Published:Updated:

பள்ளிக்கு நேரம் ஆச்சு !

சுப்ரபாரதி மணியன்கண்ணா

பள்ளிக்கு நேரம் ஆச்சு !

சுப்ரபாரதி மணியன்கண்ணா

Published:Updated:
##~##

பள்ளி மறுதிறப்புக்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே இருந்தன. பனியன் கம்பெனிக்கு அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் சிந்தனையுடன் நின்று இருந்தான் மதிவாணன்.

''என்ன யோசனை மதி?'' என்று கேட்டான் சுரேஷ். சிறுவர்களால் நிரம்பி வழிந்தது பேருந்து நிறுத்தம்.

''ரெண்டு நாள்ல ஸ்கூல் ஓப்பன் ஆகுது'' என்றான் மதிவாணன். வீதி, பேருந்துகளின் இரைச்சலால் கசகசத்தது.

''ஸ்கூலுக்குப் போகணும்கிற கவலையா?''

''இல்லைடா... முடிவு பண்ணனும்'' என்றான் மதிவாணன்.

''என்ன முடிவு?'' என்று கேட்டான் சுரேஷ்.

''ஸ்கூலுக்குப் போறதா... பனியன் கம்பெனிக்குப் போறதானு?''

உடனே சுரேஷ், ''நான் பனியன் கம்பெனிக்குனு முடிவு பண்ணிட்டேன்'' என்றான்.

''எனக்குக் குழப்பமா இருக்கு'' என்றான் மதிவாணன்.

''இதுல என்னடா குழப்பம்? வாராவாரம் சம்பளம் வரும். சினிமாப் பார்க்க காசு இருக்கும். மத்தியானம் போண்டா, சாயங்காலம் பரோட்டா... வீட்ல யாரும் திட்றதும் இல்லே. ஜாலிதானே'' என்றான் சுரேஷ்.

கோடை விடுமுறை ஆரம்பித்தபோதும் இந்தக் குழப்பம் மதிவாணனுக்கு இருந்தது. நான்கைந்து நாள் அக்கா வீடு, அத்தை வீடு எனப் போய் வந்தான்.

சுரேஷ் ஒரு நாள் அழைத்தான். ''சும்மாதானே இருக்கே. வாடா பனியன் கம்பெனிக்குப் போலாம். யூனிஃபார்ம், புக்ஸ், நோட்ஸ் வாங்கப் பணம் கிடைக்கும்.''

பள்ளிக்கு நேரம் ஆச்சு !

சரி என்று சேர்ந்துவிட்டான். ஒன்றரை மாதங்கள் ஓடிவிட்டன. பனியன் கம்பெனியில் அடுக்கிக் கட்டும் வேலை. சனிக்கிழமை வாரச் சம்பளம். 10 மணிக்குத் தேனீர், வடை. பிற்பகலில் மிக்சர், தேனீர். இரவில் பரோட்டா, தோசை என்று ருசியாகச் சாப்பிட முடிந்தது. ஞாயிறு வந்தால், புதுத் திரைப்படத்துக்குச் செல்லலாம். வேலை செய்யும்போது எப்போதும் தொழிற்சாலையில் பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கும். மதிவாணனின் அம்மா, அவன் சம்பளப் பணத்தைப் பத்திரமாக வைத்து இருப்பதாய்ச் சொன்னார். செலவழிந்து போனாலும் கொடுத்துவிடுவார்.

மொத்தத்தில் வேலையில் எந்தக் குறையும் இல்லை. சோதனைக்கு யாராவது வரும்போது, வெளியில் அனுப்பிவிடுவார்கள். அப்படியே யாராவது கேட்டாலும் வயது 15 என்று சொல்லச் சொன்னார்கள். 'பனியன் கம்பெனிக்குப் போய்க்கொண்டே இருந்தால், வாழ்க்கை முழுவதும் தொழிலாளியாக இருக்க வேண்டியதுதான்’ என்று நினைத்தான் மதிவாணன். தொழிலாளியாக இருப்பது கேவலம் இல்லை. ஆனால் படிக்கிற வயதில் வேலை தேவையா? மருத்துவர், பொறியாளர் என்று அவனுக்குள்ளும் கனவுகள் உள்ளன. 'படித்தால் வேறு வேலை பார்க்கலாம். வியாபாரமும் பண்ணலாம். இந்த வயதில் தொழிலாளியாகவே வாழ்க்கையைக் கடத்துவதா?’ என்று யோசித்தான்.

