பிரீமியம் ஸ்டோரி
##~##

கண்ணாடித் தொட்டி மீன்கள்

காலையில்
காபியில் சர்க்கரை அதிகம்
டம்ளரோடு பறந்தது காபி
சிதறியது கொஞ்சம்
மீன் தொட்டியின் மேல்.
 

மீன் குஞ்சுகள்
பயந்து நெருங்கின தாயிடம்.
தொட்டிக்கு வண்ணமேற்ற
முற்படுகிறார்கள் என்று
தந்தை மீன் சமாதானப்படுத்தியது.

கணவன் சிற்றுண்டி கேட்க
பாத்திரம் சிதறியது சமையலறையில்
வேண்டுமென்றே
மீண்டும் பதறின குஞ்சுகள்
ஒன்றுமில்லையென்று
தாய் மீன் சமாதானப்படுத்தியது.

சண்டை முற்றியது
பள்ளிக்குக் கிளம்பிய குழந்தைகள்
தொட்டிக்குப் பக்கத்தில் ஒடுங்கின
நீங்கள் வெளியே இருக்கிறீர்கள்
நாங்கள் உள்ளே
பயம் வேண்டாம்
சமாதானமாகிவிடுவர் என்று
மீன் குஞ்சுகள்

சமாதானம் சொல்லின
குழந்தைகள் காதில்
விழவே இல்லை!

 - பி.சுஜாதா

பார்வை

முதலில்
சாதாரணமாகத் தெரிந்தவள்
மெள்ள மெள்ள
அழகாகிக்கொண்டிருக்கிறாள்
நீண்ட நேரமாக
பேருந்து வராத
நிறுத்தத்தில்!

- ப.உமா மகேஸ்வரி

முறை

சொல்வனம்

பூங்காவின் சறுக்கு மரத்தில்
தன் முறைக்காகக் காத்திருக்கும்
குழந்தைபோலக் காத்திருக்கிறது
இலை மேல் ஒரு மழைத் துளி!

- ப.உமா மகேஸ்வரி

கறுப்பும் வெள்ளையும்

யாருக்கும் அநாவசியமானவராக
வாழ்ந்தவர்
அமரர் ஆனதும்
அனைவருக்கும் கடவுள் ஆகிவிடுகிறார்.

பழியும் பாவமும்
சுமந்தவர்
தண்டனைக்குப் பிறகு
அனுதாபத்துக்குரிய மனிதராகிறார்.

ஒரு நடிகையின் கவர்ச்சியை
ஒரே மாதிரிதான் ரசிக்கிறார்கள்
அப்பாவும் மகனும்

ஒரே பெண்ணைக் காதலித்த
நண்பர்கள்
சகோதரக்
குடும்பங்களாகிவிடுகின்றனர்
திருமணத்துக்குப் பிந்தைய
நாட்களில்.

ராமன் நாயகன் என்றாலும்
ராவணனும் கொண்டாடப்படுகிறான்.

கொல்லப்பட்டது பின்லேடனே
ஆயினும்
ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை
அமெரிக்காவின் நியாயங்கள்.

இலவசங்கள் எத்தனை
கொடுத்தாலும்
மாறித்தான் விழுகின்றன ஓட்டுகள்
ஒவ்வொரு தேர்தலுக்கும்

இறந்த காலத்துக்கும்
நிகழ்காலத்துக்கும் இடையே
காணாமல் போகும் நியாயங்களின்
இடைவெளியில் தழைக்கிறது
தினசரி வாழ்க்கையும்
உலக அரசியலும்!

- ஹேமா செல்வராஜ்

சொல்வனம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு