Published:Updated:

காத்து நிற்கும் பூதம் !

யூமா வாசுகி ,ஹரன்

##~##

இமயமலையின் அடிவாரத்தில் ஷெர்லோங், தீலோங் என்று இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரின் கிராமங்களும் அருகருகே இருந்தன.  காலையில் இருவரும் ஒன்றாகக் காட்டுக்குச் செல்வார்கள். வலை விரித்துப் பறவைகளைப் பிடிப்பார்கள். மாலையில் அதைப் பங்கு பிரித்துக் கொண்டு தங்கள் கிராமத்துக்குச் செல்வார்கள்.

தினமும் காலையில் ஷெர்லோங், தீலோங்கின் கிராமத்துக்குச் செல்வான். இல்லை என்றால் தீலோங், ஷெர்லோங்கின் கிராமத்துக்குச் செல்வான். அப்புறம்தான் அவர்கள் இருவரும் ஒன்றாகக் காட்டுக்குச் செல்வார்கள்.

ஒரு நாள் வேட்டை முடிந்து திரும்பும்போது ஷெர்லாங்குக்கு ஒரு யோசனை வந்தது. அவன் சொன்னான்...

''தீலோங், நான் தினமும் உன் கிராமத்துக்கு வந்து, பிறகு அங்கே இருந்து மலைக்குச் செல்லும்போது நிறையத் தூரம் நடக்க வேண்டி இருக்கிறது. அதை நாம் தவிர்த்தால் என்ன? வேட்டைக்குச் செல்கிற மலையில் நாம் சந்திக்கலாம். தேவையில்லாமல் நடப்பதையும் குறைத்துவிடலாம்!''

தீலோங்குக்கும் அது நல்ல யோசனையாகப் பட்டது. இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள். முதல் மலைக்கு வருகிற ஆள் ஓர் இடத்தில் நிற்க வேண்டும்.  இரண்டாவது ஆள் அங்கே வந்த பிறகு சேர்ந்து வேட்டையைத் தொடங்க வேண்டும்.

காத்து நிற்கும் பூதம் !

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டதை இன்னொரு உருவம் கேட்டுக்கொண்டு இருந்தது. அந்தக் காட்டில் உள்ள மோசமான பூதம்தான் அது. இரண்டு பேராகச் சேர்ந்து இருந்தால் பூதத்தால் அவர்களைத் தாக்க முடியாது.  ஒவ்வொருவராகத் தனியாக மாட்டிக்கொண்டால் சுலபமாகத் தின்று தீர்த்துவிடலாம் அல்லவா! அவர்களின் திட்டத்தைக் கேட்டு பூதம் மகிழ்ச்சி அடைந்தது.

அடுத்த நாள் ஷெர்லாங் முதல் மலைக்கு வந்தான். தீலோங்கை எதிர்பார்த்து வெகு நேரம் காத்திருந்தான். ''ஒருக்கால் அவன் முன்பே வந்து வேட்டையைத் தொடங்கி இருப்பானோ?'' என்று நினைத்து, ஷெர்லாங் வேட்டையைத் தொடங்க முடிவு செய்தான். நேற்று மரத்தில் விரித்துவைத்த வலையில் சிக்கிய பறவைகளைச் சேகரிப்பதற்காக அவன் மரத்தில் ஏறினான். அந்த நேரத்தில் கீழே தீலோங்கின் குரல் கேட்டது:

''என்ன இன்று நீ முன்பாகவே வந்துவிட்டாயா?''

ஷெர்லாங்குக்கு லேசாகச் சந்தேகம் ஏற்பட்டது. தீலோங்கின் குரல் இப்படி இருக்காது. அவன் கீழே பார்த்தான். அங்கே யாரும் இல்லை. சற்று நேரத்துக்குப் பிறகு மீண்டும் அந்தக் குரல் கேட்டது.

''நீ எப்படி மரத்தில் ஏறினாய்?''

காத்து நிற்கும் பூதம் !

