Published:Updated:

நூற்றுக்கு நூறு !

யூமா வாசுகி ஓவியம் : ஹரன்,

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஒரு கிராமத்தில் பாவெல், பியோதர் என்ற இரண்டு பேர் வசித்தார்கள். பாவெலுக்குக் குதிரைகள் மிகவும் பிடிக்கும். 'உலகத்திலேயே பெரிய செல்வம் குதிரைகள்தான்’ என்பது அவன் எண்ணம். ஆனால், ''இந்த உலகத்தில் மிகப் பெரிய செல்வம் நண்பர்களே'' என்று சொல்வான் பியோதர். இந்த விஷயம்குறித்து இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடக்கும். இறுதியில் வெளிநாடுகளுக்குச் சென்று குதிரைகளையும் நண்பர்களையும் சம்பாதிப்பது என்று அவர்கள் முடிவுசெய்தார்கள்.

ஒரு வருடக் காலம் அவர்கள் வெளிநாடுகளில் சுற்றி அலைந்து குதிரைகளையும் நண்பர்களையும் சம்பாதித்துத் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள்.

பாவெல் கேட்டான்: ''நீ எத்தனை நண்பர்களைச் சந்தித்தாய்?''

''நான் 99 நண்பர்களைச் சந்தித்தேன்'' என்ற பியோதர், ''நீ எத்தனைக் குதிரைகளைச் சம்பாதித்தாய்?'' என்று கேட்டான்.

''நான் 99 குதிரைகளைச் சம்பாதித்தேன். இன்னும் ஒன்று கிடைத்தால் என்னிடம்  100 குதிரைகள் இருக்கும்'' என்றான் பாவெல்.

அதைக் கேட்டு பியோதர் ''ஒரு காரியம் செய்யலாம். என் குதிரையை உனக்குக் கொடுக்கிறேன். அப்போது உன்னிடம் 100 குதிரைகள் இருக்கும்'' என்றான்.

பாவெலுக்கு மகிழ்ச்சி. அவன் சொன்னான் ''அப்படி என்றால் நீ சம்பாதித்த 99 நண்பர்களுடன் நானும் சேர்ந்தால், உனக்கு 100 நண்பர்கள் இருப்பார்கள் அல்லவா?''

நூற்றுக்கு நூறு !

அவன் சொன்னதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டான் பியோதர். வீட்டுக்குச் சென்ற பாவெல், தன் அம்மாவிடம் ''அம்மா, என் கனவு நினைவாகிவிட்டது. எனக்கு இப்போது சொந்தமாக 100 குதிரைகள் உண்டு'' என்றான்.

அதைக் கேட்டு அவன் அம்மாவும் மகிழ்ந்தார். அதே நேரம் பியோதரும் தன் அம்மாவிடம் இப்படிச் சொன்னான்: ''அம்மா நான் 100 நண்பர்களைச் சம்பாதித் தேன்.''

அதற்கு அம்மா ''100 நண்பர்கள் இருப்பது நல்லதுதான். ஆனால், அவர்கள் ஆத்மார்த்தமான நண்பர்களா என்று தெரிந்துகொள்ள வேண்டும்''

''அப்படியா?''

''ஆமாம். நீ இப்போதே சந்தைக்குச் சென்று உன் சொத்துகளை இழந்துவிட்டாய் என்றும் வாழ்வதற்கு வழி இல்லை என்றும் சொல். அப்போது உன் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்?'' என்றார்.

பியோதர் தன் அம்மா சொன்னது போலவே செய்தான்.

நூற்றுக்கு நூறு !

அதே நேரம் அன்று இரவு பாவெல் வீட்டுக்குத் திருடர்கள் வந்தார்கள். அவர்கள் 100 குதிரைகளையும் திருடிச் சென்றுவிட்டனர். மறுநாள் காலையில் பாவெலுக்கு குதிரைகள் திருடுபோன விஷயம் தெரிந்தது. அவன் பல இடங்களிலும் அலைந்து தேடியும் குதிரைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பினான்.

''அம்மா, எனக்கு ஒரு நாள் மட்டும்தான் மகிழ்ச்சி கிடைத்தது. இப்போது இந்த உலகத்தில் மிகவும் துயரமானவன் நான்தான்'' என்று அம்மாவிடம் வருத்தப்பட்டான்.

அதைக் கேட்டு அவன் அம்மாவும் வருந்தினார்கள். இந்த நேரத்தில் பியோதரின் வீட்டில் என்ன நடந்தது?

அதிகாலையிலேயே பியோதரின் நண்பர்கள் பணமும் உடைகளும் உணவுப் பொருட்களும் எடுத்துக்கொண்டு அவன் வீட்டுக்கு வந்தார்கள். கொண்டுவந்த பொருட்களை பியோதரிடம் கொடுத்து ''நண்பா, நாங்கள் இருக்கும்போது நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம். உனக்கு நாங்கள் உதவுகிறோம்.'' என்றார்கள்.

நூற்றுக்கு நூறு !

அதைக் கேட்டு மகிழ்ந்தார் பியோதரின் அம்மா. நண்பர்கள் எல்லோரும் விடைபெற்றுச் சென்ற பிறகு அவர் சொன்னார்:

''மகனே உனக்கு கிடைத்து இருக்கும் நண்பர்கள் எல்லோரும் உண்மையான நண்பர்கள்தான். நீ ஆபத்தில் இருப்பதை அறிந்தவுடன் உதவி செய்ய வந்துவிட்டார்கள்.''

அதன் பிறகுதான் பாவெல் குதிரைகள் திருடுபோன செய்தி பியோதருக்குத் தெரிந்தது. உடனே அவன் பாவெல் வீட்டுக்குச் சென்றான். தன் நண்பர்கள் கொடுத்த பணத்தையும் மற்ற பொருட்களையும் பாவெலுக்குக் கொடுத்தான்.

''நண்பனே, இழந்ததை நினைத்து வருந்தாதே. இவற்றைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திரு. நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் கஷ்டப்பட  மாட்டார்கள்'' என்றான்.

''எனக்கு எல்லாம் புரிந்தது. உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும்விட மேலான செல்வம் நல்ல நண்பர்கள்தான்!'' என்றான் பாவெல்.

பிறகு அவர்கள் ஆழ்ந்த நட்புடன் வெகு காலம் வாழ்ந்தார்கள்.                

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு