Published:Updated:

கடவுள் கண்ட கனவு !

விஸ்வம் , கண்ணா

கடவுள் கண்ட கனவு !

விஸ்வம் , கண்ணா

Published:Updated:
##~##

''நான் கிளம்பறேம்மா...  ஆட்டோ சத்தம் கேட்குது'' என்று மகள் சொன்னதும், ''போயிட்டு வாடி செல்லம். லஞ்ச் எடுத்துகிட்டியா?'' என்று கேட்டார் அம்மா.

''ம்'' என்றவாறு புத்தகப்பையுடன் படி இறங்கினாள் மீனா. ஆட்டோ டிரைவர் புத்தகப் பையை வாங்கிக் கொண்டார். இரண்டு குழந்தைகளுக்குப் பக்கத்தில் மூன்றாவது குழந்தையாய் உட்கார்ந்துகொண்டாள் மீனா.

''எல்லோரும் கை, காலை உள்ளே வெச்சாச்சா? ஸ்டார்ட் பண்ணலாமா?''

''பண்ணலாம் அங்கிள்!''

பள்ளியில்... இரண்டாவது பீரியடில் மிஸ் கேட்ட கேள்விக்கு மீனாவால் பதில் சொல்ல முடியவில்லை.  

''மீனா, நேத்திக்கு சரியாய்ப் படிக்கலை. என்ன காரணம்னு நான் சொல்லவா?'' மிஸ் கேட்டதும் மீனா திருதிருவென விழித்தாள்.  

''எல்லோரும் எழுந்து, மீனாவுக்கு ஹேப்பி பர்த்டே பாடுங்க'' என்று மிஸ் சொன்னதும், எல்லோரும் ஹேப்பி பர்த்டே பாடினர். மிஸ் தன்னிடம் இருந்த சாக்லேட் பாக்கெட்டை பிரித்து முதலில் மீனவுக்கும் பிறகு மற்ற குழந்தைகளுக்கும் கொடுத்தார்.

''உங்களுக்கு எப்படித் தெரியும் மிஸ்?'' ஆச்சர்யத்துடன் கேட்டாள் மீனா.

''உங்கள் எல்லோருடைய பர்த்டே லிஸ்ட்டும் என்கிட்டே இருக்கு. நேத்திக்கு சண்டே. அதனால் மீனாவோட பர்த்டேயை நாம இன்னிக்கி கொண்டாடறோம். மீனா நேத்து முழுக்க ஜாலியா இருந்ததாலே சரியாப் படிக்கலை. அதனால நாளைக்கு மீனா தரோவா படிச்சுட்டு வந்துடுவா. இப்போப் பாடத்துக்கு போவோம். சரியா மீனா?''

''ஓ.கே., மிஸ்!''

லஞ்சுக்கு அடுத்த பீரியடில் மீனா எழுந்து, ''மிஸ் ஒன் பாத்ரூம் போகணும்'' என்று கேட்டதும் ஆசிரியர் திரும்பிப் பார்த்தார்.  

கடவுள் கண்ட கனவு !

''சரி, ஓடாம ஜாக்கிரதையா போ. இன்னிக்கு ஆயா வரலை.'' என்றதும் தலையை ஆட்டியவாறு மீனா சென்றாள்.

திடுக்கிட்டு விழித்த கடவுள் கண்களை கசக்கியபடி எழுந்து உட்கார்ந்தார்.

''பிரபு இன்று ஏன் இத்தனை நேரம் உறங்கிவிட்டீர்கள்?'' என்று கேட்டார் தேவியார்.

''தேவி, மிக நல்ல கனவு ஒன்றைக் கண்டேன். அது தந்த ஆனந்தத்தில் ஆழ்ந்து உறங்கிவிட்டேன். உடனே நான் பூவுலகுக்குச் சென்று உண்மை நிலை கண்டறிய வேண்டும்'' என்றவர், அடுத்த நொடி பூமியை நோக்கிப் பயணித்தார். சிறுமி மீனாவைத் தேடிக் கண்டுபிடித்தார்.  

''சனியனே, ஏண்டி ஒழுங்காச் சாப்பிடாம அப்படியே வெச்சிருக்கே?'' மீனாவின் தலையில் அவள் அம்மா குட்டினார். வலி பொறுக்காத மீனாவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. சட்டையில் கண்களைத் துடைத்துக்கொண்டாள். 'பளார்’ என்று முதுகில் அடி விழுந்தது.

''வெள்ளைச் சட்டையில் துடைக்காதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? இதே இட்லிதான் இன்னிக்கு உனக்கு லஞ்ச். மத்யானம் சாப்பிடலைன்னா ராத்திரிக்கும் இதையே திங்கச் சொல்வேன். ஆட்டோக்காரன் ஹாரன் அடிக்கிறான். கிளம்பு... ஸ்கூல்லே பாக்கியை அழுதுக்கோ'' என்று விரட்டினார்.