அவனுக்கு மீண்டும் சந்தேகம் ஏற்பட்டது.  தீலோங் இப்படிக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், எப்போதும் நாங்கள் ஒன்றாகத்தானே மரத்தில் ஏறுவோம்? என்று நினைத்த ஷெர்லோங் கீழே உற்றுப் பார்த்தான். ஒரு பூதம் ஒளிந்துகொண்டு இருப்பது தெரிந்தது! பூதத்தின் கையில் தீலோங்கின் தலைப்பாகையும், உடையும் இருக்கின்றன.

''கடவுளே! தீலோங்கை இந்தப் பூதம் பிடித்துத் தின்றுவிட்டதுபோல் இருக்கிறதே!’ என்று பயந்து நடுங்கினான் ஷெர்லோங். ஆனால் பூதத்துக்கு மரம் ஏறத் தெரியாது என்று நினைத்து சற்று நிம்மதி அடைந்தான்.

மரத்தின் மேலே இருக்கிற ஆள் தன்னைப் பார்த்துவிட்டான் என்று அறிந்துகொண்ட பூதம், இப்போது வேறு விதமாகப் பேசியது.

''நண்பனே, நீ கீழே இறங்கி வந்தால் பரிசு தருகிறேன்!''

சதிகாரப் பூதம் அது. கீழே இறங்கினால் அது தன்னைக் கொன்றுவிடும் என்று ஷெர்லோங்குக்குத் தெரியும். அவன் அசையாமல் அங்கேயே அமர்ந்து இருந்தான்.

'இந்தப் பூதத்திடம் இருந்து எப்படித் தப்புவது?’ என்று நினைத்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அன்று வலையில்  சிக்கி இருந்த பறவைகள் எல்லாவற்றையும் அவன் மூன்று கட்டுகளாகக் கட்டினான். ஒரு கட்டு பெரியது. இரண்டாவது கட்டு அதைவிடச் சிறியது. மூன்றாவது கட்டு மிகவும் சிறியது. முதலில் அவன் பெரிய கட்டை எடுத்து பூதம் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் போட்டான். அது 'தொப்!’ என்று விழுந்தது. சத்தம் கேட்டு பூதம் துள்ளி எழுந்தது. மரத்தின் மீது இருந்த ஆள்தான் கீழே விழுந்துவிட்டான் என்று நினைத்து, அது கட்டு விழுந்த இடத்துக்கு ஓடியது. ஆனால் விழுந்தது அவன் இல்லை என்று அறிந்தபோது அது  ஏமாற்றத்துடன் மரத்தடியில் வந்து அமர்ந்தது.

காத்து நிற்கும் பூதம் !

சற்று நேரம் கழித்து இரண்டாவது கட்டை அவன் இன்னும் தொலைவில் எறிந்தான். பூதம் மீண்டும் எழுந்து, கட்டு விழுந்த இடத்தை நோக்கி ஓடியது. முதல் கட்டு விழுந்தபோது ஓடிய வேகத்தில் அது இப்போது ஓடவில்லை. முன்பைவிடச் சற்று மெதுவாகத்தான் ஓடியது. இப்போதும் ஏமாற்றம் அடைந்த பூதம் தளர்ந்துபோய் அதே மரத்தடியில் வந்து அமர்ந்தது.

சற்று நேரம் கழித்து ஷெர்லாங் மூன்றாவது கட்டை எடுத்து வெகு தொலைவில் எறிந்தான்.

அந்தப் பூதம் இரண்டு முறை ஏமாந்தது அல்லவா? அதனால் இந்த முறை அது கட்டு விழுந்த இடத்துக்கு மிகவும் மெதுவாகத்தான் சென்றது. இந்த நேரத்தில் ஷெர்லாங் மரத்தில் இருந்து தாவி இறங்கினான். கிராமத்தை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடினான். அந்தப் பூதம் மீண்டும் ஏமாந்துபோய்... திரும்பிவந்து ஷெர்லாங்குக்காக மரத்தடியில் காத்திருந்தது.

இன்னும் அந்தப் பூதம் அதே மரத்தின் அடியில்தான் காத்திருக்கிறது என்று இமயமலைப் பகுதியில் வசிப்பவர்கள் நம்புகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு