Published:Updated:

தெரு விளக்கு

"நாங்கள் இருளர்கள்!"பாரதி தம்பிபடங்கள் : ஜெ.முருகன்

தெரு விளக்கு

"நாங்கள் இருளர்கள்!"பாரதி தம்பிபடங்கள் : ஜெ.முருகன்

Published:Updated:
##~##

காடு இவர்களின் வீடு. வேட்டை, இவர்களின் வாழ்க்கை. காட்டுயிர்கள் இவர்களின் உணவு. இவர்கள் பூமி யின் பூர்வகுடிகள். யுகங்கள் கடந்து, இயற்கையை அதன் இயல்புடன் காப்பாற்றிவரும் இருளர்கள். ஆனால், இவர்களின் இன்றைய வாழ்க்கையோ, மிக மோசமாக இருண்டுகிடக்கிறது.

 ''பொறந்ததுலேர்ந்து மூணு வேளை சாப்பிட்டதே இல்லை. ராத்திரி ஒரு நேரம் சோறு ஆக்கி பிள்ளைகளோட சேர்ந்து சாப்பிடுவோம். மீதி இருக்கிறதைக் காலையில தண்ணியை ஊத்திக் குடிச்சுட்டு வேலைக்குக் கிளம்புனா, மறுபடியும் ராத்திரிதான் சாப்பாடு'' - நாகராஜன் பேசுவ தையே கண் இமைக்காமல் பார்க்கின்றனர் சுற்றி அமர்ந்திருக்கும் இருளர்கள். விழுப்புரம் மாவட்டம், சிறுவாலை கிராமத்தின் இருளர் குடியிருப்பு மட்டும் அல்ல; சுற்றி இருக்கும் நான்கு மாவட்டங்களில் விரவிக்கிடக்கும் 120 இருளர் முகாம்களின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் நாகராஜன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெரு விளக்கு

பேராசிரியர் பிரபா.கல்விமணி தலைமையிலான 'பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்’ மூலம் செயல்படும் நாகராஜனுக்கு 42 வயது. மூன்று குழந்தைகளின் தகப்பன். சாப்பாட்டுக்கே வழியின்றி வறுமையில் குடும்பம் தத்தளிக்க... நாகராஜனோ இருளர்களின் இருள் போக்க ஊரெல்லாம் அலைந்து திரிகிறார். பல்வேறு ஊர்களில் ஒரு குடும்பம், இரு குடும்பங்களாகச் சிதறிக்கிடக்கும் இருளர்களை ஒன்று சேர்த்து, ஒரே ஊராக மாற்றி அமைப்பதுதான் இவரது பணி. கடந்த சில ஆண்டுகளில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இப்படி உருவாக்கப்பட்டு இருக்கும் 120 இருளர் குடியிருப்புகளில், நாகராஜனின் பங்கு மிக முக்கியமானது. சொந்த ஊரில் இருக்கும் சிறுவாலை இருளர் குடியிருப்பும் இவரது முயற்சியில் உருவானதுதான்.

''எங்க தலைமுறையிலயே இதுவரைக்கும் யாரும் ஒரு ஊரா, தெருவா குடியிருந்தது இல்லை. நிலம் வெச்சிருக்கிற ரெட்டியார், செட்டியார், கவுண்டர் வயல்கள்ல குடிசை போட்டுக்கிட்டு, அங்கேயே காவல் காத்துக்கிட்டு இருப்போம். தண்ணீர் பாய்ச்சுறது, வாய்க்கால் சீவுறதுனு எல்லா வேலையும் பார்த்து வயலைப் பாதுகாப்பா வெச்சுக்கணும். கூலின்னு எதுவும் கிடையாது. அவங்களாப் பார்த்து இருபதோ, முப்பதோ தருவாங்க. இன்னும் பாதி பேரு செங்கல் சூளையில கொத்தடிமையா இருக்காங்க. கொஞ்ச பேரு கல் உடைக்கப் போறாங்க. அப்பப்போ வேட்டைக்குப் போவோம். எலி வளையைத் தோண்டி, அதுல இருக்குற நெல்லை எடுத்து சமைச்சுச் சாப்பிடுவோம். பாம்பு, எலி, கீரிப் புள்ளை, உடும்பு எல்லாம் பிடிப்போம். சந்தையில கொடுத்தா இருபதோ, முப்பதோ தருவாங்க. இதுதான் எங்க வாழ்க்கை.

தெரு விளக்கு

ஆனா, ஏன்னு தெரியலை... எங்களை எல்லாரும் திருடங்க மாதிரியே பார்க்குறாங்க. பம்புசெட்டுல ஒயர் காணாமப்போனாலும், கொல்லையில மல்லாட்டை காணாமப்போனாலும் இருளனைத்தான் பிடிக்கிறாங்க. இந்த ஏரியாவுல இருக்குற ஒவ்வொரு இருளன் மேலயும் பொய் கேஸுங்க இருக்கு.

நான் சின்னப் புள்ளையா இருக்கும்போது எங்க அப்பா கல் உடைக்கப் போவார். வாரம் இருநூறோ, முந்நூறோ கொண்டுட்டு வருவார். கரெக்டா அவர் காசு கொண்டுவர்றப்போ, போலீஸ் வந்து எதுனா ஒரு கேஸைச் சொல்லி அந்தக் காசைப் பிடுங்கிட்டுப்போயிரும். மாசம் தவறாம, சம்பந்தமே இல்லாத கேஸ்ல பிடிச்சுட்டுப் போயி அடிப்பாங்க. ஒரு ரெட்டியாரை அடிச்சா, கூட்டம் வரும். ஒரு கவுண்டரை அடிச்சா, கூட்டம் வரும். ஆனா, ஒரு இருளனை அடிச்சா... கேட்க நாதி கிடையாது.

அப்படித்தான் 1996-ல எங்க இருளர் பொண்ணு அத்தியூர் விஜயாவை நாலு போலீஸ்காரங்க சேர்ந்து கற்பழிச்சுட்டாங்க. அதுக்கு முன்னாடியும் அதே மாதிரி நடந்திருக்குது. ஆனா, விஜயா கேஸ்தான் வெளியே தெரிஞ்சுது. அப்போ நான் விழுப்புரம் தாலுகா ஆபீஸ்ல தற்காலிகமா ஜீப் ஓட்டிட்டு இருந்தேன். விஜயா போலீஸால் கற்பழிக்கப்பட்டதைக் கண்டிச்சு ஒரு நோட்டீஸைப் பார்த்தேன். நேரா கல்யாணி சாரைப் போய்ப் பார்த்தேன். எங்களுக்காகப் பேச ஒரு ஆளு இருக்கார்னு தெம்பு வந்துச்சு. அப்படியே மெதுவா வண்டிக்குப் போறதை விட்டுட்டு சங்க வேலையில இறங்கிட்டேன்.  

ஊர் ஊரா எங்கெல்லாம் இருளர்கள் இருக்காங்களோ... அங்கெல்லாம் போவோம். சங்கத்துல சேர்ப்போம். ஒரு ஊரா மாத்துவோம். இப்போ நாங்க இருக்குற இந்த இடத்துலகூட முதல்ல நானும் இன்னொருத்தரும் மட்டும்தான் இருந்தோம். தாலுகா ஆபீஸ்ல பட்டா கேட்டதுக்கு, 'குறைஞ்சது 20 குடும்பமாவது வேணும்’னு கேட்டாங்க. இந்த ஏரியாவுல ஒவ்வொரு ஊரா அலைஞ்சு திரிஞ்சி, பண்ணையில அடிமை வேலை பார்த்துட்டு இருந்தவங்களை ஒண்ணு திரட்டி இங்கே கொண்டுவந்தேன். அப்போலாம் பண்ணையாருங்க பிரச்னை பண்ணுவாங்க, அடிப்பாங்க, மிரட்டுவாங்க. எல்லாத்தையும் தாண்டித்தான் 40 இருளர் குடும்பங்களை ஒண்ணு சேர்த்து இந்த ஊரை உருவாக்கினோம்.

தெரு விளக்கு

நிறைய ஊர்கள்ல சின்னச் சின்ன பிரச்னைக் கெல்லாம் இருளர்களைப் போட்டு அடிக்கிறாங்க. ஒரு ஊர்ல இருளரோட இடத்துல ஒரு கவுண்டரோட ஆடு மேய்ஞ்சிடுச்சு. அதைக் கேட்டதுக்காக அவரைப் போட்டு அடிச்சு முகம் எல்லாம் ரத்தம். ஒரு செங்கல் சூளையில மாமனார் வாங்கின கடனுக்காக மருமகனைக் கடத்திட்டுப் போயி அடைச்சுவெச்சு சித்ரவதை செய்றாங்க. சஞ்சீவிராயன்பேட்டையில மீன் பிடிக்க வரலேன்னு சொன்னதுக்காக, 'முடியாதுன்னு சொல்ற அளவுக்கு இருளப் பயலுக்குத் திமிர் ஏறிப்போச்சா?’னு அடிச்சு, உதைச்சு ரத்தம் கொட்டுது. இப்படி ஆடு, மாடுகளைப் போல இருளர்களைப் போட்டு அடிக்கிறாங்க. முன்னாடியா இருந்தா சகிச்சுக்கிட்டுப் போயிடுவாங்க. இப்போ சங்கத்து ஆளுங்க தலையிட்டு எல்லாத்தையும் தட்டிக் கேட்குறோம்.

கடைசியா, கடலூர்ல உருவாக்குன பத்து முகாம்களையும் சேர்த்து, இதுவரைக்கும் நாலு மாவட்டங்கள்ல 120 இருளர் முகாம்களை உருவாக்கி இருக்கோம். 3,000 பேர் உறுப்பினர் களா இருக்காங்க. இப்போதான் எங்க ஆளுகளுக்கு லேசாத் துணிச்சல் வந்திருக்கு. முன்னாடி எல்லாம் போலீஸ் ஜீப் சத்தம் கேட்டாலே, 'பொய் கேஸ் போட வந்துட்டான்’னு பயந்து ஓடுவாங்க. இப்போ துணிச்சலா எதிர்த்துக் கேட்குறோம். ஒரு புகார் கொடுத்தா, 'சி.எஸ்.ஆர். ரிப்போர்ட் வேணும்’, 'எஃப்.ஐ.ஆர். காப்பி வேணும்’னு கேட்கிறோம். 'இருளப் பயலா..? வெளியே நில்லு’னு எந்த போலீஸ் ஸ்டேஷன்லயும் சொல்றது இல்லை. இப்போ நாங்க எதுக்கும் பயப்படுறதும் இல்லை. அதே மாதிரி போலீஸுக்கு ஒரு பைசா லஞ்சமும் தர மாட்டோம். அதனாலதான், இப்போ எங்களைக் கண்டா கொஞ்சமாச்சும் மரியாதை தர்றாங்க. பொதுவாப் பார்த்தா, இது சின்ன விஷயமாத் தெரியலாம். ஆனால், இருளர்களைப் பொறுத்தவரைக்கும் இதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம்!'' என்று இருளர்களின் இருள் விலக்கும் கதை சொல்லும் நாகராஜனின் முகத்தில் வெற்றி யின் சிறு மகிழ்ச்சி மின்னுகிறது.

ஆனாலும், செங்கல் சூளையிலும் கல் குவாரிகளிலும் கரும்புத் தோட்டங்களிலும் கூலி வேலை பார்க்கும் இவர்களின் ஒரு நாள் வருமானம் இப்போதும் அதிகபட்சம் 70 ரூபாய் தான். ஒரு மாதத்துக்கு 2,000 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில்தான் மொத்தக் குடும்பமும் உயிர் வாழ்கிறது. அனைத்து இருளர்களும் நாகராஜனைத் 'தலைவர்’ என்றே அழைக்கிறார்கள். ஆனால் 'தலைவர்’ வாழ்க்கையும் வறுமையில்தான் உழல்கிறது.

தெரு விளக்கு

''முன்னாடி என்கூட டிரைவரா இருந்தவங்கள்லாம் இப்போ மெத்தை வீடு, லாரினு வசதியா இருக்காங்க. எனக்கு வீட்டுல சாப்பாட்டுக்கே இன்னும் வழி இல்லை. பாதி நாளு சோறு வடிச்சுட்டுக் கொழம்புக்கு நாலு வீடு தேடிப் போகணும். இதுதான் நிலைமை. மூணு புள்ளைங்களும் 'இதை வாங்கிக் குடு, அதை வாங்கிக் குடு’னு அழுவும்போது, 'பேசாம வண்டிக்குப் போயிரலாமா?’னு மனசு  அடிச்சுக்கும். அப்படிப் போனா, என் குடும்பம் மட்டும் பொழைச்சுக்கும். ஆனா, எங்காளுங்க வாழ்க்கை என்னைக்கும் அப்படியேதான் இருக்கும். எங்க தாத்தா, அப்பா காலம் மாதிரி எத்தனை காலத்துக்குத்தான் அடிமையாவே வாழ்றது? இதுலேர்ந்து மீண்டு வரணும். அதுக்கு யாருனா ஒருத்தர், ரெண்டு பேர் எல்லாத்தையும் விட்டுக்கொடுத்துதான் போவணும். அது நானா இருந்துட்டுப் போறேன். அதுல எனக்குச் சந்தோஷம்தான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism