Published:Updated:

துர்கா !

துர்கா !

துர்கா !

துர்கா !

Published:Updated:

நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம் 
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

##~##

''ரிலீவ் ஆகி, உடனே புறப்பட்டு இங்க வாங்க சதீஷ்! உங்களுக்கு வேலை ரெடி!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அம்மாவிடம் சதீஷ் இதைச் சொல்ல, சாரதா நெகிழ்ந்தாள்.

''எப்பேர்ப்பட்ட பொண்ணுடா அவ?''

சதீஷ§க்கு கண்கள் பளபளத்தன. அம்மா, பூஜை அறைக்குள் போக... சதீஷ், இந்தப் பக்கம் திரும்பினான். முகத்தில் வித்தியாசமான ஒரு சிரிப்பு மலர்ந்தது!

இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?! என்று கடந்த எபிசோட் முடிந்திருக்க... அடுத்த எபிசோட் பயணிக்கும் பாதையைத் தீர்மானிக்க பயங்கர போட்டிதான் வாசகிகளிடையே! அவர்களில் சிலருடைய முயற்சி மட்டும் இங்கே இடம் பிடிக்கிறது...

குரோம்பேட்டை - ரமணி, கும்பகோணம் - ஜெயலட்சுமி, சிவகாசி - சுதந்திரதேவி... இந்த மூன்று வாசகிகளும் கதை சொல்லும் ஆர்வத்தில், எல்லை கடந்துவிட்டார்கள்! அதனால் 'நறுக்’கென்று பாயின்ட் பிடிக்க முடியவில்லை!

திருப்பூர் - அஜந்தா, சேலம் - அனிதா ரோஸ்லின்.. இவர்களின் முயற்சி ஓ.கே. ஆனால், அநியாயத்துக்கும் மெதுவாக கதையை நகர்த்துகிறது இவர்களுடைய ட்விஸ்ட்.

துர்கா !

வேளச்சேரி - சுலோசனா, ராயப்பேட்டை - ராஜலட்சுமி... 'முதலில் வில்லன்... பிறகு, உணர்ந்து காதலனாக வடிவெடுக்கிறான்' என்று வழக்கம்போல ரூட் பிடிக்கிறார்கள்!

மதுரை - சந்திரா மாணிக்கம்... உறவாடிக் கெடுக்கும் தந்திரத்தை கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்!

ஆம்பூர் - இசைவாணி... இந்த சகோதரி நறுக்கென்று நாலே வரிகள்தான் சொல்லியிருக்கிறார். 'சதீஷ், பழைய கம்பெனியில் வேலையை ராஜினாமா செய்யவில்லை. துர்காவை சிக்கலுக்கு ஆளாக்கப் போகிறான்' என்று திருப்பத்தை ஏற்படுத்துகிறார். இது போதாதா அடுத்த கட்டத்துக்கு?! இசைவாணியே... இந்த எபிசோட் இயக்குநர். வாழ்த்துக்கள் சகோதரியே!

சதீஷ், தன் பழைய கம்பெனியான 'ராயல் அசோஸியேட்ஸு'க்குள் நுழைந்தான். நேற்றுவரை சதீஷ§க்கு அங்கே இருந்த மரியாதையே வேறு. அவன் உள்ளே வந்தால், அத்தனை பேரும் எழுந்து நிற்பார்கள். மந்தமான வேலைகள் துரிதமாகும். இன்று யாரும் கண்டுகொள்ளவே இல்லை. எழுந்து வணங்கக்கூட இல்லை. எம்.டி-யின் பி.ஏ. கேபினுக்குள் சதீஷ் நுழைந்தான். இவனைக் கண்டால் நடுங்கும் 'பி.ஏ' விமலா, கண்களை மட்டும் உயர்த்தினாள்.

''சேர்மனை உடனே பாக்கணும்.''

''நிறைய அப்பாயின்ட்மென்ட் இருக்கே...''

''விமலா... நான் ராஜினாமா பண்ண வந்திருக்கேன். எனக்கு பத்து நிமிஷம் போதும்.''

சட்டென எழுந்து சென்றவள்... திரும்பி வந்தாள்.

''வரச் சொல்றார்.''

சதீஷ் நடக்க, விமலாவும் பின்தொடர்ந்தாள். சதீஷ் வணங்க, சேர்மன் காண்டீபன் அவனை ஒரு புழுவைப் போல பார்த்தார்.

''சார்... ராஜினாமா லெட்டர்...''

''அதனால, இழந்தது திரும்ப வந்துடுமா? அந்த துர்காவுக்கு எதிரா என்னல்லாம் வேலை செஞ்சே? எதுவும் பலிக்கலையே? கோடிக்கணக்கான பிஸினஸ் தர்ற காமதேனு கை நழுவிடுச்சே. இருக்கற பிஸினஸ்லயும் ரெண்டு நேத்து ராத்திரியே கேன்சலாகி, அங்கே போயாச்சு. இன்னும் யார், யார் நம்மை உதறப் போறாங்களோ? இப்படியே போனா, கம்பெனியை இழுத்து மூடணும். பல ஆயிரம் தொழிலாளர்களை பட்டினி போடற பாவம் உன்னை சும்மா விடாது.''

துர்கா !

''சார்... இந்தக் கம்பெனிக்கு அஞ்சு வருஷமா நான் நல்லது செய்யலையா?''

''எல்லாத்துக்கும் சேர்த்து பெரிசா கவுத்துட்டியே. சரி, உங்கிட்ட பேசக்கூட எனக்குப் பிடிக்கல. விமலா... ரிலீவிங் ஆர்டரை ரெடி பண்ணு. சம்பள பாக்கியை செட்டில் பண்ணு.''

''சார்... வெக்கம் கெட்டு காசுக்காக நிக்க, நான் தயாரா இல்லை.''

''சந்தோஷம்... ஆர்டரை அப்படியே கொடுத்தனுப்பிடு விமலா.''

சதீஷ் தொங்கிப்போன முகத்துடன் வெளியே வந்தான். விமலாவுக்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டு போனது. விமலா, வயது உருண்டோடியும் கல்யாணமாகாதவள். சதீஷ் மேல் ஒரு கண் உண்டு. நாசூக்காக வலை வீசியதும் உண்டு. சதீஷ் கண்டுகொள்ளவில்லை. ஒரு முறை வெட்கத்தை விட்டு கேட்டேவிட்டாள்.

''சதீஷ்... உங்களை எனக்குப் புடிச்சிருக்கு. உங்க மனைவியாக விரும்பறேன்!''

''ஸாரி விமலா. எனக்கு அந்த விருப்பம் இல்லை. இனி, நீங்க கல்யாண ஆசையெல்லாம்பட்டு, எந்த ஆம்பளையோட வாழ்க்கையையும் கெடுக்காதீங்க. எங்கிட்ட கேட்டதே கடைசியா இருக்கட்டும்.''

லட்சுமணனிடம், சூர்ப்பனகை பட்ட அவமானம் போலாகிவிட்டது. இவன் எப்போது விழுவான் என்று காத்திருந்தாள். அது இன்று நடந்துவிட்டது.

ரிலீவிங் ஆர்டரை தந்தவள்... ''எந்த ஒரு பெரிய கம்பெனியிலும் உங்களுக்கு இனி வேலை தர மாட்டாங்க சதீஷ்.''

சதீஷ் மெதுவாகச் சிரித்தான்.

''விமலா... ஜெயிச்ச துர்கா, அவங்களோட உதவி அதிகாரியா எனக்கு வேலை தந்தாச்சு. அங்கதான் போயிட்டே இருக்கேன். உங்க சேர் மனுக்கு இந்தத் தகவலைச் சொல்லு. வரட்டுமா?''

விமலா நிலை குலைந்து நின்றாள். தலைதெறிக்க உள்ளே ஓடினாள்.

சதீஷ், ரிசப்ஷனில் காத்திருக்க... துர் காவே வந்தாள்.

''வாங்க சதீஷ்! ஒக்காருங்க. சேர்மன் கூப்பிடுவார்.''