எதிரில் விளம்பரப் பலகை தென்பட்டது. அதில் அம்பேத்கர், அப்துல் கலாம் தென்பட்டனர். 'இவர்கள்போல் உயர வேண்டுமானால், படிப்பு இல்லாமல் முடியுமா? பள்ளிக்குப் போகவில்லை என்று சொன்னாலும் அப்பா சரி என்பார். இந்தக் குறைந்த சம்பளத்துக்காகப் படிப்பைத் தொலைப்பதா? போண்டாவும், மிச்சரும், பரோட்டாவும் வீட்டில் கிடைக்காதுதான். அதற்காக அடிமையாவதா?’ தலையை உலுக்கிக்கொண்டான் மதிவாணன்.

வரும் பேருந்துகள் நிரம்பி வழிந்தன. ஒவ்வொரு நாளும் இப்படித்தான் அதிகக் கூட்டம் பிதுங்கி வழியும். மதிவாணன் தன் அருகில் வந்து நின்ற முதியவரைப் பார்த்தான். சவரம் செய்யாத முகம். சோர்வாக இருந்தார்.

அங்கே இருந்த சிறுவர்களைப் பார்த்துக் கேட்டார், ''தம்பிங்களா... இது நல்லூர் போகுமா?''

சிறுவர்களிடம் பதில் இல்லை. மீண்டும் கேட்டார். ''என்னப்பா இது நல்லூர் போகுமா?''

அதில் ஒரு சிறுவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். ''யாருக்குத் தெரியும்? எங்களுக்கும் படிக்கத் தெரியாதே'' என்றான்.

முதியவர் வெறுப்புடன் பார்த்தார்.

''வேறே யார்கிட்டயாச்சும் கேளுங்க.''

''சின்னப் பசங்களா இருக்கீங்க. இதுகூடத் தெரியாதா?'' என்றார் அவர்.

ஒரு சிறுவன் கோபமாய்... ''பெரியவரே... எங்களைச் சொல்றீங்களே... ஏன் இதைப் படிக்க உங்களுக்குத் தெரியாதா?'' என்றான்.

ஓ...வென்று மற்ற சிறுவர்கள் சிரித்தார்கள்.

இதைக் கவனித்துக்கொண்டு இருந்த மதிவாணன், ''இந்த பஸ் நல்லூர் போகாதுங்க. நல்லூர் பஸ் வந்தா சொல்றேன்'' என்றான்.

''சரி தம்பி'' என்றார் அவர்.

பள்ளிக்கு நேரம் ஆச்சு !

'முதியவருக்குப் படிப்பு இல்லை. அதனால் இந்த வயதிலும் அவமானப்படுகிறார். நாளை நமக்கும் இதே நிலைதான் என்பதைக்கூட உணராமல், அவரை மற்ற சிறுவர்கள் கேலி செய்கிறார்களே. நல்ல படிப்பு, கல்வி அறிவு இல்லாமல் போய்விட்டால், நானும் இப்படி வாழ்க்கை முழுவதும் அவமானப்பட வேண்டும். அது கூடாது.’

மதிவாணன் ஒரு முடிவுக்கு வந்தான். பேருந்து வந்து நிற்கும் சப்தம் கேட்டது. விறுவிறுவென்று எதிர்த் திசையில் நடக்க ஆரம்பித்தான். சுரேஷின் குரல் வந்தது. ''எங்கடா போறே?''

''ஸ்கூலுக்கு.''

''ஸ்கூல் தொறக்கறதுக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கேடா'' என்றதைக் காதில் வாங்கவே இல்லை.

இறக்கை கட்டிக்கொண்டு பறப்பதுபோல இருந்தது மதிவாணனுக்கு. இப்படியே பறந்துபோய் யாரும் இல்லாத பள்ளியை வேடிக்கைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது அவனுக்கு.