ஒரு கையில் புத்தகப் பை, இன்னொரு கையில் உணவுப் பையைத் தூக்கி, ஷூவில் அரைகுறையாய்க் கால் நுழைத்து, நொண்டியபடியே நடந்தாள் மீனா. ஆட்டோக்காரனின் இடைவிடாத ஹார்ன் ஒலி மீனாவைக் கண்டதும் நின்றது.  

''ஏய்... ஏழரை மணிக்கு வாசலுக்கு வெளியே நிக்கணும்னு சொல்லி இருக்கேனில்லே'' மீனா பாதி ஏறும்போதே ஆட்டோ உறுமி கிளம்பியது.  

பள்ளியில் முதல் பீரியடில் ஆசிரியை கேட்டார் ''ஹோம் வொர்க் ஏன் இன்கம்ப்ளீட்டா இருக்கு?''

''நேத்து எனக்கு ஹேப்பி பர்த்டே மிஸ், அதனாலே...''

''அதனாலே எட்டு மணி நேரம் கேக் வெட்டினியாக்கும்?  நாளைக்கு வரும்போது மூணு தடவை இம்போசிஷன் எழுதிகிட்டு வரணும்'' என்று சிடுசிடுத்தார்.

அடுத்த பீரியடில் சோஷியல் மாஸ்டரிடம் ஒரு விரலைத் தூக்கி பெர்மிஷன் கேட்டாள் மீனா. ''எத்தனை தடவைதான் போவே? இதுவே கடைசி. மறுபடியும் கேட்டால் உதைப்பேன்'' என்றார்.

பாத்ரூமை நோக்கி ஓடினாள் மீனா. பார்த்துக்கொண்டு இருந்த கடவுள் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

அன்று இரவு அப்பா அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினார். ''மீனா எங்கே நித்யா?'' என்று கேட்டார்.  

''ஹோம் வொர்க் பண்றாள்னு நினைக்கறேன்.''

அப்பா, மீனாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தார். உள்ளே இருந்து மென்மையாய் அந்தக் குரல்... ''ஏன் பேச மாட்டேங்கறே என் மேல கோபமா? நான்தான் அஞ்சே நிமிஷத்துலே உனக்குப் புது டிரஸ் ரெடியாயிடும்னு சொல்றேன் இல்லே?'' எதிரில் இருந்த டெடி பியரிடம் மீனா பேசிக்கொண்டு இருந்தாள். கலர் கலராய் பேப்பர்கள், பளபளவென்று சம்க்கிகள்.

''கொஞ்ச நேரத்துலே புது டிரஸ் போட்டுக்கிட்டு நாம கேக் சாப்பிடலாம். இப்போ சமத்தா உட்கார்ந்து இரு. அஞ்சே நிமிஷத்துலே உனக்கு டிஸ்கோ டிரஸ் ரெடி பண்ணிடறேன்.''

மடார் என்று கதவு திறந்தது. கனல் தெறிக்கும் கண்களுடன் மீனாவின் அப்பா ''என்ன பண்றே?'' என்று கேட்டார்.

''டெடிக்கு ஹேப்பி பர்த் டே. அதான் புது டிரஸ் போட்டு கேக் வெட்டி...''

''உன் டெடியை ஒழிச்சுக் கட்டினால்தான் நீ உருப்படுவே'' என்ற அப்பா, டெடியைத் தூக்கி பரணில் வீசி எறிந்தார். ''மரியாதையா ஹோம் வொர்க்கை முடி. இல்லேன்னா அடுத்த பேரன்ட்ஸ்டீச்சர்ஸ் மீட்டிங்குக்கு வர மாட்டேன்'' என்று கதவை அடித்துச் சாத்தி வெளியேறினார் அப்பா.

அன்று இரவு மீனாவின் கனவில் கடவுள் தோன்றி அவளை அள்ளி அணைத்தார். ''அழுகையை நிறுத்து. உனக்கு என்ன பிடிக்கும்?'' அவள் கண்களைத் துடைத்தபடி கேட்டார்.  

''எனக்கு எல்லாம் பிடிக்கும் எல்லாரையும் பிடிக்கும். ஆனா, இந்த உலகத்துலேயே டெடிக்கு மட்டும்தான் என்னைப் பிடிக்கும்.அதனாலே... எனக்கு டெடி வேணும்'' என்றாள் மீனா.

''அவ்வளவுதானே'' என்ற கடவுள் தும்பினார். அப்போது தோன்றிய பெரும் காற்றில் கதவு படார் என்று அடித்துக்கொண்டது. மேலே இருந்த டெடி பொம்மை கீழே மீனாவின் மேல் விழுந்தது. பெரும் மகிழ்ச்சி அடைந்த மீனா அதை கட்டிப்பிடித்தபடி தூங்கிப்போனாள்.