சில நொடிகளில் சேர்மனின் அழைப்பு வர, உள்ளே வந்தான். துர்காவும் இருந்தாள். வணங்கினான்.

''ஒக்காருங்க சதீஷ். துர்கா சொல், எனக்கு வேதம். அவங்க, சதீஷ§க்கு வேலை கொடுங்கனு சொன்னாங்க... கொடுத்துட்டேன்.''

திரும்பி, துர்காவைப் பார்த்தான்.

''துர்காவை கவிழ்க்க நீங்க எல்லா வேலைகளும் செஞ்சீங்க. ஆனா, துர்கா புத்தியால, நேர்மையால, உழைப்பால ஜெயிச்சாங்க. எங்க கம்பெனி அதைத்தான் விரும்பும். உங்களுக்கு பாஸ் நான் இல்லை. துர்காதான். நீங்க ரிப்போர்ட் பண்ண வேண்டியது அவங்ககிட்ட மட்டும்தான்.''

''யெஸ் சார்...''

''துர்கா, ஆர்டர் ரெடி பண்ணிடுங்க. சம்பளம் ஃபிக்ஸ் பண்ணிடுங்க. நீங்க இனி தொழிலாளி இல்லை... சரிசமமான பங்குதாரர்!''

துர்கா சிரித்தாள். ''வாங்க சதீஷ்!'' என அவனை வெளியே அழைத்து வந்தாள். அரை மணியில் வேலைக்கான உத்தரவு வந்தது. சம்பளம் ராயலைவிட இரண்டு மடங்கு. கார், மற்ற வசதிகள் எல்லாம் உண்டு. அவனது அறையில் துர்கா உட்கார வைத்தாள்.

''சதீஷ்... புது புராஜெக்ட்டுக்கான ஒரு புரொஃபைல் இது. முன்னோட்டம் பாருங்க. நாளைக்கு சீரியஸா வேலையில் இறங்கறோம்.''

''மேடம்... ஒரு நிமிஷம் நில்லுங்க.''

துர்கா !

''எதுக்கு சதீஷ்?''

அவள் காலில் விழுந்துவிட, ''என்ன இதெல்லாம்?'' என்று பதறினாள்.

''சத்தியமா போலித்தனமில்லை. நன்றியைச் சொல்ல வேற வழி தெரியலை. தெருவுல நிப்பேன்னு நெனச்சேன். ஆனா, தூக்கி நிறுத்திட்டீங்க!''

''சதீஷ்... சேர்மன், எனக்காக செஞ்சார். நான் உங்கம்மாவுக்காக செஞ்சேன். உங்க நன்றியை வேலையில காட்டுங்க. விசுவாசமா, கடுமையா உழைங்க. நிச்சயம் பலன் கிடைக்கும்?''

''சரி மேடம்.''

''துர்கானே நீங்க கூப்பிடலாம்.''

துர்கா வெளியேற, கண்களை மெள்ளத் துடைத் துக் கொண்டான். உதடுகளைப் பிளந்துகொண்டு அதே விஷமச் சிரிப்பு... 'எப்படியெப்படி! விசுவாசமா? கடுமையான உழைப்பா? அப்படியெல்லாம் இருந்தவன்தாண்டி நானும். மிஞ்சினது அவமானம்தான். மூச்சை புடிச்சு மலையேறி வந்தேன். கடைசி நேரத்துல காலைப் புடிச்சு இழுத்துட்டே. எங்கம்மா நல்லவங்கதான். அவங்கள பகடைக் காயா வெச்சு அடுத்த ஆட்டத்தைத் தொடங்கிட்டேன். சூதுல பொண்டாட்டியை வெச்சாங்க பஞ்ச பாண்டவர்கள். எங்கம்மாவை வெச்சு நான் ஆடப் போறேன்... அவங்களுக்கே தெரியாம!’

அறைக் கதவை நன்றாக சாத்திவிட்டு, பழைய சேர்மன் காண்டீபனுக்கு டயல் செய்தான்.

''சொல்லு சதீஷ்... அங்கே சேர்ந்தாச்சா?''

''ஆர்டர்ல கையெழுத்து போட்டு, வேலையை ஒப்புக்கிட்டாச்சு. டபுள் சம்பளம்!''

''என்னைக் குத்திக் காட்டறியா?''

''சார்... விஷயத்தைச் சொல்றேன். நாளை முதல் புராஜெக்ட் தொடங்குது. தினசரி தகவல்கள் உங்களுக்கு வரும். இதை வெச்சு நாம பேசின மாதிரி தனி யூனிட்டுக்கு அடிக்கல் நாட்டிருங்க. அவங்க தொடங்கறதுக்கு முன்ன... உலக மார்க்கெட்ல நீங்க வியாபாரத்தை முடிச்சிருக்கணும். இவங்க ஒதுக்கப்படணும். உண்மை வெளியில வரும். என்னை வேலைக்குச் சேர்த்த துர்கா, என்னோட கையாள்னு ஆதாரங்களை உருவாக்குவேன். கிரிமினல் குற்றத்துக்காக அவ ஜெயில்ல இருப்பா. இத்தனையும் ஒரு வருஷத்துல நடக்கும் சார்!''

''சபாஷ்!''

''நீங்க பேசினபடிக்கு ராயல்ல பார்ட்னர்ஷிப், இருபது ஏக்கர் நிலம், பெரிய வீடு, பேங்க் பேலன்ஸ் நாலு கோடி ரூபா! சரியா?''

''சொன்னதுக்கு மேலயே செய்வேன்!''

''சரி சார்!''

''கவனமா இரு. கோட்டை விட்டுராதே.''

''சார்... இந்த சதீஷ் சாதாரண ஆளில்லை.''

செந்தில் வீட்டுக்கு நல்ல முகூர்த்த வேளையில வந்து சேர்ந்தார்கள் நடேசன், கல்பனா, வராகன், பாலாஜி. கூடவே குழந்தை அஞ்சு. செந்திலின் அப்பா, அம்மா சந்தோஷமாக வரவேற்று உட்கார வைத்தார்கள். செந்திலும் கூடவே இருந்தான். துர்காவின் சமீபத்திய சாதனையை பதினைந்து நிமிடங்கள் மொத்தப் பேரும் பேசித் தீர்த்தார்கள். பிறகு, நடேசன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்.

''அடுத்த மாசத்துல ரெண்டு நல்ல முகூர்த் தங்கள் இருக்கு. செந்தில் - சுதா கல்யாணத்தை அடுத்த மாசமே நடத்தணும்னு துர்கா பிடிவாதமா இருக்கா.''

துர்கா !

செந்தில் சிரித்தான்!

''அக்கா சொல்லுக்கு இங்கே மாற்றுக் கருத்தே இல்லை. எங்கப்பா, அம்மா தயார்.''

''அக்டோபர் 18 வியாழக்கிழமை நல்ல முகூர்த்தம். அன்னிக்கு வெச்சுக்கலாமா?''

''நிச்சயமா. ஆனா, கோயில்ல கல்யாணத்தை முடிச்சுட்டு, பெரிய ஓட்டல்ல ரிசப்ஷன்!'' என்றான் செந்தில்.

''சரிங்க மாப்ளை. ஆனா, செலவு மொத்தமும் எங்களுது.''

''எதுக்கு மாமா?''

''இதையும் சொன்னது உங்கக்காதான். அவ பிடிவாதக்காரி. விடமாட்டா. உங்களுக்கு செயின், மோதிரம், பட்டு வேட்டி, ரிசப்ஷன் சூட் எல்லாம் வாங்கணும். அடுத்த வாரத்துல எப்ப வசதினு சொல்லுங்க மாப்ளை.''

''அக்கா வசதியைக் கேளுங்க. என்னைவிட, அவங்கதான் பிஸி. ஆனா, கூறைப்புடவையும், தாலியும் எங்க உரிமை மாமா!''

''ரொம்ப சந்தோஷம். இன்னிக்கு செப்டம்பர் 25. அதிக அவகாசமில்லை. துரிதமா எல்லாம் நடந்தாகணும்'' - வராகன் எழுந்தார்.

'செந்திலின் அம்மா நெகிழ்ந்த குரலில், ''நவராத்திரி காலம் விசேஷம். அந்த சமயத்துல மருமகள் வீட்டுக்கு வர்றது மகாலஷ்மியே வர்ற மாதிரி. நாங்க கொடுத்து வெச்சவங்க.''

''அப்ப... உத்தரவு வாங்கிக்கறோம்.''

''அதெப்படி? சாப்பிடாம உங்களை விடு வோமா? அரை மணி நேரத்துல எல்லாம் தயாரா யிடும்'' என்று செந்திலின் அம்மா எழ, கல்பனா வும் உதவி செய்ய உள்ளே போனாள்.

''மாமா... அக்காகிட்ட பேசணுமே!''

- செந்தில்!

''கல்யாணம் தொடர்பாவா?''

''இல்லை... அந்த சதீஷை உதவியாளரா சேர்த்திருக்காங்களா?''

''ஆமாம் மாப்ளை...''

துர்கா !

''அவன் நம்பகமானவன் இல்லைனு பரவலா ஒரு அபிப்பிராயம் இருக்கு. அவனை எதுக்கு உள்ளே விட்டாங்க?''

''மாப்ளை... அவங்கம்மா மாதிரி ஒரு தாயைப் பாக்க முடியாது. துர்கா, அத்தனை சீக்கிரம் யாரையும் நம்பமாட்டா...''

''ஆனா, கம்பெனியில் பார்ட்னர் ஆயிருக்காங்க. கவனமா இருக்கணுமில்லையா?''

''துர்காகிட்டயே தாராளமா பேசுங்க.''

சாப்பிட்டு முடித்து புறப்பட்டார்கள்.

இரவு ஏழு மணிக்கு துர்கா வர, நடேசன் சகல விவரங்களையும் சொன்னார்.

''சந்தோஷம் மாமா... பிரமாதமா நடத்திடலாம் சுதா கல்யாணத்தை. இப்பத்தான் சதீஷ் வந்தாச்சே? பொறுப்புகளை கொடுத்துட்டு கடை கண்ணிக்கு நானும் வர்றேன்.''

''அம்மாடி... சதீஷ் பற்றி மாப்ள கவலைப்படறார்மா...''

''செந்தில் போலீஸ் அதிகாரி. இயல்பாவே சந்தேகப் புத்தி இருக்கும். சதீஷ் தப்பாட்டம் ஆடினவர்ங்கறதால செந்தில் கவலைப்படறதுல தப்பில்லை. ஆனா, இப்ப அவர் வாழணும்னு நினைக்கறார் மாமா. இல்லைனா ஈகோ உள்ள ஒரு நபரால தலை தாழ்ந்து நிக்க முடியாது.''

ராஜம் வெளியே வந்தாள்.

''புருஷனை பைத்தியமாக்கி, ஏர்வாடிக்கு அனுப்பிட்டு அடுத்த புருஷனை தேர்ந்தெடுத்தாச்சு. சுதாவுக்கு அக்டோபர் 18 கல்யாணம். உனக்கு எப்ப?'' என்று வழக்கம்போல பேச... பாய்ந்து வந்தார் நடேசன்.

''மாமா இருங்க...''

''இல்லைம்மா... இதுக்குமேல இவ இங்கே இருக்கக் கூடாது. ஆனந்த் பைத்தியமாக இவ காரணம்... பழி உனக்கா?''

''மாமா... சுதா கழுத்துல ஒரு தாலி ஏறட்டும். அம்மானு ஒருத்தர் வேணுமில்லையா?''

''நானெதுக்கு? அந்த சதீஷோட அம்மா சாரதா இருக்காளே... வேணும்னா உனக்கு புது மாமியாரா வரட்டும். ஒழுக்கம் கெட்ட குடும்பத் துல ஒன்பது கல்யாணங்கள நடத்துங்கடி!''

வேக வேகமாக ஒரு கூடையை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டாள் ராஜம்.

''கோயிலுக்குப் போறியா? நீ காலை வெச்சா, தெய்வம்கூட ஓடியே போயிடும்!'' என்ற நடேசனை முறைத்துவிட்டு, வேகமாக வாசலில் இறங்கி நடந்தாள் ராஜம். செவ்வாய்க்கிழமை என்பதால், கோயிலில் மாலை ராகுகால விளக் குக்காக, கணிசமான கூட்டம் இருந்தது. சந்நிதி யில் நின்று, 'துர்கா நாசமாப் போகணும்’ என்று வேண்டியவள், ஒரு ஓரமாகப் போய் உட்கார, கோயிலுக்குள் சதீஷ§ம், சாரதாவும் நுழைந்து கொண்டிருந்தனர்.

''நான் வாசல்ல இருக்கேன்மா. நீ மட்டும் போயிட்டு வாயேன்.''

துர்கா !

''பெரிய வேலை கிடைச்சுருக்கு. துர்காவை நீ எதிர்த்தும், உன்னை மன்னிச்சு வேலை கொடுத் திருக்கா. அவ மனுஷி இல்லை, தெய்வம். அவ நல்லா இருக்கணும்னு இந்த துர்கைக்கு உன் கையால நெய் விளக்கு ஏத்து!''

சதீஷ் நொந்து போனான்.

'கடவுளே... அவ நாசமாப் போகணும்னு நெனச்சு ஒவ்வொரு நடவடிக்கையும் நான் எடுக்கப் போறேன். என் கையால...?’

''இந்தா... நெய் ஊத்து அகல்ல...''

- சாரதா கட்டளையிட்டாள்.

''இப்ப வேண்டிக்கிட்டு விளக்கை ஏத்து.''

'துர்காவை கவுக்கற முயற்சில முழுமையா நான் ஜெயிக்கணும். நீதான் உதவணும்!''

- முணுமுணுத்தபடியே கைகூப்பினான்.

''சபாஷ்! அம்மாவும், புள்ளையும் கோயிலுக்கு வந்தாச்சா?''

- எதிரே ராஜம்.

''வாங்க. நீங்க மட்டும் வந்தீங்களா?''

''எனக்கு யாரு துணை? அந்தக் கேடு கெட்ட துர்கா எல்லார்கிட்டேயிருந்தும் பிரிச்சுட்டாளே. என்ன வேண்டுதல்... மருமகளா வரணும்னா?''

''என்னம்மா பேசறீங்க?''

''என்ன தப்பு? என் புள்ளையை பைத்தியமாக்கி ஏர்வாடிக்கு அனுப்பிட்டா. உங்க புள்ளையை பித்தாக்கி குணசீலத்துக்கு அனுப்புவா. அப்ப நீங்க என்னை மாதிரியே தனியா வரலாம்.''

''வாயை மூடுங்க. உத்தமமான பொண்ணை கேவலமா பேசினா நல்லா இருக்க மாட்டீங்க.''

''யாரு உத்தமமான பொண்ணு... ஊர்ல ஒரு ஆம்பளையை விடமாட்டா - என் புருஷன் உட்பட. அவளா உத்தமி?''

சதீஷ் உற்சாகமாகிவிட்டான். 'ஆஹா... இந்தம்மா நம்ம ஆளு! இத்தனை காலம் துர்காவை ஆட்டி வைத்த கெட்ட மாமியார். இவளை நம் கைக் குள்ள போட்டுக்கிட்டா நிறைய சாதிக்கலாமே?’

''அம்மா... நீ புறப்படு.''

''எப்படி பேசறாங்க பாருடா...''

''விடும்மா... கோபுரத்தைப் பார்த்து நாய் குலைச்சா, நாமும் குலைக்க முடியுமா? வா!''

''என்னையாடா நாய்னு சொன்னே?''

ராஜம் கூச்சலிட, சிரித்தபடியே நடந்தான்.

'நாய் இல்லை - எனக்கு கை கொடுக்கப் போற பேய்!’

சதீஷ் என்ன செய்யப் போகிறான்?

- தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism