Published:Updated:

சின்னச் சின்ன கதைகள் !

சின்னச் சின்ன கதைகள் !

பிரீமியம் ஸ்டோரி

உழைப்பு வைத்தியம் !

##~##

முன்பு ஒரு காலத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருடைய மனைவி இரவில் தூக்கமின்மை காரணமாகத் தவித்துக்கொண்டு இருந்தாள். அந்த ஊரிலேயே சிறந்த ஒரு மருத்துவரிடம் மனைவியை அழைத்துச் சென்றார் செல்வந்தர். வைத்தியர், ''ஐயா, உங்கள் மனைவியைக் குணப்படுத்தும் மருந்து அவரிடமே இருக்கிறது. அவர் பகலில் நன்றாக வேலை செய்ய வேண்டும்'' என்றார். இதைக் கேட்ட செல்வந்தர் ''நானோ பெரிய செல்வந்தன். என் மனைவி வேலை செய்வதா?'' என்று கத்திவிட்டு வந்துவிட்டார்.

சில நாட்கள் கழிந்தன. வேறு பல வைத்தியர்கள் மருந்து கொடுத்தும் தூக்கமின்மை தீரவில்லை. முதல் வைத்தியர் கூறியதைச் செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தில் செல்வந்தரின் மனைவி வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது. பிறகு பழகிப்போனது. தூக்கமின்மையும் மறைந்துபோனது. செல்வந்தருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அவர் வைத்தியரை அழைத்துப் பரிசு வழங்க நினைத்தார்.

சின்னச் சின்ன கதைகள் !

அதை வாங்க மறுத்த வைத்தியர், ''ஐயா, நான் மருந்து எதுவும் கொடுக்கவில்லை. அதனால் பரிசு வேண்டாம். நிம்மதியான உறக்கமும் மகிழ்வான வாழ்வும் வேண்டுமானால், அதற்கான திறவுகோல் உழைப்புதான். அதைப் புரிந்துகொண்டால் போதும்'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

கடவுளைப் பார்க்கணும் !

லல்லியின் அப்பா, வருடா வருடம் அவளது பிறந்த நாளின்போது அவள் கேட்டதை வாங்கித் தருவார். இந்த வருடமும் அவளை அழைத்து ''உனக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டார்.

லல்லிக்கு வித்தியாசமான ஆசை தோன்றியது. ''அப்பா, நான் கடவுளைப் பார்க்கணும்'' என்றாள். சில நொடிகள் திகைத்த அப்பா, ''கடவுள்தானே, பார்க்கலாம்'' என்றார்.

மறுநாள். அப்பாவுடன் கடைவீதிக்குச் சென்றாள் லல்லி. ஒரு கடையில் விதவிதமான பேனாக்கள், கலர் பென்சில்கள் இருந்தன. அப்போது அங்கே வந்த ஒரு சிறுமி, ''அண்ணா, இந்த கலர் பென்சில் பாக்ஸைக் கொடுங்க'' என்று பத்து ரூபாயை நீட்டினாள்.

கடைக்காரர் ''பாப்பா... இது இருபது ரூபாய். இன்னும் பத்து ரூபாய் வேணும்'' என்றார். அதற்கு அந்தச் சிறுமி, ''பத்து ரூபாய்தான் அண்ணா இருக்கு. இதுவே கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வெச்சது. கலர் பென்சில் பாக்ஸ் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை'' என்றாள்.

சின்னச் சின்ன கதைகள் !

''அதுக்கு நான் என்ன பண்றது? இன்னும் பத்து ரூபாயுடன் வா. இப்போ இடத்தைக் காலி பண்ணு'' என்று விரட்டினார் கடைக்காரர். அந்தச் சிறுமி ஏமாற்றத்துடன் செல்ல முயன்றாள்.

அதைப் பார்த்த லல்லி, ''அப்பா, எனக்கு ஒரு பத்து ரூபாய் கொடுங்கள்'' என்று வாங்கினாள். அந்தச் சிறுமியிடம் நீட்டினாள். அவள் மறுத்தாள். ''பரவாயில்லை வெச்சுக்க. இன்னிக்கி எனக்கு பர்த் டே. எல்லோருக்கும் சாக்லேட் கொடுப்பேன். உனக்கு சாக்லேட்டுக்குப் பதில் இதைக் கொடுத்ததா நினைச்சுக்க'' என்றாள் லல்லி.

சிறுமியும் வாங்கிக்கொண்டு கலர் பாக்ஸைக் கடையில் பெற்றுக்கொண்டு நன்றி கூறிச் சென்றாள். அப்போது அப்பா, ''லல்லி, கலர் பென்சிலை வாங்கினதும் அந்தச் சிறுமியின் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் பார்த்தியா? நீ கடவுளைப் பார்க்கணும்னு சொன்னியே, அவள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்தியா?'' என்றார்.

''ஆமாம் அப்பா... நான் கடவுளைப் பார்த்துட்டேன்'' என்றாள் லல்லி.

நரியும் புலியும் !

பசி மிகுந்த ஒரு புலி காட்டுக்குள் உணவைத் தேடி அலைந்தது. அப்போது ஒரு நரி அதனிடம் மாட்டிக்கொண்டது. ''வேறு வழி இல்லை. இன்று உன்னைத்தான் தின்னப் போகிறேன்'' என்றது புலி.

எப்படியாவது புலியிடம் இருந்து தப்ப நினைத்த நரி, ''ஹா...ஹா... புலியே, நீ என்னைத் தின்ன முடியாது. தேவலோகத்துக் கடவுள் என்னை மிருகங்களுக்கு எல்லாம் அரசனாகப் படைத்து, இங்கே அனுப்பி இருக்கிறார். என்னை நீ கொன்று தின்றால் கடவுளின் கோபத்துக்கு ஆளாவாய்'' என்றது நரி.

புலியோ, இதை நம்புகிற மாதிரி தெரியவில்லை. நரி தொடர்ந்து சொன்னது.

சின்னச் சின்ன கதைகள் !

''இந்த விஷயம் காட்டில் உள்ள எல்லோருக்குமே தெரியும். என்னோடு வா, உனக்குக் கண்கூடாகக் காட்டுகிறேன். என்னைப் பார்த்ததும் எல்லோரும் பயந்து ஓடுவார்கள்'' என்றதும் ''சரி'' என்றது புலி.

உடனே இரண்டும் சேர்ந்து காட்டுக்குள் சென்றன. வழியில் புலியைப் பார்த்த மற்ற மிருகங்கள் எல்லாம் பயந்து, விழுந்தடித்து ஓடின. நரியைக் கண்டுதான் ஓடுகின்றன என்று நினைத்துக்கொண்ட புலி பசியுடன் சென்றுவிட்டது.

இரண்டு காக்கைகள் !

 அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மனை ஜோதிடன் இதனைத் தனக்குச் சாதகமாய் அடிக்கடி பயன்படுத்தினான். ஒரு முறை அரசனுக்கு அன்றைய நாள் பிரச்னைகள் அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. 'இதுபோல் அடிக்கடி நடக்கிறதே. மன்னனாக இருந்தும் நிம்மதியாக பொழுதைக் கழிக்க முடியவில்லையே’ என நினைத்து ஜோதிடனை அழைத்தான். ''மன்னா, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் அன்றைய நாள் சிறப்பாய் அமையும்'' என்றான் ஜோதிடன்.

சின்னச் சின்ன கதைகள் !

உடனே ஒரு சேவகனை அழைத்த மன்னன், ''நீ  அதிகாலையில் இரண்டு காக்கைகள் ஒன்றாக இருக்கும் இடத்தைப் பார்த்து வா'' என்று கட்டளையிட்டார். சேவகன் அதிகாலை எழுந்தவுடன் தெருத் தெருவாக சுற்றினான். அரண்மனைக்கு நான்காவது தெருவில் ஜோடிக் காக்கைகள் இருப்பதை கண்டு மன்னனிடம் விரைந்தான்.

மன்னன் அந்த இடத்திற்கு வந்தான். அங்கே காக்கைகள் இல்லை. கோபமாகி சேவகனுக்கு 10 கசையடி தண்டனை விதித்தான். சேவகன் சிரித்தான். ''ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டான் மன்னன். ''நல்லவேளை, நீங்கள் அந்தக் காக்கைகளைப் பார்க்கவில்லை. இல்லையென்றால் அதிகாலையில் அவற்றைப் பார்த்த எனக்குக் கிடைத்த கசையடிகள் உங்களுக்கு அல்லவா கிடைத்து இருக்கும்'' என்றான்.

மன்னன் தலை குனிந்தான். இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஜோதிடன் நாட்டில் இருப்பான் என்று எண்ணுகிறீர்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு