்டாள்.

இப்போது எவ்வளவோ வருஷங்கள் ஆகி விட்டன. அப்பா, அம்மா செய்ய முடியாததை ஒரு பெண் செய்துவிட்டாள். உருப்பட மாட்டான் என்று இருந்தவனை அமெரிக்கா வில் ஒரு சிற்றுண்டிச்சாலைக்குச் சொந்தக்காரனாக்கிவிட்டாள்.

ஸ்ரீகுமார் அப்பாவிடம் தனியாகக் கேட்டான். ''அம்மா ஏதாவது மருந்து சாப்பிடறாளா?''

''எப்பவும்தான் ஏதாவது சாப்பிட்டுட்டே இருப்பா. அவள் தங்கையே டாக்டர்தானே.''

''அது இல்லே. டிரெக்ஸ் மாதிரி...''

''10 வருஷமாவே ஏதேதோ மருந்து சாப்பிடறாளே? அதில் ஒண்ணு வேலியம்னு தெரியும்.''

''அதெல்லாம் இப்போ தர்றதே இல்லையே?''

''எனக்குத் தெரியாதுப்பா. நீயே கேளேன்.''

''கேக்கத்தான் போறேன். ஏன் உடம்பு

பூதமாப்போயிருக்குன்னாவது தெரிஞ்சுக்க

வேண்டாமா? அம்மாவால நகரவே முடியலையே?''

''எனக்கு ஒண்ணுமே தெரியாது.'

'எப்படியப்பா உன்னால ஒண்ணுமே

தெரிஞ்சுக்க முடியாம இருக்க முடியறது?'

அப்பாவிடம் ஒரு சிறு புன்னகை. ''இப்போ 60 வயசாகப்போறது. நான் கேக்காத கேள்வியா, போடாத சண்டையா? ஒண்ணும் பிரயோசனம் இல்லை. பொண்டாட்டி வேண்டும், வீட்டுச் சாப்பாடு வேணும்னா அதுக்கு விலை இருக்கு. என்கூட வேலை பண்ணினவங்க எல்லாரும் ஆபீஸராயிட்டாங்க. நான் இன்னும் பொட்டியைத் தூக்கிண்டு இன்ஸ்பெக்ஷன் டியூட்டி போட்டுண்டு இருக்கேன். ஏன், நீகூடத்தான் ஒன் பொண்டாட்டி பின்னால போயிட்டே. ஒரு நாளைக்கு எனக்குனு ஒரு கடிதாசு போட்டிருக்கியா? ஒரு போன் பண்ணிஇருக்கியா?'

''நான் போன் பண்ணினா அம்மாதான் எடுப்பா. எனக்குப் பேசப் பிடிக்கல.'

''என்னோட பேசலாமே.'

அடுத்த முறை

'நீ ஊர்ல இருக்கிறதில்ல. அதோட என்ன பேசறது? அப்பவே டுடோரியல் காலேஜ் போறேன்னு சொன்னேன். உனக்குப் படிப்பு வராது வராதுனு கிடைச்ச வேலையில சேரச் சொன்னே.'

'அந்த வேலையில சேரலேன்னா, நீ அமெரிக்கா போயிருப்பியா?'

'அந்த மாதிரி ஆகலேன்னா? அம்மா மாதிரி ஒரு பொண்ணை என் தலையில கட்டியிருப்பே. உனக்கு டூர் போற வேலை. எனக்கு அதுக்கு வழியே இல்லையேப்பா. இதெல்லாம் என்னைக்காவது யோசிச்சி இருக்கியா? இல்லேப்பா, நீ எனக்குச் செய்ய வேண்டியது ஒண்ணுமே சரியாச் செய்யலை.'

அப்பா அழுதுவிடுவார் போலிருந்தது.

'வேண்டாம்ப்பா. எதுக்கு இப்போ இதெல்லாம்? வேண்டாம். நான் அடுத்த முறை வர்றத்துக்கு அஞ்சு வருஷம்கூட ஆகும். இதெல்லாம் விட்டுடலாம்.'

'அஞ்சு வருஷமா?'

'உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. இந்த நாள்ல எண்பது வயசெல்லாம் ரொம்பச் சாதாரணம். உங்க இரண்டு பேருக்கும் அறுபதுகூட ஆகலியே. எனக்குப் பணம் கொஞ்சம் சேரட்டும். உங்களையும் அம்மாவையும் ஒரு தடவை அங்கே அழைச்சுக் கிட்டு போறேன். இருந்தாலும் அம்மா பத்திதான் கவலையாயிருக்கு.'

அப்பா மீண்டும் புன்னகைபுரிந்தார்.

ஸ்ரீகுமாருக்கு ஆச்சர்யமாக இருந்தது. எவ்வளவு புதிர்கள் அந்த வீட்டில் இருந்தன.

அம்மாவிடம் மருந்துபற்றிக் கேட்பது அவ்வளவு எளிதாக இல்லை. அவன் அம்மா விடம் 'நீ எப்படி இருக்கிறாய்’ என்று என்றைக்குமே கேட்டது இல்லை. ஒரு காலத்தில் அம்மாவும் அவனுக்கு உணவு ஊட்டியிருப்பாள். கொஞ்சி இருப்பாள். எல்லாமே மறந்துவிட்டது. அவனுக்கு வயது இன்னும் முப்பது ஆகவில்லை. அதற்குள் இவ்வளவு மறதியா? ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடாது என்றே மறந்த மாதிரி இருக்கிறது.

அம்மா பதில் சொல்லவில்லை. 'ஏன், நீயுந்தான் ஏதேதோ மருந்து சாப்பிடறே' என்றாள்.

''நான் சாப்பிடறது எல்லாம் வைட்டமின்ஸ். மருந்து கிடையாது. ஆனா, உன்னுடையது சரியான டிரக்ஸ். உனக்கு யார் இதெல்லாம் எழுதித் தர்றா? மைக்கேல் ஜாக்சன் இதெல்லாம் சாப்பிட்டுத்தான் செத்தான்.'

'நானும் செத்துப்போறதுக்குத்தான் சாப்பிடறேன்னு வெச்சுக்கோயேன்.'

''என்ன பேசறம்மா?'

'எனக்குத் தூக்கம் போயிடுச்சு. இந்த மருந்தெல்லாம் இல்லைன்னா, இப்பவேகூடச் செத்துப்போயிடுவேன்... துடிதுடிச்சு.'

'நீ ஒழுங்கா டாக்டர்கிட்ட இருந்து மருந்து எழுதி வாங்கிக்கணும்மா. இப்பகூட நானே உன்னை அழைச்சுக்கிட்டுப் போறேன். எனக்கு இன்னைக்கு வேற வேலை இல்லை. நாளைக்கு ராத்திரி வரை இங்கேதான் இருக்கப்போறேன்.'

'எனக்கு இருக்கிற மருந்து போதும். டாக்டர்கிட்ட போறதை அப்புறம் வெச்சுக்கலாம். உனக்குக் குழம்புப் பொடி, ரசப் பொடி திரிச்சுவெச்சிருக்கேன். இங்கே எனக்கு ஒத்தாசைக்கு ஆள் இல்லை. ஏதோ முடிஞ்சதைப் பண்ணியிருக்கேன்.'

'இதெல்லாம் அங்கேயே கிடைக்குதும்மா. நீ கஷ்டப்படவே வேண்டாம்.'

'வேணும்றயா, வேண்டாமா? ஏன், அவளுக்

குப் பிடிக்கலயா?'

'அப்படியெல்லாம் இல்லம்மா. போன தடவை எடுத்துண்டு போனேனே, ரமா நீ எப்படிப் பண்ணறேனு எழுதிட்டு வரச்சொன்னா.'

'இப்போ சொல்றே நீ.'

'மறந்துட்டது.'

அம்மா பதில் சொல்லாமல் அவள் அரைத்து வைத்த பொடிகளைக் கொண்டுவந்தாள். மிகுந்த அக்கறையோடு கட்டுக் கட்டிவைக்கப்பட்டு இருந்தது.

அம்மா குளிக்கப் போனபோது, அவன்

அம்மா மருந்துகளைப் புரட்டிப் பார்த்தான். அவன் அதற்கு முன் அந்த மருந்துகளைப் பார்த்தது இல்லை. இந்தியாவில்தான் எவ்வளவு சுதந்திரம்? அங்கே எதற்கும் டாக்டர் சீட்டு வேண்டும். இங்கே ஒரு பனியன் போட்டுக்கொண்டு காலம் தள்ளிவிடலாம். அங்கே சட்டை மேலே சட்டை. கோட்டு. கோட்டுக்கு மேலே கோட்டு. கழுத்துக்கு மஃப்ளர். ஸ்ரீகுமாருக்கு மீண்டும் இந்தியாவுக்கு வந்துவிட வேண்டும்போல இருந்தது. ஆனால், இப்போது முடியாது. அப்பாவைப் போல அவனும் ஒரு கைதிதான்.

கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. அம்மா அவனைக் கட்டிக்கொண்டாள். அழுத மாதிரி தெரியவில்லை.

''அடுத்த வருஷம் உங்க ரெண்டு பேருக்கும் டிக்கெட் அனுப்பறேன். பாஸ்போர்ட்டுக்கு இப்பவே ஏற்பாடு செய்யணும். நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம். எமிரேட்ஸ் மணிகிட்ட சொல்லியிருக்கேன். அவன் எல்லாத்தையும் செஞ்சுடுவான்'- இதைச் சொல்லும்போது அவனே மிகவும் பலவீனமானவனாக உணர்ந்தான். படுத்த படுக்கையாக இருந்த பாட்டியிடம் சென்றான். அவள் தூங்கிக்கொண்டு இருந்தாள்.

ரமா வீட்டு டிரைவர் பெட்டியைப் பின்னால் வைத்தார். அது மிகப் பெரிய கார். மூன்று வரிசை சீட்டுகள். ஸ்ரீகுமார் வண்டியில் ஏறி உட்கார்ந்தான். அப்பா விரும்பினால் விமான நிலையம் வரை வந்திருக்கலாம். ஆனால், வீட்டு வெளி வாசல்படி வரைகூட வரவில்லை.

'நீ தனியாத்தான் வரயா, குமார்' -  கார் பின்னால் இருந்து குரல் கேட்டது. ரமாவின் அப்பா.

'உங்களுக்கு ஏன் இந்த நடுராத்திரியில தொந்தரவு? ஒரு மணி நேரமா கார்லியா உக்காந்திருந்தீங்க? வீட்டுக்கு வந்திருக்கலாமே. அம்மா - அப்பா ரெண்டு பேரும் இருந்தாங்க.'

'பரவால்ல குமார். நான் நாலு மாசம் முன்னாலகூட டெலிபோன் பண்ணிப் பாத்தேன். சரியான பதில் கிடைக்கல.'

'அம்மாவா?''

'இல்லை. ஆண் குரல்.'

அவர் வருஷம் ஒரு முறை அமெரிக்கா வருகிறவர். அமெரிக்காவெல்லாம் அவருக்கு உறவினர்கள். ஆனால், சென்னையில் மாப்பிள்ளை வீட்டில் அனுமதி இல்லை.

நட்டநடுநிசியில் விமானம் கிளம்பியது. உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஸ்ரீகுமார் தூங்கிவிட்டான். துபாயில் விமானம் மாற வேண்டும். நேரம் காலம் தெரியாமல் எப்போதோ அமெரிக்கா போய்ச் சேரும். மீண்டும் விமானம் மாறி அவன் ஊருக்குப் போக வேண்டும்.

அவன் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் ரமா வரவேற்றது எப்போதும்போல இல்லை. 'உங்கள் அம்மா போய்விட்டாள்' என்றாள்.

'என்ன சொல்ற? நேத்தித்தான் பாத்தேன்.'

'நேத்து இல்லை. முந்தானேத்து. உங்க அப்பா போன் பண்ணினார்.'

'எப்போ?'

'நீங்க சென்னையிலேந்து கிளம்பின அடுத்த நாள்.'

ஸ்ரீகுமார் மலைத்து நின்றான்.

'தூக்கத்திலேயே போயிட்டாங்களாம். அன்னிக்கே எடுத்துட்டாங்க.'

அடுத்த முறை

'அம்மா' என்று சொல்லியபடி ஸ்ரீகுமார் விமான நிலையத்திலேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். அவனுக்குத் துக்கமாகவும் இருந் தது, எங்கோ ஒரு மூலையில் ஆறுதலாகவும் இருந்தது. அதெப்படி சொல்லிவைத்த மாதிரி அவன் கிளம்பின இரவே உயிரைவிட்டிருக்கிறாள். பாவம், அப்பா. ஒன்றும் புரியாமல் சாஸ்திரிகள் சொல்வதைத் திருப்பிச் சொல்லிக் கொள்ளி போட்டிருப்பார்.

அம்மா ஒரேயடியாகப் பருத்திருந்தாளே தவிர, சாகப்போகிறவளாகத் தெரியவில்லை. அவளாக அடுத்த முறை இல்லை என்று தீர்மானித்துவிட்டாள். அப்பாவுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால், அவனால் யூகிக்க முடிந்தது. 10 நாட்கள் சாப்பிட வேண்டிய மருந்தை ஒரே இரவில் சாப்பிட்டிருக்கிறாள்.