Published:Updated:

சொல்வனம்

படம்: சசிக்குமார்

சொல்வனம்

படம்: சசிக்குமார்

Published:Updated:
##~##

 அச்சேறாக் கவிதைகள்

கரட்டுக்காட்டில்
சீராகவும் நேராகவும்
வரிவரியாய் எழுதிக்கொண்டிருந்தான்
கையெழுத்துகூட போடத் தெரியாத
கூலி விவசாயி
தன் ஏர்க்கலப்பையால்

மொழி கடந்தும் நயத்துடன்
மயிலையும் குத்துவிளக்கையும்
கத்தாழைச் சரடுகளில்
கோரையால் வடித்திருந்தான்
பாய் முடைபவன்

வகை தொகை பிரித்து
வண்ண ஓவியம்போல்
தோய்த்து உலர்த்தியிருந்தான்
சலவைத் தொழிலாளி

பவளம்கொண்டு
முத்து முத்தாய்
ஆபரணங்களாகவும் அணிகலன்களாகவும்
அணி செய்திருந்தாள்
பாசிமணி விற்பவள்

மனம் கவரவும் மணம் மகிழவும்
எதுகை மோனைபோல்
எய்பு தொடைகொண்டு
பாமாலைபோல் பூமாலையால்
மண்டபத்தை அலங்கரித்திருந்தாள்
பூக்காரி.

இப்படி எத்தனை எத்தனையோ
அச்சேறாத கவிதைகளை
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொருவரும்.

- சிவராஜ்

சொல்வனம்

மக்க மறுக்கும் குப்பைகள்

விசில் ஊதி குப்பை வண்டி
வீட்டுவாசல் வந்தாலும்
வீதியெல்லாம் குப்பைப் பொட்டலம்

நடைவழி யாவும் அடைத்து
சாம்பார், சால்னா வாந்தியெடுத்து
வாயவிழ்ந்த கண்ணாடிப் பைகள்.

ஆறு குளம் ஏரிக்கரை
அடர்செடி கொடி மரக்காடெங்கும்
அலங்கோலத் தோரணமாய்
வண்ண வண்ணச் சுமைப் பைகள்.

தாகம் தணித்த தண்ணீர்ப் புட்டி
போதையேற்றிய புன்மதுப் புட்டி
பருகி வீசிய பானகப் புட்டி
எடு - எறி பொருளாய் மலிந்துவிட்ட
தேநீர் கப் டம்ளர் இத்யாதியெல்லாம்
இறைந்துகிடக்கிறது எங்குமே.

நாய், பூனை, எலி செத்தால்
நடுத்தெருதான் மயானம்
நாற்சக்கரம் நசுக்கிப்போவது தகனம்.

கழிவு நீர்ச் சாக்கடையும்
கறிக்கோழிக் கழிவுமாய்க்
கவிச்சை ஏற்றிவருகிறது காற்று.

மனித வயிற்றுக்கு மட்டுமல்ல
மண்ணுக்கும் செரிமானக் கோளாறு
மக்க மறுக்கின்றன குப்பைகள்.

- மா.இராமச்சந்திரன்

காகிதப் பறவை

வெகுநேரம் ஒரே இடத்தில்
பறந்துகொண்டிருக்கிறாயே
சிறகுகள் வலிக்கவில்லையா
என
விசாரித்தபடி கடந்து சென்ற
ஒரு பெரும்பறவையை
விநோதமாகப் பார்த்தபடி
காற்றில்
மிதந்துகொண்டிருந்தது
காற்றாடி.

- மகா

முரண்

மொட்டை மாடியில்
வெயில் காயும்
வடாம் வற்றல் எடுக்க
அனுமதிக்கப்படாத
காக்கைகளுக்கு
அமாவாசை தினம் மட்டும்
கூவிக் கூவி அழைப்பு.

- மகா

நகர்தல்

நாளைக்காவது
சர்க்கரை போடுவானா
என அம்மா

நாளைக்காவது
கடன் கிடைக்குமா
என அப்பா

நாளைக்காவது
இந்தியா ஜெயிக்குமா
என மகன்

நாளைக்காவது
அவன் சொல்வானா
என மகள்

காத்திருந்து காத்திருந்து
இன்றைத்
தொலைத்துவிட்ட வீட்டில்
பயந்துபோய்ப்
படுத்திருக்கிறார் தாத்தா

மீண்டும் ஒரு நாளை
வந்துவிடுமோ என்று.

- ப.உமா மகேஸ்வரி

உங்கள் கற்பனையில் உதிக்கும் இது போன்ற க்யூட், குட்டிக் கவிதைகளை, 'சொல்வனம்’, ஆனந்த விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, solvanam@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்புங்கள். உங்கள் தொடர்பு எண்ணும் அவசியம்!